Aug 22, 2010

என் தமிழ்

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)
ஓங்குமலை தானளிக்க ஓசையொடு பாயருவி
ஆங்குப்பே ராறாகி அழகாக விரிசோலை
ஓங்கிவளஞ் செழித்தன்ன உளம்புகுந்த உயர்தமிழே!
தேங்குதமிழ்த் தெம்மாங்குத் தேன்பாட்டைப் பாடிடுவேன்

(தாழிசை)
ஓரணுவாய் உட்புகுந்தே உயருணர்வைக் கிளப்பிவிட்டுப்
பேராற்றல் வெளிப்படுத்தும் பெருவெடிப்பாய் வளர்தமிழே!

புதுமையிலே மோகங்கள் புதுப்பாதை செய்தாலும்
பழமைநிலை குன்றாத பண்போடு வளர்தமிழே!

தொன்றுதொட்டுத் துறைதோறும் துள்ளளொடும் ஏடெதிர்ந்து
வென்றுவிட்ட ஆற்றலொடும் விண்ணோங்கி வளர்தமிழே!

(தனிச்சொல்)
நீயே

(சுரிதகம்)
என்றும் உள்ளம் ஏத்திப் பாடத்
தென்றல் தானும் தாலாட்ட
நின்றா டிடூஉம் நேயத் தேவே!


x

Egmore - எக்கு(eggu)

        எனக்கு எக்கு(eggu) என்றும் ஒரு பெயர் உண்டு. சிறுவயதிலிருந்தே எக்கு என்றே என்னைப் பலரும் அறிவர்.
        நான் கல்லூரியில் படிக்கும்போது, 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒருநாள், சென்னையிலுள்ள மருத்துவமனைகளைத் தூய்மைப்படுத்தும் பணிக்காக, மாணவர்கள் அனைவரையும் தொண்டூழியராக (volunteers),  பல்வேறு மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் சென்றார்கள். எங்கள் பேருந்து, எழும்பூரிலிருந்த குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்றது. அங்கு சென்று, துப்புரவு வேலைகள் செய்துகொண்டிருந்தோம். திடீரென்று ஞானோதயம் போல,  எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. 'ஆஹா! இந்த மருத்துவமனைதான் என்னைக் காப்பாற்றியதா?' நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!! பெருமகிழ்ச்சியில் இன்னும் ஊக்கமாக வேலை செய்து கொண்டிருந்தேன்.
       பழைய நினைவுகளைக் கிளறிப் பார்த்தேன். 
                                                              ----------------
        ஆண்டு 1987. பச்சிளங் குழந்தையாக இருந்த எனக்கு, ஒரு விதமான நோய். பால் குடித்தால் ஜீரணம் ஆகாது. வயிறு புடைத்து, வலிக்க ஆரம்பித்து விடும். மீண்டும் வாந்தி எடுத்தால்தான் சரியாகும். பாவம் நான். என் பெற்றோரின் தவிப்பை என்ன சொல்ல? அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு என்னைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். "இங்கு முடியாது. சென்னை egmore - ல் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள்", என்று கூறி விட்டர்கள். சென்னைக்குச் சென்று, எப்படியெல்லாமோ கஷ்டப் பட்டு,  என்னைக் காப்பாற்றினார்கள். egmore மருத்துவமனைக்குச் சென்று உயிர் பிழைத்து வந்ததால், எல்லாரும் செல்லமாக egmore என்றே கொஞ்ச ஆரம்பித்து விட்டார்கள். அது பின்னர், eggu என்றாகிவிட்டது.
                                                               --------------------

Aug 15, 2010

எட்டின் நடுவே எங்கள் பாரதம்

நான் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது விடுதலைத் திருநாளன்று எழுதிய கவிதை.

நிலைமண்டில ஆசிரியப்பா

எட்டின்  நடுவே  எங்கள்  பாரதம்
எட்டிய  மகிழ்ச்சிக்  களவே  இல்லை
அந்நியர் நீங்கி அன்று சென்றனர்
இந்தியர் கொண்ட ஒருமைப் பாட்டால்
பழிநிலை மாறிடப் பழுத்தார் மக்கள் 
இழிநிலை மாறிட இழுத்தார் செக்கு 
இமயம் குமரி எல்லை என்று 
அமைந்த பார தப்பெரு நாடு 
பலவளங் களுடன் பலமாய்த் திகழ்ந்தது
அலையென வந்த ஐரோப் பியரால்
வளங்குன் றியது; வறுமை யடைந்தது;
அளவில் லாமல் அனுபவித்த திடுக்கண்
அந்நியர் தாக்கம் அழிந்தது ஆக்கம் 
வந்தவர் போனபின் வந்தது ஊக்கம் 
எழிலார் இந்தியம் இழந்தசு தந்திரம்
எட்டின் நடுவே ஈட்டிய தாயினும் 
இன்னும் மலரா இந்திய நாடு 
என்றும லருமோ? யானறி யேனே
வந்தவர் போனார் வறுமை போகலை!
சந்தம் பாடினும் சமத்துவ மாகலை!
இந்நிலை தொடரின் இடுக்கண் தொடரும் 
அந்நிலை மீண்டும் அடைத்த லாகும்
                                           - சுப்பிரமணிய தமிழகழ்வன்

  
இனிய விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

Aug 4, 2010

Micro Devil - குட்டிச் சாத்தான்

இது என் கல்லூரி நண்பன் ஒருவன் எனக்கு வைத்த பெயர். என் கல்லூரி நண்பர்கள் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள். அவர்களோடு பழகுவதற்கு முன்புவரை நான் அதிகம் பேசி, யாரும் கண்டதில்லை. அவர்களோடு பேசிப்பேசி, அதிகம் பேச ஆரம்பித்து விட்டேன். பிறரை என்னாலும் நகைக்க வைக்க முடியுமோ என்று முயன்றதில் தோற்றுப் போனவன்தான் நான். (நான் அதிகம் மொக்கை போடுகிறேன் என்று கூறிவிட்டார்கள்!!!). இருந்தும் விடாமல் தொடர்ந்து மொக்கை போட்டுக் கொண்டே இருந்தேன். அதனால் வந்த வினைதான் இந்த Micro Devil என்ற பெயர்.அதிலும் குறிப்பாக micro என்பதன் காரணம் என்ன தெரியுமா?
போக்கிரி படம் release ஆகி இருந்த நேரம். அந்த semester- ல Microprocessor பற்றிய பாடமும் படித்தோம். போக்கிரி படத்தில் ஒரு பாடல் வருமே...
'ஆடுங்கடா என்னச் சுத்தி - நான்
அய்யனாரு(Aiyanaar) வெட்டுக்கத்தி'.
Microprocessor - ல ஒரு insrtuction INR (increament).
Aiyanaar - INR இரண்டையும் பொருத்தி வச்சி, INR - க்கு எதிர்மறையான DCR (decreament) - ஐப் போட்டு,
'ஆடுங்கடா என்னச் சுத்தி - நான்
டீசியாரு(DCR) வெட்டுக்கத்தி'
அப்படின்னு பாடினேன். தேர்வுக்குப் படிக்கும்போதுகூட ஒரு நண்பன் இதை நினைத்துச் சிரித்து விட்டானாம். அதுக்காக ஒருத்தன் எனக்கு வச்ச பேருதான் இந்த 'MICRO DEVIL'.

Aug 3, 2010

SBS Raman

எனக்குப் புதிது புதிதாய்ப் பெயர் வைத்துக் கொள்ளப் பிடிக்கும். நான் ஒரு பெயராசை பிடித்தவன். ஒருமுறை SBS Raman என்று பெயர் வைத்துக் கொண்டேன். அதன் காரணத்தை இங்குப் பதிக்கிறேன்.

SBS?    எங்க அப்பா பேரோட முதலெழுத்தையும் அம்மா பேரோட முதலெழுத்தையும் என் பேரோட முதலெழுத்தையும் சேர்த்து SBS என்று வைத்துக் கொண்டேன். நல்லா இருக்குல்ல?


Raman?   அது ஒரு பெரிய்ய்ய்ய கதை. நான் கல்லூரி சேர்ந்த போது, வகுப்பு வருகைப் பதிவுப் புத்தகத்துல Subramani க்குப் பதிலா Subraman ன்னு தவறாகப் பதிச்சிருந்துச்சு. ஒவ்வொரு தடவ வருகைப் பதிவு கூப்பிடும்போதும் Subraman ன்னு தான் கூப்பிட்டாங்க. நான் என் பேரத் திருத்தச் சொன்னேன். பிறகு Subramani ன்னு கூப்பிட்டாங்க. ஆனா, அதற்கு அடுத்த மாதம் மறுபடியும் பழைய புராணம் தான். கல்லூரி அலுவகத்துக்குப் போயி, பேரத் திருத்தச் சொன்னேன். ஆனா பாவம் அதற்கு அடுத்த மாதமும் அதே கொடுமைதான். மீண்டும் மீண்டும் சொல்லியும் 'i' ஐத் தவற விடுவதே பொழப்பாப் போச்சு அவங்களுக்கு. எப்படியாவது கூப்பிட்டுட்டுப் போங்க... எத்தனை முறை சொல்லிப் பாக்குறதுன்னு விட்டுவிட்டேன். அப்படி இருந்த SUBRAMAN-ல் RAMAN தனியாத் தெரிஞ்சுச்சா... SBS RAMAN ன்னு வச்சிக்கிட்டேன்.