Sep 25, 2010

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 1

“ஸ்னோவின் (Snowin)!”, அழைத்தான் சின்னதுரை.
“என்னடா?”, கேட்டான் ஸ்னோவின்.
“இந்தப் பெயர் எப்படி இருக்கு?”
“எந்தப் பெயர்?”
“வெண்பனி வெற்றியன்...”
“ஏன்டா, உனக்கு வேற வேலையே இல்லையா...? போயிடு அந்தப் பக்கம்... வந்து இருக்கிறது எஞ்சினியரிங் காலேஜுக்கு, தமிழ் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கான்...”, இது ஸ்னோவினின் கோபக்கனல்.
அது இல்லடா, உன் பெயரைத்தான் அப்படி மொழிபெயர்த்திருக்கிறேன்”, என்றான் சின்னதுரை.
இப்படித்தான் அவ்வப்போது எதையாவது சிந்தித்துக்கொண்டிருப்பான் சின்னதுரை. அவற்றைத் தமக்குப் பிடித்த நண்பர்களிடம் விவாதிக்கவும் செய்வான். அவர்கள் என்ன திட்டினாலும் இவனுக்கு உரைக்கவே உரைக்காது.
சிரித்துக்கொண்டே சொன்னான் ஸ்னோவின். “ஏன்டா நீ மட்டும் இப்படி இருக்கே! தமிழெல்லாம் எவனுக்குடா வேணும்? அவனவன் என்னென்னமோ படிச்சிட்டு எங்கெங்கேயோ போய்க்கிட்டு இருக்கான், தமிழ் படிச்சா ஒரு வேலையும் கிடைக்கப் போறதில்ல!”
“என்னடா அப்படிச் சொல்லிட்டே! நீ வேணும்னா பாரு, தமிழுக்குப் பிற்காலத்துல எவ்வளவு மதிப்புக் கிடைக்கப் போகுதுன்னு”, என்றான் சின்னதுரை.
“அப்படி மட்டும் நடந்திட்டா, நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன். இப்ப ஆள விடு”, என்று சொல்லிவிட்டு, முகம்கழுவச் சென்றுவிட்டான் ஸ்னோவின்.
என்னதான் ஸ்னோவின் சின்னதுரையைத் தட்டிக்கழித்துப் பேசினாலும், அவன் கவலைப்படுவதில்லை. மாறாக, ஸ்னோவின் மீது தனிப்பாசம் கொண்டிருந்தான். ஏனென்றால் அவனது பேச்சில் விளையாட்டுத்தனம் தெரியுமே தவிர, தீவிரம் தெரியாது. அன்பாகப் பழகுபவன். சில விஷயங்களில் தன்னிடம் குறை இருப்பதை எண்ணி, சின்னதுரை வருத்தப்படும்போதெல்லாம் ஸ்னோவின்தான் அவனுக்கு ஆறுதல் கூறுவான். ஒருமுறை 90-10 விதியைப் பற்றிக்கூட, ஸ்னோவின் அவனிடம் சொல்லி இருக்கிறான்.
“ஒவ்வொரு நாளும் சில 10 சதவீதம் வருத்தம் தரும் நிகழ்வுகள் நேரலாம். அதற்காக மீதமுள்ள 90 சதவீத மகிழ்வுதரும் நிகழ்வுகளைத் தவற விட்டுவிடக் கூடாது”.
இவ்வாறான ஊக்கமூட்டும் வார்த்தைகளால் ஸ்னோவினிடம் தனிமதிப்பு வைத்திருந்தான் சின்னதுரை.
பள்ளியில் தமிழ்வழிக் கல்வியையே பயின்றிருந்ததாலும், புத்தகப் புழுவாகவே இருந்ததாலும், சின்னதுரைக்கு ஆங்கில அறிவும், உலக அனுபவமும் சற்றுக் குறைவுதான். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவனானாலும், யார் யாரோ செய்த உதவிகளினால் கல்லூரி வாசலையும் தொட்டுவிட்டான். அங்கு, இனி, ஆங்கில வழியில் மட்டுமே பயில முடியும் என்பதால், அவனைவிட உயர்நிலையில் உள்ள நண்பர்களிடம் நல்ல பழக்கம் வேண்டும் என்பதற்காகவே, தேடிக்கிடைத்த நண்பர்களில் ஸ்னோவினும் ஒருவன். பெரும்பாலான நிகழ்வுகளில் ஸ்னோவினின் எண்ணங்கள் யதார்த்தமானதாக - உண்மையாக அமைந்து விடுவதை அவனே நேரில் உணர்ந்திருக்கிறான்.
அவர்கள் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். சின்னதுரைக்கு விளையாட்டுகளில் மனம் செல்வதில்லை. மற்ற நண்பர்கள் விளையாடச் சென்றுவிடும்போது, அவன்மட்டும் தனிமையை உணர்வான். அத்தகைய நேரங்களில் தமிழைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிடுவான். தமிழே அப்போது அவனுக்கு உற்ற துணையாக இருந்தது. அப்படிச் சிந்தித்தவற்றின் விளைவுகள் அவ்வப்போது நண்பர்களிடமிருந்து கோபமாக வெளிப்படும்.
                                                       (தொடரும்)

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 3

1.
மழைவருது மழைவருது நெல்லு வாருங்கோ
நான்போய் கிணத்துல விழுறேன் என்ன பிடிங்கோ
மூணுபடி அரிசி போட்டு முறுக்கு சுடுங்கோ
ஏரு ஓட்டுற மாமனுக்கு எண்ணி வையுங்கோ
சும்மா இருக்கும் மாமனுக்கு சூடு வையுங்கோ
 
2.
கத்திரிக்கா தோட்டத்துல பூச்சிக்காரன்
எட்டி எட்டிப் பார்க்கிறான் மீசைக்காரன்
சுண்ணாம்பு சட்டியில சோறாக்கி
சுடச்சுட மாமனுக்குப் போட்டாச்சு 
என்ன குழம்பு கேட்டாச்சு
கருவாட்டுக் குழம்புடா கம்னேட்டி
 
3.
தொப்பி மாமா வந்தாராம்
தொப்பியைக் கழட்டிப் போட்டாராம்
சாக்குப் பையை எடுத்தாராம்
சரசரன்னு போனாராம்
சருக்கடிச்சு விழுந்தாராம்

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 2

1. திரிதிரி பந்து

திரிதிரி பந்து
திருநாள் பந்து!
திரும்பிப் பார்த்தா,
ஒரு கொட்டு!

2. குத்தாங் குத்தாந் தாமாளம்

குத்தாங் குத்தாந் தாமாளம்
கோடாலி தாமாளம்

உங்கப்பன் பேரு என்ன? முருங்கப்பூ
முருங்கப் பூவத் தின்னவனே!
பாலும் பழமும் குடிச்சவனே!
பாப்பாத்தியம்மா கையெடுத்துக்கோ!

நெத்தியில என்ன? ரத்தம்
வழிச்சிக் கடாசு
போச்சா போகலையா? போகல
சுடுதண்ணி ஊத்திக் கழுவு.
வாயில என்ன? பச்சரிசி
துப்பு
காதுல என்ன? கம்மல்
கழட்டிக் கடாசு
மூக்குல என்ன? மூக்குத்தி
கழட்டிக் கடாசு
கழுத்துல என்ன? செயினு
அவிழ்த்துக் கடாசு
கையில என்ன? வளையல்
கழட்டிக் கடாசு
கால்ல என்ன? கொலுசு
கழட்டிக் கடாசு
வயித்துல என்ன? பூனைக்குட்டி.
எத்தனை? நாலு.
எனக்கு ஒன்னு தர்றியா?
தரமாட்டேன்.
(கிச்சு கிச்சு மூட்டுதல்)

3. கண்ணாமூச்சி விளையாட்டு

உங்கம்மா என்ன சோறு போட்டாங்க?
புளி சோறு.
ஈ மொய்த்ததா எறும்பு மொய்த்ததா?
எறும்பு மொய்த்தது
எடுத்து சாப்பிட்டாயா எடுக்காம சாப்பிட்டாயா?
எடுத்து சாப்பிட்டேன்.
சரி, போய் ஒரு வெத்தல, பாக்கு, சுண்ணாம்பு, வெல்லம் எல்லாம் வாங்கிட்டு வா

Sep 8, 2010

மழலை நினைவுகள் மலரட்டுமே!

     சின்ன வயதில் நினைவாற்றலை வளர்க்கவும், வார்த்தைகள் பழகவும் சொல்லிக் கொடுக்கப்பட்ட தொடர் வரிகள் திடீரென்று நினைவுக்கு வந்தன. அவை சந்த நயமுள்ளவை. எனக்கு நினைவில் இருக்கும் இரண்டு தொடர்களைக் கீழே கொடுக்கிறேன்.

1.ரிப்பன் ரிப்பன் - கும்மாங் குத்து

ரிப்பன் ரிப்பன்

என்ன ரிப்பன்?
பச்சை ரிப்பன்

என்ன பச்சை?
மா பச்சை

என்ன மா?
டீச்சரம்மா

என்ன டீச்சர்?
கணக்கு டீச்சர்

என்ன கணக்கு?
வீட்டுக் கணக்கு

என்ன வீடு?
மாடி வீடு

என்ன மாடி?
மொட்டை மாடி

என்ன மொட்டை?
பழனி மொட்டை

என்ன பழனி?
வட பழனி

என்ன வடை?
ஆமை வடை

என்ன ஆமை?
குளத்தாமை

என்ன குளம்?
திரிகுளம்

என்ன திரி?
விளக்குத்திரி

என்ன விளக்கு?
குத்து விளக்கு

என்ன குத்து?
கும்மாங் குத்து...

(பாவம் பக்கத்தில் இருப்பவர்)

2. கொழுகட்டை - எறும்பு

கொழுகட்டை கொழுகட்டை ஏன் வேகல?
அடுப்பு எரியல நான் வேகல

அடுப்பே அடுப்பே ஏன் எரியல?
விறகு காயல நான் எரியல

விறகே விறகே ஏன் காயல?
மழை பெஞ்சிச்சு நான் காயல

மழையே மழையே ஏன் பெஞ்ச?
புல்லு முளைய நான் பெஞ்சேன்?

புல்லே புல்லே ஏன் முளைஞ்ச?
மாடு மேய நான் முளைஞ்சேன்

மாடே மாடே ஏன் மேஞ்ச?
பாலு கறக்க நான் மேஞ்சேன்?

பாலே பாலே ஏன் கறந்த?
பாப்பா அழுதுச்சு நான் கறந்தேன்?

பாப்பா பாப்பா ஏன் அழுத?
எறும்பு கடிச்சுச்சு நான் அழுதேன்?

எறும்பே எறும்பே ஏன் கடிச்ச?
என் புத்துக்குள்ள கைவிட்டா நான் சும்மா இருப்பேனா?


Sep 5, 2010

குரு வணக்கம்

இன்று ஆசிரியர் தினம். என் வாணாளில் நான் சந்தித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. படிப்பு மட்டுமன்றி, வாழ்க்கைப் படியில் முன்னேறவும் வழிசெய்து தந்த ஆசிரியர்களை எண்ணிப் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
இதுவரை நான் படித்துவந்த வகுப்புகளின் ஆசிரியர் பெயர்களை நினைவுகூரலாம் என நினைத்தேன். முடிந்தவரை முயன்றிருக்கிறேன்.

நகராட்சி நடுநிலைப் பள்ளி, திருவண்ணாமலை
உஷா (முதல் வகுப்பு)
கிருஷ்ண மூர்த்தி (இரண்டாம் வகுப்பு)
தமிழ்ச்செல்வி (மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்பு)
வேலு, தனக்கோட்டி (ஐந்தாம் வகுப்பு)

திரு க.குப்புசாமி நினைவு உயர்நிலைப் பள்ளி, சின்னக்காங்கியனூர், திருவண்ணாமலை.
சுப்பிரமணியன் (தலைமை ஆசிரியர், அறிவியல் ஆசிரியர்)
செயராமன், ஞானப்பிரகாசம் (தமிழ் ஆசிரியர்)
நடராஜன் (சமூக அறிவியல்)
காந்தி (ஆங்கிலம்)
கிருஷ்ணன் (கணிதம், தமிழ்)
அருணாசலம் (ஆங்கிலம், அறிவியல்)
சரவணன் (கணிதம், தமிழ்)
இரவி (கணிதம்)
ரேவதி (ஆங்கிலம், சமூக அறிவியல்)
புவனேஸ்வரி (ஆங்கிலம், கணிதம், அறிவியல்)
வீரசேகர் (தமிழ்)
கார்த்திகேயன் (விளையாட்டு)
தனசேகர் (சமூக அறிவியல்)
மற்றும் பலர்

Danish Mission மேனிலைப் பள்ளி, திருவண்ணாமலை.
தெய்வநீதி, தங்கவேலு (தமிழ்)
Earnest William (ஆங்கிலம்)
சம்பத் (கணிதம்)
Hubert Dhanasundaram (இயற்பியல்)
சுமித்ரா (இயற்பியல்)
ஜமுனா (வேதியியல்)
தாவரவியல் ஆசிரியை
ஜெயமேரி பூங்கொடி (விலங்கியல்)

இளங்கோ (நுழைவுத்தேர்வு)

ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சென்னை
குமரன், நந்தினி ஸ்ரீதர், அன்பரசு, சுவாதி, சுமதி, விஜயராமன், சரவணன், அனிஷா,  Graphics And Multimedia ஆசிரியை, மோகன், மற்றும் பலர்.
சிவசெல்வன், Joseph Francis, அமுதா, Freny Joy, மற்றும் பலர்.
நடராஜன், அசோக், மகாலட்சுமி, உமா, DPSD ஆசிரியை, மற்றும் பலர்.

தற்போது
சுப்பிரமணியன் இராஜா, இராம், Phani Bhushana,
நித்யா, சரவண வடிவேல், தாரணி, வினோத், இராகவேந்திரா.

அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sep 2, 2010

நண்பனின் பிரிவு

நதிக்கு நண்பன் நாணல்தான்
'நலமா?' நாளும் கேட்டிடுமே!                        1


நாணலின் நண்பன் நதிதானே
வாழ்வினில் வளமே சேர்த்திடுமே!            2


தட்டிக் கொடுப்பவன் நண்பனே!
தட்டிக் கேட்பதும் நண்பனே!                           3

இன்பம் துன்பம் ஏதெனினும்
உடனுறை பவனே நன்னண்பன்                    4

நினைந்தால் போதும் நெஞ்சார
நினைவிலும் நன்மை செய்திடுவான்         5

நேசம் உள்ள நண்பனே!
நெஞ்சம் உன்னை மறக்குமா?                        6

பாசப் பிணைப்புப் பந்தமே!
பண்பில் ஓங்கிய சொந்தமே!                          7

நாளும் உன்னை நினைக்கையில்
நெஞ்சில் இன்பம் தங்குதே!                             8

கொட்டும் நீர்த்துளி கண்ணிலே
நண்பா பிரியும் போதிலே                                 9

நிலையி னின்று பிரிந்தாலும்
நினைவுகள் என்றும் மறவாதே!                   10
                   - சுப்பிரமணிய தமிழகழ்வன்