Nov 27, 2010

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 8

1.
டிக் டிக்

யாரது?
திருடன்

என்ன வேண்டும்?
நகை வேண்டும்

என்ன நகை
கலர் நகை

என்ன கலர்?
(ஏதோ ஒரு கலர் பதிலாக வரும்போது எல்லாரும் அந்த நிறத்தைத் தேடி ஓடித் தொட்டுக்கொண்டிருப்பர். அப்படித் தொட முடியாதவரை வந்து அவுட் ஆக்குவார் திருடன்).
 
2.
உங்கப்பா எங்கப்பா தகர டப்பா!
உங்கம்மா எங்கம்மா மனோரம்மா!
உங்கண்ணன் எங்கண்ணன் கமலக்கண்ணன்!
உங்கண்ணி எங்கண்ணி தேங்கா தண்ணி!
உங்கத்தை எங்கத்தை தேங்கா பத்தை!
 
3.
லாபா சீட்
அஞ்சு ரூபா நோட்
பொட்டில வச்சி பூட்
கல்லா? மண்ணா?
கல்லு
கல்லுலே நிக்குறேன் வெக்கமில்லையா?
மண்ணு
மண்ணுலே நிக்குறேன் வெக்கமில்லையா?
 
4.
கொக்கு பறபற
கோழி பறபற
மைனா பறபற
அம்மி பறபற
பட்டம் பறபற
குண்டான் பறபற
....
....
(பறக்காத பொருளுக்குக் கையசைப்பவரும், பறக்கும் பொருளுக்குக் 
கையசைக்காதவரும் அவுட்).

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 5

செமஸ்டர் தேர்வுகள் ஒவ்வொன்றாய் முடிந்து கொண்டிருந்தன. கடைசித் தேர்வு எழுதிய அன்று மட்டும் மாணவர்கள் கலங்கிவிட்டார்கள். வழக்கத்திற்கு மாறாக எதிர்பாராத கேள்விகளே மிகுதியாகக் கேட்கப் பட்டிருந்தன. பாவம், நம் துரையின் நிலைமையும். தேர்வு முடிந்ததும் வழக்கம்போல் ‘உம்’மென்று இருந்தான்.

“என்ன துரை? ஏன் ஒருமாதிரியாய் இருக்கிறாய்?”, கேட்டான் கார்த்தி.

“இல்ல அப்பு,  தேர்வு சரியாவே எழுதலை,  அதான்”.

“அது ஒன்றும் பிரச்சினை இல்லை, கேள்வித்தாள் கடினமாக இருப்பதால், பெரும்பாலும் ‘பாஸ்’ பண்ணி விட்டுடுவாங்க, கவலைப்படாத”, என்றான் கார்த்தி.

தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சியில், அவரவர்கள் சொந்த ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானார்கள். என்ன இருந்தாலும், நம் துரையின் முகம் வாடிப்போய்த்தான் இருந்தது.  ஸ்னோவின் சொல்லாத சமாதானமே இல்லை. நம் துரையும் கடவுளிடம் வேண்டிக் கொண்டான். ‘முருகா, நான் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால், உனக்குப் பாமாலைகள் சூட்டுகிறேன்’.

விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரிக்குத் திரும்பினார்கள். சில நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகின. மாணவர்களைப் பதற்றம் சூழ்ந்தது. முடிவுகளைத் தெரிந்துகொள்ளும்வரை, அவர்களின் உயிர், அவர்களிடம் இல்லை.

‘முருகா, முருகா ...’ என்று உச்சரித்துக் கொண்டே இருந்தான் துரை.

“மச்சி, என்னோடது ரெண்டு ஊத்திக்கிச்சு, உன்னோடது?”

“பாவி ரெண்டுதானா, நான் நாலு வச்சிருக்கேன் டா”

அங்கங்கே கேட்ட குரல்கள் இன்னும் கலக்கத்தை ஏற்படுத்தின.

“ஏ!  நான் பாஸ் ஆயிட்டேன்”, ஸ்னோவின் கத்திக்கொண்டே கூட்டத்தினின்றும் ஓடிவந்தான்.

“அப்பா! நானும் பாஸ்”, சொன்னான் கார்த்தி.

“துரை, என்ன ஆச்சுடா? ஏன்டா கலங்கிப் போய் இருக்க?”

“நான் இன்னும் பார்க்கவே இல்லடா...”

“அறிவுக்கொழுந்து! இரு வர்றேன்.”

சற்று நேரம் கழித்து, ஸ்னோவின் திரும்பி வந்தான். “டேய்,  நீ பாஸ் ஆயிட்டே!”

“குள்ளப்பய...! என்னா சீனப் போடுது”, செல்லமாய்க் கடிந்தான் ஸ்னோவின்.

மகிழ்ச்சி கொள்ளவில்லை துரைக்கு. ‘நானும் பாஸ் ஆயிட்டேனா?’.

அன்றிரவே ஆரம்பித்தான் பாமாலை சூட்ட,

'முதலைத் தருவான் முருகன் ...'

மறுநாள் எல்லா மாணவர்களும் துரைக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

“துரை! வாழ்த்துகள்! நீதான் வகுப்பிலேயே இரண்டாவது மதிப்பெண் வாங்கியிருக்கிறாய்!”, ஆசிரியர் சொன்னார்.

ஆம், அன்று ஸ்னோவின் சொன்னது இன்று உண்மையாகிப் போய்விட்டது. இவனை எண்ணி, ஸ்னோவினும் கார்த்தியுமே இவனைவிட மிகவும் மகிழ்ந்தார்கள்.

“துரை!  நீதானே எல்லாருக்கும் ஏதாவது ஒரு பெயர் வச்சிட்டிருக்கே! இப்போ நான் உனக்கு ஒரு பெயர் வச்சிருக்கிறேன்”, என்றான் ஸ்னோவின்.

“என்ன பெயர்?”, ஆவலானான் துரை.

“மைக்ரோ டெவில்! (Micro Devil...!)”.

Nov 15, 2010

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 7

1.
யாரோ தலையில
  ஆட்டுக்குட்டி மேயுதாம்
போறவங்க வர்றவங்க
  சொல்லாம போங்க.

2.
வச்சா வச்சா வாழப்பழம்
வாயில வச்சா கொய்யாப் பழம்
இட்டா இட்டா எலுமிச்சங்காய்
இடாட்டா நார்த்தங்காய்
கும் குத்துறேன் கும்

3.
வாடி என் மச்சி
வாழைக்காய் பஜ்ஜி
உன் தோல உரிச்சி
போட்டுடுவேன் பஜ்ஜி