Dec 27, 2011

கவலை

நேரிசை ஆசிரியப்பாக்கள்

கவலை தெளிவைக் குலைக்கும் தீநோய்
தெளிவு குலைவ தாவது மறதி
மறதி மேற்கொண் டோடுவ தமைதி
அமைதி யில்லா வாழ்வஃ
தமைந்தோன் வாழான் அறிகு வாயே!                     1

எவ்வெவற் றின்று கவலை நீங்கும்
அவ்வவற் றின்றே ஆக்கம் ஓங்கும்
இலையெனும் போதோ அகலும் கவலை
இயலுதல் கடத்தி நடத்தூ உம்மே
அவ்வழி நடத்தலும் மறதி யாகிச்
செவ்வழி தொலைத்த வீரன்
உய்வழி யறியா துழன்றிடு வானே!                           2

கவலை கண்ணு றங்க விடாது
கண்ணு றங்கினும் கனவில் விடாது
கவலை இருவகை கிட்டாக் கவலை
கிட்டிட வேண்டும் இலட்சியக் கவலை
முன்னது வீணே பின்னது தானே
கவலை நிலையைத் தாண்டிக்
குறிக்கோள் என்க குவலயத் தானே!                         3
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

Dec 24, 2011

அம்பிகாபதி திரைப்படத்திலிருந்து பெறப்பட்ட கவிகள்

அம்பிகாபதி அமராவதிக்கு எழுதும் கடித ஓலை

அன்பே அமரா!
ஆடற் கலைமயிலே அரண்மனைப் பூங்குயிலே
பாடல் இலக்கணமே பைங்கிளியே

தூண்டிற் புழுவாக்கி என்னைத் தவிக்கவைத்து
மீண்டும் வரமாட்டேன் என்று விளம்பிவிட்டாய்

வேடிக்கை ஊடல் விளையாட்டு என்று எண்ணினேன்
வினையென்றுணர்ந்தேன் இன்று விழிநீரில் நீந்துகின்றேன்

மறக்கலா மென்றாலோ மனதைத்தான் நீதிருடி
திறக்கவொண்ணாக் கூட்டுக்குள் சிறைவைத்துவிட்டாய்

அல்லும் பகலுமெனை அணுவணுவாய் வதைக்காதே
கொல்லும் மருந்திருந்தால் கொண்டுவந்து தந்துவிடு

----------------------------------------------

அம்பிகாபதி, அமராவதியை நினைத்துப் பாடுவது

அம்புலியைக் குழம்பாக்கி
அரவிந்த இரசமோடு அமுதும் சேர்த்து
இன்பநிறை முகமாக்கிக்

கயலிரண்டைக் கண்ணாக்கி
மன்னன் ஈந்த பைங்கிளியே!
அயலொருவர் கண்படுமோ என்றஞ்சி
பயத்தோடுன்னை கங்குலிலே காண்பதல்லால்
கணப்பொழுதும் இணைபிரியாக் காலம் என்றோ?

--------------------------------------------

அம்பிகாபதி, அமராவதியைப் பார்த்துப் பாடும் முதலிரண்டு வரிகளின்
பொருள் மாறுபடுமாறு, அடுத்த ஈரடிகளைக் கோர்த்துக் கொட்டிக் கிழங்கு விற்கும் கிழவியை நினைத்துக் கம்பர் பாடுவது

இட்டஅடி நோவ எடுத்தஅடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய - கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் நாவில்

வழங்கோசை வையம் பெறும்
--------------------------------------------

பேரின்பப் பாடல்கள் நூறு பாட வேண்டும் என்ற சவாலை ஏற்று, அம்பிகாபதி பாடுவதாக அமைந்தது

சிந்தனை செய் மனமே - தினமே
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே


சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே

சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - மனமே ஏ...


செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை - செந்தில்
கந்தனை வானவர் காவலனை குகனை
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே

சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - மனமே


சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை
ஆதலினால் இன்றே

அருமறை பரவிய சரவண பவகுகனை
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே

சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - மனமே ஏ...                                            (1)


வடிவேலும் மயிலும் துணை - சொல்
வளமார்செந் தமிழால் சந்ததமும் கந்தனைப் பாட
வடிவேலும் மயிலும் துணை


நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
தடமேவும் பொழில்சூழும்

தணிகை வாழும் பரம ஞான குருபரன்
வடிவேலும் மயிலும் துணை


தமிழ்மாலை தனைச்சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர்மாலை ஜெபமாலை யுடன்சந்தத்
தமிழ்மாலை தனைச்சூடுவான்


தாபமிகு வெப்பு வாதமொடு பித்த
மானபிணி மொய்த்து உடம்போடுசாருமுயிர் துன்ப சாகரமு ழன்று
சாதனைஇ ழந்து வருந்தாமுன்தாளை யளித்திட வேணு மெனத்துதி
பாடருண கிரிநாத னழைத்திட
தயவுடன் இசைந்து அருள்மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உரைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவிமலர் தொடுத்த

தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர்மாலை ஜெபமாலை யுடன்சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்                                                      (2)


சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூச லாட துவர்கொள் செவ்வாய்
நற்றே னொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே               (3)

மகாகவி காளிதாஸ் திரைப்படத்திலிருந்து பெறப்பட்ட கவிகள்

தங்கமே தாமரை மொட்டுக ளாகித் தலையெடுக்க
குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க
பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்
பொங்கியே பூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே!

அடிபெருத்து நுனிகுவிந்த பனிமலை யின்மேல்
முடிகருத்த கார்முகிலே மொய்த்திடும் போதில்
படையெடுத்தே வானுலகோர் பார்த்து மகிழ்வார்
உடைநெகிழ்ந்த பூமகளின் உடலழ கென்றே!

பண்பட்ட நெஞ்சிலே புண்பட்டதோ என்ன துன்புற்றதோ?
விண்பட்ட புகழிலே கறைபட்டதோ நீதி விழியற்றதோ?
அன்புற்ற நட்பிலே கண்பட்டதோ? நேசம் அழிவுற்றதோ?
இன்புற்ற காளியின் அருள்பட்டதே! இன்னல் முடிவுற்றதே!

நேயக் கவிக்குயிலே! நீயிருந்த பூங்கிளையைக்
காயவைத்துப் போனதென்ன காரணமோ? - நீயறியப்
பொல்லாப் பழிகூறும் பொய்யர் விழியெதிரில்
நில்லா திருக்க நினைத்து.

பிறப்புற்றேன் காளியிடம் பேரன் புற்றேன்
   பேச்செல்லாம் கவிமழையாய்ப் பெருகும் ஞானம்
வரப்பெற்றேன் செல்வத்தின் வளமும் பெற்றேன்
   மன்னரொடும் சரிசமமாய் மகிழும் வண்ணம்
சிறப்புற்றேன் காதல்மணம் சேர்க்க வந்த
   சிறுமதியாள் பழிச்சொல்லைச் செவியுற் றேன்நான்
வெறுப்புற்றேன் வாழ்வினிலே விரக்தி யுற்றேன்
   விதிமுடிவுத் தேவதையே விரைந்து நீவா!

அறியாத மாந்தர்களே! சாவைக் கண்டு
   அஞ்சிடுவார் அழுதிடுவார்! ஆத்மீ கத்தின்
கரைகாணும் ஞானியரோ உயிருக் கென்றும்
   அழிவில்லை என்றெண்ணி இருப்ப துண்டு
முறையான பெரும்பணியான் சாத னைகள்
   முடிப்பவரோ புகழுடலாய் நிலைப்ப துண்டு
கறையான பழையஉடல் களைந்தே மீண்டும்
   கலங்கமில்லாக் குழந்தைகளாய்ப் பிறப்போம் வாராய்!

Nov 27, 2011

சாம தான பேத தண்டம்

எதிரியைப் பணிய வைக்க நான்கு வழிமுறைகளை, படிமுறைகளை வேதங்கள் சொல்லி வைத்திருக்கின்றன. அவை சாம, தான, பேத, தண்டம் என்பன. இவை சாணக்கியர் சொல்லிக் கொடுத்த நுட்பங்கள் என்றும் கேள்வி.

'தங்கமலை இரகசியம்' படத்தில் இவை கையாளப்பட்டன. ஒவ்வொரு முறையைக் கொண்டும் ஒவ்வொரு வகையான எதிரியைக் கையாள்வதாகக் காட்டியிருந்தார்கள்.

சாமம் - இன்சொல் கூறல், சமாதானம் பேசுதல்,
தானம் - தானம் கொடுத்து வழிக்கு கொண்டு வருதல்
பேதம் - ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல்
தண்டம் - தடியால் அடித்துக் கனிய வைக்க, தண்டனை கொடுக்க, யுத்தம் செய்தல்

இவை நான்கும் தோற்றுப் போகுமா? என்பது என் ஐயம். 'மன் மதன் அம்பு' படத்தில் நான்கும் தோற்றுப்போய், தகிடு தத்தம் செய்து (நாடகமாடி, ஏமாற்றி) வெல்வதாகக் காட்டியிருந்தார்கள். 'தங்கமலை இரகசியம்' படத்தின்படி எதிரியிடம் பொய்சொல்லி, ஏமாற்றி வெல்வதாகச் சொல்லப்பட்டது பேத முறைப்படி.

Nov 12, 2011

என் நண்பன்

குறள் வெண்பா

பெருந்தொலை நண்பா! பொருந்தலை நண்பா!
வருந்தலை நான்வாழ் வினில்.
                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பெருந்தொலை - பெருந்தொல்லை, பெரும் தொலைவு
பொருந்தலை - பொரும் தலை, பொருந்தவில்லை
வருந்தலை - வருந்தவில்லை

Nov 7, 2011

முருகேசன் - தேவி

நிலைமண்டில ஆசிரியப்பா

பொற்றேர் எழுந்து புறப்பட் டாற்போல்
பெற்றோர் சுற்றம் பேரன்புத் தோழர்
மிகுசூழ் மகிழ்நாள் முருகேசன் தேவி
தகுவாழ் பெறுக வீரெண் பேறாம்
கல்வி யாற்றல் வெற்றி யிளமை
நல்லூழ் ஆயுள்நோ யின்மை பெருமை
நெற்புகழ் அறிவு நுகர்ச்சிநன் மக்கள்
பொற்றுணிவு பொருளவை பெறுகென வாழ்த்தும்
தனவேல் அருள்சசி தமிழர சன்சிவா
மணியுறழ் வண்ணன் மாமணி கண்டன்
அணிமுகில் பிரபா அமலன் இரஜினி
பால சண்முகம் இராம மூர்த்தி
ஞாலம் உளவள நற்புகழ் பெற்று
வாழிய வளத்தொடும் நலத்தொடும் என்றே!
                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Oct 31, 2011

தண்ணமிழ்தமிழ்தே! - தண் அமிழ் தமிழ் தே - தண் அமிழ்து அமிழ் தே

நிலைமண்டில ஆசிரியப்பா

கொண்டுகொ டாகுமி டைக்குறை சங்கத்
தொண்டுமா றொன்பது தொண்பது தொண்ணூ
றுண்டுதொண் ணூறுதொள் ளாயிரம் எனவும்
தொண்டுமா யிரந்தொண் டாயிரம் எனவும்
கொண்டலோ கொண்டலும் கொண்டலா கிடுமோ?
கொண்டிலா தாகிடு மோ?விரு பொருளும்
உண்டலோ? மட்டல மா?மதிக் கச்செய்
மண்டல மா?பொறு மண்தல மாவ?
கொண்டதி கட்டிடாக் கொண்டுவா வென்றே
உண்டிடும் இன்பொருட் டண்ணமிழ் தமிழ்தே!
அண்டமிங் கில்லெனின் அண்டள வுள்ள
தொண்டிருந் துள்ளன கொண்டில னெனினும்
தொண்டுசெய் துள்ளம கிழ்ந்திடு வேனே!
பண்டிருந் தோங்கிடுஞ் செந்தமிழ்த் தேனே!
                              - தமிழகழ்வன்

Oct 7, 2011

கதிரவன்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சொல்லுமிதழ் சீர்சந்தம் சோலை மலரத்
    தோன்றுமொளிக் கதிர்பரவிச் சிவந்தி ருக்கும்
எல்லிறைவன் தேவையறிந் துலகு மேத்தும்
    இல்லாமல் யாதுமிவண் இல்லென் றாகும்
நில்லாநின் றிங்குநிலை நேயம் வளர்க்கும்
    நெறிநின்று நேர்செல்லும் கதிர வா!நீ
பல்லாண்டு வாழ்கநலம் பார்சுற் றத்தார்
    பல்லாண்டு வாழ்கவென வாழ்த்த வென்றே!
                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

Sep 30, 2011

மாலைமாற்றுக் குறள்வெண்பா

குறள்வெண்பா
மாலை மாற்று

யாதிநல மாவள மாவா யுரையுவா
மாளவ மாலநதி யா                                                          1

யாதி நலமா? வளமாவாய்! உரை! யுவ ஆம்! ஆள் அவ் அம் ஆல்! அ நதியா

என்ன நலமா? உரைப்பாயாக! இளமையுடைய அந்த அழகியவனால் ஆளப்பட வேண்டியவளாகிய அந்த நதியாவே!

நாதடவு தேதமிழ வாசிரிய ராயரிசி
வாழமித தேவுடத நா                                                       2

நாதடவு தேதமிழ் அ ஆசிரியராய் அரிசிவாழ் அமித தேவுடு அது அ நா.

நாவினிக்கத் தமிழைச் சொல்லிக்கொடுத்த அந்த ஆசிரியராகிய அத்தலைவர் இறைவனுக்கு நிகரானவர்.

அரிசி - அரியும் சிவனும்
                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்நலம் விரும்பி

நெஞ்சுலகில் உலவுகின்ற 
நினைவு நிலாவே!
வஞ்சமிலாச் செஞ்சொல்லில் 
வாஞ்சைமிக உள்ளவன்நான்
இனிய உளவாகும் 
ஏசிடினும் நீஎன்னை
புற்றனம் என்றென்னைப் 
புண்படுத்தும் உன்சொல்லும்
பண்படுத்தும் 
நீயே நலம்விரும்பி!
                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நுதலாளும் நுதற்றோன்றினோனும்

நேரிசை ஆசிரியப்பா

என்னே! கண்டேன் என்னே! கண்டேன்
உன்னில் அவனை உலவக் கண்டேன்
உன்பெயர்ப் பொருளில் அவன்றலை விளங்கும்

உன்னை நினைக்கின் அவன்முகம் தோன்றும்
நதியா றென்றே நவின்றிடின் விளங்கும்
உன்சொல் கேட்கின் உன்பெயர் விளங்கும்
அழகுத் தமிழன் முருகன்
பழகு மொழியாய்! காத லாளே!

               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 17, 2011

கார்த்திகேயன் - விஜயலட்சுமி

உளமார வந்தித்தோம்! விழியாரச் சந்தித்தோம்!!
திருவார்ந்த கார்த்திகைக் குமாரர்தம் வாழ்க்கையிலே
பெருவிஜயம் மனம்இணையும் அமுதவளத் திருவமலத்
திருநாளில் வாழ்த்தியோர்க்குப் பெருநன்றி பகர்வோமே!           (1)

நேரிசை வெண்பா


கார்திகையும் காற்றிகையும் காணுபிற நாற்றிகையும்
கார்த்திகையான் கார்த்திகேயன் கார்திகைய - ஆர்த்தபுகழ்
கார்த்திகைவா ளைக்குலம்வாழ் கார்த்திகைமீன் கண்சிமிட்ட
கார்த்திகைக்க திர்மறை கார்                                                                       (2)

கரவருடத் தாவணியில் காணுபதி னாறில்
விரவும் சுவாதிமதி யோடு - மரபுதவழ்
சுக்கிரனார் நன்னாளில் சுந்தர மன்றலுக்கு
மிக்கமகிழ் வோடுவாழ்த்து க.                                                                     (3)
                                               - தமிழகழ்வன் சுப்பிரமணி  சேகர்

நடராஜன் - தனலட்சுமி

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொங்கும் உள்ள மகிழ்வுக் களவே இல்லை இப்போது
  புனலும் தடமும் போல நீங்கள் வாழ்க பல்லாண்டு
தங்கும் மகிழ்ச்சி என்றும் குறையாத் தனித்தன் மையோடு
  தனநடம் என்னும் செல்வம் பெற்று வீறு நடைபோடு
சங்கம் என்னும் நெஞ்சம் ஆளும் திறமை தன்னாலே
  சரித்திரம் சொல்லும் தனிப்புகழ் பெறுவீர் உலகின் முன்னாலே
குங்கும நுதற்கண் பார்வையால் காணும் தின்மைகள் இரியட்டும்
  குதூகலம் பொங்கும் இத்திரு நாளில் நன்மைகள் பெருகட்டும்
                                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

இலட்சுமணன் - ஜெயா

நிலைமண்டில ஆசிரியப்பா

மன்றல் கொள்ள வந்த தலைவ!
தென்றல் உன்றன் உள்ளம்; சொல்லும்
சொல்லும் செம்மை உடைய தாகும்;
வெல்லும் உன்கை! ஆதா ரந்தான்
ஜெயமே கொண்டனை! வேறென் வேண்டும்?
வயப்படும் உள்ளும் உயர்செயல் எல்லாம்
குணமுயர்ந் தோங்கிக் குடிப்பெயர் தாங்கி
மணம்புரிந் திருமனம் ஒன்றி வாழ்க!
வாழ்க நலத்தொடு! வாழ்கபல் லாண்டு!
வாழ்க செம்மை யோடு வாழ்கவே!
                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

செந்தில்நாதன் - அகிலா

நிலைமண்டில ஆசிரியப்பா

உள்ளம் களிகூர உறவுத் திரள்சூழ
உள்ளும் செயல்யாவும் உளதாய் நிறைவேறச்
செந்தில் நாதற்குச் செந்தூர் எழில்முருகன்
வந்து பொழியருட்சேர் மன்றல் நலம்காண
அகிலம் உடைத்தான பரிசுப் பெரும்பேறு
முகிலின் அருட்போலும் முழுநில வதைப்போலும்
நிறைந்து பல்லாண்டு நிம்மதி மனமாண்டு
சிறந்து மகப்பேறு சீர்மை சொலவேண்டும்                             (1)
--------------------------------------
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

எந்நாளும் பொன்னாளாய் இனித்திருக்க
  ஏற்றங்கள் எப்போதும் கைகொடுக்க
சந்தானம் மன்றுதிரு இராமலிங்கம்
  சிறந்தோங்கப் போற்றுதிரு மதிதுர்கா
சுந்தரமின் னொளிதோன்று வசிமுகிலும்
  ஜோதியொளிர் நலம்யாவும் ஒருசேர
வந்தோரும் வாழ்த்துகவே செந்திலகம்
  அகில்நுதலில்! அகில்நிறைவில்!! குகனருளில்!!!              (2)
                                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 16, 2011

அன்புத் தொல்லை

ஆம் சொல்லு ஜீவா...!

எங்கடா இருக்க? ஆஃபிஸ்லயா?

இல்ல வீட்லதான் இருக்கேன்... மார்னிங் ஷிஃப்ட்...

சரி! ஒரு கல்யாணம். ரிசப்ஷனுக்கு வந்திருக்கேன்டா...! உடனே ஒரு கவிதை வேணும்!

டேய்! மணி இராத்திரி பத்தரை ஆகுது...! தூங்கப்போற நேரத்துல கவிதை கேக்கற?

இதோ பார்ரா...! இன்னும் பத்து நிமிஷத்துல எனக்கு கவிதை வரலனா, தூங்க விடாம தொல்ல பண்ணுவேன்... நீ ஃபோன சுவிட்ச் ஆஃப் பண்ணாலும் எப்படியாவது தொல்ல பண்ணுவேன்!!!

(அவன் எப்படித் தொல்லை கொடுப்பான் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை... அவனுக்குத்தான் தெரியும்)

அதல்லாம் முடியாது...! குட் நைட்...

உடனே அனுப்புற... ஃபோன வையிடா...

அழைப்பு துண்டிக்கப்பட்டது...!

மறுபடியும் அலைபேசியில் அழைத்தேன்... அழைப்பு ஒலி அடித்து ஓய்ந்தது... அடுத்த இரண்டு நிமிடங்களில் ஜீவாவிடமிருந்து அழைப்பு.

ஏய்...! உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...? சரி! ஒரு எட்டு வரில பொதுவா ஒரு வாழ்த்துக் கவிதை இருக்கு... அனுப்பவா? மெயில்ல அனுப்பவா?

டேய்...! இப்ப வேணுங்கிறேன்...! எப்ப போய் பிரிண்ட் அவுட் எடுத்துக் குடுக்கறது? மெசேஜ்ல அனுப்புடா... சும்மா நாலு வரில நச்சுனு இருக்கணும்.

நாலு வரியெல்லாம் கவிதையா...? சரி... பொண்ணு மாப்பிள்ளை பேர சொல்லு...

அந்த அண்ணன் பேரு அறிவழகன்... அவங்க பேரு வீணா...

மீனாவா...?

'வீ... வீ...' டா...

ஓ! 'வீணா' வா?

சரி சரி... மெசேஜ் அனுப்புறேன்!!!

அடுத்த பத்து நிமிடங்களில் மீண்டும் ஜீவாவை அழைத்தேன்... அழைப்பு ஒலி அடித்து ஓய்ந்தது... சற்று நேரம் கழித்து, ஜீவாவிடமிருந்து அழைப்பு..

சொல்லுடா...

மெசேஜ் வந்துச்சா...?

இதோ பாக்குறேன்...

காமெடியாதான் இருக்கும்... என்ன பண்றது...?

ஆம்... ஓகே! சரி ஃபார்வார்ட் பண்றேன்...

சரி... இப்ப எங்க இருக்க...? யாருக்குக் கல்யாணம்...

மைலாப்பூர்லதான்டா இருக்கேன்... அந்த அண்ணன் எங்க ஊருதான். ரிசப்ஷன் இங்க வச்சிருக்காங்க...

சரி... ஓகே! டேக் கேர்... பை...

உம். பை...

உம்.

அழைப்பு துண்டிக்கப்பட்டது...!

--------------------------------------------------------------------------------------------
வீணையும் ஞானமும் வாணியின் சொத்து!
சேர்ந்தது அழகெனும் செம்மைநல வித்து!
உளம்நிறை மகிழ்விலே வசந்தங்கள் சேர்த்து
உயர்வுதான் வாழ்விலே என்பதென் வாழ்த்து!

என்செய்ய...? இதையும் கவிதையென ஏற்றுக்கொள்கிறார்கள்...
எனக்குத்தான் திருப்தி இல்லை!
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோட வேண்டுமே என்று!
ஓடட்டும் எனச் சேர்த்தால் ஓசை நழுவுமே என்று!

Aug 6, 2011

காமராசர்

எழுத்தை மாற்றிய எளிய நெஞ்சினர் - தலை
எழுத்தை மாற்றிய எளிய நெஞ்சினர் - நாட்டின் தலை
எழுத்தை மாற்றிய எளிய நெஞ்சினர்

காக்கும் என்ப தறிந்து - கல்வியே
காக்கும் என்ப தறிந்து - மூடிய
பள்ளிக் கூடம் திறந்து - மதிய
உணவும் ஈந்து புரந்து                                (எழுத்தை)

வளங்கள் பலவும் பெருக்கி - தொழில்
வளங்கள் பலவும் பெருக்கி - எழில்
அணைகள் அமைத்துப் பெருக்கி - நீர்
அணைகள் அமைத்துப் பெருக்கி - பசுமை
கொஞ்சும் தமிழ்நா டென்று - வறுமைக்
கொடுமை அகற்றி வென்று                           (எழுத்தை)

இரண்டா யிரங்கள் ஆண்டு - இங்கு
ஏற்ப டாத மாற்றம் - குறு
ஒன்ப தாண்டே ஆண்டு - உரு
வாக்கித் தமிழ கத்தின்                              (எழுத்தை)

திட்டம் ஒன்றும் வகுத்து - முதல்வர்
பதவி தன்னை விடுத்து - இளையோர்
ஆள வேண்டும் என்று - பேர்
ஆலோ சனைகள் செய்து                           (எழுத்தை)

அரசர் இவர்தாம் என்று - ஆளும்
அரசர் இவர்தாம் என்று - இந்த
அகிலம் உணரக் கூறி - வழி
நடத்தி இந்தி யாவின்                              (எழுத்தை)

வியக்கும் செயல்கள் செய்தார் - நன்மை
பயக்கும் செயல்கள் செய்தார் - மதி
நுட்ப வாதி யவர்தான் - மக்கள்
மனதை மட்டும் படித்தார்                          (எழுத்தை)

ராசர்க் கெல்லாம் ராசர் - திறமை
மிகுந்த காம ராசர் - எளிய
வாழ்வே கொண்ட ராசர் - அன்பு
செலுத்தும் உயர்ந்த நேசர்
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 31, 2011

அழகுச் சிலை

அழகுச் சிலையொன்று - என்
அருகில் வந்ததே!
பழகுத் தமிழ்கொண்டு - விழிப்
பார்வையைப் பகர்ந்ததே!

அவளோ ஓர் இளந்தென்றல்
மனதில் ஒரு களம்கண்டாள்
கண்டதால் களர்நிலம்
விளைநிலம் ஆனதே!
ஒவ்வொரு விதைமுத்தாய்
விழுந்ததே முளைத்ததே
எண்ணத்தில் ஊறிய
என்சிறு கவிதையாய்!

பேசிய ஒரு வார்த்தையில்
புரிந்ததே அவள் நெஞ்சம்!
முல்லைப்பூ நகையினால்
முழுநிலா தோற்றதே!
புன்னகை சிந்திடும்
உதடுகள் தாமரை!
மழலையின் மொழியைப்போல்
கொஞ்சிடும் நாவினள்!

தேவதை அவள் தேவதை
அவள் கண்களின் நேரலை
கண்டதும் வெண்ணிலா
ஒளிக்கதிர் இழந்ததே!
மீன்களும் தம்மினம்
பூமியில் உண்டென
நோக்கின நோக்குங்கால்
அதிசயம் கண்டதே!
                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

காணுமோ காட்டாறு?

மேகம் தூதுவனோ?
அலைந்து திரிகின்றது
குலைந்து போகின்றது
காணுமோ காட்டாறு?

ஏவியவன் யார்?
கார்மேகம் அழுது
கண்ணீர் விடுவதைக்
காணுமோ காட்டாறு?

ஏவியவன் இறைவனாய்
இருக்க இயலுமோ?
இறைவனை உணர்ந்து
காணுமோ காட்டாறு?

காயம் பலவுண்டு
காயத்திற்கு அல்ல
கன்று மனத்திற்கு
காணுமோ காட்டாறு?

குறிஞ்சியோன் முல்லைக்கு
அழைப்பு விடுக்கின்றான்
மேலே வாவென்று
காணுமோ காட்டாறு?
           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நுதற்காதலம்

நிலைமண்டில ஆசிரியப்பா

நுதற்கா தலமே! நின்னைப் படைக்க
முதற்கா ரணமாய் விளங்கு மாற்றுக்
குணர்த்திடு வாயோ? உணர்வுரைப் பாயோ?
ஏக்கத் தண்ணீர்த் தேக்கத் தொட்டிலில்
அடைபட் டதனை மடைதிறந் தாற்போல்
வழிசெய் நதியாய்க் கடல்சேர்த் திடுவாய்!
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தங்கத்திரு மங்கை

குறளடி வஞ்சிப்பா

தங்கத்திரு மங்கையொரு
செங்கண்ணுதற் றிங்கள்வத
னந்தானெதிர் தந்தாளதைச்
சந்தத்தமிழ்ச் சொந்தன்திரு
மஞ்சன்தனைக் கொஞ்சுங்குழந்
தையோவென மெய்யாய்முறு
வல்தந்தவ னுள்ளம்புகுந்
தெல்லையஃ தில்லாமகிழ்
வைத்தந்தருள் கின்றாளவள்
யானோ
சிறுபரு வத்தனன் சீருற
வுறுதுணை யெனக்கிங் கெனநிற் பாளோ?
                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

காற்றினிலே... பூங்காற்றினிலே...

காற்றினிலே - பூங்
காற்றினிலே - வரும் 
பாட்டினிலே - செவி பெறுந்தேன் 
ஊற்றினிலே - மனம் 
மயங்குதற்போல் - தான் 
இயங்குதற்போல்

நினைவினிலே - நீ 
நேர்கையிலே - புவி 
அனைத்தினையும் - நான் 
மறக்கின்றேன் - உயிர் 
துறக்கின்றேன் - மறு 
பிறக்கின்றேன்

நேரினிலே - நீ 
நேர்கையிலே - ஒரு 
வார்த்தையுமே - என் 
வாயினின்று - வெளி 
வாராமல் - மனம் 
சோராமல் - ஆவல் 
தீராமல்

உறைகின்றேன் - இதை 
அறைகின்றேன் - நீ 
பிறையன்றோ - மனச்
சிறையன்றோ - நல்
சுரமன்றோ - வலக்
கரமன்றோ - பெரு
வரமன்றோ

மொழி பகர்வாயோ?
நுதல் பகிர்வாயோ?
மனம் புகுவேனோ?
மணம் புரிவேனோ?
         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jun 25, 2011

இனியவன் பேசுகிறான்

என் நண்பா!
இன்னலிலும் இன்பத்திலும்
என்னை எப்படி எழுதிக் குவிக்கிறாய்!
என்பதனால்
உனக்குள் அடங்கியவன் நான்
என்று மட்டும் எண்ணிவிடாதே!
அடங்காதவன் நான்
ஆனால் அன்புக்குக் கட்டுப்பட்டு
அமுதமாய் இனிக்கிறேன் உனக்கு

எல்லையற்றவன் நான்
அணுவை மட்டுமே அறிந்து
அன்பு கொண்டவன் நீ!
ஆற்றல் கொண்டவன் நீ!
ஆறுதல் கொள்பவனும் நீ!

என் பரிமாணம்
உனக்குப் புரியாது
உன் எண்ணங்களின்
எல்லை வரையே
என்னை வரைவாய்!

எழுத்தே என்வேர்!
எல்லைப்படுத்தி ஆண்டவர்க்கும்
எல்லை இல்லை என்றும்
எல்லாம் நானென்றும்
உணர்ந்தவர்க்கும்
அவரவர் விருப்பம்போல்
அளவில்லா இன்பத்தை
அள்ளிக்கொடுக்க முடியும் என்னால்

இச்சிறு வாழ்க்கையில்
இத்தனைக் கோளாறுகளையும்
இத்தனை இன்னல்களையும்
எனக்கு இழைப்பதாய் எண்ணி
உனக்குள் கோட்டை கட்டி
என்னை
உள்ளடக்கம் செய்யாதே!

எனக்கொன்றும் இழிவில்லை
எப்படி வேண்டுமானாலும்
எந்தப் பரிமாணத்திலும் வாழும்
நிலையானவன் நான்!
நிலையற்றவன் நீ!

அஹிம்சையும் அடக்குமுறையும்
அப்பாற்பட்டவை எனக்கு
பிரளயமும் யுகமும்கூட
பொருட்டல்ல எனக்கு
எழுத்தும் மொழியும்கூட
எல்லையல்ல எனக்கு

உனக்குள் திடமாய்
உறைந்துள்ளேன் என்று
நீ எண்ணினால்
உனக்கே சொந்தமானவன் ஆகமாட்டேன்
உனக்கும் சொந்தமானவன் நான்

எல்லா உயிர்களுள்ளும்
இருக்கும் எண்ணம்
நம்மை மீறிய சக்தி - கடவுள்
நானும் கடவுள்தான்!
உள்ளங்களில் வாழ்ந்து
உலகைக் கடந்து வருபவன் நான்!
            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jun 15, 2011

மாற்றமும் கூற்றமும்

ஏமாற்றம் என்மாற்றம்
எல்லாம் முடிய கூற்றம்
ஆற்றல் என்ப தாற்றம் எனவே
தோற்றிய நெஞ்சம் பின்னர் எங்ஙனம்
ஆற்றம் மாற்றம் ஆற்றும்?
தேற்றம் உளத்தின் தோற்றம்
காற்றில் கலந்த கவலை ஏற்றம்
ஆற்றம் இல்லா தாற்றல் இல்லை
பின்னர் எங்ஙனம் ஏற்றம்?
வாழ்க்கைச் சேற்றில்
வாழ்வே சோற்றில்
மாற்றம் ஆற்றில்
கூற்றம் ஈற்றில்
        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Apr 3, 2011

தேங்காயும் நானும்

நிலைமண்டில ஆசிரியப்பா

தேங்காய் ஒன்றை என்கைக் கொடுத்துப்
'பாங்காய் இரண்டு பாக மாக்கு'
என்றார் அன்னை இரண்டாய் உடைத்தே
சின்னத் துண்டுகள் இரண்டை உண்டேன்
தொண்டை 'கரகர' என்றது, தேங்காய்                    5
உண்டால் அங்ஙனம் இருக்கும் எனநான்
எண்ணினேன் சிறிது நேரம் சென்றபின்
கொண்டேன் தும்மல் அளவும் இன்றி
சளியும் பிடித்த(து) உடல்கன கனத்தது
துளிர்த்தன எண்ணங்கள் என்ன டாஇது?                 10
தெங்கம் பழத்தால் சளிபிடித் திடுமோ?
தெங்கம் என்றதும் தோன்றின நினைவுகள்
எப்போதோ படித்த இலக்கியப் பாடல்கள்
தப்பேதும் இன்றிச் சிந்தைக் கெட்டின
'அதுவன்றோ நாய்பெற்ற தெங்கம் பழம்'மற்றும்           15
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்'என்றும் ஓடின
இன்னொரு நிகழ்வு முன்னொரு நாளில்
எந்தை தந்தார் ஒருதேங் காயை
உடைத்துவா என்றார் உடைத்ததும் அதனை             20
உற்று நோக்கினேன் உளத்துள் உதித்தது
'கொண்டைப் பூவுடையாய்! குளிர்வெண் மையகத்தாய்!
தண்ணீர் மைகுன்றாத் தனியறத் தோடுயர்ந்தாய்!
கண்ணும் மூன்றுடையாய்! காணும் விழாவெல்லாம்
பண்டை முதலிருந்து பார்க்கும் தேங்காயே!'             25
அதனைத் தந்தையிடம் காட்ட வியந்தார்
'அழகாய்க் கவிதை புனைந்தனை அந்த
அழகன் சஷ்டியன் பெருமையை என்சொல'
'இப்படிப் பட்ட தேங்காய் எனக்கு
யெப்படி இந்தத் துன்பம் தந்தது?'                      30
என்றே எண்ணி வியந்திடும் போது
ஒன்றுதோன் றியது 'நம்தந் தைதான்
நாட்டு வைத்திய ராச்சே! அவரிடம்
கேட்டால் புரியும்' கேட்டேன் சொன்னார்
'தேங்கா யால்சளி பிடிக்கா தானால்                   35
தூங்கும் சளியைக் கிளர்ந்தெழச் செய்யும்'
மறுநாள் ஆங்கில மருத்துவர் ஒருவரை
அணுகி அவரிடம் கேட்டேன் சொன்னார்
தேங்காய் உண்டதால் சளிபிடித் ததுவோ?
இருக்கா தப்பா இளநீர் கூட                        40
சிலசம யங்களில் சளிபிடிக் கச்செயும்
வெயிலில் சென்றுபின் உடனே குடித்தலால்
தண்ணீர் கூடச் சளிபிடிக் கச்செயும்
என்றார் எதனை யான்நம் புவது?
தெரிந்தால் உரையும் தெரிந்துகொள் கின்றேன்         45
தேங்காய் தின்றால் சளிபிடித் திடுமோ?
என்றுநான் எண்ணிக் கொண்டிருக் கையில்
குதர்க்க மாய்ச்சில எண்ணங்கள் தோன்றின
ஓ!தேங் காயை உடைத்தத னாலோ
தண்டனை கொடுத்த திந்தத் தேங்காய்?              50
இல்லை யே!அதன் பிறவிப் பயனை
அடைய நானும் உதவியுள் ளேனே!
பின்னே ஏனிது? புரிய வில்லை
என்னன்னை சொன்னார் 'சென்ற வாரம்
ஊருக்குச் சென்றோ மன்றோ? அந்த                55
ஊர்த்தண் ணீருனக் காக வில்லை'
சிரிப்பு வந்த(து) 'அப்படி யோ?'என
'ஆமஃ தூறித் தானதன் வேலையைக்
காட்டும்' என்றார் நம்பி விட்டேன்
இதனொடு நின்று விடவில்லை இன்னும்              60
சிந்தித் தேன்பின் சொன்னேன் 'அம்மா
அந்தத் தேங்காய் எந்தமரத் துக்குச்
சொந்தமோ அந்த மரமோ எந்த
மண்ணைச் சேர்ந்ததோ அந்த மண்ணின்
தண்ணீர் தானெனக் காக வில்லை                  65
அஃதூ றித்தான் வேலையைக் காட்டுது'
இன்னும்சிந் தித்தேன் ஒன்றுதோன் றியது
தேங்கா யோ?இது தெங்கம் பழமோ?
காயொரு பருவம் பழமொரு பருவம்
காயென்றும் பழமென்றும் ஒரேபரு வத்தில்           70
பெயர்பெற்ற பொருளிது மட்டும் தானோ?
என்னுடல் மட்டும் விழுந்து கிடக்க
என்சிந்தை அடங்காமல் சிந்தனை செய்தது...         73
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Mar 13, 2011

செய்யுளா? உரைநடையா?

காலமெலாம் கட்டிவந்த கவிதைகளில் தட்டிவராத்
தளைகளிடைத் தமிழ்க்கன்னி தனித்தன்மை பெற்றோங்கி
பொங்கிவரும் பூரிப்பால் பெருமைமிக வளர்ந்திருந்தாள்!
சிந்துவினைச் சொந்தமெனக் கொண்டவனப் பாரதியும்
தானெழுதி வைத்தவுரை நடைக்கவிக்குப் பொருத்தமதாய்         5
'வசனகவி' எனப்பெயரை வைத்தெழுதிப் போந்தார்.
'புதுக்கவிதை' என்றெழுத வில்லையவர் பண்பில்லை
இன்றெழுது வோரதனை ஏற்காமல் பெயர்வைத்தார்
திரைப்படத்தில் வசனங்கள் கூடவளம் பெற்றிருக்க
அவ்வசனம் போலவே அடிக்கொரு வார்த்தையென             10
அளந்தெழுதி வைத்துவிட்டு அதுகவிதை என்றால்
மதிப்பில்லை கவிதைக்கு, தமிழ்மகனுக் கெங்கிருக்கும்?
காளமேகம் அருணகிரி கண்டுவந்த தமிழ்மண்ணை
ஆளவந்து வழக்கமொழித்(து) அனைத்தையுமே மாற்றிவிட்டுத்
தமிழ்வளர வில்லையென நியாயங்கள் பேசிடுவார்               15
ஓசைநயம் ஒழுகுதமிழ் வடிவமைக்கத் தெரியாமல்
பேசுதமிழ்ப் போலவே பதம்சொல்லி வைத்துவிட்டு
உணர்வுகளே கவிதையென வசனங்கள் பேசிடுவார்!
உணர்வுகளை வெளிப்படுத்தக் கவிதைமட்டும் கருவியில்லை
கவிதையிலே உணர்விருக்கும் கவினழகைக் காட்டிவிடும்          20
கண்டதெலாம் கவிதையெனக் கொண்டுவந்து விட்டாலோ
சிந்திக்க ஆளின்றிச் சீரழிந்து போயிடுமே!
திரிசொல்லைக் காணும்நம் பின்னோர்தாம் புரியாமல்
'என்னவிது?' என்றேதான் கேட்டிடுவார் என்சொல்ல?

Mar 3, 2011

விடையே தெரியாத விடியல்!

வாழ்க்கை...
விடையே தெரியாத விடியல்!
எண்ணங்கள் மட்டும்
எட்டாத உயரங்களையும்
எவ்வளவோ ஆழங்களையும்
குப்பைகளாய்க் குவித்துவைத்திருக்கும்.


இப்படியே செல்லும்
இந்த வாழ்க்கையில்
எத்துணைக்குத்தான் ஆசைப்பட முடியும்?
என்றெண்ணி,
இனி எந்த ஆசையும் வேண்டாம்
என்னும் போதினிலே
இறந்துவிடுகிறான் மனிதன்.


இவ்வுலகில் வாழும்
ஒவ்வொரு கணமும்
ஏதோ ஒருவகையில்
ஏதோ ஓர் ஆசைக்காய்
ஏங்குகிறது நெஞ்சம்.


ஆசை...
இன்பம் தேடல்
அடிப்படைத் தேவைகள்
தன்மானப் பிரச்சினைகள்
பண்பட்ட வாழ்க்கை
அஞ்சுதற்கு அஞ்சுதல்
என எவ்வகையிலும் இருக்கலாம்.


ஆக, ஆசையின் ஆளுகைக்குள்
அகப்பட்டவன் மனிதன்.
ஆசைப்பட்டவை கிடைக்கவும் செய்கின்றன.
ஆதலின் விடியல் எனலாமே.
விடை ஏது?
ஆசை ஏனெனத் தெரியாதபோது.

நிலையற்ற வாழ்க்கை

கால ஓட்டம்
காட்டாற்று வெள்ளம்!
கரைகளையும் அரித்துக்
கருவுக்குள் பதித்துத்
தான்மட்டும் செழிப்பாய்!
வாழ்க்கைப் போராட்டமோ?
உன்னைப் பொறுத்தவரையில் இருக்கலாம்.
என்னைப் பொறுத்தவரையில்
யாருக்கோ அடிமை நீ!


சஞ்சல நெஞ்சம்
சரித்திரக் களஞ்சியம்!
வாழ்ந்தேன் இங்ஙனம்
வீழ்ந்தேதான்!


எழும்போதெல்லாம்
என்னை என்ன செய்யமுடியும்?
என்கிற மமதை!
உன்பார்வையில் தன்னம்பிக்கை!
வாழ்ந்துவிட்டுப் போ!


விழும்போதெல்லாம்
விதியின் விளையாட்டு
வினை யாரை விடும்?
வீண்தத்துவம்!
ஆனால், அதுதான் ஆறுதல்.


யாவரும் எப்போதும்
ஒரே நிலை
என்பது நிலையில்லை!
மாற்றிப்போட்டவை வகுத்துத்தரும்
புதுப்பாதைகள்!
நிலையானது என எண்ணிச் செய்வது
சில காலங்களுக்கு நிலையானது.
ஆனால்,
அது என்றும் நிலையானது இல்லை.

Mar 1, 2011

பிதற்றல்

ஒன்றுமில்லை என்றுசொல்ல
இலக்கண மரபுகளையும்
இன்னிசைச் சந்தங்களையும்
இடையூறென்னும் துன்பங்களுக்கு
ஏன் ஆளாக்க வேண்டும்?


ஏதோ எழுதுவோம்
எண்ணங்களை!
இன்னும் தெளிவாய் அறிந்திராததைத்
'தெள்ளுதமிழ்' என்று சொல்லிக்கொண்டு
'செம்மொழி' எனும் போலிமகுடம் சூட்டிப்
பிதற்றல்களாய்ப் பதிவு செய்கிறேன்


காதல்கூடக் கரைந்துவிடும் வலியா?
மனிதனின் மனம்
எண்ணங்களின் கலவையாய்க்
குழம்பிப் போயிருந்தால்,
தர்க்கங்களின் தாக்குதல்களுக்கு
உள்ளாகியிருந்தால்,
அறிவுச் சுடரில் கருகிப் போயிருந்தால்,
மாறிமாறி வரும்
மழையும் வெயிலும் போலிருந்தால்
காதல்கூடக் கரைந்துவிடும் வலிதான்!


கரைந்துவிடுமானால் அது
காதல் அன்று
என்று வாதிட்டால்
காலங்காலமாய்
நெஞ்சங்களில் ஊறி,
இனி அழிக்கவே முடியாது என்றெண்ணி
உயர்ந்த காதல்,
உறுதிக் காதல்,
உத்தமக் காதல் என்று
பேரெடுத்தால்கூட,
மாறும் மனம் உள்ளவரை
காதல்கூடக் கரைந்துவிடும் வலிதான்!


இது வெறும் பிதற்றல்...
கவிதை என்று சொல்லிக்
கண்மூடித்தனமாய் இருந்துவிடாதே!
பாவம் தமிழ்!

Feb 27, 2011

இக்காலத் தமிழும் தமிழனும்

தளைகட்குள் தளைப்படாத
எளிய தமிழ் என்றதும்
எதை எண்ணியும் கவலை கொள்ளாமல்
எண்ண ஓட்டங்கள்
ஓங்குமலை மீதிருந்துப் பாய்ந்துவரும் அருவியெனப்
பொங்கிப் பெருகிப் பேராறாய் உருவெடுத்து,
விரிசோலை வளப்படுத்தலைப்போல்
ஒடுங்கிப்போய் ஒளிந்திருந்தவை
ஒளிபெற்று வெளிப்படுதல் உயர்தமிழே! உன்னால்தான்!
உனையன்றி யாரெனக்குப் பேராற்றல் தந்திடுவார்!
இப்படித்தான் இக்காலத் தமிழும் தமிழனும்

புதுக்கவிதையாம்...

இப்போதெல்லாம்
இதற்கென்று
சிந்திப்பதில்லை.
எண்ண ஓட்டங்களை
எல்லைப்படுத்தி
எழிலுறச் செய்வதில்லை.

இத்தகு சீரழிவுக்கு
நீதான் காரணம்!
எதைப்பற்றியும் கவலையில்லை
இதுதான் இக்கால உலகம்!
எல்லைமீறிப் போய்விட்டாய்!
இனிமையும் போய்விட்டது!
உன்னுள்ளும் என்னைத் தேட முடியுமா?

நீ ஆள வந்துவிட்டாய்!
நான் காணாமல் போகிறேன்...

என்னாட்சியில்
இனிமை என்ன குறைந்துவிட்டது?
என் ஆட்சியின் பலன்
எல்லாருக்கும் எட்டுவதில்லை!
அரிதின் முயன்றோர்க்கு
எளிதில் இடந்தருவேன்!

உழைப்பின் பலனை ருசித்தவர்கள்
என் தலைமுறையினர்!
அணுவணுவாய் ரசித்தவர்கள்
என் தலைமுறையினர்!
என்னுள்ளே ஏகப்பட்ட
ஆளுமைப் பிரிவுகள்
என்னை நன்றாய் உணர்ந்தவர்களை
எப்போதுமே கைவிடுவதில்லை நான்!
உனக்கு என்ன இருக்கிறது?
உன்னை ஆள்பவர்க்கும் ஆய்பவர்க்கும்
அவ்வளவு ஆழத் தோண்டுதல்கள்
தேவையில்லை!
உரித்துவைத்த வாழைப்பழம் நீ!
உண்மையைச் சொன்னால்
எல்லாருக்கும் நீ 
எளிதில் கிடைப்பவன்தான்!

ஆனால்,
உன்னைப் பற்றியே உணராத சிலர்
உணர்ந்துவிட்டதாய்
உண்மையென உரைத்தே
வீணாய் அறிவிழந்து போய்விட்டார்கள்!
சிந்தனைத் திறனைக் குறைத்துவிட்டாய்!
உன்னைத் திரும்பச் சொல்லவும்
திணருவார்களே!
அப்போது தெரியும் என்னருமை!
ஆனால், ஒன்று கூறுகிறேன்
என்வேரால் விரிந்த ஆலில்லை நீ!
அந்நியத்தின் தாக்கம் நீ!
உன்னையும் விட்டுவைக்கவில்லை அவர்கள்
அவ்வளவே!
வாழ்ந்துவிட்டுப் போ!

Jan 30, 2011

பகற்கனவுகள்

நிலைமண்டில ஆசிரியப்பா

வயற்காட் டிடையே வளம்நிறை வீட்டில்
கயற்கண் ணுடையாள் கணவன் புதல்வன்
புதல்வி நால்வர் நலத்தொடு வாழும்
இதமிகு வாழ்வை இனியன் விரும்பி
இருப்பான் போலும் இதயத் திருத்தி              5
ஒருநாள் இரவில் உறக்கம் கொண்டவன்
மறுநாள் வைகறை மணியைந் தளவில்
சிறுபற வைகளின் சிதறொலி கேட்டுச்
சிந்தையில் ஓடிய கனவில் சேர்த்துச்
சொந்த மாய்நிலம் கொண்டதன் நடுவே         10
அழகிய வீட்டை யமைத்து நெற்பயிர்
கழனியில் செழித்தல் கண்டுபே ரின்பம்
கொண்டவன் கண்களை மெதுவாய்த் திறந்தான்
கண்டவை எல்லாம் கனவுகள் தாமென
மனத்தைத் தேற்றிச் செய்வன செய்ய           15
தனதடி நடத்தினான் வழக்கம் போலவே

ஏழைக் குடும்பம் இனியனின் குடும்பம்
ஏழாம் வகுப்பில் படிக்கின் றானவன்
தங்கை ஐந்தாம் வகுப்பில் தலைவி
தங்கம் போன்றே மதிக்கத் தகுந்த                 20
இளசுகள் இரண்டும் படிப்பில் கெட்டி
முளைக்கும் போதே ஞானம் புகுந்ததோ?
பெருமை கொள்ள முடியும் அவர்களால்
இருப்பினும் மின்னிணைப் பில்லாக் குடும்பம்
பின்னர் எப்படிப் படிக்க முடியும்?                 25
அன்றைய பாடங்கள் முடிக்க முடியும்?
எல்லாப் பிள்ளைகள் போல வர்கள்
செல்லார் மாலை விளையாட் டுக்கு
காலையும் மாலையும் படிப்பே கதியாய்
மாலை முடிந்தும் இரவில் விளக்கொளித்            30
தீபம் அவர்கட் குறுதுணை யானது
பாபம் தொலைத்தான் இறைவன் இதனால்
ஆசிரி யர்தம் அறிவுரை யாவும்
மாசினை நீக்கிப் பண்ப டுத்த
வருத்த வளைவேய் போல வர்கள்                35
திருத்தம் கொண்டொரு நிலைப்படு மனமாய்ச்
செய்செயல் தன்னில் சிறந்து விளங்கினர்
செய்பண் பட்டால் விளைச்சல் மிகுமே!
தந்தையும் தாயும் அந்தந்த நாளின்
வருவாய் கொண்டு வயிற்றுண வுக்குப்            40
பாடு பட்டுப் படிக்கச் செய்தனர்
ஏடெழுத் தறிகிலர் ஏழைய ரானோர்

இப்படி யான இக்குடும் பத்தின்
இனியன் எண்ணும் எண்ணங் கள்தான்
பகற்கன வென்றேன் பலிக்கா தென்றிலை         45
பகலிற் காணும் பல்வகைக் காட்சிகள்
பெறூஉம் பல்வகை அனுப வங்கள்
எண்ண ஓட்டத் தோடையில் செல்கையில்
வண்ணக் கனவுக ளாக மின்னிட
அவற்றில் ஒன்றுள் மனத்தில் அழுந்திட          50
அவன்முன் கண்ட விடியற் கனவாம்.

எழுந்தவன் இன்னிசை கேட்டனன் இனிமை
எழும்படி யாகப் பறவைகள் பாடின
அழுந்தின அவன்றன் அடிகள் குரம்பில்
விழுந்தே கிடந்த சிறுபனித் துளிகள்                        55
சிதறி ஓடின சில்லென் றுரைத்தன
இதமாய்த் தோன்றின இனியன் நினைவில்
இச்சிறு பனித்துளி அப்பனை காட்டும்
அச்செறி வுடையஃ தத்திருக் குறளெனும்
எண்ணங்கள் ஓடின இலக்கியம் பாடின                   60
வண்ணம் என்னும் வகைப்பாட் டுணர்ந்தான்
முத்துப் பனித்துளி எனும்போ தினிலே
'முத்தைத் தருபத் தித்திரு நகை'யெனும்
அழகிய தமிழைப் பாடிச் சென்றான்
மழையால் நெஞ்சம் நிறைந்தே நடந்தான்              65