Jan 30, 2011

பகற்கனவுகள்

நிலைமண்டில ஆசிரியப்பா

வயற்காட் டிடையே வளம்நிறை வீட்டில்
கயற்கண் ணுடையாள் கணவன் புதல்வன்
புதல்வி நால்வர் நலத்தொடு வாழும்
இதமிகு வாழ்வை இனியன் விரும்பி
இருப்பான் போலும் இதயத் திருத்தி              5
ஒருநாள் இரவில் உறக்கம் கொண்டவன்
மறுநாள் வைகறை மணியைந் தளவில்
சிறுபற வைகளின் சிதறொலி கேட்டுச்
சிந்தையில் ஓடிய கனவில் சேர்த்துச்
சொந்த மாய்நிலம் கொண்டதன் நடுவே         10
அழகிய வீட்டை யமைத்து நெற்பயிர்
கழனியில் செழித்தல் கண்டுபே ரின்பம்
கொண்டவன் கண்களை மெதுவாய்த் திறந்தான்
கண்டவை எல்லாம் கனவுகள் தாமென
மனத்தைத் தேற்றிச் செய்வன செய்ய           15
தனதடி நடத்தினான் வழக்கம் போலவே

ஏழைக் குடும்பம் இனியனின் குடும்பம்
ஏழாம் வகுப்பில் படிக்கின் றானவன்
தங்கை ஐந்தாம் வகுப்பில் தலைவி
தங்கம் போன்றே மதிக்கத் தகுந்த                 20
இளசுகள் இரண்டும் படிப்பில் கெட்டி
முளைக்கும் போதே ஞானம் புகுந்ததோ?
பெருமை கொள்ள முடியும் அவர்களால்
இருப்பினும் மின்னிணைப் பில்லாக் குடும்பம்
பின்னர் எப்படிப் படிக்க முடியும்?                 25
அன்றைய பாடங்கள் முடிக்க முடியும்?
எல்லாப் பிள்ளைகள் போல வர்கள்
செல்லார் மாலை விளையாட் டுக்கு
காலையும் மாலையும் படிப்பே கதியாய்
மாலை முடிந்தும் இரவில் விளக்கொளித்            30
தீபம் அவர்கட் குறுதுணை யானது
பாபம் தொலைத்தான் இறைவன் இதனால்
ஆசிரி யர்தம் அறிவுரை யாவும்
மாசினை நீக்கிப் பண்ப டுத்த
வருத்த வளைவேய் போல வர்கள்                35
திருத்தம் கொண்டொரு நிலைப்படு மனமாய்ச்
செய்செயல் தன்னில் சிறந்து விளங்கினர்
செய்பண் பட்டால் விளைச்சல் மிகுமே!
தந்தையும் தாயும் அந்தந்த நாளின்
வருவாய் கொண்டு வயிற்றுண வுக்குப்            40
பாடு பட்டுப் படிக்கச் செய்தனர்
ஏடெழுத் தறிகிலர் ஏழைய ரானோர்

இப்படி யான இக்குடும் பத்தின்
இனியன் எண்ணும் எண்ணங் கள்தான்
பகற்கன வென்றேன் பலிக்கா தென்றிலை         45
பகலிற் காணும் பல்வகைக் காட்சிகள்
பெறூஉம் பல்வகை அனுப வங்கள்
எண்ண ஓட்டத் தோடையில் செல்கையில்
வண்ணக் கனவுக ளாக மின்னிட
அவற்றில் ஒன்றுள் மனத்தில் அழுந்திட          50
அவன்முன் கண்ட விடியற் கனவாம்.

எழுந்தவன் இன்னிசை கேட்டனன் இனிமை
எழும்படி யாகப் பறவைகள் பாடின
அழுந்தின அவன்றன் அடிகள் குரம்பில்
விழுந்தே கிடந்த சிறுபனித் துளிகள்                        55
சிதறி ஓடின சில்லென் றுரைத்தன
இதமாய்த் தோன்றின இனியன் நினைவில்
இச்சிறு பனித்துளி அப்பனை காட்டும்
அச்செறி வுடையஃ தத்திருக் குறளெனும்
எண்ணங்கள் ஓடின இலக்கியம் பாடின                   60
வண்ணம் என்னும் வகைப்பாட் டுணர்ந்தான்
முத்துப் பனித்துளி எனும்போ தினிலே
'முத்தைத் தருபத் தித்திரு நகை'யெனும்
அழகிய தமிழைப் பாடிச் சென்றான்
மழையால் நெஞ்சம் நிறைந்தே நடந்தான்              65