Mar 13, 2011

செய்யுளா? உரைநடையா?

காலமெலாம் கட்டிவந்த கவிதைகளில் தட்டிவராத்
தளைகளிடைத் தமிழ்க்கன்னி தனித்தன்மை பெற்றோங்கி
பொங்கிவரும் பூரிப்பால் பெருமைமிக வளர்ந்திருந்தாள்!
சிந்துவினைச் சொந்தமெனக் கொண்டவனப் பாரதியும்
தானெழுதி வைத்தவுரை நடைக்கவிக்குப் பொருத்தமதாய்         5
'வசனகவி' எனப்பெயரை வைத்தெழுதிப் போந்தார்.
'புதுக்கவிதை' என்றெழுத வில்லையவர் பண்பில்லை
இன்றெழுது வோரதனை ஏற்காமல் பெயர்வைத்தார்
திரைப்படத்தில் வசனங்கள் கூடவளம் பெற்றிருக்க
அவ்வசனம் போலவே அடிக்கொரு வார்த்தையென             10
அளந்தெழுதி வைத்துவிட்டு அதுகவிதை என்றால்
மதிப்பில்லை கவிதைக்கு, தமிழ்மகனுக் கெங்கிருக்கும்?
காளமேகம் அருணகிரி கண்டுவந்த தமிழ்மண்ணை
ஆளவந்து வழக்கமொழித்(து) அனைத்தையுமே மாற்றிவிட்டுத்
தமிழ்வளர வில்லையென நியாயங்கள் பேசிடுவார்               15
ஓசைநயம் ஒழுகுதமிழ் வடிவமைக்கத் தெரியாமல்
பேசுதமிழ்ப் போலவே பதம்சொல்லி வைத்துவிட்டு
உணர்வுகளே கவிதையென வசனங்கள் பேசிடுவார்!
உணர்வுகளை வெளிப்படுத்தக் கவிதைமட்டும் கருவியில்லை
கவிதையிலே உணர்விருக்கும் கவினழகைக் காட்டிவிடும்          20
கண்டதெலாம் கவிதையெனக் கொண்டுவந்து விட்டாலோ
சிந்திக்க ஆளின்றிச் சீரழிந்து போயிடுமே!
திரிசொல்லைக் காணும்நம் பின்னோர்தாம் புரியாமல்
'என்னவிது?' என்றேதான் கேட்டிடுவார் என்சொல்ல?

2 comments:

சரவண வடிவேல்.வே said...

எதற்க்கு இந்த கோபம்??

மாற்றம் என்பதே மாறாதது தானே??

சரவண வடிவேல்.வே said...

எதற்கு நண்பா, தனியாக ஒரு வலைப்பதிவு... எல்லாவற்றையும் ஒரே இடத்தில் எழுதுங்கள். நீங்கள் எழுதுவது செய்யுளாக இருந்தால் என்ன?? அல்லது உரைநடையாக இருந்தால் என்ன??. உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை மட்டும் எழுதுங்கள். உண்மையாக எழுதுபவை மட்டுமே நிலையானவை இருக்கும் என்று நம்புகிறவன் நான்.

கொஞ்ச நாட்களுக்கு நீங்கள் உங்களுக்கு போட்டிருக்கும் வட்டத்தை விட்டு (முழுமையாக) வெளியே வந்து பாருங்கள்.

Post a Comment