Oct 31, 2011

தண்ணமிழ்தமிழ்தே! - தண் அமிழ் தமிழ் தே - தண் அமிழ்து அமிழ் தே

நிலைமண்டில ஆசிரியப்பா

கொண்டுகொ டாகுமி டைக்குறை சங்கத்
தொண்டுமா றொன்பது தொண்பது தொண்ணூ
றுண்டுதொண் ணூறுதொள் ளாயிரம் எனவும்
தொண்டுமா யிரந்தொண் டாயிரம் எனவும்
கொண்டலோ கொண்டலும் கொண்டலா கிடுமோ?
கொண்டிலா தாகிடு மோ?விரு பொருளும்
உண்டலோ? மட்டல மா?மதிக் கச்செய்
மண்டல மா?பொறு மண்தல மாவ?
கொண்டதி கட்டிடாக் கொண்டுவா வென்றே
உண்டிடும் இன்பொருட் டண்ணமிழ் தமிழ்தே!
அண்டமிங் கில்லெனின் அண்டள வுள்ள
தொண்டிருந் துள்ளன கொண்டில னெனினும்
தொண்டுசெய் துள்ளம கிழ்ந்திடு வேனே!
பண்டிருந் தோங்கிடுஞ் செந்தமிழ்த் தேனே!
                              - தமிழகழ்வன்

Oct 17, 2011

வளையாபதியின் வடிப்பு வேலனின் கேள்வியாய்...

வினைபல வலியி னாலே 
  வேறுவேறி யாக்கை யாகி
நனிபல பிறவி தன்னுள்
  துன்புறூஉம் நல்லு யிர்க்கு
மனிதரின் அரிய தாகும்
  தோன்றுதல் தோன்றி னாலும்
இனியவை நுகர எய்தும்
  செல்வமும் அன்ன தேயாம்

உயர்குடி நனியுள் தோன்றல்
  ஊனமில் யாக்கை யாதல்
மயர்வறு கல்வி கேள்வித்
  தன்மையால் வல்ல ராதல்
பெரிதுணர் அறிவே யாதல்
  பேரறம் கோடல் என்றாங்
கரிதிவை பெறுதல் ஏடா
  பெற்றவர் மக்கள் என்பார்
---------------------------------------------------------
அரியது கேட்கின் வரிவடிவேலோய்! அரிது அரிது மானிடராதல் அரிது!
மானிடராயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது!
கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறந்தகாலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது!
ஞானமுங் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான் செய்தலரிது!
தானமும் தவமும் தான் செய்ததாயின் வானவர் நாடு வழி திறந்திடுமே!

Oct 11, 2011

மழலை நினைவுகள் மலரட்டுமே! - 11

ஒன்னு எலுமிச்சங் கன்னு
ரெண்டு ரோசாப்பூ செண்டு
மூணு முருங்கப்பட்டை தோலு
நாலு நாய்க்குட்டி வாலு
அஞ்சு ஆயா தலை பஞ்சு
ஆறு அருவாமனை கூரு
ஏழு ஏணி மேல ஏறு
எட்டு குரங்குத் தலையை வெட்டு
ஒம்பது தண்ணி வந்து ரொம்புது
பத்து பல்ல பாத்துக் குத்து


ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று
இரண்டு முகத்தில் கண்ணிரண்டு
மூன்று முக்காலிக்குக் கால் மூன்று
நான்கு நாற்காலிக்குக் கால் நான்கு
ஐந்து ஒருகை விரல் ஐந்து
ஆறு ஈயின் கால் ஆறு
ஏழு வாரத்தின் நாள் ஏழு
எட்டு சிலந்தியின் கால் எட்டு
ஒன்பது தானிய வகை ஒன்பது
பத்து இருகை விரல் பத்து

Oct 7, 2011

கதிரவன்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சொல்லுமிதழ் சீர்சந்தம் சோலை மலரத்
    தோன்றுமொளிக் கதிர்பரவிச் சிவந்தி ருக்கும்
எல்லிறைவன் தேவையறிந் துலகு மேத்தும்
    இல்லாமல் யாதுமிவண் இல்லென் றாகும்
நில்லாநின் றிங்குநிலை நேயம் வளர்க்கும்
    நெறிநின்று நேர்செல்லும் கதிர வா!நீ
பல்லாண்டு வாழ்கநலம் பார்சுற் றத்தார்
    பல்லாண்டு வாழ்கவென வாழ்த்த வென்றே!
                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.