Nov 14, 2012

இராஜகீழ்ப்பாக்கம் - M51G

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என்றலையில் இன்றெழுதி வைத்துள் ளதேயான்
    இன்மழையில் மகிழ்வோடு நனைவேன் என்றே
என்னூரில் எனைத்தாண்டி எதிர்த்தி சையில்
     ஈரிரண்டு பேருந்து சென்றா லுந்தான்
ஒன்றுகூட செல்லாது என்னே ரத்தில்
     யான்செல்லும் திசை நோக்கி உதவி இல்லா
இன்னாவீ போக்குவரத் துள்ள வூர்தான்
     இராஜகீழ்ப்பாக் கந்தானான் என்ன செய்வேன்?
                                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

என் தலையில் இன்று எழுதி வைத்துள்ளதே; யான் இனிய மழையில் மகிழ்ச்சியோடு நனைவேன் என்றே; என் ஊரில் எனைத் தாண்டி எதிர்த் திசையில் 4 பேருந்துகள் சென்றபின்பும், ஒன்று கூட நான் செல்லும் திசைநோக்கிச் செல்லவில்லை; உதவி இல்லாத, துன்பம் தரும் போக்குவரத்து உள்ள ஊர்தான் இராஜகீழ்ப்பாக்கம். நான் என்ன செய்வேன்?

ஈ போக்குவரத்து - வினைத்தொகை

Oct 17, 2012

காயத்திரியின் கனியுள வேண்டல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மாயத் திரையில் மயங்கிடு முலகு
   முடிவுறுங் காலு மாறிலாச் சீரார்
மாய னுந்தி முண்டகத் துதித்த
   மன்னவ! யுகங்கள் எத்தனை கடந்தும்
ஆய கலைகள் அறுபதும் நான்கும்
   அந்தமி லொன்றாய் மன்றிட வேண்டும்
காயத் திரியின் கனியுள வேண்டல்
   கலைமக ளகத்தே சேர்த்திடு வாயே!
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 3, 2012

அகழ் அகத்தான்

நேரிசை ஆசிரியப்பா

எனக்கு யானே நவிலு நல்லுரை
தனக்குள் விருப்ப மளவற நிரப்பித்
தன்வழி தனிவழி தன்னிக ரெவரினிச்
சென்றிடு தலுயர் வாழ்க்கை யன்றெண்
ணொழுக்கந் தலையா யுடன்பிற வெல்லாம்
இழுக்கொன் றிலதா யினிமை யுளதாய்ச்
செழித்திடச் செய்தல் வாழ்க்கை
விழித்திடு தமிழா வகழகத் தானே!
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jun 16, 2012

தந்தை

தந்தை - ஓர் உயரிய சக்தி, வழிகாட்டி, பாதுகாப்பு. 
'என்ன நடந்தாலும் எந்தை உள்ளார் தோள்கொடுக்கும் தோழனாய்' என நம்பும் மகனுக்கு ஓர் உயரிய சக்தி. 
அனுபவம் கண்டதை அப்படியே அள்ளி வழங்கி, அடுத்த படியை அழகாய் அமைத்துக் கொடுக்கும் அற்புத வழிகாட்டி.
தன்பெயருக்குப் பின் கணவன்பெயர் இடம்பெறும் வரை, முதற்பெயராயும் விருப்பப்பெயராயும் அமைக்க விருப்பப்படும் மகளுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு.

சோற்றுக்குப் பஞ்சம் உண்டு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

காற்றுக்குக் காவு தந்து,
     கவின்பெறு பதாகை செய்து,
போற்றுவார் வாழ்த்த வயது
     போதாது வணங்கு கின்றோம்.
சோற்றுக்குப் பஞ்சம் உண்டு
     சொல்லொணா இன்னல் உண்டு
மாற்றமும் வந்த தென்று
     மனமாறக் கூறிச் செல்வார்.
                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

சாலையோரம் நிறுத்தியிருந்த பெரிய பதாகை(Banner)யைப் பார்த்தபோது
சொல்லத் தோன்றியது.

Jun 5, 2012

கவினா

நேரிசை வெண்பா

அறிவுப் பசியெடுத் தான்ற புலமைச்
செறிவுத் தமிழ்க்கவி னா!சீர் - பெறுகநீ
வாழ்விலெந் நாளும் வசந்தமே! பொங்கிடும்
ஆழ்ந்தகழ் பேரின்ப மே!
                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jun 1, 2012

புதுக்குறள்

குறள் வெண்பாக்கள்

The roof of Peace rests upon
the walls of understanding
                                 - Thiruvalluvar.
அமைதி யமைகூரை யாழ்ந்தே வமைந்த
தமைச்சே ருணராநின் று                                             (1)

Enjoy the little things in life,
for one day you may look back and realize
they were the big things.
                               - Antonio Smith.
மகிழ்ந்துகொண் டாடு மனமே!மீச் சிற்றும்
நெகிழ்ந்துகொண் டேகுமா பேர்                                (2)

Chennai is too hot!!!
வெந்தலை வெந்தலை வீசிடு வெவ்வலை
செந்தலைப் பேர்நின்ற ஊர்                                        (3)

வெந்தலை - வெம்மை தலை, வெந்து அலை
வெவ்வலை - வெம்மை அலை
செந்தலை - செம்மை தலை 

Kerala style : Ninda manasil aaraanu enakku ariyila, patche yenda manasil muluka muluka neeyum, ninda FRIENDship fullaitu undu, Manaslayo...
தமிழ் style :
நின்னெஞ்சில் யாருளரோ யானறியேன் ஆனாலும்
என்னெஞ்சில் நீயுநட்பும் கொள்                              (4)
                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 1, 2012

மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ?

திரைப்படம்: ராஜமுக்தி
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: சி.ஆர். சுபராமன், எஸ்.எம். சுப்பைய்யா நாயுடு
ஆண்டு: 1948

மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ? உலகீர் - உயர்
மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ? உலகீர் - உயர்
மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ?

ஞான வைராக்யம் தவம் ஜீவ காருண்யம் - உண்மை
ஞான வைராக்யம் தவம் ஜீவ காருண்யம் - உண்மை
ஞான பக்தி பகுத்தறிவுடன் இகபர சுகம்தரும் கருணையாம்   (மானிட)

கருவறையி னுள்கிடந்து வெளியில் வரும்துயர் நினைந்தாலும் - குடல்
கலங்குதே இங்கெதிரில் மரணம் எனும் வெம்புலியும் சீறுதே
இருவினை வசமாம் இவ் உடலொரு நீர்க்குமிழி
இதனிடை உயர்நெறி யடைய மெய்இறைவனருளின் வேட்கை
உடையராகி இடையறாத திருவடி நினைவுடனே
கடிமதில் பண்டரி புரமதை ஒருமுறை கண்டுபணிந்து
ப்ரபோ பாண்டுரங்க ஜெய விட்டல என்று பணிந்திட                (மானிட)

தூக்கத்தில் எழுப்பிக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லணும்

என் அலைபேசி மதுர கானத்தை (இப்படிச் சொன்னால்தான் இனிக்குமோ?) எழுப்பி, என் தூக்கத்தைக் கெடுத்தது. தட்டுத் தடுமாறி அலைபேசியைக் கண்டுபிடித்து, அழைப்பை ஏற்றேன். அழைப்பில் அலுவலகத் தோழி.

"சுப்பிரமணி, தூங்கிட்டு இருக்கிங்களா...?"

இந்த வாரம் எனக்கு இரவுப்பணி முறை. முடித்துவிட்டுப் பகலில் நன்றாய்த் தூங்கிக் கொண்டிருந்தேன். அதனால் இது வழக்கமான கேள்வியாகிப் போய்விட்டது.

"இல்ல பா...! முழிச்சுட்டேன் சொல்லுங்க..." வழக்கமான பதில்தான்.

"அந்த முரணாய் உருவான (junk) தகவலை வழங்கியிலிருந்து (server) அழிக்கச் (delete) சொல்லி விட்டார்கள். ஆனால் அதைப் பட்டியலிட (list) முடியவில்லை. எப்படி எடுப்பது? கட்டளையை (command) எப்படிப் பயன்படுத்துவது? வழக்கமான கட்டளையைக் கொடுத்தால், தகவல் (data) வரமாட்டேங்குது. 'பொருள் அல்லது தகவல்' (object) காணவில்லை என்று பிழை சுட்டப்படுகிறது."

"அந்த முரண் தகவல் அப்படி அப்பாவித்தனமாய் நிரலியால் (program) உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால், அதன் முழுப்பெயரையும் கட்டளைக்குள் பயன்படுத்தித் தகவலை எடுங்கப்பா..."

என் தோழிக்கும் எப்படிக் கட்டளையைப் பயன்படுத்துவது என்று தெரியும். ஆனால் அந்த முரண் தகவலைக் காண்பவர் சற்றுக் குழப்பமடைவர். இப்படி ஒரு முரண் தகவல் உருவாகி இருக்கிறது என்று அடையாளம் கண்டு, அதை எங்களது மேலதிகாரிகளுக்கு அறிவித்து இருந்தேன். அந்த முரண் தகவல் ஏன் உருவானது என்ற ஆய்வுக்குப் பின், அதனை அழிப்பதற்கான ஒப்புதல் (approval) இன்றுதான் கிடைத்தது. அந்த முரண் தகவலை எப்படிப் பட்டியலிடுவது என்பது எனக்குத் தெரிந்திருந்ததால் என்னை அழைத்தாள் தோழி.

மணி நண்பகல் 12:36. அலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு அப்படியே படுத்திருந்தேன். அப்போதுதான் தோன்றியது. நாம் பள்ளியில் படிக்கும்போது, ஆசிரியர்களில் சிலர், 'தூக்கத்தில் எழுப்பிக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லணும்'னு சொல்லி சொல்லி அடிப்பாங்களே... அது இப்போதுதான் பயன்பட்டு இருக்கிறது...

சரி, எழுந்து பண்டிக்குச் சிறிது உண்டி கொடுத்து, அப்படியே இந்தத் தகவலையே வலையத்தில் ஏற்றிவிட்டு உறங்குவோம்.

நான்காம் வேற்றுமைத்தொகை - தமிழ் கூற்று

நிறைவில்லாமை

மறந்து விட்டவையும், தொலைந்து விட்டவையும் சிறுபான்மையாய் இருக்கும்போது கவிஞனின் உள்ளமும் நிறைவில்லாமல் தேற்றிக் கொள்கிறது.

காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா?
தாவணிப் பெண்களும் தூதுவிடும் கண்களும் தொலைந்து போகுமா?...

வெளிநாட்டிலிருந்து வரும் தலைவனுக்குத் தமிழ்நாட்டின் ஏக்கங்கள் எனச் சொன்னாலும், சொல்லப்பட்டவை சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்பட்டவை.

'முழுதும் ஆளப் பிறந்தவன்; தனக்கு மீறிய சக்தி இல்லை; தான் எண்ணுவதே நடக்க வேண்டும்'. இப்படிப்பட்ட தன்னம்பிக்கை போய்விட்ட காலம். 'கடைசிச் சொட்டுக் குருதி உள்ளவரை போராடுவேன்; கடைசி மாத்திரை நேரம் வரை முயற்சியைக் கைவிட மாட்டேன்' என்ற நிலைக்கு ஆளாக வேண்டியிருக்கும் அளவுக்குக் காலம் மாறிவிட்டது.


இசைநன்று - ஔவை கூற்று

இது பற்றிப் பாயும் பாமாலை
செவிச் சேர்த்து செல்லும் காதலை
தீண்டும் நெஞ்சில் சாரலை
தீண்டாதோ மின்னலை
தேடும் தென்றலை

இயைபுத்தொடையத் தேடும் முயற்சியில் இயைபு மறந்துபோய், போதும் இது இக்காலத்திற்கு என்றாகிவிடும் நிலை.


மறைதமிழ் - வினைத்தொகை

முன்னமே வடமொழிக்கலப்பால் எது தமிழ், எது வடமொழி என்று பிரித்தறிய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். வடமொழி கலந்த தமிழில் பேசுவதும், பாடுவதும் பெருமையாக எண்ணப்பட்ட காலங்களும் உண்டு. (இவ்வரிகளில் கூட தமிழ்ச்சொற்கள் எத்தனையோ? தமிழுக்கு மட்டுமே தெரியும்).

ப்ரபுட தேவ மாராஜர் உளமு மாட வாழ்தேவர் பெருமாளே!

என்ற அருணகிரியார் காலமாயினும் சரி,

வதனமே சந்திர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ?
மாறன் அம்போ? நீள் விழியோ? மதுர கானமோ?

என்ற எம்.கே.தியாகராஜ பாகவதர் காலமாயினும் சரி.

இப்போது இன்னும் ஒருபடி மேலேறி, தமிங்கிலம் (தங்லிஷ்) என்னும் கொடுமை

'Why this கொலவெறி'

Apr 30, 2012

இராஜன் மகராஜன்

திரைப்படம் : ஷ்யாமளா (1952)
பாடியவர் : எம்.கே.தியாகராஜ பாகவதர் 

இராஜன் மகராஜன்
திருவேற்றி யூர்மேவும் திருவாளர்
தியாக ராஜன் மகராஜன்

தேஜ ஸ்வரூபன் திவ்ய மங்களதரன்
சீவடி உடையாள் சேவித்து மகிழ்ந்திடும்                (ராஜன்)

மட்டிலா உயர்மிகும் பட்டினத்தார் அன்று
கட்டிக் கலந்த கருணை யரசே
தட்டிக் கழிக்காமல் தனையனை ஆட்கொண்டு
பட்டினிப் பிணிமூப்பு பற்றாதென்றே ஆளும்      (ராஜன்)

சத்வ குண போதன்

திரைப்படம்: அசோக் குமார்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
ஆண்டு: 1941

சத்வ குண போதன் சதவ குண போதன்
சத்வ குண போதன் சரணம் இங்கு இருக்க
சத்வ குண போதன்

சித்தமும் வீணே கலங்குவ தேனோ? சத்வ குண போதன்

கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்                 (சத்வ குண போதன்)

கண்ணிழந் தாலென்ன கடவுட்கும் என்ன?
கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன்   (சத்வ குண போதன்)

ஜீவப்ரியே ஷ்யாமளா

திரைப்படம் : ஷ்யாமளா (1952)
பாடியவர் : எம்.கே.தியாகராஜ பாகவதர் 
இசையமைப்பாளர் : G.ராமநாதன்
இயற்றியவர் : கம்பதாசன்

ஷ்யாமளா ஷ்யாமளா
ஜீவப்ரியே ஷ்யாமளா - என்
ஜீவப்ரியே ஷ்யாமளா - என்
ஷ்யாமளா ஷ்யாமளா தேவி

பாதைமேல் விழியாய்ப் பார்த்தே நொந்தேன்
பாங்குடன் தேன்மொழி பேசிட வாராயோ ஷ்யாமளா?      (ஜீவப்ரியே)

என்றுனைக் காண்பேன் இன்பம் பெறுவேன்
ஏக்கமே தீர இரங்கிடு வாயே! நீயே ஷ்யாமளா                       (ஜீவப்ரியே)

ஆசைமுகம் காட்டியே என் அல்லலைத் தவிராயோ?
ஆடிவந்து எந்தன் அன்பினை மேவி
ஆனந்தம் தாராயோ ஷ்யாமளா ஷ்யாமளா தேவி?             (ஜீவப்ரியே)

தொட்டதற்கெல்லாம் தப்பெடுத்தால்

பாடியவர் :  எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.சி.வசந்தகோகிலம்

தொட்டதற்கெல்லாம் தப்பெடுத்தால் என்ன
சொல்வேன் பெண்மயிலே?

தப்பெடுக்கும் தொழில் எங்களுக்கில்லை
கோபமுமேன் கரவாவிழியே?
பேசுவதே கோபமென்றால் என்செய்வேன்?
சாந்தமே கோமள மானே! - சத்குண
சாந்தமே கோமள மானே!

போதுமே பரிகாசம்
இனி போதுமே பிடிவாதம்
போதுமே பரிகாசம்
நிஜ அன்பே பேரின்பம்

வண்டார் குழலாள்

வண்டார் குழலாள் உமையாள் பூங்கரத்தால் வருடும் பாதம்
தொண்டர் பணிக்குப் பரவைமனை தூது நடந்த திருப்பாதம்
விண்ட அடியார்க்கு உளம்கனிந்து பரிந்து வீடுதரும் பாதம்
கொண்ட நடனத் திருப்பாதம் தொண்டருள்ளத் திருந்தேனே

Apr 27, 2012

உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ?

திரைப்படம் : அசோக்குமார்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
ஆண்டு : 1941

உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ?
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ?

அண்டரிலே நில மண்டல மேல் - பர
எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவா
உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ?

தீரத்திலே உயர் கம்பீரத்திலே - கொடை
உதாரத்திலே நடை ஒய்யாரத்திலே
உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ?

தானத்திலே சொல் நிதானத்திலே - கலை
ஞானத்திலே சரஸ கானத்தில் தேவா
உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ?

Apr 24, 2012

இல்லாத தொன்றில்லை

இல்லாத தொன்றில்லை எல்லாமும் நீயென்று
     சொல்லாமல் சொல்லிவைத்தாய்!
புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி

      புவியாகி வாழவைத்தாய்!
சொல்லாலும் மனதாலும் சுடர்கொண்டு தொழுவோரை

      மென்மேலும் உயரவைத்தாய்!
கல்லான உருவமும் கனிவான உள்ளமும்

      வடிவான சதுர்வேதனே!
கருணைபொழி மதுரையில் தமிழுலகம் வாழவே

     கண்கொண்ட சிவநாதனே!

Apr 23, 2012

பஜனை செய்வாய் மனமே

திரைப்படம் : அம்பிகாபதி

பஜனை செய்வாய் மனமே - தினமே
நிஜ அன்புடனே நமதாண் டவனைப்
பஜனை செய்வாய் மனமே!


கானல் நீரருந்த மானலை வதுபோல்
மாநில மாயைசுகம் விரும்பாமல்
பஜனை செய்வாய் மனமே!


முடிவில் இன்பந்தரும் கடவுளை நம்பும்
அடியரை யாளுமால் விடையூ ரரனைப்
பஜனை செய்வாய் மனமே!


சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூச லாடத் துவர்கொள் செவ்வாய்
நற்றே னொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றே ரிருக்கத் தலையலங் காரம் புறப்பட்டதே!

Apr 20, 2012

உன்னழகைக் காணஇரு கண்கள் போதாதே

திரைப்படம் : திருநீலகண்டர்

உன்னழகைக் காணஇரு கண்கள் போதாதே
என் கண்கள் போதாதே
உனதெழிலில் ரதிமங்கையும் நிகரோ, நாணமுறாளோ?


அனங்கனே! உம்மழகிற் குவமையுமேது?
உவமையுமேது?
அமரேந்திரன் உலகமதும் நான்விரும்பேனே!
இனி நான் விரும்பேனே!


செவியில் அமுதைப் பெய்தன்ன குயில்மொழி அணங்கே!
என் குயில்மொழி அணங்கே!
சிந்தைகவர் பூங்கோதாய் தன்னை மறந்தேன்
ஜகம் தன்னை மறந்தேன்


பன்னெடுநாள் என்மனதைக் கொள்ளை கொண்டீரே!
மனதைக் கொள்ளை கொண்டீரே!
பரமானருள் நாடைந்தேன் பாவனமானேன்!
பிறவிப் பாவனமானேன்!


நம்மிருவர் உள்ளம்நிறை காதலிளங்கே
நிறை காதலிளங்கே
வளர்பிறைபோல் வளர்ந்தோங்கவும் இறைவன் தாள்பணிவோமே

கைம்மாறு செய்வதுண்டோ?

கைம்மாறு செய்வதுண்டோ? - காந்திஜிக்கு
கைம்மாறு செய்வதுண்டோ?

எம்மான் எல்லோரும் இன்புற்றிருக்கத் தான்உயிர்வாழ்ந்த
பெம்மான் தனைநினைந்து புலம்புவதன்றி வேறு                        (கைம்மாறு)

ஆண்டியும் அரசனும் ஒன்றாய் மதித்தவர்க்குத்
தீண்டாமைப் பேயைக் குழிதோண்டிப் புதைத்தவர்க்கு              (கைம்மாறு)

சேய்க்குவரும் நோய்க்குத் தாய்மருந் துண்பதுபோல்
தாய்நாட்டுத் தொல்லைகட்குத் தானுண்ணா திருப்போர்க்கு (கைம்மாறு)

போர்முனை வாள்கொண்டு உயிர்இரத்தம் சிந்தாமல்
பூர்ண சுதந்திரம் கண்டநம் பாபுஜிக்கு                                                  (கைம்மாறு)

Apr 13, 2012

செடி மறைவிலே ஒரு பூங்கொடி

திரைப்படம் : அமரகவி
ஆண்டு : 1940


செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன்?

பிடிக்க வந்தாலே ஓடிடு வேனே!

நிஜமே இது எனையே தொட முடியாதும்மாலே!

பாடும் குயிலே பாரிப்போதே


துள்ளி ஓடும் புள்ளி மானை
வேங்கை பிடிக்க முடியுமோ?
ஆமை அல்ல நானே
முயலென்று சொல்ல மாட்டேன்
வண்ணமலர் தூண்டிலில் என்
ஜடைப்பின்னலைப் பிடித்திழுத்தால் வலிக்காதோ?
மின்னலோடு நேசமுள்ள
சின்னஇடை ஓடுவதால் ஒடியாதோ?

Mar 30, 2012

அருணா நாகராஜன்

குறளடி வஞ்சிப்பா

பொற்றாமரை நிற்றாமரைப்
பொழிலோவியம் எழிற்காவியம்
நற்பேருளம் உற்றாயுனைக்
கற்றார்கவிப் பொற்கோவிறை
உற்றேநலம் பெற்றேயுயர்
செஞ்சொற்றிறம் கொஞ்சுந்தனி
அஞ்சேலென நெஞ்சுக்குரை
பல்லாண்டிவண் நல்லாசியோ
டெல்லாமுறு நல்லாயிவள்
எனவாங்குப்
பிறந்த நாணல் வாழ்த்து
சிறந்த குறளடி வஞ்சி வாழ்த்தே!
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Mar 27, 2012

கார்த்திகேயன் DBA

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நாற்றிசையும் நாற்றிசையை நாற்றி சைந்து
       நலம்பரப்பும் வளம்நிறைக்கும் இனிய வாழ்க்கை
போற்றுரையே! போற்றுரையைப் போற்று கின்றேன்
      பேறுபதி னாறுமெனும் பெற்று வாழ்க!
காற்றிகையும் கார்த்திகையன் காணும் முன்பே
      கடந்தோடும் பெயர்கேட்டே நீடு வாழ்க!
ஆற்றுமொழி காட்டுவிழி அனைத்து மிங்கே
     அதிநுட்பம் காட்டுவழி யாகும் வாழ்க!
---------------------------------------
கலிவிருத்தம்

தேமலர் பொழியொளிர் கார்த்திகை வாழ்த்தொடு
தாமரை உந்தியில் தாங்கியார் உளம்நிறை
மாமனி தன்னென மாநிலம் போற்றிட
யாமுள நிறைவொடு வாழ்த்துவம் இந்நாள்!
                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

Feb 27, 2012

மார்கழி

பாரெங்கும் பனிமூட்டமாய்ப்
பச்சைப் பசுமையாய்ப்
பகலவன் வரக் காத்திருக்கத்
துயில்கலையும் விண்மீன்கள்
துள்ளி எழுந்து ஒளிவீசித்
துன்பம் விலக்குதல் போல்

உயர்ந்த எண்ணங்கள்
உள்ளத்தில் ஊற
உயர்குரம்பில் தடம்பதித்துச்
செல்லும்போது அங்குச்
செழித்தோங்கு உயர்பனையைச்
சிறுபுல் நுனிப்பனி காட்ட

உயர்வும் தாழ்வும்
உலகில் எங்குளது?
உளத்திலே உளது...
உளத்தால் ஒன்றுபட்டு
உயர்செய்கை செய்வோம்

தோப்பிலே சிறுகுருவி
திந்தியுந் தொந்தன
தீந்தமிழ் பாட
எங்கேயுளது என
எட்டும் தூரம்வரை
இருவிழிகளால்
துழாவியே விடிந்த பொழுது
தூய்மைச் சூழலை
நினைவுக்குக் கொண்டுவரத்
துளிப்பனியாய்த் தலைநனைக்கத்
துன்பமெலாம் பறந்தோடித்
துவாரக புரி வரதனைத்
தொழுது செல்லும்
'நாரா யணனே
நமக்கே பறைதருவான்'
தேன்றமிழிசை செவியேறித்
தானும் தனதடி நகர்த்தி
ஆவலில் அகிலம் மறந்தேன்
               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jan 12, 2012

உண்மை ஒன்றே பேசும்

திரைப்படம் : புது வாழ்வு
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
இயற்றியவர் : பாபநாசம் சிவன்
இசை :  ஜி. ராமநாதன்
ஆண்டு : 1957

உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
நன்மை தீமை எது வந்தாலும் நடுநிலையில் மாறிடாது

பொன்னில் போக பாக்யம் தன்னில் புரள நேர்ந்தாலும்
மன்னன் அருகில் என்றெல்லோரும் மதிக்க வாழ்ந்தாலும்
இன்னல் வரவும் ஜீவன் தன்னை இழக்க நேர்ந்தாலும்
அண்ணல் காந்தி ஆத்ம ஞானி சொன்ன சொல்லை மறந்திடாது

அன்னை தந்தை தனைமறவா அருங்குணம் வேண்டும்
பின்னர் அவர்க்கு சேவை செய்ய பெரும்பயன் வேண்டும்
இன்னபயம் தனைமறவா இயல்பதும் வேண்டும்
கண்ணிரண்டும் குருடராகி கடமை மறந்து உழன்றிடாமல்

சிவபெருமான் கிருபை வேண்டும்

திரைப்படம் :  நவீன சாரங்கதாரா
இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
இசை :  ஜி. ராமநாதன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு : 1936

சிவபெருமான் கிருபை வேண்டும் - அவன்
திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும்

அவலப் பிறப்பொழிய வேண்டும் - அதற்கு வித்தாம்
அவமாயை அகல வேண்டும் வேறென்ன வேண்டும்?

தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
சுகவாழ்வு வாழ வேண்டும் வேறென்ன வேண்டும்?

Jan 11, 2012

மாநில வாழ்வு பெறும் ஆனந்தம்

திரைப்படம் : அசோக் குமார்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
இசை : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்

மாநில வாழ்வுபெறும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே

கானமுடன் எழில் மான்விழி மாதே - அபி
மானமும் அன்பும் கலந்திருந்தால் இந்த                (மாநில)

என்மன உண்மை நிலை நீஅறிய
எடுத்துரைக்கும் மௌனம் படைத்தனை அன்பே
உன்மனச் சம்மதம் உண்டோ இல்லையோ - நான்
உணர்ந்து மகிழ வெளிக்காட்ட லாகாதோ             (மாநில)

சீநக்கன்

திரைப்படம் : சிவகவி

குளிர்ந்த முகமன் இன்சொலும் கார்முகில்போல் கொடையும்
தெளிந்த அறிவும் நிறைபனியாய் அணிசீநக்கனை
விளிந்த பல்கலை வாணர் வந்தடைவதில் விந்தை என்னே!
அளிந்த பலாக்கனி ஈக்களை வாவென்று அழைப்பதுண்டோ?

ஸ்ரீ கல்யாண குண மகிபனே

திரைப்படம் : சிவகவி
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்

ஸ்ரீ கல்யாண குண மகிபனே
மோகன வார்கடம்பார் மார்பனே

ஸ்ரீ ராஜ வந்தன் மருகனே
முருகனே நின்ன சந்நியாசியாக வந்து
ஏக சாமான்ய மொழி புகன்றோனே

தேவ ராஜ குமாரி சாரங்க மாறா
யோகனே சாவேரி தனவே
சகல பூபாலன கருணாலய குமரவேலே

பொழுது விடிந்த துறங்குவதேன்

திரைப்படம் : சிவகவி
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
இசை : ஜி. இராமனாதன்

பொழுது விடிந்த துறங்குவதேன்
எழுவீர் எழுவீர் எல்லோரும்

கோபு விறகில்லையே குருவந்தால்
கோபம் கொள்வரே கோடரி எங்கே

உதத்தைத் தேய்க்க உளி எங்கே கோமளி
கோலம் போடுவதற்குள் நூறுமுறை அழைக்கிறாய்

செந்தளி என்றிடும் சந்தனம் வந்ததோ?
பூமாலை கட்ட இந்தப் புஷ்பங்கள் போதாது
பூஜைக்கு நேரமாச்சு போதும் போவோம்
சம்போகங் காதரா கௌரிம னோகரா

கடல், கல்வி

ஆம்... சொல்லு பா...!

சுப்பிரமணி, கவிதை வேணுமாம்.. கல்வி, கடல்-ங்கற தலைப்புல.

ஆ... (அதிர்ச்சி..), எப்ப வேணுமாம்.

இப்பவே வேணும், நாளைக்குப் பள்ளிக்கூடத்துல கவிதைப் போட்டியாம்.
எட்டு வரியில வேணுமாம்.

மரபுக்கவிதையா? புதுக்கவிதையா?

சின்ன புள்ள கேட்குது, பத்தாவது தான் படிக்குது. எதோ புரிய மாதிரி எழுதிக் கொடுப்பா...

சரி எழுதிட்டு கால்(call) பண்றேன்.

ஓகே பா... பை.

வீட்டில் வேறு ஒரு பிரச்சினை பற்றிய பேச்சு ஓடிக்கொண்டிருக்க, அரைகுறை மனத்தோடு சிந்திக்கத் தொடங்கினேன்.

கல்வி

உள்ளம் உயர்வுபட உலகம் விரலில்விழக்
கொள்ளும் செயல்யாவும் குறைவு ஏதுமின்றித்
திறமை வெளிக்கொணர்ந்து திண்மை உழைப்புயர்ந்து
சிறப்பு பெற்றிடுதல் சீர்மைக் கல்வியினால்
ஒருங்கமை மனம்பெறுதல் உயர்ந்த கல்வியினால்.


கடல்

நிலவளம் நன்மைபெற நீலவளம் தரும்கொடையே
கலைவளம் கவினுறவே கணக்கரிய பொருளீவாய்                 1

விண்ணீர் விரைந்துவந்து மண்ணீர் எனமாறும்
ஓயாத சுழற்சிக்கு உயரா தாரம்நீ                                                        2

இயலும் இவ்வுலகில் எவ்வகை விளைவுக்கும்
ஏது என்னென்றால் அழகிய கடல்நீதான்                                        3

உன்னுள் உள்ளவை எண்ணவும் கணக்கரிது
உன்னுள் உறைந்தவையால் உள்ளமும் கனத்துரிது.                4
               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

Jan 4, 2012

வதனமே சந்திர பிம்பமோ?

பாடியவர் :  எம்.கே. தியாகராஜ பாகவதர்
பாடலாசிரியர் :  பாபநாசம் சிவன்
திரைப்படம் :  சிவகவி
இசை :  ஜி. ராமநாதன்
ஆண்டு :  1943

வதனமே சந்திர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ?
மாறன் அம்போ? நீள் விழியோ? மதுர கானமோ?

மின்னும் மோகனக் கொடியிடையாள்
அன்னமோ மடப் பிடிநடையாள்
புன்னகைதவழ் பூங்கொடியாள்
புவன சுந்தரியோ?

வசந்தருது மன மோகனமே

பாடியவர் :  எம்.கே. தியாகராஜ பாகவதர், ஜெயலக்ஷ்மி
பாடலாசிரியர் :  பாபநாசம் சிவன்
திரைப்படம் :  சிவகவி
இசை :  ஜி. ராமநாதன்
ஆண்டு :  1943

வசந்தருது மன மோகனமே
மலர்ந்த மலரிதழ் மணம்கமழ் தென்றல்

மல்லிகைப் பூங்கொடி குந்தல வராளி
மொய்த்த மலர்நகை குலுங்க விளங்கும்

நகைப்பைத்தியம் யதுகுலாம் போதிலும்
நனவிலும் கனவிலும் இதே சிந்தையா?

சுருட்டிக் கொணர்ந்து கொடுத்தலுத்தாற் போலவே
சொல்லுக்குப் பஞ்சமில்லை கொஞ்சும் குயிலின் இசை

கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே

பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
பாடலாசிரியர்: பாபநாசம் சிவன்
திரைப்படம்: சிவகவி
இசை: ஜி. ராமநாதன்
ஆண்டு: 1943

கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே
கணிகையர் கண்களே மதன்விடும் வலையே

நவரசங்களிலும் சிங்காரமே தலையே
நளின நடையழகுக் கீடெங்கும் இல்லையே

புஜமிரண்டும் மூங்கில் தளர்நடை அஞ்சி
புருவம் இடையுடலும் வளையுமே கெஞ்சி
ரசிகத் தன்மையில் கைதேர்ந்தவள் வஞ்சி
ராகத்தில் சிறந்தது நாட்டக் குறிஞ்சி

கூத்தாள் முகத்திரண்டு கூர்வேலாம்

திரைப்படம் : சிவகவி

கூத்தாள் முகத்திரண்டு கூர்வேலாம்; கூத்தாள்தன்
மூத்தாள் முகத்தில் முழுநீலம் - மூத்தாள்தன்
அன்னை முகத்தில் அரவிந்தம்; அன்னைதன்
அன்னை முகத்திரண்(டு) அம்பு

காளமேகப் புலவர் பாடியது

கூத்தாள் விழிகள்நெடும் கூர்வேலாம்; கூத்தாள்தன்
மூத்தாள் விழிகள் முழுநீலம்; - மூத்தாள்தன்
ஆத்தாள் விழிகள் அரவிந்தம்; ஆத்தாள்தன்
ஆத்தாள் விழிகளிரண்(டு) அம்பு.

Jan 3, 2012

உயிரினமும் உயிரில்லினமும்

மனிதன் என்பவன் யாவன்? மனிதம் என்பது யாது?
உயிரினமாகவும் உயிரில்லினமாகவும் கருதுவதற்கான ஏது எது?

வெவ்வேறு பண்புகளைக் கொண்ட ஒவ்வொரு பொருளும் தனிமமாகவோ அல்லது சேர்ந்த ஒரு மூலக்கூறாகவோ இணைந்து, ஏற்பட்ட பொருட்கள், வெவ்வேறு நிலைகளின்கீழ் வெவ்வேறு மாற்றங்கள் பெற்ற, ஒரு பொருளாய் உருவாவதுதான் உயிரினமும் உயிரில்லினமும்.

இயற்கையின் பார்வையில் மனிதனும் ஒரு வேதிப்பொருள்தான். அஃதாவது உயிரில்லினம். மனிதனின் பார்வையில், மற்றப் பொருட்களின்றும் மிகவும் வேறுபட்டு, மிகவும் உயர்ந்துள்ளதோர் உயிரினம்.

யார் கண்டார்? இயந்திர மனிதர்களை உருவாக்கத் தெரிந்த மனிதனுக்கு, இயற்கை மனிதர்களைச் செயற்கையாய் உருவாக்கத் தெரியாமலா போய்விடும்? இங்கு நான் குறிப்பிடுவது, அடிப்படை மூலக்கூறாகிய ஒரு 'செல்'லிலிருந்து, உயிரினம் தோற்றுவிக்கப்படும் முறையன்று; முற்றிலும் வேதி மூலக்கூறுகளை எவ்வெவ்வளவு தேவையோ அவ்வவ்வளவில் அமைத்து, முற்றிலும் செயற்கையாய் உயிரினம் தோற்றுவிக்கப்படும் முறையை.  இங்ஙனம் உருவாக்கிய பின், ஆயுட்காலங்களையும் நியமிக்கலாம்.

ஞான பண்டிதா முருகா பால குமரனே

ஞான பண்டிதா முருகா பால குமரனே
உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள்கொடு
விழிதிறக்குமே முருகா ஒளிபிறக்குமே
வலிபறக்குமே முருகா வழிகிடைக்குமே

வேலெடுத்தவன் முருகன் வினையறுப்பவன்
கால்பிடிப்பவர் கவலைக் களையெடுப்பவன்
நீயிருக்கையில் இந்த நிலையும் நியாயமோ
தாயிருக்கையில் பிள்ளை தவறி வீழுமோ

பால்கொடுத்தவள் முருகா பாசம் கேட்கிறாள்
பாலகா குகா மடியில் சேர்க்கப் பார்க்கிறாள்
அன்பு சிவனவன் முருகா கோபம் கொள்கிறான்
நீல கண்டனின் மகனே நியலில் சேரவா

பிறைகள் இல்லையேல் முருகா நிலவு ஏதடா 
குறைகள் உள்ளது மனித உறவு தானடா
நிறைந்து வையுமென் நெஞ்சம் முழுதும் நீயடா  
நீஎன் வாழ்வினை நிலையாய் ஒன்று சேரடா  

காற்று மண்டலம் கந்தன் கான மண்டபம்  
ஏற்றுக் கொள்ளடா எந்தாய் இளைய வள்தவம்
காற்று வெள்ளமாய் உந்தன் காலில் விழுகிறேன்  
போற்றும் தெய்வமே புனிதா புரிந்து கொள்ளடா

Jan 2, 2012

உள்ளம்

உள்ளம் உள்ளுவது உயர்வானதாய் இருக்கட்டும். உள்ளும் உள்ளத்து எண்ணத்தின் அளவு யாது? உள்ளுவோரின் உணர்வினூடே உறைந்த அளவே உள்ளலின் அளவு.
இறைவன் இருப்பதாய் எண்ணிக் கொள்வான் உள்ளம், ‘இறைவன் செயலால் இயன்ற இவ்வுலகம், இறைவன் விதித்த விதியின்படியே இயங்கும், மயங்கும்’ என இயல்பாய் எண்ணும். இறைவன் யார்? என்பான், இயன்ற அளவே எண்ணி, ‘இயற்கையின் வசமாய் இயல்பின்படியால் எதுவும் இயங்கும்’ என எண்ணுவான். இறைவன் இல்லை என்பான், இருக்கும் அறிவின்பொருட்டு, ‘இஃது இயன்றது, இதனால் இஃது இயலும்’ என்பான். எண்ணம் எதுவாயினும், எண்ணத்தின் அளவு போற்றத்தக்கது. இயல்பில் எண்ணத்தின் அளவை, எண்ணிச் சொல்லலாகாது. ஒப்புமை கொண்டே அளக்க இயலும்.

‘சாகும் நாள் தெரியின், வாழும் நாள் நரகம்’ என வழக்குள்ளது. 2012-ஆம் ஆண்டின் பிறப்பில், இதுவும் உண்மை என எண்ணும் உள்ளம், ஆசைகளே அடைக்கலம் எனப் புகுந்த நெஞ்சம், கலக்கங்களுடனே கழிக்க வேண்டியதுதான். 'எது நடந்தாலும் எனக்கென்ன கவலை? இருக்கும் வரையில் இயல்பாய் வாழ்வேன், இன்பமோ துன்பமோ எனக்கில்லை' என்ற உள்ளம் நிம்மதியோடு வாழும். இன்னும் ஓர் உள்ளம், இன்னும் ஒருபடி மேற்சென்று, 'இயற்கைச் சீரழிவில் சிக்கி, இன்னும் வேகமாய் நிம்மதி இழந்துகொண்டிருக்கும் இப்பூமித்தாய் புதுப்பொலிவு பெறவோ, இன்னொரு பூமி எங்கோ உருவெடுக்கவோ, உருவெடுத்து உயிரினமும், உயிரில்லினமும் மறுசுழற்சி பெறவோ, இயற்கையின் இயல்போ அல்லது இறைவனின் எண்ணமோ' என எண்ணும் உள்ளம், 'இவ்வுலகம் மறைந்து போயினும், சிறுபகுதி சிதைந்து போயினும் நன்றுதான்' என எண்ணும். இறைபொருள், அதனுள் உறைபொருள், மற்றவர்க்கு மறைபொருள் என்பதன் எண்ணங்களை, அவ்விறைபொருள் தவிர அடுத்த பொருளுக்கு எங்ஙனம் எட்டும்?