Jan 11, 2012

கடல், கல்வி

ஆம்... சொல்லு பா...!

சுப்பிரமணி, கவிதை வேணுமாம்.. கல்வி, கடல்-ங்கற தலைப்புல.

ஆ... (அதிர்ச்சி..), எப்ப வேணுமாம்.

இப்பவே வேணும், நாளைக்குப் பள்ளிக்கூடத்துல கவிதைப் போட்டியாம்.
எட்டு வரியில வேணுமாம்.

மரபுக்கவிதையா? புதுக்கவிதையா?

சின்ன புள்ள கேட்குது, பத்தாவது தான் படிக்குது. எதோ புரிய மாதிரி எழுதிக் கொடுப்பா...

சரி எழுதிட்டு கால்(call) பண்றேன்.

ஓகே பா... பை.

வீட்டில் வேறு ஒரு பிரச்சினை பற்றிய பேச்சு ஓடிக்கொண்டிருக்க, அரைகுறை மனத்தோடு சிந்திக்கத் தொடங்கினேன்.

கல்வி

உள்ளம் உயர்வுபட உலகம் விரலில்விழக்
கொள்ளும் செயல்யாவும் குறைவு ஏதுமின்றித்
திறமை வெளிக்கொணர்ந்து திண்மை உழைப்புயர்ந்து
சிறப்பு பெற்றிடுதல் சீர்மைக் கல்வியினால்
ஒருங்கமை மனம்பெறுதல் உயர்ந்த கல்வியினால்.


கடல்

நிலவளம் நன்மைபெற நீலவளம் தரும்கொடையே
கலைவளம் கவினுறவே கணக்கரிய பொருளீவாய்                 1

விண்ணீர் விரைந்துவந்து மண்ணீர் எனமாறும்
ஓயாத சுழற்சிக்கு உயரா தாரம்நீ                                                        2

இயலும் இவ்வுலகில் எவ்வகை விளைவுக்கும்
ஏது என்னென்றால் அழகிய கடல்நீதான்                                        3

உன்னுள் உள்ளவை எண்ணவும் கணக்கரிது
உன்னுள் உறைந்தவையால் உள்ளமும் கனத்துரிது.                4
               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

Jan 3, 2012

உயிரினமும் உயிரில்லினமும்

மனிதன் என்பவன் யாவன்? மனிதம் என்பது யாது?
உயிரினமாகவும் உயிரில்லினமாகவும் கருதுவதற்கான ஏது எது?

வெவ்வேறு பண்புகளைக் கொண்ட ஒவ்வொரு பொருளும் தனிமமாகவோ அல்லது சேர்ந்த ஒரு மூலக்கூறாகவோ இணைந்து, ஏற்பட்ட பொருட்கள், வெவ்வேறு நிலைகளின்கீழ் வெவ்வேறு மாற்றங்கள் பெற்ற, ஒரு பொருளாய் உருவாவதுதான் உயிரினமும் உயிரில்லினமும்.

இயற்கையின் பார்வையில் மனிதனும் ஒரு வேதிப்பொருள்தான். அஃதாவது உயிரில்லினம். மனிதனின் பார்வையில், மற்றப் பொருட்களின்றும் மிகவும் வேறுபட்டு, மிகவும் உயர்ந்துள்ளதோர் உயிரினம்.

யார் கண்டார்? இயந்திர மனிதர்களை உருவாக்கத் தெரிந்த மனிதனுக்கு, இயற்கை மனிதர்களைச் செயற்கையாய் உருவாக்கத் தெரியாமலா போய்விடும்? இங்கு நான் குறிப்பிடுவது, அடிப்படை மூலக்கூறாகிய ஒரு 'செல்'லிலிருந்து, உயிரினம் தோற்றுவிக்கப்படும் முறையன்று; முற்றிலும் வேதி மூலக்கூறுகளை எவ்வெவ்வளவு தேவையோ அவ்வவ்வளவில் அமைத்து, முற்றிலும் செயற்கையாய் உயிரினம் தோற்றுவிக்கப்படும் முறையை.  இங்ஙனம் உருவாக்கிய பின், ஆயுட்காலங்களையும் நியமிக்கலாம்.

ஞான பண்டிதா முருகா பால குமரனே

ஞான பண்டிதா முருகா பால குமரனே
உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள்கொடு
விழிதிறக்குமே முருகா ஒளிபிறக்குமே
வலிபறக்குமே முருகா வழிகிடைக்குமே

வேலெடுத்தவன் முருகன் வினையறுப்பவன்
கால்பிடிப்பவர் கவலைக் களையெடுப்பவன்
நீயிருக்கையில் இந்த நிலையும் நியாயமோ
தாயிருக்கையில் பிள்ளை தவறி வீழுமோ

பால்கொடுத்தவள் முருகா பாசம் கேட்கிறாள்
பாலகா குகா மடியில் சேர்க்கப் பார்க்கிறாள்
அன்பு சிவனவன் முருகா கோபம் கொள்கிறான்
நீல கண்டனின் மகனே நியலில் சேரவா

பிறைகள் இல்லையேல் முருகா நிலவு ஏதடா 
குறைகள் உள்ளது மனித உறவு தானடா
நிறைந்து வையுமென் நெஞ்சம் முழுதும் நீயடா  
நீஎன் வாழ்வினை நிலையாய் ஒன்று சேரடா  

காற்று மண்டலம் கந்தன் கான மண்டபம்  
ஏற்றுக் கொள்ளடா எந்தாய் இளைய வள்தவம்
காற்று வெள்ளமாய் உந்தன் காலில் விழுகிறேன்  
போற்றும் தெய்வமே புனிதா புரிந்து கொள்ளடா

Jan 2, 2012

உள்ளம்

உள்ளம் உள்ளுவது உயர்வானதாய் இருக்கட்டும். உள்ளும் உள்ளத்து எண்ணத்தின் அளவு யாது? உள்ளுவோரின் உணர்வினூடே உறைந்த அளவே உள்ளலின் அளவு.
இறைவன் இருப்பதாய் எண்ணிக் கொள்வான் உள்ளம், ‘இறைவன் செயலால் இயன்ற இவ்வுலகம், இறைவன் விதித்த விதியின்படியே இயங்கும், மயங்கும்’ என இயல்பாய் எண்ணும். இறைவன் யார்? என்பான், இயன்ற அளவே எண்ணி, ‘இயற்கையின் வசமாய் இயல்பின்படியால் எதுவும் இயங்கும்’ என எண்ணுவான். இறைவன் இல்லை என்பான், இருக்கும் அறிவின்பொருட்டு, ‘இஃது இயன்றது, இதனால் இஃது இயலும்’ என்பான். எண்ணம் எதுவாயினும், எண்ணத்தின் அளவு போற்றத்தக்கது. இயல்பில் எண்ணத்தின் அளவை, எண்ணிச் சொல்லலாகாது. ஒப்புமை கொண்டே அளக்க இயலும்.

‘சாகும் நாள் தெரியின், வாழும் நாள் நரகம்’ என வழக்குள்ளது. 2012-ஆம் ஆண்டின் பிறப்பில், இதுவும் உண்மை என எண்ணும் உள்ளம், ஆசைகளே அடைக்கலம் எனப் புகுந்த நெஞ்சம், கலக்கங்களுடனே கழிக்க வேண்டியதுதான். 'எது நடந்தாலும் எனக்கென்ன கவலை? இருக்கும் வரையில் இயல்பாய் வாழ்வேன், இன்பமோ துன்பமோ எனக்கில்லை' என்ற உள்ளம் நிம்மதியோடு வாழும். இன்னும் ஓர் உள்ளம், இன்னும் ஒருபடி மேற்சென்று, 'இயற்கைச் சீரழிவில் சிக்கி, இன்னும் வேகமாய் நிம்மதி இழந்துகொண்டிருக்கும் இப்பூமித்தாய் புதுப்பொலிவு பெறவோ, இன்னொரு பூமி எங்கோ உருவெடுக்கவோ, உருவெடுத்து உயிரினமும், உயிரில்லினமும் மறுசுழற்சி பெறவோ, இயற்கையின் இயல்போ அல்லது இறைவனின் எண்ணமோ' என எண்ணும் உள்ளம், 'இவ்வுலகம் மறைந்து போயினும், சிறுபகுதி சிதைந்து போயினும் நன்றுதான்' என எண்ணும். இறைபொருள், அதனுள் உறைபொருள், மற்றவர்க்கு மறைபொருள் என்பதன் எண்ணங்களை, அவ்விறைபொருள் தவிர அடுத்த பொருளுக்கு எங்ஙனம் எட்டும்?