Jan 2, 2012

உள்ளம்

உள்ளம் உள்ளுவது உயர்வானதாய் இருக்கட்டும். உள்ளும் உள்ளத்து எண்ணத்தின் அளவு யாது? உள்ளுவோரின் உணர்வினூடே உறைந்த அளவே உள்ளலின் அளவு.
இறைவன் இருப்பதாய் எண்ணிக் கொள்வான் உள்ளம், ‘இறைவன் செயலால் இயன்ற இவ்வுலகம், இறைவன் விதித்த விதியின்படியே இயங்கும், மயங்கும்’ என இயல்பாய் எண்ணும். இறைவன் யார்? என்பான், இயன்ற அளவே எண்ணி, ‘இயற்கையின் வசமாய் இயல்பின்படியால் எதுவும் இயங்கும்’ என எண்ணுவான். இறைவன் இல்லை என்பான், இருக்கும் அறிவின்பொருட்டு, ‘இஃது இயன்றது, இதனால் இஃது இயலும்’ என்பான். எண்ணம் எதுவாயினும், எண்ணத்தின் அளவு போற்றத்தக்கது. இயல்பில் எண்ணத்தின் அளவை, எண்ணிச் சொல்லலாகாது. ஒப்புமை கொண்டே அளக்க இயலும்.

‘சாகும் நாள் தெரியின், வாழும் நாள் நரகம்’ என வழக்குள்ளது. 2012-ஆம் ஆண்டின் பிறப்பில், இதுவும் உண்மை என எண்ணும் உள்ளம், ஆசைகளே அடைக்கலம் எனப் புகுந்த நெஞ்சம், கலக்கங்களுடனே கழிக்க வேண்டியதுதான். 'எது நடந்தாலும் எனக்கென்ன கவலை? இருக்கும் வரையில் இயல்பாய் வாழ்வேன், இன்பமோ துன்பமோ எனக்கில்லை' என்ற உள்ளம் நிம்மதியோடு வாழும். இன்னும் ஓர் உள்ளம், இன்னும் ஒருபடி மேற்சென்று, 'இயற்கைச் சீரழிவில் சிக்கி, இன்னும் வேகமாய் நிம்மதி இழந்துகொண்டிருக்கும் இப்பூமித்தாய் புதுப்பொலிவு பெறவோ, இன்னொரு பூமி எங்கோ உருவெடுக்கவோ, உருவெடுத்து உயிரினமும், உயிரில்லினமும் மறுசுழற்சி பெறவோ, இயற்கையின் இயல்போ அல்லது இறைவனின் எண்ணமோ' என எண்ணும் உள்ளம், 'இவ்வுலகம் மறைந்து போயினும், சிறுபகுதி சிதைந்து போயினும் நன்றுதான்' என எண்ணும். இறைபொருள், அதனுள் உறைபொருள், மற்றவர்க்கு மறைபொருள் என்பதன் எண்ணங்களை, அவ்விறைபொருள் தவிர அடுத்த பொருளுக்கு எங்ஙனம் எட்டும்?

No comments:

Post a Comment