Jun 16, 2012

தந்தை

தந்தை - ஓர் உயரிய சக்தி, வழிகாட்டி, பாதுகாப்பு.

'என்ன நடந்தாலும் எந்தை உள்ளார் தோள்கொடுக்கும் தோழனாய்' என நம்பும் மகனுக்கு ஓர் உயரிய சக்தி.

அனுபவம் கண்டதை அப்படியே அள்ளி வழங்கி, அடுத்த படியை அழகாய் அமைத்துக் கொடுக்கும் அற்புத வழிகாட்டி.

தன்பெயருக்குப் பின் கணவன்பெயர் இடம்பெறும் வரை, முதற்பெயராயும் விருப்பப்பெயராயும் அமைக்க விருப்பப்படும் மகளுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு.

சோற்றுக்குப் பஞ்சம் உண்டு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

காற்றுக்குக் காவு தந்து,
     கவின்பெறு பதாகை செய்து,
போற்றுவார் வாழ்த்த வயது
     போதாது வணங்கு கின்றோம்.
சோற்றுக்குப் பஞ்சம் உண்டு
     சொல்லொணா இன்னல் உண்டு
மாற்றமும் வந்த தென்று
     மனமாறக் கூறிச் செல்வார்.
                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

சாலையோரம் நிறுத்தியிருந்த பெரிய பதாகை(Banner)யைப் பார்த்தபோது
சொல்லத் தோன்றியது.

Jun 5, 2012

கவினா

நேரிசை வெண்பா

அறிவுப் பசியெடுத் தான்ற புலமைச்
செறிவுத் தமிழ்க்கவி னா!சீர் - பெறுகநீ
வாழ்விலெந் நாளும் வசந்தமே! பொங்கிடும்
ஆழ்ந்தகழ் பேரின்ப மே!
                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jun 1, 2012

புதுக்குறள்

குறள் வெண்பாக்கள்

The roof of Peace rests upon
the walls of understanding
                                 - Thiruvalluvar.
அமைதி யமைகூரை யாழ்ந்தே வமைந்த
தமைச்சே ருணராநின் று                                             (1)

Enjoy the little things in life,
for one day you may look back and realize
they were the big things.
                               - Antonio Smith.
மகிழ்ந்துகொண் டாடு மனமே!மீச் சிற்றும்
நெகிழ்ந்துகொண் டேகுமா பேர்                                (2)

Chennai is too hot!!!
வெந்தலை வெந்தலை வீசிடு வெவ்வலை
செந்தலைப் பேர்நின்ற ஊர்                                        (3)

வெந்தலை - வெம்மை தலை, வெந்து அலை
வெவ்வலை - வெம்மை அலை
செந்தலை - செம்மை தலை 

Kerala style : Ninda manasil aaraanu enakku ariyila, patche yenda manasil muluka muluka neeyum, ninda FRIENDship fullaitu undu, Manaslayo...
தமிழ் style :
நின்னெஞ்சில் யாருளரோ யானறியேன் ஆனாலும்
என்னெஞ்சில் நீயுநட்பும் கொள்                              (4)
                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்