Dec 28, 2013

படர்கைக்கிளை போமோ?

தரவு கொச்சகக் கலிப்பாக்கள்

அவனவளைக் கண்டுரைத்தான் அவளுள்ளம் கவர்ந்ததெனத்
தவழுள்ளத் தெண்ணமெலாம் தவிப்புடனே சொல்லிவிட்டான்
கவலைகொளச் செய்தானோ? களிப்புறவே செய்தானோ?
கவலையிலை அதைப்பற்றிக் கவனமெலாம் அவள்மீதே                   1

அவள்நம்ப வில்லையதை அடுத்தடுத்து என்னென்றாள்
அவள்நெஞ்சம் நம்பும்வரை அதுகனவோ எனநினைந்தாள்
கவலைமிகச் சூழ்ந்திடவே கவனமெலாம் ஒருபொருட்கே
தவநிலையைப் போன்றவளைக் கவர்ந்திழுத்துச் சென்றதுவே        2


எந்தெந்த வழியுளதோ அந்தந்தத் தடையெல்லாம்
சிந்தையிலே கொணர்ந்தவளும் தீரமுடி வெடுத்திடவே
நிந்தித்தாள் தன்னெஞ்சை நீதியெது அவளுள்ளப்
பந்தமுறைப் போராட்டம் பற்பலவும் செய்துவிட்டாள்                          3


பின்னரொரு முடிவெடுத்துப் பின்வாங்கி விடலாமே
என்னுன்றன் முடிவென்றாள் அவன்தவித்தான் இப்போது
என்சொல்வான் என்பதுவே அவனறிய முடியாமல்
சொன்னதுவே சரியென்றான் அச்சொல்லும் பயனில்லை                  4


இங்ஙனமாய்ச் சென்றிருக்க அவனுள்ளம் எப்போதும்
கங்கனங்கட் டிக்கொண்டுக் காத்திருந்த தவள்மொழிக்கு
அங்கவளும் இங்கவனும் என்முடிவு செய்தாலும்
பொங்குள்ளம் எல்லாமும் மறந்தேதான் போய்விடுதே                       5


முன்னிலையாய்ப் படர்க்கையிலே உள்ளவரைக் கொணர்காலில்
முன்னிலையில் உள்ளவரைப் படர்க்கைநிலை கொளச்செய்யத்
தன்மையினை முன்னிலையை இருவேறு படர்க்கைபொருள்
என்றுகொணர்ந் துளமுரைத்தாள் என்னறிவுப் பெண்மையவள்!     6


அவ்வுயர்வுப் பேரெண்ண அலைகளிடைத் தவழுணர்வைச்
செவ்வாய்ம லர்ந்தருளித் தன்றோழி தானறியச்
செவ்வியசீர்ப் பெருக்காக சிந்தையெலாம் எடுத்துரைத்தாள்
அவ்வியப்பைத் தாங்கொண்ணா வத்தோழி தான்கேட்டாள்              7

உண்மையிலே அவனுன்னை உள்ளமதில் வைத்திருக்கும்
திண்மைநிலை அறியக்கேள் அஃதுண்மை தானென்றால்
கண்ணுக்குள் மணியாகத் தாங்கிடுக தாங்கிடுவன்
கண்மணியே கவியின்பம் வேறுமொழி எனக்கில்லை                        8


அதைஎங்ங னம்கேட்க முடியுமென அவளுமந்தக்
கதையெல்லாம் அவனிடமே உளமாரப் பகிர்ந்திட்டாள்
அதைவிடவும் வேறென்ன அகிலத்தில் அவனுக்கு
விதையூன்ற வேண்டுமெதும் வேண்டாமே வேண்டாமே!                9


படர்க்கைப் பொருள்கொள்ளப் படர்கா தற்சொல்லப்
படர்கைக் கிளைபோமோ படநெஞ் சுரைப்பாயே!
அரிவை அறிவாயோ? அவனுள் ளறிவாயைத்
தெரிவா னவனெ்றே தெரிய வுரைப்பாயே!                                             10


என்பதுவே அவன்மொழியாய் அவனுள்ளம் உரைக்கிறது
இன்பமதும் துன்பமதும் அவள்மொழியில் தானுளது
என்றுமவன் காத்திருப்பான் என்மொழிதான் அவளுரைப்பாள்
என்பதற்காய்! வாழ்கதமிழ்ப் பெருமகனே! பெருமகளே!                   11
                                                           - தமிழகழ்வன்  சுப்பிரமணி சேகர்

Aug 5, 2013

பழம்பொருள் நீ

தரவு கொச்சகக் கலிப்பாக்கள்

நெடுநாள்கள் கடந்துதொடங் கும்பாடல் இதன்வழியென்?
துயரெல்லை யோ?வினிமை யோ?வென்ன? யானறியேன்
யாரென்றன் மனமமைதி பெறவுரைப்பார்? இச்செய்தி
அவள்செவிக்கெட் டிடநானு ரைத்தக்கால் அந்தோ?                       1

'பழம்பொருணீ  பாரீசைப் பார்க்கச்சென் றிடத்தாஅன்
அழைத்ததியார்? அறியாய்நீ யுலகினிலே யாதொன்றும்'
களிப்புடனே கலாய்த்துரைத்தாய் அதுதானுண் மையெனினும்
ஏனுள்ளே னிங்ஙனம்யான்  எவ்வாஅ றுரைப்பேனோ?                   2

என்சொல்ல வாயெடுத்தும் என்னெண்ணம் அதைச்சொல்ல 
யாருணர்வார்  ஆனாலும் அவர்தம்சொல் லஃதொன்றில்
உறுதியுடன் உள்ளாற உளமுரைப்பார் வளமுரைப்பார்
மாற்றமெலாம் காற்றலையாய் அதிவிரைவில் வந்திடுமோ?    3

ஒருதுருவத் துள்ளத்தை மருதுருவ மாய்க்காட்டி
ஒருநொடியில் யார்மாற்ற முடியுமிவண் உரைப்பீரே?
படிப்படியாய்ப் படிபெறவே முடியுமுண்மை வேறென்ன
கடிதிலுளம் கவின்பெறுமா? கடிதேஎ சொல்வீரே                             4
                                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்Jun 4, 2013

நீயும் நானும்

வஞ்சி விருத்தம்

யாமாமா நீயா மாமா?
நீயாமா நானீ யாமா?
நானானே நீநீ யாமே!
நானேனோ நீயா யாமே!

                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரித்தறிய:
யாம் ஆமா? நீ யாம் ஆமா?
நீயாம் ஆமா? நான் நீயாம் ஆமா?
நான் நானே! நீ நீயாமே!
நான் ஏனோ நீயாய் ஆமே?

பொருள்:
நீ நானாக ஆக முடியாது, நான் நீயாக முடியாது;
நான் நானாகத்தான் இருக்க முடியும், நீ நீயாகத்தான் இருக்க முடியும்.
ஆனால் நான் ஏனோ நீயாகத் துடிக்கின்றேன்?

வாழ்க எம் கோ! வாழ்க எங்கோ!

தரவு கொச்சகக் கலிப்பா

விண்டவழ்மீன் என்றொளிரும் விலையில்லா மாணிக்க!
வெண்பறவைக் கூட்டினிலே வெளியீட்டு மேலாண்மைத்
தொண்டுயர்வு பண்புயர்வு தொடுங்குறிக்கோள் மனமுயர்வு
கொண்டகுழு நன்றாண்டுக் கோவிலென நீவாழ்க!

                                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Apr 14, 2013

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நேரிசை வெண்பா

அயர்வறியாத் தண்டமிடம் ஆன்றபெரு மக்கள்
துயர்நீங்கித் திண்மை நிலைபெற்(று) - உயர்ந்தே
கயமைத் தனத்தார் களைந்திட்டுச் சூடும்
உயர்வாகைப் புத்தாண்டே வா!

                                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தண்டமிடம் - தண்+தமிழ்+தம்

Apr 12, 2013

Subramani with Ponmani in Germany!

கலிவிருத்தம்

எண்ண வலைகள் எப்போதுங் கண்ணில்
வண்ண மலர்கள் வாஞ்சையொடு நெஞ்சில்
கன்னல் மொழிகள் காதோரம் ஒலிக்கும்
சென்னியும் பாதமும் சிரமத்தில் தவிக்கும் 


தும்மல் இருமல் தனித்தன்மை பெறூஉம்
செம்மல் விம்மல் ஒருசேரத் துடிக்கும்
அம்மல் லலல்ல லள்ளல்செய் நெல்லும்
எம்முனைப் புந்தான் எண்ணத்திற் காதல்
                            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Mar 2, 2013

ஆற்றும் கடமை அடுத்தடி

நேரிசை ஆசிரியப்பா

ஆற்றி யென்னுளம் தேற்றி யானெனை
போற்றி என்மன மாளும் இறைவனை
ஏற்றத் தாழ்வில் இறங்கி வாழ்வில்
ஆற்றலை அள்ளி அகத்துள் தள்ளி
காற்றலை வரிசைக் கவின்மிகு காலில்
ஏற்றொரு வெளியீட் டினிமே லாண்மை
ஆற்றும் கடமை அடுத்தடி
ஊற்றென உலகம் உலவட் டும்மே!
                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

Feb 22, 2013

என்தமிழ்

கலிவிருத்தம்

என்றமிழ் என்றமிழ்ந் திருந்தேன் என்றமிழ்
இன்றமிழ்ந் திருளுல கென்றமிழ்? வினவுதே!
நன்றிலை இன்றமிழ் இஃதிலை என்னுளம்
கொன்றுமிழ் சினத்தினைக் காத்திட என்செய?
                                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்:
என்தமிழ் என்று அமிழ்ந்து இருந்தேன். என்தமிழ் இன்று இருளுலகு அமிழ்ந்து என்ன தமிழ்? என என்னுள்ளம் வினவுதே! நன்று இல்லை. இன்தமிழ் (இனிய தமிழ்) இஃது இல்லை. என்னுள்ளம் என்னைக் கொன்று உமிழும் கோபத்தை அடக்கிக் காத்துகொள்ள என்ன செய்வேன்?

Jan 19, 2013

கடைத்தேங்காய்

நேரிசை வெண்பா

காவருங் காலங் கடைத்தேங்காய் கல்லுள்ள
மேவரு மேதுயர் மேலிடு - மேவடு
மாறிடு மாமறையு மாவுரையு மாவுறையு
மேறிடு மாமொழி மாய்?
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

பிரித்தறிய:
கா வருங்கால் அங்கு அடைத்து ஏங்காய்! கல்லுள்ளமே!
வருமே! துயர் மேலிடுமே! வடு மாறிடுமா?
மறையுமா? உரையும்! ஆ உறையும்
ஏறு இடும் மாமொழி மாய்?

பொருள்:
காவலனாகிய நான் வருங்காலத்தில், வேண்டாம் என்று ஒதுக்கி, உன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு எண்ணங்களை அடக்கிப் பின்னர் ஏங்க வேண்டாம், அவ்வாறு செய்தால் துன்பமே வரும், அத்துயரத்தின் வலி மாறாது, மறையாது, உன்னைப் பற்றிய எண்ணங்களை உள்ளத்தில் உறைய வைத்துள்ள இந்த ஆண்மகனின் உயர்ந்த காதல் மொழிகள் மாய்ந்திடுமா? சொல்வாயாக!

Jan 9, 2013

முள்ளம்பன்றி

கலி விருத்தம்

முள்ளம் பன்றித் தைக்கும் முதலே!
கொள்ளென் பென்றி ருப்பார் அன்பர்
வள்ளு வன்றன் பொன்மொழி போலவ்
வுள்ளன் பன்றி வேறென் வேண்டும்?
                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரித்தறிய:
முள் அம்பு அன்றித் தைக்கும் முதலே!
கொள் என்பு என்று இருப்பார் அன்பர்
வள்ளுவன்தன் பொன்மொழி போல்
அவ்வுள்ளன்பு அன்றி வேறு என்(ன) வேண்டும்?

என்பு - எலும்பு

Jan 4, 2013

முத்து முகிற்பா

இன்னிசை வெண்பா

முகிற்பா முகிழ்ப்பால் முகப்பால் சிரிப்பாள்
திகைப்பாள் தவிர்ப்பாள் திடுமென்(று) அதிர்வாள்
எதற்கா யெனநான் வினாதற்(கு) உரைப்பாள்
பதின்க வனத்தா ளவள்.                         1

நேரிசை வெண்பா                   

பேச்சுப் புலியே! பிறர்பேச என்னாவாய்?
கீச்சுக் கிளியாய்க் கிடப்பேனே! - மூச்சுப்
பிடித்தே பகர்வாள் பிடித்தன வெல்லாம்
பிடிக்கா தனபுலம்பு வாள்.                             2

“இன்பொருள் இவ்வுல கத்தில் ‘ம’கரத்தில்
அன்னை அவட்கடுத்(து) அம்முகில்” - சொன்னதற்(கு)
உள்ளம் நிறைத்தனை! என்றே உரைத்தனை!
வெல்லுஞ்சொல் வேறில்லை யே.                       3

புத்தக மேபடித்(து) எந்நாளும் பண்பட்டுப்
புத்தகம் பெற்றுயரு மாபடிப்புப் - புத்தகமே!
வித்தக மேதைய லால்வேறென்? புத்தகச்
சித்தகம் செய்தாயை சொல்.                           4

மடமிது! ‘பால்வழு’ நன்(று)அன்(று)என்(று) எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா! - அடடாவஃ(து)
என்னென்று சொல்லவா ‘டா’வென்றால் ‘டா’வில்லை
‘அன்புள்ள அம்மணி’ யே!                            5

தமிழ்த்தோழி தானயத் தானையவள் தன்னேர்
அமிழ்தாழி யாகின் குரலாள் - உமிதாங்(கு)
அரிசிவமாய்க் காக்கும் அருந்தகையாள் வையம்
பெரியதோ? இல்லை அவட்கு.                         6

முத்து முகில்மழை முத்தம் தரதரை
வித்து பெறுவரம் ஒட்டியதே - கத்து
கடலெனச் சிற்ற ருவிதனைச் செய்யும்
திடமுள செம்மை யினாள்.                            7

நாணல் நதிக்கொரு நன்னண்பன் நாடொறும்
நாணல் எனவாழ்த் திடும்பிறந்த - நாணல்வாழ்த்(து)
என்றோழி! வாழ்கநீ டூழி! யுளமுழுதும்
இன்பக் கடலாழ்ந் திரும்.                             8
                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்