Dec 28, 2013

படர்கைக்கிளை போமோ?

தரவு கொச்சகக் கலிப்பாக்கள்

அவனவளைக் கண்டுரைத்தான் அவளுள்ளம் கவர்ந்ததெனத்
தவழுள்ளத் தெண்ணமெலாம் தவிப்புடனே சொல்லிவிட்டான்
கவலைகொளச் செய்தானோ? களிப்புறவே செய்தானோ?
கவலையிலை அதைப்பற்றிக் கவனமெலாம் அவள்மீதே                   1

அவள்நம்ப வில்லையதை அடுத்தடுத்து என்னென்றாள்
அவள்நெஞ்சம் நம்பும்வரை அதுகனவோ எனநினைந்தாள்
கவலைமிகச் சூழ்ந்திடவே கவனமெலாம் ஒருபொருட்கே
தவநிலையைப் போன்றவளைக் கவர்ந்திழுத்துச் சென்றதுவே        2


எந்தெந்த வழியுளதோ அந்தந்தத் தடையெல்லாம்
சிந்தையிலே கொணர்ந்தவளும் தீரமுடி வெடுத்திடவே
நிந்தித்தாள் தன்னெஞ்சை நீதியெது அவளுள்ளப்
பந்தமுறைப் போராட்டம் பற்பலவும் செய்துவிட்டாள்                          3


பின்னரொரு முடிவெடுத்துப் பின்வாங்கி விடலாமே
என்னுன்றன் முடிவென்றாள் அவன்தவித்தான் இப்போது
என்சொல்வான் என்பதுவே அவனறிய முடியாமல்
சொன்னதுவே சரியென்றான் அச்சொல்லும் பயனில்லை                  4


இங்ஙனமாய்ச் சென்றிருக்க அவனுள்ளம் எப்போதும்
கங்கனங்கட் டிக்கொண்டுக் காத்திருந்த தவள்மொழிக்கு
அங்கவளும் இங்கவனும் என்முடிவு செய்தாலும்
பொங்குள்ளம் எல்லாமும் மறந்தேதான் போய்விடுதே                       5


முன்னிலையாய்ப் படர்க்கையிலே உள்ளவரைக் கொணர்காலில்
முன்னிலையில் உள்ளவரைப் படர்க்கைநிலை கொளச்செய்யத்
தன்மையினை முன்னிலையை இருவேறு படர்க்கைபொருள்
என்றுகொணர்ந் துளமுரைத்தாள் என்னறிவுப் பெண்மையவள்!     6


அவ்வுயர்வுப் பேரெண்ண அலைகளிடைத் தவழுணர்வைச்
செவ்வாய்ம லர்ந்தருளித் தன்றோழி தானறியச்
செவ்வியசீர்ப் பெருக்காக சிந்தையெலாம் எடுத்துரைத்தாள்
அவ்வியப்பைத் தாங்கொண்ணா வத்தோழி தான்கேட்டாள்              7

உண்மையிலே அவனுன்னை உள்ளமதில் வைத்திருக்கும்
திண்மைநிலை அறியக்கேள் அஃதுண்மை தானென்றால்
கண்ணுக்குள் மணியாகத் தாங்கிடுக தாங்கிடுவன்
கண்மணியே கவியின்பம் வேறுமொழி எனக்கில்லை                        8


அதைஎங்ங னம்கேட்க முடியுமென அவளுமந்தக்
கதையெல்லாம் அவனிடமே உளமாரப் பகிர்ந்திட்டாள்
அதைவிடவும் வேறென்ன அகிலத்தில் அவனுக்கு
விதையூன்ற வேண்டுமெதும் வேண்டாமே வேண்டாமே!                9


படர்க்கைப் பொருள்கொள்ளப் படர்கா தற்சொல்லப்
படர்கைக் கிளைபோமோ படநெஞ் சுரைப்பாயே!
அரிவை அறிவாயோ? அவனுள் ளறிவாயைத்
தெரிவா னவனெ்றே தெரிய வுரைப்பாயே!                                             10


என்பதுவே அவன்மொழியாய் அவனுள்ளம் உரைக்கிறது
இன்பமதும் துன்பமதும் அவள்மொழியில் தானுளது
என்றுமவன் காத்திருப்பான் என்மொழிதான் அவளுரைப்பாள்
என்பதற்காய்! வாழ்கதமிழ்ப் பெருமகனே! பெருமகளே!                   11
                                                           - தமிழகழ்வன்  சுப்பிரமணி சேகர்