Mar 29, 2014

அருணா நாகராஜன்

நேரிசை ஆசிரியப்பா

மங்கலச் செல்வி! மரகதக் கல்நீ!
மங்கையர்க் கரசி மதிநிறை வாணி
திங்கள் வதனப் பேரொளிப் பொற்கிழி
சங்கம் நிறைதமிழ் மதுரைப் பைங்கொடி
பொங்கும் உள்ளம் பூரிப் பாலே!
மங்கை உன்மொழி செவிகேட் டாலே!
பேறுகள் பலவும் பெற்று
நூறாண் டுகள்மகிழ் வோடு வாழ்கவே!
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

உணரா மனமே உமராய்!

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

உணரா மனமே உமராய்!
    உணர்ந்த னைமனத் தமராய்!
கணந்தான் பொருந்து வரமாய்!
    கணத்தில் உணர்ந்த வருமாய்!
குணக்குன் றேகோ மானே!
    குணமே குன்றா மானே!
எணமொன் றிட்ட திடரே
    இலாது யர்வே திடமே!
   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

கிளர்ச்சி

கலிவிருத்தம்

நறுக்கென்று சொன்ன நாலு வார்த்தை
சுருக்கென் றுரைக்கும் சோம்பல் முறிப்போர்க்குக்
கருக்கென்று பெருகிக் கொட்டும் மழைபோல்
கருக்கொள் மனத்துள்! காலம்நம் கையில்
       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நம்பிக்கை

கலிவிருத்தம்

விரலே நீயாய் விரவியே வாயால்
மிரளும் பெண்ணே! முரலும் வண்டே!
கவலை விலக்கு கலைத்திறம் பழக்கு
கவினால் கலக்கு அகிலம் உனக்கு
    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தானறியாது ஆனவள்

தரவு கொச்சகக் கலிப்பா

தானறியா தானவளே தானறியா வாணவனுள்
தானறியச் சொல்வானேன் தானறியா தானதன்பின்
தானறிவன் தன்னுள்ளே தானின்றித் தானொன்றா
தானவனைத் தானவனாய்த் தான்கருதித் தகர்த்தாயோ?
                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


பிரித்தறிய :
தான் அறியாது ஆனவளே, தான் அறியா ஆண் அவனுள்.
தான் அறியச் சொல்வான் ஏன், தான்  அறியாது ஆனதன்பின் ?
தான் அறிவன் தன்னுள்ளே தானின்றித் தான் ஒன்றாது ஆனவனைத் 
தானவனாய்த் (அரக்கனாய், பகைவனாய்) தான் கருதித் தகர்த்தாயோ? 

திருச்சிற்றம்பலம்

கலிவிருத்தம்

ஐந்துநி மிடங்கள் அகிலம் மறந்தே
ஐந்தடங் கொருவன் அகிலத் தானை
சிந்தையில் சேர்த்த செம்மை நலமே
அந்தமஃ தில்லா ஆனந் தம்மே!
         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

வருத்த வெண்பா

குறள் வெண்பா

என்செய வென்செய லென்செய் யதனுளே
புன்செய லென்செயு மா?
       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்:
என்செய - என்ன செய்ய
என்செயல் - என்னுடைய செயல்
என்செய்யதனுள் - வேலை செய்யும் துறையில், அலுவலகத்தில்
புன்செயல் - பயனற்ற செயல்
என்செயுமா? - என்று ஆகுமா?

சுரேஷ் சங்கர்

கலிவிருத்தம்

செய்தக செய்துசேர் செம்மைச் செம்மல்!
பெய்தக வன்புளப் பெற்றி பெற்றனை!
உய்தக வழியுரை உயர்வு முற்றினை
எய்தக மொழிசொலி எழுத லாகுமோ?


வழிநேர் தடைகள் தடக்கல் எனவாம்
விழிநேர் துயர்கள் துடைத்தே வழிசெய்
நதிக்கண் பொதிந்துள வினிமை போல
உதித்தவன் வாழிய! சகல வாழிய!

                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Mar 25, 2014

நாயகன்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,

நாய்காத்துக் கொண்டிருக்கும் வேளையிலே
       நாயகனோ மும்முரமாய் வேலையிலே
தோய்மனதாய்த் துவண்டிருந்து முடிந்தபினே
      துரிதமுடன் அடியெடுத்து வைத்தாரே
வாயிற்படி கடந்தபினே நினைவுக்கு
     வசப்பட்ட பகலுணவுப் பாத்திரத்தைப்
போயெடுத்துப் பின்சென்றார் ஆனாலும்
      நாயினினை வெப்போதும் மறக்கவில்லை
                                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Joao Lima Neto

நேரிசை வெண்பா

ஜாஅஓ லீமாநீட் டோ!ஜெயம் கொள்மின்!வாழ்
காஅ வளத்துடன் எந்நாளும் - மாஅ
மனித! நிரல்நிறை பேரறி வாள!
தனித்துவ! வாழிய வே!

                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Hi Joao!
Wish you all success in your life!
Live a healthy & wealthy life!
Live like a king!
Live happy with your great knowledge!
Live great!

Mar 24, 2014

தமிழ்ப்பண்

குறள் வெண்பா
பொருட்பின்வருநிலையணி

இசைவேய் கழையோ? கவிதோய் கவினோ?
நசையார் நயத்தமிழ்ப் பண்.

                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தமிழ்

தரவு கொச்சகக் கலிப்பா

எண்ணமெலாம் நீயே! என்னருமைத் தமிழ்க்குழவீ!
வண்ணமெலாம் பாடுதிறம் வாய்க்கவில்லை என்றாலும்
கொண்டவரை நானுனக்குப் பாமாலை சூட்டிடுவேன்
அண்டமள வென்னெஞ்சை ஆட்கொண்டாய்! நீவாழ்க!
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

கண்மணி

தரவு கொச்சகக் கலிப்பா

நென்னலே நானுணர்ந்தேன் நற்றமிழின் அரும்பாவாய்!
சின்னதொரு விளையாட்டாய்ச் சினங்கொண்டீர் எனநினைந்தேன்.
இன்னலிலை தப்பில்லை 'சரிசாரி அந்தாதி'
உன்றனுடை மறுமொழியும் வியக்குநயம் வாய்த்ததுவே!
                                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நான்

நிலைமண்டில ஆசிரியப்பா

என்னைப் பற்றி யானென்ன சொல்ல?
எனக்கிடம் தமிழுக்குள் புன்னுனி போதும்
எனக்குள் தமிழுக் கிடமிஞ்சும் இமயம்
பள்ளிப் பருவ நாட்களில் தமிழே
துள்ளிவிளை யாடத் துணைவந்த நண்பன்
அவனுள் விளைந்த கலிப்பாத் துள்ளலால்
கவனம் முழுதும் கவர்ந்தவ னானான்
எனக்கென் னிறைவன் புரிய வைத்தான்
'மனத்திற் கினிமை தனித்தமிழ் சேர்க்கும்'
கல்லூரி சென்றதும் பிரிவு கொண்டேன்
அல்லல் கொண்டேன் அருந்தமிழ் நண்பன்
பிரிந்துவிட் டானே என்றே அரற்றினேன்
உரிமை எனக்கிலை உறவை அறுத்ததே
இளந்தொழில் நுட்ப வியலில் மூழ்கினேன்
இவ்வாண் டில்லது இறுதி பெற்றது
கலையும் தொழிலும் கந்தன் அருளினான்
கலக்கம் தவிர்த்துக் களிப்பு கொண்டேன்
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரியாவிடை

வேகமாய் ஓடிய காலங்கள்
வேதனை நெஞ்சில் கோலங்கள்               1

கொடுமை வார்த்தைச் சிதறல்கள்
கொண்டவன் நெஞ்சப் பதறல்கள்             2


இல்லை இனியே என்றாலும்
வாரா இனியும் அந்நாளும்                           3

ஒருவனை ஒருவன் ஓட்டுதலும்
கோபம் மகிழ்ச்சி காட்டுதலும்                   4

நெஞ்சம் தொட்ட பேச்சுகள்
நேயம் வைத்த மூச்சுகள்                             5

நேரில் காணல் இனியரிது
பாரில் இக்கொடு மைபெரிது                     6

உணர்வுப் பூர்வச் சிந்தனைகள்
உடனே அவற்றின் நிந்தனைகள்            7

களிக்கும் வகுப்பு இனியமைதி
கண்களில் நீரின் நினைவிறுதி               8

கூடி வாழ்ந்த பறவைகள்
தேடிச் செல்லுதே பலதிசைகள்              9

குன்றின் தீபச் சுடரொளிகள்
குவலயம் எங்கும் படரொளிகள்            10

கூட்டச் செறிவு மேகங்கள்
குளிர்ந்த மழைத்துளித் தூறல்கள்         11

வேடிக்கை நிந்தனை விளையாட்டு
வீரியப் படிப்பு இனியில்லை                    12

கண்களைத் திறந்தே உறங்குதலும்
உறங்காக் கனவும் இனியில்லை            13

எல்லாம் எல்லாம் முடிந்ததுவே
இன்னொரு பொழுதும் விடிந்ததுவே    14
          - தமிகழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பாரதியார்

பாரு தம்பி பாரு
     பாரதி யாரைப் பாரு
கேளு தம்பி கேளு
    
பாரதி சொல்லைக் கேளு                 1


பாரதி யாரெனில் அருந்தமிழர்

   பலமொழி அறிந்தும் தமிழ்நெஞ்சர்
சாரதி
என்றே சொல்லலாம்

  
தமிழ்த்தேர் ஓட்டிய பெருந்தமிழர்            2
இளஞ்சிறு வயதே கவித்தமிழை
    இனிமை என்று கருதியவர்
இளமையி லேகவி புனைந்ததனால்
    இவர்பெயர் 'பாரதி' எனவழங்கும்           3


பாப்பாப் பாட்டு பாடினார்

    பாழும் அடிமையைச் சாடினார்
பாரத விடுதலை நாடினார்
   
பெண்ணின் விடுதலை தேடினார்            4
விடுதலை அவர்தம் உயிர்மூச்சு
    உயர்தனித் தமிழே அவர்பேச்சு
கொடுந்தளை அடிமைத் தனமெல்லாம்
    கும்பிட்டு விட்டோ டிப்போச்சு             5


கண்ணன் பாட்டும் குயில்பாட்டும்

    கவித்தமிழ்ச் சோலையின் எழில்பாட்டாம்
பண்ணெனும் இசைப்பா வல்லவராம்
    பறவைகள் பாசமும் சொன்னவராம்         6
சிந்துப் பாவில் புதியதமிழ்
     சாதனை படைத்த புதியதமிழ்
அந்தம் இல்லா அழகுதமிழ்
     அவரால் பிறந்த அழகுதமிழ்              7


கணக்குப் போடத் தெரியாது

     கவித்தமிழ் என்றால் உயிராகும்
மணக்கும் அவர்தம் உயர்பேச்சு
     மறைந்து விடாது எந்நாளும்              8
பாரத வளர்ச்சியும் பலதொழிலும்
     வளம்பெற வேண்டுவது அவர்கனவு
பாரதி யாரைப் போற்றுவோம்
     பண்ணரும் செயல்களும் ஆற்றுவோம்      9

              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நுதற்காதலம்

உன்னால் எப்படி முடிகிறது?
உன்மனம் உன்னிடம்
ஒன்றும் உரைக்கவில்லையா?
என்மனம் பலவீனம்...
ஆட்பட்டபின்
அதிலிருந்து மீளமுடிவதில்லை
ஏற்கனவே எண்ணற்றவை
எண்ணிச் சொல்ல முடியவில்லை
இன்னும் ஏன் ஏமாற்றம்?
ஏன் இந்த மாற்றம்?
புரியாமல் பிதற்றுகிறேன் - விதி
அறியாமல் கதறுகிறேன்.
          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தெளிவு

இழந்தவற்றின் ஏக்கங்களுக்கும்
இன்னல்களின் தாக்கங்களுக்கும்
இனி இங்கே இடமில்லை.
ஆற்றும் முறையில்
ஆற்றத்தக்கவற்றின்
ஆக்கங்களுக்கே
அகமும் அறிவும்
ஆழட்டும் ஆராயட்டும்.

          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொட்டு

தொட்டிப் பெண்ணிற்கு
எத்தனை நெற்றிகள்
...?
தொட்டியில் ஒட்டிய பொட்டுகள்...

       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Mar 23, 2014

Phani sir

நேரிசை ஆசிரியப்பா

எல்லாம் வல்ல இறைவன் அருளால்
எல்லா நலமும் பெற்றிணை இல்லாத்
தலைவன் எனவே திகழ்பரம் பொருளே!
பலநூ றாண்டுகள் பாரினில் பெருமை

பொங்கிட வாழ்குவை! பொடியன் வாழ்த்துவன்!
தங்களின் மொழியெமைத் தலைநிமி ரச்செயும்
!
இந்நாள் போல எந்நாளும்

செந்நாள் ஆக செழிக்கட் டும்மே!

             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

ஜீவா

நிலைமண்டில ஆசிரியப்பா

என்னுள் உறையும் இனிய நண்ப!
இன்சொல் லுரைப்பவ! ஈகையிற் சிறந்தவ!
கண்ணுள் ஜீவனாய்க் காண்கிறேன் ஜீவா!
மண்ணுல கத்தே நான்காண் தேவா!
காலம் செய்தவத் துதித்த கண்ணா!
ஞாலம் போற்ற நற்புகழ் பெற்று
வாழ்கபல் லாண்டு இன்றுபோல் என்றும்
வாழ்கபல் லாண்டு! வாழ்கபல் லாண்டு!!
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நான் ஆசிரியரானால்...

நாளைய நாட்டின் தூண்களுக்கு
  நன்னெறி ஒழுக்கம் நற்பண்பு
நாளும் கற்றுக் கொடுப்பதிலே
  நானுளம் மகிழ்வேன் ஆசிரியர்         1

ஆசெனும் குற்றம் அறியாமை
  அனைத்தையும் நீக்கித் தன்னைத்தான்
அறிந்திடச் சிறந்த வழிகாட்டி
  அதனை நானும் நன்குணர்ந்தே 2


புத்தகப் பாடம் மட்டுமின்றி
  புலமை வளரும் அளவிற்கு
வித்தகம் விதைத்துப் பண்படுத்தி
  வியக்கும் உலகம் எனச்செய்வேன்     3

பொறுமை யுடனே மாணவர்க்குப்
  புரியும் வண்ணம் எடுத்துரைப்பேன்
திறமை தன்னை வெளிக்கொணர்ந்து
  சிந்தை வளம்பெற வழிசெய்வேன்      4


பிறரை மதித்து நலம்போற்றும்
  பண்பா டுடைமை புலப்படுத்தி 
அறவழி நின்று வாழ்வினிலே
  அகிலம் போற்ற வழிசெய்வேன் 5


உலகில் உன்னதப் பணியிதுவே
  உயர்சமு தாயம் நிலைபெறவே
கலைகள் யாவும் வளம்பெறவே
  கருவாய் இருப்ப திப்பணியே          6


கல்விச் செல்வம் கனிச்செல்வம்
  கல்வி ஒன்றே உலகத்தை
நல்வழிப் படுத்தும் என்பதனை
  நாளும் மகிழ்வுடன் எடுத்துரைப்பேன்   7
                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரியாமணி

கலிவிருத்தம்

பிரிய தர்ஷினி பிரியா மணியாக
பிரிய முள்ளோர் யாவரும் புடைசூழ
பிரியம் சேர்ந்து புதிய வாழ்வமைய
பிரிய முள்ள தம்பியின் வாழ்த்துகள்
            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Mar 22, 2014

உடைத்திடுமின் கதவு!

நேரிசை வெண்பா
பூட்டுவிற் பொருள்கோள்

உடைத்திடுமின்! வீணாக்கா தீர்கால் ஒருக்கால்
அடைத்திருப்பின் சாளரம் பின்னே - மடைதிறந்த
வெள்ளமென ஓடுமின் மற்றொன்று தேடுமின்
உள்ளதோ? இல்லென்? கதவு

                           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Don't waste a minute not being happy.
If one window closes, run to the next window or
Break down the door!!

Mar 16, 2014

உரை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

உரைக்கா விட்டால் உறக்கம் வருமோ?
   உளத்தா தங்கம் வெளமா கும்மே!
உரையேன் என்றின் றுறுதி கொண்டேன்
   உரையேன் வாயால் உளம்நேர் வரியாய்
உரைக்கும் இங்கே உயர்வே என்றே
   உரைக்கும் என்றன் உளமே எனக்கு
உரைத்த தெட்கின் றுறக்கம் வருமே!
   உறுகன வெல்லாம் இனிமை தருமே!
                           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

இரேவதி சேகர்

தரவு கொச்சகக் கலிப்பா

திங்களொளிச் செங்கைதனில் மங்கலக லகலவளை
தங்குபதம் கொஞ்சசிறு தஞ்சமடை கொலுசலைகள்
தங்கைதனக் கண்ணனவன் தருஞ்சீத னங்களவை
நங்குகனார் செங்கையருள் நற்பிறந்த நாள்காண்க!

'கொய்யால' என்றேதான் கொடுஞ்சொல்லைச் சொன்னாலும்
மெய்யாக வன்புடைமை செவ்வாயால் புலப்படுதே!
"அய்யய்யோ அபச்சாரம் ஆத்துக்கா ரர்தம்மை
ஐயாவே என்பேனே" என்றாளே தமிழச்சி!
--------------------------------------
சந்தக் கலிவிருத்தம்

செந்தாமரை மலரே!வதி யறிவாளினி! யகிலம்
அந்தார்மழை பொழிவாரக மகிழ்வாலதில் வியப்போ?
செந்தேன்மொழித் தமிழாலுளம் கனிந்தேமொழி பகர்வோர்
செந்தூரெழிற் செங்கோவருள் பெறுவாருயர் வாழ்வார்
----------------------------------------
நேரிசை வெண்பா

உன்னேர் இலாத மலருண் டுலகெலாம்
உன்னேர் இலாத மலருண்டு - பொன்னேர்
இலாத மலரே இனும்பல வாண்டு
நலாஅத் தொடுவாழ்க வே!
-----------------------------------------

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆவதன் பாலைப் போல வகமது தூய்மை; செய்யும்
பாவதைப் போலச் சிறப்பு பெற்றிடும் செயல்கள் யாவும்
காவதன் தண்மை போலக் கனிமொழி நவிலும் தங்கை
ரேவதி வாழ்க நாளும் நலத்தொடு வளத்தி னோடே         1

வீரமி குந்த கண்கள் வீரிய மிக்க வெண்ணப்
பாரதி கண்ட புதுமைப் பெண்ணென வாழி தங்காய்
சீரதில் சேரும் சந்தம் சிறப்பினைத் தரூஉம் அதுபோல்
நீரதி வாழ்க வாழ்க நித்தமும் மகிழ்ச்சி யோடு                    2

---------------------------------------------
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தளிர்நெஞ்சத் தங்கைநீ தண்ணு ளத்தில்
  தனித்தன்மை எண்ணங்கள் தழைத்தே ஓங்க
வெளியீட்டு மேலாண்மைத் துறையி னின்று
  மேன்மையுள தகவல்சேர் கிடங்கு சென்று
களிப்போடு பணியாற்றிக் கற்றுத் தேர்ந்து
  களமிறங்கி யுனைநிறுத்தி நலமாய் வாழ்க!
உளிசெய்யும் சிற்பத்தின் எழிலே போல
  உலகமுனைப் போற்றட்டும் நலமாய் வாழ்க!

------------------------------------------------------
கலிவிருத்தம்

ரேவதிசே கரரே ரேரகமே விவரே  
ரேவவிலை துயரே ரேயதுணை யவரே
ரேவயமே வதிரே ரேதிவர ரவரே
ரேவரர மலரே ரேலமஃ திவரே

                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பாடலைப் பிரித்தறிய:
ரேவதி சேகரர் ஏர் ஏரகமே இவர்
ஏர் ஏவ இலை துயர் ஏர் ஏய துணை யவர்
ஏர் ஏ வயமே அதிர் ஏர் ஏது இவர் அரவர்
ஏர் ஏவ வர மலர் ஏர் ஏலம் அஃது இவரே

சொற்பொருள்:
ரேவதி சேகர் - தோழியின் பெயர் ( முன்னிலையாய்க் கொண்டு முருகனைப் பற்றி எடுத்துச் சொல்லும் பொருளில்)
ஏர் ஏரகமே - அழகிய சுவாமிமலை
ஏர் ஏவ - நன்மையின்பொருட்டு ஆணையிட
இலை துயர் - துன்பம் இல்லை
ஏர் ஏய துணையவர் - கருத்து ஒருமித்த துணைவன்
ஏர் ஏ வயமே - ஊக்கமும் பெருமையும் வயப்படும்
அதிர் ஏர் ஏது - முழங்கும் ஊக்கமுடையவன் அவனைப் போல யாரும் இல்லை
இவர் அரவர் - முழங்கும் ஓசையை எழுப்பும் படையைக் கொண்டவன்
ஏர் ஏ வரர் அமலர் - நன்மை பெருகும் வரந்தருபவன், தூயவன்
ஏர் ஏல் அம் - வளர்ச்சியைக் கூட்டும் அழகு


பாம்பன் சுவாமிகளின் கமலபந்தப் பாடலொன்றைப் படித்து, அதைப்போலவே எழுத முயன்றதன் விளைவு இது. என்னுடைய அலுவலகத் தோழியின் பிறந்த நாளுக்கு வாழ்த்தாக இப்பாடலைப் படைக்க எண்ணித் தொடங்கினேன்.. ஆனால், முருகாற்றுப்படையாய்த் தோழியிடம் உரைப்பதுபோல் முடிந்துவிட்டது. இப்பாடலில் 'ர'கரத்தை மொழிமுதலாய்ப் பயன்படுத்த நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும்.
--------------------------------------------------

அரே அரே அரே
வதி வதி வதி

ரேவதி ரேவதி ரேவதி

ரங்கம்மா - மழைக்
கங்கம்மா - பெரும்
தங்கம்மா - சொக்கத்
தங்கம்மா - என்
தங்கையம்மா 

பிறந்து சிறந்த நாளது 
பத்தோ டொன்று வேறெது
நாளும் திங்களும் நேருது
நலமும் வளமும் சேருது

அறிவு கல்வி சேகரம்
அன்பும் பண்பும் மேகலை
அள்ளித் தந்த ஓர்வரம்
ஆற்றல் உள்ளம் நேர்தவம்

தருணம் நன்று நல்கியே
தழைக்கும் அறங்கள் பல்கியே
கருணை பொழியும் கார்முகில்
கருத்தும் கனிவும் சேர்முகில்

அறிவீர் அறிவன் தன்மீனே
வளப்பம் பொருந்திய நன்மீனே
பிறந்த நாணல் வாழ்த்துகள்
சிறந்து வாழ்க பல்லாண்டே!
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

செல்லக் கிளி

இன்னிசை வெண்பா

நல்லதமிழ்ப் பாமாலை நாவினிக்கப் பாடுகின்ற
செல்லக் கிளியேயென் சிங்காரப் புன்னகையே!
வெள்ளம் வருமுன் னணைபோட லாந்துள்ளும்
உள்ளம் பெறுமென் தடை?
                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்