Mar 15, 2014

வெண்டைக்காய்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வெண்டைக்காய்த் தரைகட்டு பனிக்கா லத்தே
      வெளிர்முகத்தாய் உளமுழுதும் போரா டித்தான்
தண்டைகாய் இன்னலெலாம் இன்ன லந்தான்
      தளிர்நெஞ்சத் தூணுக்குள் துணுக்காய்த் துஞ்சும்

அண்டைகாய் அண்டங்காக் காய்காய்ந் தென்னை
      அண்டியென்ன செய்திடூஉம் அஃதொன் றில்லை
கண்டைகாண் கருத்தெல்லாம் கருத்தாய்ச் செய்து
      காண்டையா வெனவெல்லாம் காண்பன் நன்றே!
                                                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


பொருள்:

வெண்டைக்காய் - வெண் தைக்காய் - தூய தை மாதத்தின்பொருட்டு,
தரைகட்டு பனிக்காலத்தே - தரையைக் கட்டும் பனிக்காலத்தில்,
வெளிர்முகத்தாய் - முகம் வெளுத்துப்போகுமாறு
போராடித்தான் - பண்படுத்தி
தண்டைகாய் - தண் தை காய்  - குளிர்ந்த, எனக்குள் தைத்து(புகுந்து),
என்னைக் காயும் (நிம்மதி இழக்கச் செய்யும்)

இன்னலெலாம் -  துன்பமெல்லாம்
இன்னலந்தான் - இனிமை தரும் நலமாக மாறிவிட்டது.
தளிர்நெஞ்சத் தூணுக்குள் - உறுதிவாய்ந்த, ஆனால் தளிர்போன்ற
மென்மையான உள்ளத்தில்

துணுக்காய்த் துஞ்சும் - சிறிதாகப் பரவி உறைந்த
அண்டைகாய் அண்டங்காக்காய் காய்ந்தென்னை அண்டி - என் அருகே இருந்து, அண்டங்காக்காய் என என்னால் பழித்துரைக்கப்படும் அளவுக்கு என்னைத் துன்பப்படுத்தும் செயலைச் செய்து,
என்ன செய்திடூஉம் அஃதொன்றில்லை - என்ன செய்துவிட முடியும்? அஃது ஒன்றுமில்லை.
கண்டைகாண் - கண் தை காண்  - கண் காண் தை - கண்ணாகக் காண வேண்டிய அளவுக்குத் தைத்த (உள்ளத்தில் புகுந்த)
கருத்தெல்லாம் கருத்தாய்ச் செய்து - செயலெல்லாம் பொறுப்புடன் செய்து
காண்டையா என எல்லாம் - காண் தையா - விளங்காது, உருப்படாது என
எண்ணப்பட்ட அனைத்தும்

காண்பன் நன்றே - நன்றாக விளங்கச் செய்வேன்

தரைகட்டு - இரண்டாம் வேற்றுமைத் தொகை
கட்டு பனி - வினைத்தொகை
தைகாய் - வினையெச்சத் தொகை (தைத்துக் காயும்)
தைகருத்து - வினைத்தொகை

தூய தை மாதத்தின்பொருட்டுத் தரையைக் கட்டும் பனிக்காலத்தில்,
உறுதிவாய்ந்த, ஆனால் தளிர்போன்ற மென்மையான உள்ளத்தில் சிறிதாகப் பரவி உறைந்த, அதாவது, குளிர்ந்த எனக்குள் புகுந்து, முகம் வெளுத்துப் போகுமாறு, என்னை நிம்மதி இழக்கச் செய்த துன்பமெல்லாம் உள்ளத்தைப் பண்படுத்தியதால், இனிமை தரும் நலமாக மாறிவிட்டது. என் அருகே இருந்து, அண்டங்காக்காய் என என்னால் பழித்துரைக்கப்படும் அளவுக்கு, என்னைத் துன்பப்படுத்தும் செயலைச் செய்து, இனி என்னை என்ன செய்துவிட முடியும்? அஃது ஒன்றுமில்லை. கண்ணாகக் காண வேண்டிய அளவுக்கு உள்ளத்தில் புகுந்த செயலெல்லாம் பொறுப்புடன் செய்து, விளங்காது, உருப்படாது என எண்ணப்பட்ட அனைத்தும் நன்றாக விளங்கச் செய்வேன்.

No comments:

Post a Comment