Mar 15, 2014

பிரிவாற்றாமை, வலிமிகாமை

கலிவிருத்தம்

உள்ளம் பெய்தனன் வீடுடல் வில்லென
வுள்ளம் புதைதழும் புள்ளம் புதைத்தழும்
உள்ளம் புதைபிணி யுள்ளம் புதைபிணி
யுள்ளம் பொருள்வலி மிகுமா காண்கண்!
                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


பிரித்தறிய:
உள்ளம்பு எய்தனன் வீடு உடல் வில்லென
உள்ளம் புதைதழும்பு, உள்ளம் புதைத்து அழும்
உள்ளம் புதைபிணி, உள்ளம்பு தைபிணி
உள் அம்பொருள் வலி மிகுமா காண் கண்


பொருள்:
உடலானது வில்லாக இங்கிருக்க, உள்ளத்தை அம்பாக எய்தான். உள்ளத்தில் புதைந்திருக்கும் வடு (காதலால் ஏற்பட்ட வலி), தலைவியிடம் சொல்ல முடியாமல், உள்ளத்திலேயே அக்காதலைப் புதைத்து அழச் செய்கிறது.
தலைவியின் உள்ளமாகிய அம்பால் தைக்கப்பட்டு, அஃது அவனுடைய உள்ளத்தில் புதைந்த நோயாக மாறிவிட்டது;  உள்ளத்தில் இருக்கும் அழகிய அப்பொருள் மேலும் துன்பமுறுமா? வலிமை பெறுமா? கண்ணே! அறிவாயாக!

வீடு - விட்ட, தழும்பு - வடு, பிணி - நோய், வலி - துன்பம், வலிமை. உள்ளம்பொருள் - உள்ளத்திற்கு உரித்தான அழகிய பொருள்

இன்னொரு பொருள்:
புதைதழும்பு, புதைபிணி, தைபிணி - வலி (வல்லினம்) மிகாது
உள்ளம்பொருள் - உட்பொதிந்த அழகிய பொருள்.

No comments:

Post a Comment