Mar 15, 2014

கார்முகில் (Garry Mugil) (பிறந்தநாள் வாழ்த்து)

நிலைமண்டில ஆசிரியப்பா

தண்ணமு தத்தமிழ்த் தேன்றேர் செல்வி
எண்ணமு துள்ளநி றைந்தார் கல்வி
முத்துப் பொற்குடந் தைப்பூச் சொற்கோ
கத்து கடலார் கவினொலி யோசை
நேர்ந்திடு யாவையும் சீரறிந் தொழுகி
நேர்படப் பேசிடு நேரிழை யாள்நீ
அரிவை இனிநீ தெரிவை அறிவை
அரிசிவன் ஆதியர் ஆசியும் பெறுவை
நலாஅத் தொடுவாழ் நங்காய் நாளும்
நிலாஅ தொடுமுயர் சீர்பெறு கோளும்

                                 -  தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரித்தறிய:
தண் அமுதத் தமிழ்த்தேன் தேர்செல்வி
எண் அமுது உள்ளம் நிறைந்து ஆர்கல்வி
முத்து, பொன்குடம், தைப்பூ, சொற்கோ

(அல்லது பொன், குடந்தைப்பூ)
கத்து கடல் ஆர் கவின் ஒலியோசை
நேர்ந்திடும் யாவையும் சீர் அறிந்து ஒழுகி
நேர்படப் பேசிடும் நேரிழையாள் நீ
அரிவை இனி நீ தெரிவை அறிவை
அரி சிவன் ஆதியர் ஆசியும் பெறுவை
நலாஅத்தொடு வாழ் நங்காய்! நாளும்
நிலாஅ தொடும் உயர்சீர் பெறு கோளும்


பொருள்:
குளிர்ந்த அமுதமாகிய, தேனாகிய தமிழில் தேர்ந்த தமிழ்மகளே! இனிய எண்ணங்கள் நிறைந்த உள்ளம் கொண்டவளே! கல்வியில் சிறந்தவளே! முத்தே! பொன்குடமே! தை மாதப் பூவே! பொன்னே! குடந்தையில் பூக்கும் சிறந்த குறிஞ்சிப் பூவே! பேச்சில் சிறந்தவளே! அலைகடலினின்று எழும் அழகிய இசையானவளே! ஓசையானவளே! எந்த ஒரு செயலையும் பல கோணங்களில் சிந்தித்து - சீர்தூக்கி - ஆராய்ந்து பேசுபவளே! இன்றுமுதல் தெரிவை என்னும் பருவப் பெண்ணாகிறாய்! எந்நாளும் நலத்தொடு வாழ்வாயாக! திருமால், சிவன் முதலானவர்களின்         ஆசியையும், எல்லாக் கோள்களின் நற்பலன்களையும் பெற்று, மிகுந்த புகழோடு வாழ்வாயாக!

கவினொலி யோசை - காண்பார்தம் எண்ணத்திற்கேற்ப, அலைகடல் புலப்படும், சிலர் அந்த அலையில் ஓம் என்னும் பிரணவப் பொருளை உணர்வர், இசையை அறிவர், சிலர் அந்த அலையை இரைச்சல் ஓசையாக
உணர்வர். அதுபோல, உன்னோடு பழகுபவர்தம் மனநிலைக்கு ஏற்றவாறு இனிமை அல்லது இன்னா உறுவர். 


நேரிழை - சிறந்த அணிகலன்களை அணிந்த பெண் (இங்குச் சிறப்புகளை அணிகலன்களாக அணிந்த பெண் எனக் கொள்ளலாம்)

சொற்பொருள்:
தண் - குளிர்ந்த,
எண் - எண்ணம்,
ஆர் - நிறைந்த,
கவின் - அழகு
நேரிழையாள் - பெண்,
அரிவை - 24 வயதுவரை உள்ள பருவம்,
தெரிவை - 29 வயதுவரை உள்ள பருவம்,
அறிவை - அறிவாயாக,
அரி - ஹரி - திருமால்,
ஆதிய - முதலான,
பெறுவை - பெறுவாயாக,
நிலா தொடும் - வானுயர்ந்த,
சீர் - புகழ்,
உயர்சீர் பெறு கோள் - நற்பலன்களைத் தரும் கிரக அமைப்புகள்.


இலக்கணக் குறிப்பு:
அமுதத் தமிழ் - உவமைத்தொகை
தமிழ்த்தேன் - உருவகம்
தேர்செல்வி - வினைத்தொகை
ஆர்கல்வி - வினைத்தொகை
கத்துகடல் - வினைத்தொகை
ஒலியோசை - ஒருபொருட்பன்மொழி
கவினொலி ஓசை - முரண்
நலாஅத்தொடு - இசைநிறை அளபெடை
நிலாஅதொடு - இசைநிறை அளபெடை, இரண்டாம் வேற்றுமைத்தொகை

No comments:

Post a Comment