Apr 28, 2014

நற்றிணை 2 - இளையோன் உள்ளம்

அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்
தொலிவல் ஈந்தின் உலவை யங்காட்
டாறுசெல் மாக்கள் சென்னி யெறிந்த
செம்மறுத் தலைய நெய்த்தோர் வாய
வல்லியம் பெருந்தலைக் குருளை மாலை
மரல்நோக்கும் இண்டிவர் ஈங்கைய சுரனே
வையெயிற் றையள் மடந்தை முன்னுற்று
எல்லிடை நீங்கும் இளையோ னுள்ளங்
காலொடு பட்ட மாரி
மால்வரை மிளிர்க்கும் உருமினுங் கொடிதே


பாடியவர் : பெரும்பதுமனார்
திணை: பாலை
துறை : உடன்போகா நின்றாரை இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது
(கொடுங்காட்டின் வழியே தலைவியை அழைத்துச் செல்லும் தலைவனைப் பார்த்து வழியில் கண்டார் கூறியது)

---------------------------------------------------------

பெருந்தண் குன்றத்து -  பெரிய குளிர்ந்த மலையில்

அழுந்துபட வீழ்ந்த  - அடர்த்தியான

ஒலி வல் ஈந்தின் - தழைத்த வலிமையான ஈத்த மரங்களையுடைய

உலவை அம் காட்டு - சுழன்று வீசும் காற்றை உடைய அழகிய காட்டின்

ஆறுசெல் மாக்கள்  - வழியே செல்லும் மக்கள் மீது

சென்னி எறிந்த - தலையை மோதி

செம்மறுத் தலைய -  சிவந்த மாறுபட்ட தலையை உடைய

நெய்த்தோர் வாய - இரத்தம் பூசிய வாயையுடைய

பெருந்தலை வல்லியம் குருளை - பெரிய தலையையுடைய புலிக்குட்டிகள்

மாலை மரல் நோக்கும் - இம் மாலைப் பொழுதில், பெருங்குரும்பைச் செடியின்கண் பதுங்கி இருந்து நோக்கும்

இண்டு இவர் ஈங்கைய - இண்டங் கொடியுடன் படர்கின்ற ஈங்கைக் கொடியை உடைய

சுரன் - வழியில்

வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று - கூரிய பற்களையுடைய தலைவியை முன்னே செல்லவிடுத்து

எல்லிடை நீங்கும் இளையோனுள்ளம் - இரவுப் பொழுதில் (பின்னே) செல்லும், இந்த இளைஞனின் உள்ளமானது

காலொடுபட்ட மாரி - காற்றோடு கலந்து பெய்யும் மழை

மால்வரை மிளிர்க்கும் உருமினும் கொடிது- பெரிய மலைகளில் முகிலானது மோதி ஏற்படுத்தும் மின்னல் மற்றும் இடியை விடக் கொடியதாய் இருக்கிறது.

---------------------------------------------------------
சொற்பொருள்:

தண் - குளிர்ச்சி
அழுந்து - அடர்ந்து
குன்றம் - மலை
ஒலிதல் - தழைத்தல்
ஈந்து - ஈத்த மரம்
உலவை - காற்று
அம் - அழகு
ஆறு - வழி
சென்னி - தலை
செம் - சிவந்த
மறு - மாறுபட்ட
நெய்த்தோர் - இரத்தம்
வல்லியம் - புலி
குருளை - குட்டி
மரல் - பெருங்குரும்பைச் செடி (Bowstring hemp)
இண்டு - இண்டங்கொடி (Acacia pennata)
ஈங்கை - ஈங்கைக்கொடி (Mimosa rubicaulis), (இண்டஞ்செடி எனவும் வழங்கப் படுகிறது)

சுரம் - வழி, பாதை
வை - கூரிய
எயிறு - பல
ஐயள் - தலைவி
மடந்தை - பெண்
எல் - ஒளி, ஒளிர்வு, பளபளப்பு, சூரியன், பகல், திடம், வலிமை, இரவு
கால் - காற்று
மாரி - மழை
மால்வரை - பெரிய மலை
மிளிர்க்கும் - மின்னும்
உரும் - இடி

 

Apr 27, 2014

நற்றிணை 1 - நறுநுதல் பசத்தல் அஞ்சுவன்

நின்ற சொல்லர் நீடுதோன் றினியர்
என்றும் என்றோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்டா தூதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின் றமையா வுலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி
நறுநுதல் பசத்த லஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பறி யலரே
 
பாடியவர் : கபிலர்
திணை : குறிஞ்சி
துறை : பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது

-----------------------------------------------------------------------------

நின்ற சொல்லர் - வாக்கு தவறாதவர்

நீடு தோன்று இனியர் - என்றும் இனிமை உடையவர்

என்றும் என் தோள் பிரிபு அறியலர் - எப்பொழுதும் என்னை விட்டுப் பிரியாதவர்

தாமரைத் தண்தாது ஊதி சாந்தின் மீமிசை தொடுத்த தீந்தேன் - தாமரையினின்று குளிர்ந்த தாதினை எடுத்துச் சந்தன மரத்தின் மீது வைக்கப்பட்ட இனிய தேன்

புரைய மன்ற புரையோர் கேண்மை - உயர்வானவரின் உயர்ந்த, நிலையான நட்பு

நீர் இன்று அமையா உலகம் - உலகம் நீரின்றி அமையாது

தம் இன்று அமையா நம் நயந்து அருளி - தாம்(தலைவன்) இன்றி அமையாத நம்மை(தலைவி), விரும்பி அருளி

நறுநுதல் பசத்தல் அஞ்சி - மணம்பொருந்திய என் நெற்றி, பிரிவாற்றாமையினால் பொலிவிழந்து போகுதலுக்கு அஞ்சி

சிறுமை உறுப - கீழ்மை தருவன

செய்பு அறியலர் - செய்யத் தெரியாதவர்
-----------------------------------------------------------------------------

சொற்பொருள்:

புரைய - உயர்ந்த
மன்ற - நிலையான
புரையோர் - உயர்ந்தோர்
கேண்மை - நட்பு
நறுநுதல் - திலக முதலியவற்றால் மணம்பொருந்திய நெற்றி
பசத்தல் - பிரிவாற்றாமைத் துயரத்தால் பொலிவிழந்து போதல்
அஞ்சி - பயந்து

இலக்கணக் குறிப்பு:

மீமிசை - ஒருபொருட் பன்மொழி 

Apr 14, 2014

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நேரிசை வெண்பா

வாகைக் கெனமனிதர் வேண்டிய செல்வங்கள்
வாகாய் வளஞ்சேர்க்க வள்ளன்மை - வாகுலேயன்
வாரி நலஞ்சேர்க்க வாகைப்புத் தாண்டேமும்
மாரி தனைச்சேர்த்து வா
                           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

கார்த்திக் குமார்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

எண்ணந்தோ யெல்லாமும் இனிக்கப் பேசும்
   இயல்பான உயருள்ள வள்ளல் வாழ்க!
வண்ணந்தான் பற்பலவாம் உளத்தே பறக்கும்
   வார்த்தையிலே உலகமெலாம் உயரே பறக்கும்
எண்ணாத எண்ணரிய எண்ணம் யாவும்
   எளிதாக உருவேற்றிச் சாதிப் பாய்நீ!
மண்ணாளும் மன்னன்போல் நீடு வாழ்க!
   மாசம்பத் தெல்லாமும் பெற்று வாழ்க!

                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Apr 13, 2014

இரம்யா பழனி

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆதவன் அயனத் தாதி
  அருமைத் திருநாள் பிறந்த
சாதனைச் சிறுமி வாழ்க!
  சந்த வண்ணம் சூழ்க!
போதனை மென்மை யுள்ளம்
  புன்மை எள்ளல் பேச்சும்
ஏதமில் எண்ணம் சொல்லும்
  செயலும் வாழ்க! வளர்க!
    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Apr 9, 2014

தன்னிலை விளக்கம் அல்லது தமிழ் முழக்கம்

தரவு கொச்சகக் கலிப்பா

என்னுள்ளத் தோட்டமெலாம் எழினிறைந்த போதலர்ந்தும்
என்னுள்ளத் தோட்டமெலாம் எழினிறைந்தப் போதளர்ந்தும்
கண்ணெறிந்து காதலித லைவதலை வியினினைவும்
கண்ணெரிந்து காதளித லைவலித லைவலியும்
எண்ணத்தே எந்நாளும் எண்ணிச்சொல் லியலாத
எண்ணந்தோ யுந்தாளும் என்னத்தொல் லியலாத்த
மிழ்ச்செழியாள் மகிழ்ச்சியினால் மிடற்றெல்லை வரையுண்டு
மிழ்செழியா மெழுச்சியது போதுமென்ன லைவாய!
                                                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


பிரித்தறிய:
என் உள்ளத் தோட்டம் எல்லாம் எழில் நிறைந்த போது(பூ) அலர்ந்தும், என் உள்ளத்து ஓட்டம் எல்லாம் எழில் நிறைந்து அப்போ(து) தளர்ந்தும், கண் எறிந்து(வீசி) காதலி(க்கும்) தலைவ(னுக்குத்) தலைவியின் நினைவும், கண் எரிந்து, காது அளி(க்கும்) தலை(யாய) வலி(யும்), தலைவலியும், எண்ணத்தே எந்நாளும் எண்ணிச் சொல்(ல) இயலாத எண்ணம் தோயும் தாளும் (பாதங்களும்) என்னத் தொல்(எவ்வளவு பழமை எனக் கூற) இயலாத் தமிழ்ச் செழியாள் மகிழ்ச்சியினால் மிடற்று எல்லை (மிடறு - கழுத்து, தொண்டை, குரல்வளை) வரை உண்டு உமிழ்(கின்ற) செழியாம் எழுச்சியது போதும் என் அலைவாய! (அலைவாய் என்னும் திருச்செந்தூர் முருகனே!

காதலிதலைவ, காதளிதலைவலி - வினைத்தொகை
தொல்லியலாத் தமிழ் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
அலர்ந்தும் தளர்ந்தும் - முரண்