May 10, 2014

நற்றிணை 4 - கொண்டுஞ் செல்வர்கொல் தோழி

கானலஞ் சிறுகுடிக் கடல்மேம் பரதவர்  
நீனிறப் புன்னைக் கொழுநிழ லசைஇத்   
தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி  
யங்கண் அரில்வலை உணக்குந் துறைவனொ  
டலரே, அன்னை யறியின்இவண் உறைவாழ்க்கை  
அரிய வாகும் நமக்கெனக் கூறிற்  
கொண்டுஞ் செல்வர்கொல் தோழி உமணர்  
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக்  
கணநிரை கிளர்க்கும் நெடுநெறிச் சகடம்  
மணல்மடுத் துரறும் ஓசை கழனிக்   
கருங்கால் வெண்குருகு வெரூஉம்  
இருங்கழிச் சேர்ப்பிற்றம் உறைவின் ஊர்க்கே. 


பொருள் :

கானல் - கடற்கரைச் சோலை

அம் சிறுகுடி - அழகிய சிறிய ஊரின்

கடல்மேம் பரதவர் - கடல்மேல் செல்லும் பரதவர்

மேம் - மேவும்

நீனிறப் புன்னைக் கொழுநிழல் அசைஇ - நீல நிறப் புன்னைமரத்தின் பெரிய நிழலில் தங்கி

தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி - குளிர்ந்த பெரிய பரந்துபட்ட கடலின், நல்ல காலநிலையை நோக்கி

அம் கண் அரில் வலை -  பின்னல்களையுடைய, அழகிய கண்களையுடைய மீன் வலையை

உணக்கும் - உலர்த்தும்

துறைவனொடு - பகுதியைச் சேர்ந்தவனோடு

அலரே - தலைவியின் களவொழுக்கத்தைப் பற்றி ஊரார் புறங்கூறுதல்

அன்னை அறியின் - தலைவியின் தாய் அறிந்தால்

இவண் உறை வாழ்க்கை - இங்கு வாழும் வாழ்க்கை

அரிய ஆகும் நமக்கு எனக் கூறின் - நிலைக்காமல் போய்விடும்

உமணர் - உப்பு வாணிகர்

வெண்கல் உப்பின் - வெண்மையான் கல்லுப்பின்

கொள்ளை - விலை

சாற்றி - கூறி, எடுத்துரைத்து

கணநிரை கிளர்க்கும் - கூட்டத்தைக் கலைத்து

நெடுநெறிச் சகடம் - நீண்ட வழியில் செல்லும் வண்டிகள்

மணல் மடுத்து - மணலில் அமிழ்ந்து

உரறும் ஓசை - பெரிதாகச் சத்தமிடும் ஓசையைக் கேட்டு

கழனிக் கருங்கால் வெண்குருகு வெரூஉம் - வயலில் வாழும் கரிய கால்களையுடைய வெள்ளை நாரைகள் அஞ்சும்.

இருங்கழி - கடலையடுத்த உப்புநீர்ப்பரப்பு

சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே - அதனை ஒட்டிய தம் உறைவிடமாகிய ஊருக்கு

கொண்டும் செல்வர்கொல் தோழி - நம்மை அழைத்துக் கொண்டு போவாரா? எனத் தோழியிடம் வினவுதல்


இலக்கணக் குறிப்பு :

சிறுகுடி, தண்பெரும்பரப்பு, ஒண்பதம், வெண்கல் - பண்புத்தொகைகள்

அசைஇ - வினையெச்சம்,  சொல்லிசை அளபெடை

உறைவாழ்க்கை - வினைத்தொகை

முப்பெருங் கலைமகள்கள் வாழ்க!

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மேலோங்கு வெளியீட்டு மேலாண்மைக் குடும்பத்தின்
     முத்தான இரத்தினங்கள் முகிழ்த்தெழுந்த குடும்பத்தின்
வாலான கடைக்குட்டிப் பாப்பாக்கள் செய்தவருஞ்
     சாதனைகேள் தோழர்காள் தோழீகாள் வாருங்கள்
வாழ்த்திடுவோம் வாயார நெஞ்சாரக் கலைவாணி
     மாவருளைப் பெற்றிட்ட பிஞ்சுள்ளக் குழந்தைகாள்!
வாழ்க!பெறும் பதினாறு பேறுகளைப் பெற்றிட்டு!
     வாழ்கதவ வுள்ளத்துக் கல்வியினாழ் தொட்டிட்டு!
                                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 8, 2014

கண்ணாவுக்குக் கண்வலி

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கண்ணா!உன் கண்வலியைக் கண்டே உள்ளம்
    கொண்டபதைப் பெல்லாம்நான் என்ன சொல்வேன்
கண்ணெவ்வா றுள்ளதெனக் கேட்ட தற்குன்
    கண்ணைநி ழற்படமெ டுத்த னுப்பிக்
கண்கலங்க வைத்தனையஃ தாரோ என்றென்

   எண்ணத்தில் தோன்றியதை எழுத்தில் சேர்க்க
கொண்டவழ குத்தேவ தைத்தாய்! என்னே!
   கொஞ்சுமெழிற் சொல்லாலே விடைப கர்ந்தாய்!

                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 5, 2014

வஞ்சம்

நேரிசை வெண்பா

அஞ்சுதலுக் கஞ்சாத வஞ்சமுள நெஞ்சத்த!
செஞ்சதுனைக் கொஞ்சமுமு றுத்தாது - பஞ்சமிலாத்
துஞ்சுமிரு ளுள்ளத்தால் கள்ளமெலாம் வெல்லமெனத்
தஞ்சாத னைக்கூறு தான்.

May 3, 2014

How i understand Paging Space

எனக்கு மேலே ஏதோ ஒரு சக்தி, என் மனத்தில் ஏற்படும் பல்லாயிரத் துணுக்குகளுக்கான சிந்தனைகளை என் மூளை என்னும் RAM-ல் ஏற்றி, அவ்வப்போது, மறக்கக்கூடாத சில எண்ணங்களை ஆழ்மனம் என்னும் Paging space பகுதிக்குத் தள்ளி, ஒரு கணப்போதில் இத்தனைச் செயல்களை மட்டும்தான் இவனால் தாங்க முடியும் எனக் கணக்கிட்டு, அத்தனைச் செயல்களை மட்டும் இயக்கும் வல்லமையைத் தந்து, தேவையானவை, தேவையற்றவை எனத் தருணத்திற்கேற்பப் பிரித்தாளும் வல்லமையைத் தந்து,  இந்த இயங்கு தளத்தை (Operating System) இயக்க வைக்கும் அந்தச் சக்தியை (Operator) என்னவென்று சொல்வது? உணர்ந்தபின் ஒன்றுமில்லாதது, உணராத வரையில், உயர்வானதுதான்!!!

My Dreams

Oh! my sweet dreams!
With all my thinking streams.
What a powerful guide!
And a truthful raid...
Sometimes you are frightening
Making me with brightening
Thoughts, something to write
With the mindful delight.
Whatever I think in real life,
While I'm sleeping very rife.
Oh my sweet dreams
With all my thinking streams...

May 2, 2014

நற்றிணை 3 - இனியோள் மனைமாண் சுடரொடு படர்பொழுது

ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினை
பொரியரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டரங் கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்
சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை
யுள்ளினென் அல்லனோ யானே யுள்ளிய
வினைமுடித் தன்ன இனியோண்
மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே


பாடியவர் : இளங்கீரனார்
திணை : பாலை
துறை : முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.

பொருள் :
ஈன்பருந்து உயவும் - தனது பார்ப்பை ஈன்ற பருந்து வருந்துகின்ற

வான்பொரு நெடுஞ்சினை பொரியரை வேம்பின் - வானளாவ உயர்ந்த நெடிய
கிளைகளைக் கொண்டதும், சிறிய அடியை உடையதுமாகிய வேப்ப மரத்தின்

புள்ளி நீழல் - சிறு நிழலில்

கட்டளை அன்ன - தரத்தை அறிய உதவும் கல் போன்று,  விளையாட்டிற்குத் தேவையான அடிப்படைக் கோடுகள் கொண்டு (Basic lines using which the rules of the game are determined)

வட்டு அரங்கு இழைத்து - வட்டு விளையாட்டிற்கான அரங்கம் அமைத்து
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் - பாமரச் சிறுவர்கள் நெல்லி வட்டு (நெல்லிக்காயைக் கோலிக்குண்டாகக் கொண்டு) விளையாடும்

வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர் - வில்லேந்திய வேடர்கள் வாழும் வெவ்விய சிற்றூர்

சுரன்முதல் வந்த - வழியே வந்த

உரன்மாய் மாலை -  களைப்பினால் வலிமை இழந்த மாலையில்

உள்ளிய வினைமுடித்து  அன்ன இனியோள் - எண்ணிய செயலை முடித்தலால் பெறும் மகிழ்ச்சியைப் போன்ற இனியவள்

மனைமாண் சுடரொடு - வீட்டில் பெருமைமிக்க தீபமாகிய விளக்கை ஏற்றி வைத்து 

படர்பொழுது எனவே -  (ஏக்கத்துடன் காத்திருந்து கழிக்கும்) இருள் படர்ந்துகொண்டிருக்கும் பொழுது என

உள்ளினென் அல்லனோ யானே - நான் நினைத்தவன் அல்லவோ

அருஞ்சொற்பொருள்:

ஈன் - ஈனும், பெற்றெடுக்கும்
உயவும் - வருந்தும்
வான்பொரு - வான் அளாவும்
நெடுஞ்சினை - நெடிய கிளை
சினை - உறுப்பு (கிளை)
பொரியரை - மரத்தின் பொரிந்த அரைப்பகுதி (அடிப்பகுதி)
நீழல் - நிழல்
அன்ன - போன்ற
உள்ளிய - நினைத்த


இலக்கணக்குறிப்பு:

ஈன்பருந்து - வினைத்தொகை
பொருநெடுஞ்சினை - வினைத்தொகை
நெடுஞ்சினை - பண்புத்தொகை
நெடுஞ்சினை பொரியரை - உம்மைத்தொகை
பொரியரை - வினைத்தொகை
அன்ன - உவம உருபு
கல்லா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
சிறாஅர் - இசைநிறை அளபெடை
வெம்முனை - பண்புத்தொகை
சீறூர் - பண்புத்தொகை
உரன்மாய் மாலை - வினைத்தொகை