Jun 19, 2014

அஞ்சுதல் அஞ்சாமை

குறள் வெண்பா

அஞ்சுதற்(கு) அஞ்சாது வாழ்பவன் வையத்தில்
துஞ்சிய யாக்கைக்(கு) இணை
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

வாசுதேவ கிருஷ்ணன்

கலிவிருத்தம்

இளையான் உள்ளம் இளையான் எனினும்
இளையாய் நிற்பன் இளையா யெண்ணி
இளையா யிகழா தேயுளம் இளைக
விளைய ளந்தான் விளைவாய் நிறைவான்
             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


பொருள் :
இளையான் உள்ளம் - உள்ளம் சோர்வடைய மாட்டான்.
இளையான் எனினும் - பலராமனுக்கு இளையவன் என்றாலும் (பலராமன்
சொல்லைத் தட்டமாட்டாதவன் என்றாலும்)
இளையாய் நிற்பன் - காவல்காடாக, கட்டுவேலியாக, கவசமாக நிற்பவன்
இளையாய் எண்ணி - எண்ணிய இயற்றாத இகழ்ச்சிக்குரியவனாய் நினைத்து
இளையாய் இகழாதே - அற்பத்தனமாய் இகழ்ந்துவிடாதே
உளம் இளைக - கொண்ட எண்ணத்தைக் கைவிடுக
இளை அளந்தான் - பூமியை அளந்தவன்
விளைவாய் நிறைவான் - எங்கும் எதிலும் ஏற்படும் எல்லாமுமாய்
நிறைந்திருப்பவன்.

Jun 12, 2014

பொன்றுந்துணையுந் துணை

நேரிசை வெண்பா

ஒன்றாஅ உள்ளத் தழுந்தீஇ வேறொன்றும்
நின்றாஅ டாதூஉ நேர்வதென்ன? - பொன்றுந்
துணையும் துணைவரு மாஅத் துணையுள்
அணையும் அணைவரு மா
            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.


பிரித்தறிய:
ஒன்றா உள்ளத்து அழுந்தி வேறொன்றும் நின்றாடாது நேர்வதென்ன?
பொன்றுந்துணையும் துணைவரு மாத்துணை உள்ளணையும் அணை வருமா?


பொருள்:
பொருந்த இயலாது என்ற உள்ளத்தில் அழுந்தி, வேறு எதைப்பற்றியும் எண்ண இயலாத இந்தக் கைக்கிளையில் நிகழ்வதென்ன? கடைசி வரையில் துணையாக வரும் பெருந்துணை என எண்ணும் உள்ளத்தில் பொருந்திய இந்த எண்ணத்திற்குப் பொருந்த வேண்டியவை பொருந்துமா?

Jun 3, 2014

தமிழ்வரம்

கலிவிருத்தம்

உடற்ற ளர்ந்தனன் உடற்று ளத்தனன்
மிடற்று றைந்தன கடற்று வற்றினன்
தடுத்த போதியன் அடுக்குப் பாவினன்
எடுத்த தமிழினன் இனிய வமிழினன்
             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.


பொருள்:
உடல் தளர்ந்தனன் - உடல் தளந்ந்தான்
உடற்று உளத்தனன் - வருந்தும் உள்ளம் கொண்டான்
மிடற்று உறைந்தன கடற்று வற்றினன் - தொண்டையில் உறைந்த தண்ணீரானது வறண்டுபோகும் காட்டைப் போல் ஆனவன்.
தடுத்த போது இயன் - காதலை மறுத்த பெண்ணை நினைத்துக் கொண்டிருப்பவன்.
அடுக்குப் பாவினன் - அழகாய் அடுக்கிப் பாடும் பாவினங்களால்
எடுத்த தமிழினன் - பாடும் தமிழன்
இனிய அமிழ் இனன் - (ஆதலின்)இனியவை அமிழ்ந்திருக்கக் கூடியவன்

கடறு - காடு
மிடறு - தொண்டை
போது - பூ