Jul 19, 2014

என்ன சொல்ல வந்தாய்?

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என்ன சொல்ல வந்தாயென்
  நெஞ்சே நீயஃ தறிவாயோ?
ஒன்று மில்லை என்றாளே
   ஒன்று மிலதோ யாதறிவேன்?
சொன்னால் தானே தெரியுமது
    சொல்லா மற்சொலி வைத்தனையே
என்னென் றறியா தெங்ஙனமோ
    யானுறக் கந்தான் கொள்வதுவே?

                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 18, 2014

காஅதல் தேவதையேஎ

பின்வரும் பாடலைக் கேட்க மிக அருமையாக இருக்கும்,அது பாடப்பட்ட விதத்தில், அளபெடைத் தொடை மிகுதியாய் விளையாடி இருக்கும். ஆகவே, அவ்வளபெடை கலந்தே எழுதிப்பார்த்தால் என்ன என்று தோன்றியதன் விளைவே இது.

https://www.youtube.com/watch?v=XnGYwoLhwzc

ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ்மகனின் பொன்னே சிலையே (ஜெர்மனியின்)
காஅதல் தேவதையேஎ
காஅதல் தேவதை பாஅர்வை கண்டதும்
நாஅன் எனை மறந்தேன்ன்  (ஜெர்மனியின்)


சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே
காஅதல் நாயகனேஎ
காஅதல் நாயகன் பாஅர்வை கண்டதும்
நாஅன் எனை மறந்தேன்ன்  (சித்திரமே..)


பூஞ்சோஒலையே பெண்ணானதோ - இரு
பொன்வண்ண்டுகள் கண்ணானதோ
பூங்கோஒதையின் நெஞ்சோடுநீ - இனி
எந்நாஅளுமே கொண்டாடலாம்


லால வாஅ வாஅ வாஅ
குளிர்நிலவின் ஒளிநீயேஎ
லலலா ஆஅ ஆஅ
எனதன்பின் சுடர் நீயேஎ


சுகம் நூறாக வேண்டும்ம்
பப பப பாஅ
உன்தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன்
நீஇ கொஞ்சும் நேரம் சொர்க்கம் (ஜெர்மனியின்)


பேரின்ன்பமே என்றாலென்ன - அதை
நீஎன்ன்னிடம் சொன்னாலென்ன
பேரின்ன்பமே நீதானம்மா - அதை
நீஎன்ன்னிடம் தந்தாலென்ன


பப ஆஅ ஆஅ ஆஅ
எனைஅணைத்தே கதைசொல்லஅ
லாலலா வாஅ வாஅ
அதைச்சொல்வேன் சுவையாகஅ


வெகுநாளாக ஆசைஇ
ரப பப பாஅ
என்மார்பில் பூமாலை போலாட வந்தாய்
நீஇ சொல்லும் பாடம் சொர்க்கம் (சித்திரமே) (ஜெர்மனியின்)


பாப பப பாஅ
பாப பப பாஅ
பாப பப பாஅ
பாப பப பாஅ

Jul 17, 2014

மனப்போக்கு

      எனக்கென்ன பாட்டெழுதத் தோன்றிடினு மாங்குமுன் வந்தமையு மருஞ்சந்தமு மதற்கேற்றாற்போ லமையுஞ் சொற்களு மச்சொற்களின் பிரிதன்மைப் பொருளுஞ் சேர்தன்மைப் பொருளு மாங்காங்கே விரவி யகத்தின்மகிழ்வைச் சேர்த்தழகு பார்க்கு மருந்தமிழே வுனையல்லால் வேறுயாரை யென்னுள்ளே யெப்போது மெண்ணிக் கொண்டிருப்பேன்?
    எக்காலு முன்னையே யெண்ணி யெண்ணி மகிழ்வுகொண்டிருக்கு மிவ்வுயிர் செய்த தவப்பயன்றா னென்ன? ஏதுமிவ்வுலகில் வேண்டாமென யெண்ணு மளவுக்கென் னுள்ளத்தை வயப்படுத்தி யேதோ வுளறுகிறே னென்றுபிற ரெண்ணு மளவுக்காளாக்கி விட்டனை. இதற்கியா னின்பங் கொளவா துயர்கொளவா யென்பதைப் பற்றியு மெண்ணுதற் கென்மன மொப்பவில்லை.

Jul 15, 2014

சீர்குலைவு

முதல்வரி மட்டுமே நினைவில் நிற்க, மற்ற வரிகளையும்தேடி மகிழ்வோம் என்று இணையத்தளத்தில் தேடிக் கடுப்பாகிவிட்டேன்.

ஒருபாடலைத் தேவைக்கு ஏற்றாற்போல் எப்படியெல்லாம் மாற்றி எழுதிக் கொள்(ல்)கிறார்கள். இன்னும் விரிவாக அதனை எழுதி, அதைப் பெருமைப்படுத்துகிறார்களாம். ஒருபாடலை, அதனுடைய சந்தத்திலேயே எழுதுதலும் படித்தலும் எவ்வளவு இனிமை என்று அறியாத அறிவுக்கொழுந்துகளின் கண்ணியமான செயல் இது. ஒருபாடலை - அதனுடைய கட்டமை
ப்பை - அதனுடைய இலக்கணத்தைக் குலைக்காமல் இருப்பதற்குச் சீரும் தளையும் எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளாத அறிவுச்சுடர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனை இது.

பாரதியின் பாட்டையே கொஞ்சம் மாற்றி எழுதி, அவருக்கே வாழ்த்து தெரிவிக்கிறார்களாம்.

போற்றி போற்றி ஓராயிரம் போற்றி - நின்
பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றி காண்
சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய்
தாமரைத் தேமலர் போலொளி தோற்றி
நின்றனை பாரதத் திருநாட்டிலே!
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை பாரதீ! எங்கள் தமிழ்ச்
சாதிசெய்த தவப்பயன் வாழி நீ!

பாரதி உயிரோடு இருந்தால் மீண்டும் இறந்திருப்பார். என்னடா இது, சீர்களும் அவற்றோடு ஒட்டி உறவாடும் சந்தமும் சரியாக இல்லையே எனத் தோன்றியது. மீண்டும் மீண்டும் படித்துச் சந்தத்தில் கொண்டுவர முயன்று கடுப்பாகிவிட்டேன்.

சரியான பாடல் எது என்பதில் எனக்கு இப்போது ஐயம் தோன்றுகிறது.

போற்றி போற்றியோ ராயிரம் போற்றிநின்
   பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்
சேற்றி லேபுதி தாக முளைத்ததோர்
   செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே
   துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை மாதர சேயெங்கள்
   சாதி செய்த தவப்பயன் வாழிநீ!

இந்த வரிகளும் சரிதானா?

இன்னொரு பாடலும் இங்ஙனம் சீர்குலைந்தது எனக்கு நினைவிலிருக்கிறது.

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும்
செல்வக் கணபதியைக் கைதொழுதக் கால்.

ஒருவெண்பாவின் ஈற்றடியில் எத்தனை சீர்கள் இருக்கவேண்டும் என்பதைக்கூட உணராமல், எப்படி மாற்றி இருக்கிறார்கள்.

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

Jul 10, 2014

சேர்த்தெழுதுதலி னினிமை

நீடாழி யுலகத்து மறைநாலோ டைந்தென்று நிலைநிற்கவே
வாடாத தவவாய்மை முனிராஜன் மாபார தஞ்சொன்னநாள்
ஏடாக வடமேரு வெற்பாக வங்கூரெ ழுத்தாணிதன்
கோடாக யெழுதும்பி ரானைப்ப ணிந்தன்பு கூர்வாமரோ

                                                  - மகாபாரதம்

இங்ஙனஞ் செய்யுற்றமிழிலு முரைநடையிலுஞ் சேர்த்தெழுதிப் பழகுதல் மனத்திற் கெவ்வள வினிமை நல்குகிறதென்பதை யாரிடம்போய் யான்சொல்வேன்.

என்றோழி யெனக்கென்றன் பிள்ளைக்கால் பயில்தமிழை
நன்றாக நினைவுறுத்தி நலமின்பங் கொளச்செய்தா - ளவள்
நன்றாக யிவ்வுலகம் போற்றிடவே வாழ்கவென
நெஞ்சார வாழ்த்துகிறேன் வேறென்ன யினிதுலகில்

                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 6, 2014

சின்ன சின்னஅ ரோஜாப் பூவே

         கீழே உள்ள பாடலைப் படிக்க கடினமாக உள்ளது எனக்கூறி விடாதீர்கள். உண்மையில் இப்பாடல் பாடப்பட்ட இசைக்கேற்பத் தமிழ் எழுத்துகளை உச்சரிக்க வேண்டுமானால், அதற்காகவே நம்தமிழில் இருக்கிறது இந்த உயிரளபெடையும், ஒற்றளபெடையும். இப்பாடலை இந்த அளபெடைகளோடு படித்துணர்ந்து பாருங்கள் தமிழின் இனிமை என்னவென்று. இசைக்குத் தமிழில் எழுத்துவடிவம் போற்றி வியக்கத் தக்கதன்றோ

திரைப்படம் : பூவிழி வாசலிலே
https://www.youtube.com/watch?v=rWNlOVzIvW4

சின்ன சின்னஅ ரோஜாப் பூவே
செல்லக் கண்ணே நீஇ யாரு
தப்பி வந்த சிப்பீஇ முத்தே
உன்னைப் பெற்ற தாஅய் யாரு
சொல்லிக் கொள்ள வாயும் இல்லை
அள்ளிக் கொள்ள தாயும் இல்லை


ஏஎனோஒ சோஒதனை - இள
நெஞ்ஞ்சில் வேஎதனை                    (சின்ன சின்னஅ)


சின்னஅ பிஞ்சு நெஞ்சுக் குள்ளே
என்ன என்ன ஆஅசை யுண்டோ
உள்ளம் தன்னை மூஉடி வைத்த
தெய்வம் வந்தா சொல்ல்லும் இங்கே
ஊரும் இல்லை பேஎரும் இல்லை
உண்மை சொல்ல யாஅரும் இல்லை


நீயும் இனி நானும்
ஒரு ஜீஇவன் தாஅனடா


சோலைக் கிளி போலே
என் தோஒளில் ஆஅடடா


இது பேஎசாஅ ஓஒவியம்
இதில் சோஒகம் ஆஅயிரம்         (சின்ன சின்னஅ)


கண்ணில் உன்னைக் காஅணும் போது
எண்ணம் எங்கோ போஒகு தையா
என்னை விட்டுப் போஒன பிள்ளை
இங்கே உந்தன் கோஒலம் கொண்டு
வந்த தென்று எண்ண்ணு கின்றேன்
வாழ்த்து சொல்லிப் பாஅடு கின்றேன்


கங்கை நீ என்றால்
கரைஇ இங்ங்கு நாஅனடா


வானம் நாஅன் என்றால்
விடீஇ வெள்ள்ளி நீயடா


என் வாஅழ்வில் நிம்ம்மதி
அது உந்ந்தன் சன்னதி                   (சின்ன சின்னஅ)


குறிப்பு : உயிரளபெடை என்றால், நெடிலெழுத்துகள் அளபெடுக்கும், அதன் காரணமாய், அதற்கு இனமான குறிலெழுத்து பக்கத்தில் எழுதப்படும். ஆனால், மேற்கண்ட பாடலில், 'சின்ன' என்ற சொல்லின் ஈற்றெழுத்து குறிலாயினும் அதுவும் நீட்டி ஒலிக்கப்படுகிறது, இது அளபெடையில் சேருமா என்பது தெரியவில்லை

Jul 5, 2014

என்புதிய தோழமைக்கு ஒரு சிறுபரிசு

நேரிசை வெண்பா

உள்ளத்தேன் மாமொழியை யோரா வளவிற்குக்
கொள்ளத்தேன் சொற்பேச்சுத் தோழமையே - வெள்ளத்தேன்
உள்ளத்தான் வெண்பாவை வெண்பாவைக் கேயளித்தே
கொள்ளுவன் கொள்ளாவின் பம். 
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 3, 2014

செய்யுள் உணருரை

செய்யுளாய் இருந்த என்னை
உரைநடையாய் உருமாற்றி
உன்னளவுக்கு இறங்கிவிட்டேன்
என்னளவுக்கு இரங்காமல்
செய்யுளாகவே இரு
வேண்டாம் இந்த உரைநடை என்று
ஏன் என்னைக் கொல்கின்றாய்?

உனக்கும் எனக்குமான தொலைவு
சீர்மிகுந்த செய்யுளுக்கும்

சீர்மைதேடிப் பெயரும் உரைநடைக்கும்
இடைப்பட்டதாகக்

கணத்திற்குக் கணம் கூடிக்கொண்டே போகிறது

நான்
மனிதக் கணத்திற்கு உட்பட்டவன்தான்
எங்கிருந்தும் அருள்புரியும் மாதேவன் அல்லன்
நான் எங்கிருந்தும்
எங்கும் நிறைந்தவளாய்

உன்னைக் காண்பதே
என் பொழுதுபோக்காகிப் போனதன்பின்

அடங்கிய மனத்தான்
தொடங்கிய தவத்தான்
அத்தவம்
உன்னைப்பற்றிய தத்துவத்தின்

ஆணிவேரைத் தேடுகிறது
உன்னை என்மனம் பற்றிய தத்துவத்தின்

ஆணிவேரைத் தேடுகிறது

எந்த ஆணியும் வேணாம்
என்னும் உன்னெண்ணம்
இந்த ஆணும் வேணாம்

என்றும் சொல்கிறது

வந்துவிடப் போகிறது
வாயில் ஏதேனும்
என்றவளே
வெந்துவிடப் போகிறது

என்மனம் என்று
ஏன் உனக்குப் புரியவில்லை

அகந்தைக் கிழங்கு
அகழ்ந்தாகி விட்டது
ஆனால்
அகம் தைகிழங்கு

ஆழத்தில் புதைந்துகொண்டே போகிறது

அகச்செய்யுள் ஆழ்ந்து அமர்ந்தவளே!
அதனுரையை உணர்வாயோ?
 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 1, 2014

வரலாறு பேசணும்ல...

தரவு கொச்சகக் கலிப்பா

என்வீட்டுச் சிறுபூட்டே ஏனுடைந்தாய் எதிர்பாரா
தின்றென்னைச் செலவிட்டே இன்னுயிர்நீத் தனையெனக்குச்
சொன்னிறையாச் செலவீட்டு வஃதெவ்வா றுணர்ந்தாயோ?
என்றாலும் இத்தனைநாள் எனைக்காத்தாய் நீவாழ்க!
                                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்