Jul 15, 2014

சீர்குலைவு

முதல்வரி மட்டுமே நினைவில் நிற்க, மற்ற வரிகளையும்தேடி மகிழ்வோம் என்று இணையத்தளத்தில் தேடிக் கடுப்பாகிவிட்டேன்.

ஒருபாடலைத் தேவைக்கு ஏற்றாற்போல் எப்படியெல்லாம் மாற்றி எழுதிக் கொள்(ல்)கிறார்கள். இன்னும் விரிவாக அதனை எழுதி, அதைப் பெருமைப்படுத்துகிறார்களாம். ஒருபாடலை, அதனுடைய சந்தத்திலேயே எழுதுதலும் படித்தலும் எவ்வளவு இனிமை என்று அறியாத அறிவுக்கொழுந்துகளின் கண்ணியமான செயல் இது. ஒருபாடலை - அதனுடைய கட்டமை
ப்பை - அதனுடைய இலக்கணத்தைக் குலைக்காமல் இருப்பதற்குச் சீரும் தளையும் எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளாத அறிவுச்சுடர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனை இது.

பாரதியின் பாட்டையே கொஞ்சம் மாற்றி எழுதி, அவருக்கே வாழ்த்து தெரிவிக்கிறார்களாம்.

போற்றி போற்றி ஓராயிரம் போற்றி - நின்
பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றி காண்
சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய்
தாமரைத் தேமலர் போலொளி தோற்றி
நின்றனை பாரதத் திருநாட்டிலே!
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை பாரதீ! எங்கள் தமிழ்ச்
சாதிசெய்த தவப்பயன் வாழி நீ!

பாரதி உயிரோடு இருந்தால் மீண்டும் இறந்திருப்பார். என்னடா இது, சீர்களும் அவற்றோடு ஒட்டி உறவாடும் சந்தமும் சரியாக இல்லையே எனத் தோன்றியது. மீண்டும் மீண்டும் படித்துச் சந்தத்தில் கொண்டுவர முயன்று கடுப்பாகிவிட்டேன்.

சரியான பாடல் எது என்பதில் எனக்கு இப்போது ஐயம் தோன்றுகிறது.

போற்றி போற்றியோ ராயிரம் போற்றிநின்
   பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்
சேற்றி லேபுதி தாக முளைத்ததோர்
   செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே
   துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை மாதர சேயெங்கள்
   சாதி செய்த தவப்பயன் வாழிநீ!

இந்த வரிகளும் சரிதானா?

இன்னொரு பாடலும் இங்ஙனம் சீர்குலைந்தது எனக்கு நினைவிலிருக்கிறது.

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும்
செல்வக் கணபதியைக் கைதொழுதக் கால்.

ஒருவெண்பாவின் ஈற்றடியில் எத்தனை சீர்கள் இருக்கவேண்டும் என்பதைக்கூட உணராமல், எப்படி மாற்றி இருக்கிறார்கள்.

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

No comments:

Post a Comment