Jul 3, 2014

செய்யுள் உணருரை

செய்யுளாய் இருந்த என்னை
உரைநடையாய் உருமாற்றி
உன்னளவுக்கு இறங்கிவிட்டேன்
என்னளவுக்கு இரங்காமல்
செய்யுளாகவே இரு
வேண்டாம் இந்த உரைநடை என்று
ஏன் என்னைக் கொல்கின்றாய்?

உனக்கும் எனக்குமான தொலைவு
சீர்மிகுந்த செய்யுளுக்கும்

சீர்மைதேடிப் பெயரும் உரைநடைக்கும்
இடைப்பட்டதாகக்

கணத்திற்குக் கணம் கூடிக்கொண்டே போகிறது

நான்
மனிதக் கணத்திற்கு உட்பட்டவன்தான்
எங்கிருந்தும் அருள்புரியும் மாதேவன் அல்லன்
நான் எங்கிருந்தும்
எங்கும் நிறைந்தவளாய்

உன்னைக் காண்பதே
என் பொழுதுபோக்காகிப் போனதன்பின்

அடங்கிய மனத்தான்
தொடங்கிய தவத்தான்
அத்தவம்
உன்னைப்பற்றிய தத்துவத்தின்

ஆணிவேரைத் தேடுகிறது
உன்னை என்மனம் பற்றிய தத்துவத்தின்

ஆணிவேரைத் தேடுகிறது

எந்த ஆணியும் வேணாம்
என்னும் உன்னெண்ணம்
இந்த ஆணும் வேணாம்

என்றும் சொல்கிறது

வந்துவிடப் போகிறது
வாயில் ஏதேனும்
என்றவளே
வெந்துவிடப் போகிறது

என்மனம் என்று
ஏன் உனக்குப் புரியவில்லை

அகந்தைக் கிழங்கு
அகழ்ந்தாகி விட்டது
ஆனால்
அகம் தைகிழங்கு

ஆழத்தில் புதைந்துகொண்டே போகிறது

அகச்செய்யுள் ஆழ்ந்து அமர்ந்தவளே!
அதனுரையை உணர்வாயோ?
 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

3 comments:

Subhashini Siva said...

"உன்னைப்பற்றிய தத்துவத்தின்
ஆணிவேரைத் தேடுகிறது
உன்னை என்மனம் பற்றிய தத்துவத்தின்
ஆணிவேரைத் தேடுகிறது"

அருமை அருமை

சுப்பிரமணி சேகர் said...

நன்றி

சுப்பிரமணி சேகர் said...

செய்யுளாய் இருந்த என்னை
உரைநடையாய் உருமாற்றி
உன்னளவுக்கு இறங்கிவிட்டேன்
என்னளவுக்கு இரங்காமல்
செய்யுளாகவே இரு
வேண்டாம் இந்த உரைநடை என்று
ஏன் என்னைக் கொல்கின்றாய்?

நிலமாகிய உள்ளத்திலேயே இருந்த என் எண்ணங்களை எடுத்துச்சொல்லும் அளவிற்கு வளர்ந்து, உன் உள்ளம் என்ன நினைக்கும் என்று சிந்திக்கும் அளவுக்குக் கீழிறங்கிவிட்டேன். என் நிலைமை புரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல், அதற்கு இசைந்திட முடியாமல் உள்ளத்திலேயே மறைத்துக்கொள் எடுத்துச்சொல்ல வேண்டாம் என்று என்னைக் கட்டுப்படுத்துகின்றாய்.

செய் - நிலம்
உளாய் - உள்ளத்தே
உரை நடையாய் - எடுத்துரைக்கும் அளவாக
கொல்லுதல் - கட்டுப்படுத்துதல், எண்ணங்களைப் புதைத்தல்

உனக்கும் எனக்குமான தொலைவு
சீர்மிகுந்த செய்யுளுக்கும்
சீர்மைதேடிப் பெயரும் உரைநடைக்கும்
இடைப்பட்டதாகக்
கணத்திற்குக் கணம்
கூடிக்கொண்டே போகிறது

செய்யுள் என்னும் கட்டுக்கோப்பான பழைமை மாறாமல் இருக்கும் நிலைப்புள்ளிக்கும், உரைநடை என்னும் புதுமையைத்தேடி மாறிக்கொண்டே இருக்கும் மாற்றுப்புள்ளி நிலைக்கும் உள்ள தொலைவு நாளும் வளர்ந்துகொண்டே இருத்தலைப் போல, என்னைவிட்டு நீ கொஞ்சம் கொஞ்சமாக நீங்கிக் கொண்டே இருக்கின்றாய்

நான் மனிதக் கணத்திற்கு
உட்பட்டவன்தான்
எங்கிருந்தும் அருள்புரியும்
மாதேவன் அல்லன்
நான் எங்கிருந்தும்
எங்கும் நிறைந்தவளாய்
உன்னைக் காண்பதே
என் பொழுதுபோக்காகிப்
போனதன்பின்
அடங்கிய மனத்தான்
தொடங்கிய தவத்தான்
அத்தவம்
உன்னைப்பற்றிய தத்துவத்தின்
ஆணிவேரைத் தேடுகிறது
உன்னை என்மனம் பற்றிய தத்துவத்தின்
ஆணிவேரைத் தேடுகிறது

நான் சாதாரண மனிதன்தான். அம்முருகனைப் போல, எங்கிருந்தாலும், அவ்வள்ளிக்கு அருள்புரிந்து மாயவித்தைகள் புரிந்து மணம்கொள்ளும் மாதேவன் அல்லன். ஆனால், நான் எங்கிருந்தாலும் உன்னை எவ்விடத்தும் நிறைந்திருப்பவளாகக் காண்பவனாக என் வாழ்நாட்களை ஓட்டிக்கொண்டே அமைதியுற்ற மனத்தால், அதனுள் விளைந்த தவநிலை உன்னைப்பற்றியே சிந்தித்துக் கொண்டும், உன்னை என்மனம் ஏன்பற்றியது என்பதைச் சிந்தித்துக் கொண்டும் தொடர்கிறது.

எந்த ஆணியும் வேணாம்
என்னும் உன்னெண்ணம்
இந்த ஆணும் வேணாம்
என்றும் சொல்கிறது

யாதொன்றும் வேண்டாம், யாருக்கும் தீதொன்றும் வேண்டாம் என்றும் உன்மனம் உரைப்பதை யானறிவேன்

வந்துவிடப் போகிறது
வாயில் ஏதேனும்
என்றவளே
வெந்துவிடப் போகிறது
என்மனம் என்று
ஏன் உனக்குப் புரியவில்லை

என்னைத் திட்டுவதற்கும் உனக்கு மனதில்லை என்பது உன் சொற்களிலேயே புரிகிறது. ஆனால், நீ யாதொன்றும் கூறாவிடினும் என்மனம் வாடிவிடும் என்பது உனக்குப் புரிந்திருக்குமா எனத் தெரியவில்லை.

அகந்தைக் கிழங்கு
அகழ்ந்தாகி விட்டது
ஆனால்
அகம் தைகிழங்கு
ஆழத்தில்
புதைந்துகொண்டே போகிறது

அகந்தை என்னை விட்டு நீங்கினாலும், மாயையும் வினைப்பயனும் நீங்கவில்லை, அது மேலும் நெஞ்சில் தைத்துக்கொண்டே இருக்கிறது

அகச்செய்யுள்
ஆழ்ந்து அமர்ந்தவளே
அதனுரையை
உணர்வாயோ?

என உள்ளமாகிய நிலத்தினுள் ஆழ்ந்து நிறைந்தவளே, அவ்வுள்ளத்தின் மொழியை உணர்வாயா?

Post a Comment