Aug 15, 2014

பிரிவு

கலிவிருத்தம்

என்றுந் தனிமை யென்றுன் றனிமை
ஒன்று ரைக்கு மொன்றா நாழிகை
என்ற னுள்ளங் கொன்று வாழும்
இன்று ணைவன் இலனோ என்க

            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

என்றும் தனிமையென்று உன்றன் இமை
ஒன்று உரைக்கும் ஒன்றா நாழிகை
என்றன் உள்ளம் கொன்று வாழும்
இன் துணைவன் இலனோ என்க.

Aug 12, 2014

இழப்பும் அச்சமும்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், 

தொலைந்த தென்றதோ ருண்மையினும்
    தொலைக்கப் போகிறோம் என்பதனால்
தொலைத்து விடுகிற வாழ்வினிலே
    தோய்ந்த வச்சமென் செய்வேனோ?
தொலைத்தல் தோல்வியும் வெற்றியுமாய்த்
    தொலைந்த தொலைவத னுள்ளடங்கும்
குலைக்கச் செய்வது மதன்வேரில்
       குடியி ருக்குமப் பயந்தானே
                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


மா-விளம்-காய்

Aug 7, 2014

சுபத்திரா (பிறந்தநாள் வாழ்த்து)

பஃறொடை வெண்பா

சுபத்திரா வாழ்க; சுகத்துடன் வாழ்க
சுபமாஅ யெச்செயலும் செய்துயர்ந்து வாஅழ்க
என்றன்றங் கையென்றும் இன்ப முறவாழ்க
நன்றென்றும் நின்வாழ்வில் சூழ வலம்வருக
அன்பாழி முத்தா யகங்குளிர வாழ்கவுயர்
பண்பாலே பேர்நிறுத்திப் பார்போற்ற வாழ்க
ககரமே யென்றால் கருப்பட்டி முன்னே
வகரமே யென்றால் வழித்துநக்கென் றோதும்
இலகுமனத் தாள்வாழ்க வின்முகத்தாள் வாழ்க
குலம்வாழ்க வாழ்க வினிது.

                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Aug 5, 2014

கைக்கிளை

கலிவிருத்தம்

கைக்கிளை யேதங் கைக்கிலை யேசிந்
தைக்கிலை துன்பம்? தங்கிளை என்பன்?
மெய்க்கிளைப் பேறிடச் செய்க்குழைப் பாம்வீண்
பொய்க்குரைப் பேனே! நானே! நலமே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்:

கைக்கிளையே தம் கைக்கு இலையே (கைக்கிளை ஏதம் கைக்கு இலையே)
சிந்தைக்கு இலை துன்பம்? தம் கிளை என்பன் ?
மெய்க்கு இளைப்பு ஏறிடச் செய்க்கு உழைப்பாம் வீண்
பொய்க்கு உரைப்பேனே! நானே நலமே!

கைக்கிளை - ஒருதலைக் காதல்
ஏதம் - குற்றம்
தங்கைக்கிலை - தம் கைக்கு இலை
சிந்தைக்கிலை - சிந்தைக்கு இலை
இலை - இல்லை என்பதன் இடைக்குறை
தங்கிளை - தம் கிளை
கிளை - உறவு
மெய்க்கிளைப்பு - மெய்க்கு இளைப்பு
செய்க்குழைப்பாம் - செய்க்கு உழைப்பாம்
செய் - நிலம், துறை
செய்க்கு - துறைக்கு, நிலத்திற்கு, களத்திற்கு
பொய்க்குரைப்பேன் - பொய்க்கு உரைப்பேன்

இஃது என் வாழ்க்கை?

கலிவிருத்தம்

ஒன்றி னுள்ளே வொன்றிய காலே
பின்னொன் றுள்ளே யுள்ளஞ் செல்லே
னென்ற மிழ்ந்த டம்பி டிக்கக்
கன்றுள் ளத்தன் கருத்தா யாமே


அக்க ருத்த ழிந்த பின்னே
அக்க ரந்தான் மாறிச் செல்ல
அக்க ரையாற் றுச்செல் வந்தான்
அக்க றைநெஞ் சுள்ளே செல்லும்


இங்ஙன மாகக் கணத்திற் கொன்றாய்க்
கங்கணங் கட்டிக் கொண்டே றெண்ணம்
தங்கவி டாதே யொன்றிலு மொன்றாய்
எங்ஙன மறிவே னிஃதென் வாழ்க்கை?
                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Aug 3, 2014

ஒன்றா? சுழியா? ஒன்றாச் சுழியா ?

நேரிசை ஆசிரியப்பா

விண்ணில் ஒளிரும் எண்ணில் மீன்கள்
ஒன்றை யொன்றறி யாதே யாயினும்
மிளிரும் அதுபோல் இம்மீ னுக்கும்
யாதொன் றுந்தெரி யாஅ தாயினும்
மிளிர்தல் குறைவிலை எல்லா மறிய                         5
வேண்டு மென்னும் எண்ண மதற்கிலை
அறிந்து தானென் செயப்போ கிறது
அதன்வழி யதனெண மதனுணர் வதன்கோள்

எண்ண வரிய வணுக்க ளதன்கூட்
டமைவை நோக்கின் ஒருசெல் லாதலின்                10
உயிருள் ளதுவோ உயிரில் லதுவோ
இறைவன் பார்வைக் கெல்லா மொன்றே

ஒன்று மிலாத ஒருகூட் டாய்ச்சேர்ந்
தென்ன படைத்தென? உயர்ந்தோன் பார்வைப்
பேராழி யுலகும் ஓரணு வாமே                                      15

தோன்றிய யாவும் தோன்றுயா வற்றையும்
ஊன்றிய உருவங் கொடுத்துப் பகுத்தே
ஆய்ந்து காலம் போக்கு கிறது
முடிந்த வாழ்வை எண்ணிப் பார்க்க,
கடந்தது காலம் மட்டும்                                                    20
ஆற்றிய யாவும் அனர்த்தமா கும்மே

                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்