Sep 14, 2014

அருண்குமார் - அருணா

நேரிசை ஆசிரியப்பா

மதுர மொழிய மதுரைத் தமிழ
விதுர நெறிய விசய விழிய
அருண வருண பனிக்கும் அருள
ஒருத னிப்பேர் உயர்ந்த பண்ப
தென்றல் இதய தேன்றன் பதிப்ப
மன்றல் நன்னாள் மகிழ்ச்சி பெருக
தங்க வமுத வருணம் பெறுக
எங்கும் எதிலும் ஏற்ற நிறைய
எண்ணம் வளர்க இதயம் நிறைவ
தாக நெஞ்ச தாகம் நட்பாம்
ஒன்று தனியென் றிராஅ தொன்றிய
வொன்றா கிடுக வெல்லாம் வெல்லம்
உள்ள வெள்ளம் என்க
உயர்தனிச் செந்தமி ழெனவா ழியவே!
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 10, 2014

எனது பார்வையில் இலக்கணம் - பகுதி 1

குன்றக் கூறல் மிகைபடக் கூறல் என்பவை  அன்றி, மற்ற உரைகளைப் பயின்று எது சரியென எனக்குப் படுகிறதோ அதைச் சுருக்கமாக எழுதுகிறேன்.           

     தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் -  நூன்மரபு - பகுதி 1

எழுத்தெனப் படுப
அகரமுதல்
னகர விறுவாய் முப்பஃ தென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே            1

எழுத்து எனச்சொல்லப்படுவன ‘அ’ முதல் ‘ன்’ முடிய முப்பது ஆகும். இவை சார்ந்துவரும் தன்மையுடைய எழுத்துகளைத் தவிர்த்துச் சொல்லப்படுவன. 

அவைதாம்
குற்றிய லிகரம் குற்றிய லுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன                       2 

மற்ற எழுத்தைச் சார்ந்தே உணரப்படும் தன்மையுடைய ஒலிகளும் எழுத்துகளாகக் கொள்ளப்படுகின்றன. அவை குறுகி ஒலிக்கும் உகரம், குறுகி ஒலிக்கும் இகரம் மற்றும் ஆய்த எழுத்து() என்னும் மூன்று ஆகும். 

அவற்றுள்
அ இ உ
எ ஒ என்னும் அப்பால் ஐந்தும்
ஓரள பிசைக்கும் குற்றெழுத் தென்ப                    3

இந்த எழுத்துகளில் ‘அ’, ‘இ’, ‘உ’, ‘எ’, ‘ஒ’ என்னும் ஐந்தும் ஒரு மாத்திரை அளவு ஒலிக்கின்ற குற்றெழுத்துகள் ஆகும்.


ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஔ என்னும் அப்பால் ஏழும்
ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப                  4


‘ஆ’, ‘ஈ’, ‘ஊ’, ‘ஏ’, 'ஐ', 'ஓ’, ‘ஔ’ என்னும் ஏழும் இரு மாத்திரை அளவு ஒலிக்கின்ற நெட்டெழுத்துகள் ஆகும்.


மூவள பிசைத்தல் ஓரெழுத் தின்றே                  5


மூன்று மாத்திரை அளவு ஒலிக்கின்ற எழுத்தென்று ஒன்றும் இல்லை.


நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்                  6


ஆனால், புலவர்தம் பாடல்களில் சில காரணங்களுக்காக, எழுத்துகள் நீட்டி ஒலிக்கத் தேவைப்படும் இடங்களில், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாத்திரை அளவுடையனவாக அவ்வெழுத்துகளைக் கூட்டி எழுதுதல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.


கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே             7


கண் இமைப்பதற்கும் கை நொடிப்பதற்கும் ஆகும் கால அளவே மாத்திரை என நுட்பமாக உணர்ந்து கண்டவர்களால் வரையறுக்கப்படுகிறது.


ஔகார விறுவாய்ப்
பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப                8


‘ஔ’ முடிய உள்ள பன்னிரண்டும் உயிர் எழுத்துகளாகும்.


னகார விறுவாய்ப்
பதினெண் ணெழுத்தும் மெய்யென மொழிப                9


னகாரமாகிய ‘ன்’ முடிய உள்ள பதினெட்டும் மெய் எழுத்துகளாகும்.


மொய்யோ டியையினும் உயிரியல் திரியா             10


உயிரெழுத்து, மெய்யெழுத்தோடு ஒன்றி, உயிர்மெய் எழுத்தை உருவாக்கினாலும், அதன் இயல்பு (ஒலியும் அதன் கால அளவும்) மாறாது.


மெய்யின் அளபே அரையென மொழிப              11


மெய்யெழுத்தின் அளவு அரை மாத்திரையாகும்.


அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே                 12


மூன்று சார்பெழுத்துகளும் அரை மாத்திரை அளவே பெறும்.


அரையளபு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகும் தெரியும் காலை               13


ஆராய்ந்து நோக்குங்கால், தன்னுடைய அரை மாத்திரை அளவினின்று குறுகிக் கால் மாத்திரை அளவினதாக ஒலிக்கும் தன்மை ‘ம்’ என்னும் மெய்யெழுத்துக்கு உண்டு.


உட்பெறு புள்ளி உருவா கும்மே                    14


அவ்வாறு குறுகிய ‘ம்’ ஆனது

எனச் சுழியினுள் ஒரு புள்ளியிட்டு எழுதப்படும்.
 
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்           15


மெய்யெழுத்துகள் பதினெட்டும் புள்ளி பெற்ற வரிவடிவினை உடையன ஆகும்.


எகர ஒகரத் தியற்கையு மற்றே                      16


 எ், ஒ்.
‘இகர உகரத் தியற்கையும் அற்றே’ என்றதன் பாட வேறுபாடாகக் கொண்டால், குற்றியலிகரமும், குற்றியலுகரமும் புள்ளி பெற்ற வரிவடிவினை உடையன ஆகும். சிறப்புக் கருதி இங்கு இஃது வலியுறுத்தப்பட்டது.புள்ளி இல்லா எல்லா மெய்யும்
உருவுரு வாகி அகரமொ டுயிர்த்தலும்
ஏனை உயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலும்
ஆயீர் இயல உயிர்த்தல் ஆறே                     17


மெய்யெழுத்துகள் ‘அ’கர உயிரோடு சேர்ந்து, உயிர்மெய்கள் ஆகும்போது, தன்வடிவில் மாற்றம் கொள்ளாது; மற்ற உயிர்களோடு சேர்ந்து, உயிர்மெய்கள் ஆகும்போது, தன்வடிவில் மாற்றம் கொள்ளும். இவையே மெய்யெழுத்துகள் உயிர்பெற்றெழும் (உயிர்மெய்யெழுத்தாகும்) இருவகை முறைகள் ஆகும். இஃது எழுத்துகளின் வரிவடிவைச் சுட்டுவதாகும்.


மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே             18


உயிரெழுத்துகள் தோன்றும் முறையிலேயே, அவை இயைந்து பிறக்கும் உயிர்மெய் எழுத்துகளும் தோன்றும். இஃது எழுத்துகளின் ஒலிவடிவைச் சுட்டுவதாகும்.


வல்லெழுத் தென்ப கசட தபற                      19


மெய்யெழுத்துகள் பதினெட்டனுள், ‘க் ச் ட் த் ப் ற்’ என்னும் ஆறும், அவை பிறக்கும் இடத்தைக் கொண்டு வல்லினமாகக் கொள்ளப்படுகின்றன.


மெல்லெழுத் தென்ப ஙஞண நமன                  20


மெய்யெழுத்துகள் பதினெட்டனுள், ‘ங் ஞ் ண் ந் ம் ன்’ என்னும் ஆறும், அவை பிறக்கும் இடத்தைக் கொண்டு மெல்லினமாகக் கொள்ளப்படுகின்றன.


இடையெழுத் தென்ப யரல வழள                   21


மெய்யெழுத்துகள் பதினெட்டனுள், ‘ய் ர் ல் வ் ழ் ள்’ என்னும் ஆறும், அவை பிறக்கும் இடத்தைக் கொண்டு இடையினமாகக் கொள்ளப்படுகின்றன.

                                                                                                           - தொடரும்

Sep 2, 2014

எனது பார்வையில் இலக்கணம் - முன்னுரை

பால்கள், பாற்கள் – எது சரி?

வேறுமொழியில், வேற்றுமொழியில், வேறு மொழியில், வேற்று மொழியில்  – எது/எவை சரி?

அரிதான ஒன்று, அரிதானவொன்று – இரண்டிற்கும் பொருளில் என்ன வேறுபாடு இருக்கிறது?

என்பது – பெயரெச்சமா?

என்று – வினையெச்சமா?

எடுத்துச்சொல்லவேண்டியிருக்கிறது – இஃது ஒரே சொல்லா?

இதெல்லாம் - இது சரியா?

சொற்களுக்கிடையே வெளியை இடம் மாற்றிப் பயன்படுத்துவதால், பொருள் மாறுபாட்டில்போய் முடிகிறதா? அல்லது பொருள்மாறுபாட்டைத் தவறாகக் கொள்கிறோமா? பொருள்மாறுபாட்டைத் தீர்மானிப்பது சொற்களுக் கிடையி லமைந்த வெளியா?

சொல் என்றால் என்ன?

பல சொற்களின் கூட்டமைப்பை (சொற்றொடரை) உச்சரிப்பைப் பொறுத்து, ஒரே சொல்லாக்கி எழுதுவது(தான்) சரியா? அப்படி எழுத வேண்டியதன் அவசியம் என்ன?

எந்தச் சொல் சிறப்பு, எந்தச் சொல் இயல்பு என வகுக்கும் இலக்கணம் எது?

எப்படிச்சொல்லிப்புரியவைப்பேன் – எப்படிச் சொல்லிப் புரிய வைப்பேன்?

வல்லின ஒற்றில் சொல்லை முடிக்கக் கூடாது என்ற விதிக்குச் சொல்லப்படும் பொருள் என்ன? அவ்விதி எவ்விடத்துச் சொல்லப்படுகிறது? புணர்ச்சியின்போதா? சொல்லை உருவாக்கும்போதா?

ஒரு சொல்லா? ஒருசொல்லா? ஒரே சொல்லா?

வல்லினவொற்று, வல்லின ஒற்று – இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

புணர்ச்சி என்றால் என்ன?

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா? ஒன்றுசேர்ந்த அன்புமாறுமா? ஒன்றுசேர்ந்தவன்புமாறுமா? ஒன்றுசேர் என்பது வினையா? அல்லது சேர் என்பது மட்டும் வினையா?

சொற்களை இடைவெளிவிட்டோ இடைவெளி விடாமலோ எழுதுதல் என்பதன் அடிப்படை இலக்கணம் யாது?

யார் என்னசொன்னாலும்? யார் என்ன சொன்னாலும்? யாரென்ன சொன்னாலும்? - இவற்றுக்கிடையே என்ன வேறுபாடு?

செய்யுளை இயற்றும்போது இவ்விதக் குழப்பங்களுக்கு நான் ஆளானதில்லை. ஆனால், முகநூல் தமிழ் நண்பர்கள்தம் பதிவுகள்மூலம் இப்படி ஏராளமான குழப்பங்களுக்கு ஆளாகிவிட்டேன். யார் என்ன சொன்னாலும் முழுமையாய் நம்பிவிட முடியவில்லை. இக்குழப்பங்கள் தீர, எதுசரி, எதுதவறு என அறிய, நானும் தமிழ் இலக்கணம் படிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்; படித்தல்/படித்தால் மட்டும் போதாது, அதை அப்படியே இங்குப் பதிவிடுதல் பெரிதும் உதவும்; எப்போது வேண்டுமானாலும் திருத்தி எழுதிக் கொள்ளலாம் என்ற நோக்கில் இதைச் செய்கிறேன்.