Oct 10, 2014

வெண்பாவாய்ப் பட்டேன்

நேரிசை வெண்பா

நெஞ்சமெலாம் நீயே நிறைந்திருக்க வேறேதுங்
கொஞ்சமேனு மச்சிந்தைக் கெட்டாதே - தஞ்சமடைந்
திட்டேனென் னாழ்மனத்தி னெண்ணமே வெண்பாவாய்ப்
பட்டேனென் னேயென்னே பண்

                                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நெஞ்சமெல்லாம் நீயே நிறைந்திருக்க வேறு ஏதும் கொஞ்சமேனும் அச்சிந்தைக்கு எட்டாதே! தஞ்சம் அடைந்திட்டேன் என் ஆழ்மனத்தின் எண்ணமே! வெண்பாவாய்ப் பட்டேன் என்னே என்னே பண்!

       என்னவளே! என் நெஞ்சமெல்லாம் நீயே நிறைந்திருக்கிறாய், ஆதலால் வேறு எதைப்பற்றியும் சிறிதளவுகூட சிந்திக்க முடியாமல் தவிக்கும் என் மேலோட்ட மனம், என் ஆழ்மனத்தில் புதைந்த உன்னைப்பற்றிய எண்ணங்களிடம் தோற்றுப்போய்த் தஞ்சம் அடைந்துவிட்டது.
      இக்கருத்தைக் கொண்ட என்மனம், இயல்பான உரைநடையில் இதை எடுத்துரைக்கத்தான் முதலில் எண்ணியது. ஆனால், போகிற போக்கில், அஃது அக்கருத்தை நல்ல கட்டமைந்த தளைகளால் உண்டாகும் வெண்பாவின் வடிவிலே உருவாக்கிவிட்டது. அந்த வெண்பாவாகிய பாடலின் அருமையை எண்ணி வியக்கிறேன்.

உடைந்த உளத்தன்

கலிவிருத்தம்

உடைய வுடனிலா(து) உடைந்த வுளத்த!தே(டு)
உடையன் அடிமனத்(து) உறைய மறைக்குமா?
கொடைய ளித்தெனத் தங்கை தன்னுரை
கடைப்பி டிப்பனோ? காண்பன் காண்பனே!

                             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்