Jan 12, 2015

இரண்டறக் கலந்த உயக்கம் (வஞ்சித்துறை)

உள்ளத்துறை எண்ணத்தே
உறைகின்றனை திண்ணந்தேன்
உன்சொல்மதுக் கிண்ணந்தான்
அவ்வூற்றினும் அன்னம்ஏன்?                             1

ஏனோவெனக் கிம்மயக்கம்
இயக்கந்தொலைத் தேகலக்கம்
என்னைப்படுத் துந்தயக்கம்
இரண்டில்கலந் திவ்வுயக்கம்                             2

விருப்பந்தொலைத் துய்வதினும்
விருப்பங்கொளத் தைத்தற்கென்?
இருத்துன்மனத் தொய்வின்றிக்
குருத்தொன்றிணை கைவென்றி                     3
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

வாண்டும் ஆண்டும் - வாழ்த்து

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இவ்வாண்டை அவ்வாண்டி  ரண்டாண் டின்முன் 
      இனியதொரு சமுகவலைத் தளத்தில் கண்டே
இவ்வாறு ழகரத்தைத் தவறாய்க் கொண்டு 
      இன்தமிழுக் கிழுக்குண்டாக் காதிர் என்று
செவ்வாயால் அறிவுறுத்தி  உண்மை அறிந்து  
      செந்தமிழால் பாராட்டிச் சென்றார் பின்னே
பவ்வம்போல் விரிதளத்தில் பார்த்து மீண்டும் 
      பழையகதை நினைவுறுத்தி மகிழ்ந்து நின்றோம்.

செவ்வனசெய் இன்தமிழாள்!  தமிழைப் பற்றிச்
      சிந்திக்கும் நெஞ்சத்தாள்!  மரபு மீது
திவ்வியம்கொள்  திருத்தகையாள்! பண்ணி சைக்கும்
      திறமுள்ள இன்னாவாள்! இன்னா இரிக்கும்
இவ்வானும் இம்மண்ணும் எல்லை இல்லா 
      எல்லாவற் றிலும்உயர்ந்த இறைவன் அருளால் 
இவ்வாண்டு யான்பெற்ற அன்புத் தோழி!
      எந்நாளும் பேரின்பம் பெற்று வாழி!
                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தேவதை (பண்ணத்தி)

அழகுச்சிலை என் அருகில் வந்ததே!
பழகுதமிழ்ப் பார்வையைப் பகர்ந்ததே!

அவளோ ஓர் இளந்தென்றல்
நெஞ்சில் ஒரு களங்கண்டாள்
களர்நிலம் கலைமிகு விளைநிலம்
வித்துதான் வியப்புகொள் முத்துதான்

அவள்தான் உலகில் தேவதை
அவள்தன் கண்களின் நேரலை
காணாமல் போனது கவின்நிலா 
நாணாமல் போகுமோ? கவிழ்நிலா

பேசிய ஒரு மொழிப் புன்னகை மின்னலில் 
உதடுகள் தாமரை வேண்டுமோ இனிமறை?
காதலோ? காதலோ? கண்களில் மோதலோ?
தாகந்தான் நெஞ்சிலே! தவிப்புகள் உதட்டிலே!
                        - தமிழகழ்வன்

ஆசையா? ஆசுவா?

நிலைமண்டில ஆசிரியப்பா

நெஞ்சமே நெஞ்சமே நினைவுகள் கொஞ்சமே
ஆசைகள் தஞ்சமே ஆழ்மனம் பொங்குமே!
கனவிலே காண்பது கருத்தினில் கலந்தது
வாய்ப்புகள் என்பன வாய்ப்பதே இல்லையோ?
ஏங்கும் என் எண்ணங்கள் எனக்குள்ளே புதைந்தன
தாங்குமோ ஆழ்மனம் தூண்டுமே மேல்மனம்
என்மனம் இங்ஙனம் எழுத்திலே உதிர்ந்ததும்
இலகிடும் சிறிதுநாள் இன்னிசைப் பொன்மனம்
ஆசைகள் வேண்டுமோ? ஆசுதான் நீங்குமோ?
மாசுகள் என்பன மனதுதான் அறியுமோ?
புண்படும் எளிதிலே புற்றனம் புரைமனம்
பண்படும் என்றுதான்? பகுத்தறி வூட்டியே!
                      - தமிழகழ்வன்

நலம்பெறுவை

நேரிசை ஆசிரியப்பா

நீயென் சொலினு மென்னுள மேற்கா
தேயென் செய்வன் தேய்ந்தன னுள்ளம்
எங்ஙன மிங்ஙன மேது மறியா
திங்குளங் கொண்டன னுளங்கொண் டனனே
உளம்மறுத் தனையஃ துளமறுத் திடுவனோ
உளனினி யும்மென உளமுரைத் திடுவனோ
நலம்பெறு வைநலம் பெறுவை
குலமினி தோங்கிட குவலயம் வாழ்குவை

              - தமிழகழ்வன்

பிரீத்திஶ்ரீ (,பிறந்தநாள் வாழ்த்து)

தரவு கொச்சகக் கலிப்பா

எலியாய வெழிற்கிளியே! எந்நாளு மின்பமொடு
தலையாய கீர்த்தியுஞ் செம்மாந்த வுள்ளமுங்
கலையாய செல்வமுங் கனியான சுற்றமும்
வலையாய நட்புடனும் வாழியவே! வாழியவே!
                                  - தமிழகழ்வன்