Jun 30, 2015

வேண்டுதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என்னிறைவா! என்னுள் உறைவோய்!
  என்னெண்ணம் யாதென் றறிவை!
தன்னிறைவு யான்பெற் றிடவே
  தங்கைதன் னுள்ளக் குறைதீர்
சொன்னயத்தா! என்றன் வேண்டல்
  சேர்ந்தருள்வாய்! சோர்வை நீக்கு!
என்னெனினும் எந்தம் முயற்சி
  ஏதுமிலை அருள வேண்டும்!
                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jun 29, 2015

கணினித் தளை

நேரிசை ஆசிரியப்பா

விடிந்தும் முடிந்தும் ஓடும் பொழுது
மடிந்து போகிற தென்றன் வாழ்க்கை
கடத்தப் பட்டது கணினியில் காலம்
கடவுளே! ஏனிங் கென்னைப் படைத்தாய்?
ஈரா யிரமாண் டின்முன் அல்ல(து)
ஓரிரு நூற்றாண் டின்முன் பிறக்க
வழிசெய் திருந்தால் மகிழ்ந்திருப் பேனே!
அக்கா லத்தே வாழ்ந்தோர் தத்தம்
நற்கா லத்துச் சிந்தனை செயல்மொழி
செய்யுள் எல்லாம் என்னுளம் சேர்க்க
எத்துணை மகிழ்வை யானடை கின்றேன்
அவர்தம் கற்பனைக் குரலென் னகத்தே
தவழ்ந்திடும் போதெனை மறக்கின் றேஎன்
இந்தக் கணினி யுகத்தில் எல்லை
இல்லாத் தளைகட் குட்பட் டென்னை
இழக்கின் றேன்விடு தலைச்சிற(கு)
இல்லாப் பறவை என்ன என்னே! 

--------------------------
பொழுது போனால் 
பொழுது விடிந்தால்
கணினியின் முன்னே 
காலம் கடந்துவிடுகிறது

இறைவா! 
இப்படிப்பட்ட யுகத்தில் 
ஏன் எனக்குப்
பிறப்பு கொடுத்தாய்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரோ
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரோ
நான் பிறந்திருக்கக் கூடாதா?

காலம் கடந்தவர்தம் வாழ்வை 
எண்ணிப் பார்க்கும்போது
அவர்தம் கவிதைகளையும் வரலாறுகளையும்
கண்முன்னே 
கொண்டுவந்து நிறுத்தும்போது
என்னுள்ளம் 
எத்துணைப் பூரிப்பை எய்துகிறது

என்னுடன் அவர்கள்
நேரில் நின்று பேசுவதாகவே
எனக்குப் படுகிறது
அவர்தம் கற்பனைக் குரல்களிலேயே
என் அகத்துக்குள் பேசும்போது
நான் நானாகவே இல்லை

இந்தக் கணினி யுகத்தில்
எல்லாவற்றினுள்ளும்
கட்டுண்டவனாய்க்
காண்கிறேன் என்னை
விடுதலைச் சிறகுகள் முளைக்காத
சிறுகூட்டுப் பறவையாய்
                   - தமிழகழ்வன்

Jun 22, 2015

இனிய இரவு - நனிமகிழ் கனவு

நேரிசை வெண்பா

என்றாய்த் தமிழே யிவைபோது மின்றெனக்கு
நன்றாய்க் கண்வளரத் தாலாட்டிப் - பொன்றா
வளனிறை வானிசை பாத்தேன் கனவுக்
களனிறையக் காணச்செய் கா
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

என் தாய்த்தமிழே! இவை போதும் இன்று எனக்கு; நன்றாய்க் கண்வளர (கண்ணுறங்க) தால்(நாக்கு) ஆட்டிப் பொன்றா (அழியா) வளன் நிறை வான் இசை(புகழ்) பாத்தேன் (பாட்டுத் தேன்) கா(சோலை) கனவுக்  களன் நிறையக் காணச் செய்வாயாக.

Jun 6, 2015

நினைக்காமல்தான் இருப்பேனோ?

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,

நினைக்கா மற்றா னிருப்பேனோ?
   நினைவி னின்ற கற்றுவனோ?
எனைத்தா னற்றம் வரையிலுன்றன்
   நினைவாற் பிணைத்தி ருக்கின்றேன்
அனைத்தாய் மற்றும் அடங்காத
   அண்டத் தளவா யகம்நிறைத்தேன்
உனைத்தா னெற்றைக் கியானுறுவன்
   உரைப்பாய் என்றன் கார்முகிலே!
      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்: நினைக்காமல்தான் இருப்பேனோ? நினைவினின்று அகற்றுவனோ? எனைத்தான் அற்றம் (அழிவு, முடிவு) வரையில் உன்றன் நினைவால் பிணைத்திருக்கின்றேன். அனைத்துமாகவும் அடங்காத அண்டத்து அளவாகவும் அகம்(உள்ளம்) நிறைத்தேன். உனைத்தான் எற்றைக்கு (என்று, எப்போது) உறுவேன் (பெறுவேன்)? உரைப்பாய் என்றன் கார்முகிலே!

நினைக்காமற்றான் - நினைக்காமல்தான் (லளவேற் றுமையில் றடவும் அல்வழி அவற்றோ டுறழ்வும்)
எற்றைக்கியானுறுவன் - எற்றைக்கு யானுறுவன் - குற்றியலிகரம்