Jul 31, 2015

கைக்கிளை யேதங் கைக்கிலை

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

(தரவு)
நாவளன்தன் நெஞ்சதனில் நேர்ந்திடூஉம் நற்றலைவி!
ஆவலன்தன் மொழிக்கேங்கி யனுதினமும் காத்திருக்கும்
காவலன்தன் காவளம்சேர் காலமுந்தான் வந்ததெனத்
தாவலனென் றுள்ளத்தைத் தாங்கியெழு தும்மொழிகேள்!

புளிபோட்டு விளக்கியவள் மொழிகேட்டு நகைத்தவன்தன்
களிப்புக்கா தாரமும்நீ கண்ணுள்ளே நிற்கின்றாய்!
ஒளித்தலறி யாதிவன்தன் உணர்வுகளைச் சிறுகணமும்
அளித்தருள்நின் னெஞ்செனக்க டங்காத வுளமொழிகேள்!

(தாழிசை)
நினைவகற்ற வியலாது நினைதினமும் நெஞ்சுறைத்துக்
கனவினிலே காண்கின்ற கள்வனைநீ உணர்வாயோ?

நினைப்பிரிய மனமில்லா நேயத்தன் வன்சிறைதான்
எனைக்கொல்ல ஏங்கவிட்டு விட்டதனை உணர்வாயோ?

கண்சிமிட்டும் நொடிப்பொழுதில் கணக்கறியாச் செயல்புரியும்
கண்களைநே சிப்பவனின் கனியுள்ளம் உணர்வாயோ?

என்சிறையீ தென்றறிய வியலாதும்; அறிந்தும்பின்
தன்சிறையீ தென்றுணர்ந்தான் அவனைநீ உணர்ந்தாயோ?

தன்செய்த னக்கோர்பொன் செயவிழைந்தான் அப்பொன்னேர்
பொன்னித்தாய் தன்னில்தான் போற்றுவள்நெஞ் சுணர்ந்தாயோ?

பாவினனி யல்பாம்தன் பொருந்துள்ளப் பெருந்தகையாள்
நாவினளைத் தான்தேடி நலமுறுதல் உணர்ந்தாயோ?

(தனிச்சொல்)
ஆம்பின்,

(அராகம்)
அவனுளங் கருமுகி லெனவெளி யடைந்திடுந்
தவனுளம் வருந்தியு ழல்கிற தென்னை?

பொருளெது வவனெதிர் படினுனின் நினைவுகள்
அருள்வது வெனவுளம் மருள்கிற தென்னை?

களவுடை யவனெனக் கருதினை அதுவுளக்
களமெனக் கருதினன் தவறிலை என்னை?

சிவனென வளப்பரும் பருவதன் மகளெனத்
தவமொழிந் தவடனை நெருங்கின னென்னை?

(தனிச்சொல்)
ஆதலின்,

(தாழிசை)
தோழீஇ யேபின்தோள் கொடுத்தென்றன் உளமாற்று;
நாழீஇ யும்பிரிய மனமில்லேன் எனைத்தேற்று;
ஆழீஇ வேறென்னுள் ளந்தானஃ  திரங்காற்று;
கேழீஇல் பெருந்துணையாய் உளக்களத்தே வுனையேற்று;
ஏழீஇ சைமீட்டி எல்லையிலா உளத்தாற்று;
வாழீஇ யெனப்பரந்தென் னுளஞ்சேரு மொழியாற்று;

(தனிச்சொல்)
உரைப்பாய்

(நாற்சீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்)
என்செய் கின்றனை? என்சொல் கின்றனை?
புன்செய லோவென்? நன்செய லோவென்?
சிந்திக் கின்றனை? அதுவன் றென்னின்
நிந்திக் கின்றனை? பிழைப்பைப் பாரும்!
எனவுரைக் கின்றனை? அதுவன் றென்னின்
நன்றூஉ நன்றென் அன்புடை நெஞ்ச!
எனவுரைக் கின்றனை? என்சொல் வேனியான்?
அன்பே நண்பே உள்ளம் பகர்வாய்!

(தனிச்சொல்)
இன்னுமியான்

(சுரிதகம்)
தூது யாதெனத் தேர்ந்திடு வேனோ?
யாதென் னுளத்தை உனக்குரைத் திடுமோ?
ஏது யென்னென் றறிகிலேன்
போதே தேனே உள்ளம் பகர்வாய்!
                             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 27, 2015

திரு ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

நேரிசை ஆசிரியப்பா

என்செய் திடூஉம் உலகினி உன்றன்
பொன்சொல் மொழிக்கேங் கிடுமென் றறிவையோ?
இளந்தலை முறைக்கோர் அறிவியல் தந்தை
வளந்தலை முறைக்கும் வாய்த்திட வாய்த்தனை
அறிவியல் தாய்தன் அருங்குழந் தைமுகம்
அறிவித் தனளுல கினுக்கே அப்துல்
கலாஅம் இனியே எலாஅம் என்றாள்
நெஞ்சம் வானியல் அதனுள் தஞ்சம்
நுண்ணிய அணுவும் நின்பெயர் சொல்லும்
இனிய சொல்லினை; மென்மை பொருந்தினை;
பாரதம் தனதெதிர் காலம் பற்றி
நீருரைத் தவைநன வாகிடும் நாளை
அதுகா ணாததற் குள்ளே
வான்றோய்ந் தனையே வையம் விட்டே!
                            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 16, 2015

கனவும் காதலியும்

நிலைமண்டில ஆசிரியப்பா

என்னினைப் போடியா னுறங்கி னேனோ?
என்கன வில்நீ! என்சொல் வேனியான்?
நனவைப் போலவே இப்போ தும்நீ 
என்னைப் பார்க்க வந்தனை! என்னே!
உன்னுளம் உரைப்பதி யாஅ தென்னின்                                   5
'யான்வேண் டாமே யுனக்கு'என் பதுவே 
நனவில் காண வியலேன் ஆயின்
கனவி லாவது காண வேண்டும்
என்பதற் காகவே வந்தனை போலும்!
உன்னைப் பார்த்துநான் மொழிந்த தென்னெனின்              10
'இந்தச் சிரிப்பு இந்தச் சிரிப்புதான் 
வேண்டும் நீயழ கோவிலை யோவெனும் 
எந்தவே றுபாடும் என்றனுக் கில்லை
ஏனெனில் அங்ஙனம் நயம்படைத் தவனியான்'
இங்ஙனம் யான்மொழிந்  திடவே தென்னெனின்                 15
ஏதோ யான்சொலக் 'கலகல' வெனநீ
சிந்திய முத்துப் பற்சிரிப் பதுவே!
என்னில் வந்தடைந் தாயை யென்றன்
அன்னையும் அண்ணனும் காண வியந்தனர்
அங்கென் மொழிந்தோம்? அங்கென் செய்தோம்?                 20
ஏதும் என்றன் நினைவில் இல்லை
பின்னர் உணவகம் சென்றுண வருந்த 
விருப்பம் தெரிவித் தனைநீ! ஆயின்
அன்னையும் அண்ணனும் நிறைவிலா மனத்தொடு
என்னையும் உன்னையும் வழிய னுப்பச்                                  25
'சரீஇ' யென்றியா னிழுத்துச் சொன்னேன்
செல்லும் வழியில் பாணிப் பூரிக்
கடையொன் றெதிர்ப்பட வங்குச் சென்று
தேநீ ரோகுளம் பியோவொன் றுனக்கு
வாங்கிடக் கடைக்கா ரரிடம் உத்தர                                            30
வொன்று பிறப்பித் தனையே எனினும்
எனக்கும் சேர்த்து வாங்கிட வில்லை
கடையின் அருகில் நிழலில் அமர்ந்தோம்
ஏதோ கூறினேன் யானதற் குன்மொழி
யாதெனின் 'ஆதலி னாற்றான் உன்னுடன்                               35
பேசவும் விழையேன்' அதனைக் கேட்டுநம்
அருகமர்ந் திருந்த பாட்டியென் னென்று
வினவ வதற்கு 'இவனெனைக் காதலிக்
கின்றா னாமென் செய்ய' வென்றனை
'அவனை மணந்து நிம்மதி யோடு                                                 40
வாழ்ந்திருக் கலாமே' என்றாள் பாட்டி
அதனை எதிர்பா ராநீ வெறுப்புற்
றெழுந்து வந்தனை என்னுள் புன்னகை
பூக்க வந்தப் பாட்டியை நன்றி
யுடனியான் நோக்கிப் பின்னர் உன்னொடு                                45
நடந்தே என்னில் புகுந்தோம் அங்கே 
தடபுடல் எனநமை விருந்தெதிர் கொள்ள
யானுண் டிடத்தொடங் கினேனா யின்நீ
கொண்டு வந்த உணவை உண்ணத்
தொடங்கினாய் பின்னர் நேரமா யிற்று;                                      50
கிளம்ப வேண்டும் என்றனை நான்சரி
யெனமொழிந் துனக்கு விடைய ளித்தேன்
ஆயினும் என்னுளம் எனையங்கு நிற்க
இடந்தர வில்லை உன்னைத் தொடர்ந்தேன்
நடந்து செல்கையில் சாலையின் எதிர்ப்புறம்                          55
பூங்கா வைப்பார்த் தங்கே சென்றனை
சென்றே பூக்களைக் கொஞ்சினை பின்னர்
யோகா சனங்கள் செய்திடத் தொடங்கினை
இத்துணை நேரம் செடிமறை வில்நின்
றுன்னைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தேன்                       60
நீயெனைக் கண்டு கொள்ளக்கூ டாதென
உள்ளம் பதைத்தேன் ஆயினும் நீயெனைக்
கண்டு கொண்டனை அப்போது தானுனைக்
காண்கின் றேனென் பதுபோல் முகத்துதி 
சொன்னேன் அப்போது கனவு கலைந்து                                   65
விழித்தெழுந் தேனே! விழித்தெழும் தேனே!
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 12, 2015

மொட்டை - இணைப்பான் (Tag)

நேரிசை வெண்பா

மொட்டைப் பிடித்துமல ரென்றால் மலருமோ?
மொட்டு மலர்ந்திடக் காலாகும் - மொட்டுக்காய்
ஏங்காதே யுள்ளங் கொளாதெனின் உன்னைத்தான்
தாங்காதெவ் வாறிணைப் பான்?
           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

மொட்டை எனத்தொடங்கி இணைப்பான்(Tag) என முடியுமாறு எழுதக் கேட்டுக்கொண்டதற்காய் எழுதிய வெண்பா

பாலச்சந்தர் நாகராஜன் (பிறந்தநாள் வாழ்த்து)

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)
மடஞாயி றெதிர்காண வியலாதே ஓடிடூஉம்
தடந்தோளா னிளவெழிலார் பிறைநுதற்சந் திரன்தீரன்
தண்மதுரைத் தமிழ்கொஞ்சும் தனிப்பேச்சுக் குரித்தான
கண்கருத்து கொளநின்று பெருவெற்றி பெறுதலைவன்
மன்மதன வன்மனதில் கரவொன்றும் கலவாத
இன்னிலையான் இனிமையுற வெந்நாளும் வாழ்ந்திடவே

(தாழிசை)
மீட்டும் இசைவீணை கலைவாணி கைநிகர்தாம்
காட்டும் திறமெவர்க்கும் இலையிங்கு யெனவோதி
தீட்டும் வரைமுறைகள் திறமையுடன் எதிர்நோக்கி
ஈட்டும் பெரும்பொருளான் இயல்பெற்றி யெனவியம்பு

சேர்த்துப் புகழ்வென்றி தனங்கல்வி துணிவிளமை
ஆர்த்த நுகர்ச்சியொடு நலம்பயக்கும் நன்மக்கள்
கூர்த்தபே ரறிவுடைமை குறைவில்பொன் னாற்றல்சால்
தீர்க்காயுள் நல்லூழ்நோ யிலாமைநெல் பெருமைசொல்

ஏற்றமே நினக்கென்றும் எழுச்சிகொளும் எப்படியும்
காற்றூ செனவிளங்கும் கலையாவுங் கைசேரும்
ஆற்றல் அறைவனங்ங னந்தானே யறிந்திடுவாய்!
கூற்றம் மருண்டெதிரில் வாராதே யெந்நாளும்

(அராகம்)
பொழினுதற் பொழிகரு முகிலெனக் கருணைய னரவர சனின்மக னவன்
பழிக்குநர் பயந்திடத் திடமனம் படைத்தவன் பருவம களிர்விருப் பவன்
விழிப்புணர் வுடையவன் ஒருதனி யரியென விளங்கிடும் தனதனன் அவன்
எழுச்சியில் இணையிலை எதிர்வரு பெருதுயர் எளிதினில் முறியடி தவன்

(அம்போதரங்கம்)
(நாற்சீர் ஈரடி இரண்டு அம்போதரங்கம்)
ஆழிநின் றோங்கிடுபே ரலையென்று பொங்கவாஅ
வாழிவாழ் வாங்கென்று நிலைத்துநிறை வேறிடவே;
ஆழிசேர் கையானின் அருளென்றும் நின்றனக்கு
ஊழியுள வரைக்குமிசை வளர்ந்தோங்கி வாழ்ந்திடவே

(நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம்)
இனிமையுற வெந்நாளும் இளஞ்சந்தி ரா!வாழ்க!
கனியுள்ளக் கன்றெனவு தயசந்தி ரா!வாழ்க!
தனிநிகரில் செயலாற்றுஞ் செயச்சந்தி ரா!வாழ்க!
நனிநவிலும் இனிவாய! நிறைசந்தி ரா!வாழ்க!

(முச்சீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்)
உயரெண்ணம் உன்னுள் காணும்;
உலகந்தான் உன்பின் காணும்;
உன்திறத்துக் கிணையோ? நாணும்;
உன்னுயர்வுக் குறுதுணை யாவும்;
தவமென்ப துன்றன் ஞானம்;
தனிநோக்குன் மனதோ வானம்;
துணிபுக்கென் னுவமை சொல்வேன்?
துணிந்துரைப்பேன் உலகை வெல்வோன்

(இருசீர் ஓரடிப் பதினாறு அம்போதரங்கம்)
காற்றைவா னுயர்செல்வான்
கருதைவா னுளம்வெல்வான்
ஆர்த்தெழுங்க டல்போல்வான்
அமைதியுளம் காட்டிடுவான்
சீர்திகழ்ந்தோங் கிடமொழிவான்
சிறுமைசே ரிடமொழிவான்
பாட்டுக்கோர் தலைவனவன்
பாட்டுக்குச் செலமாட்டான்
பண்புக்கோர் உறைவிடந்தான்
நண்புக்கோர் நிறைகுடந்தான்
செய்வனசெய் திருப்பவன்றான்
செய்யாத செயத்துணியான்
எங்கெவ்வா றறிவன்றான்
சிங்கமெனத் தனியுயர்ந்தான்
கருதியன மொழிபவன்றான்
கருத்தாக மொழிபவன்றான்

(தனிச்சொல்)
எனவாங்கு,

(சுரிதகம்)
எண்ணரும் நற்கு ணங்க ளுடையன்
தண்மனம் தீரம் தனிநேர் வென்றி
உடையன் இளம்பிறை நிலவன் மன்மதன்
அடைவன் வாழ்வில் அரும்பே ரிடந்தான்
பிறந்த நாணல் வாழ்த்து
வாழிய பெரும்பே றுற்றுவா ழியவே!
                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்