Aug 29, 2015

சிவன்

நேரிசை வெண்பா

ஆஅ டரவாஅ ஆஅ பரணமுனக்
காஅ டுவதோஒ காஅட்டி - லாஅ
லகாஅல நஞ்சுண் டதேஎன் பிழைப்பு
தகாஅத மைந்தோய் தணி  
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரித்தறிய: 
ஆடுஅரவா ஆபரணம் உனக்கு? ஆடுவதோ காட்டில்
ஆலகால நஞ்சுண்டது ஏன்? பிழைப்பு தகாது அமைந்தோய்! தணி!

Aug 18, 2015

கண்ணா

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என்னபெய ரிடலாமென் றெண்ணி இருக்க
  என்னுளத்தே எழுந்ததுவோ கண்ணா என்ப
நின்றோழி தனைநீய ழைத்த பேரோ
  கண்ணம்மா வாய்நிறைய அழைத்து மகிழ்ந்தாய்
என்றாலும் நின்கண்ணைக் காணு முன்னே
  இட்டபெயர் இங்ஙனம்பொ ருத்த மாகும்
என்றெண்ண விலையுன்றன் கண்ணை இன்று
  ஏரெடுத்துப் பார்த்துவியந் தேனே என்னே!

கண்ணாளன் என்றாகேன் ஆனா லுன்றன்
  கண்ணாள முனைந்தேநான் இன்று மகிழ்ந்தேன்
கண்ணால்நான் உனையென்று காண்பேன் அறியேன்
  கண்ணாள வென்னுளத்தைக் கொன்றாய் பின்னும்
கண்ணுக்குள் கண்ணாகி நின்றாய் நன்றாய்
  கண்டவனாய்க் காணாத தவனாய்க் கண்டேன்
கண்ணாடி குவித்துன்னை எட்டா தாகக்
  கண்ணுக்குக் குழிந்தெடுத்துக் காட்டும் அன்றோ!
                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Aug 3, 2015

காரிகை

கட்டளைக் கலித்துறை

காரிகை கற்றுக் கவிபா  டுவனெனின் காதலியக்
காரிகை தானெனைக் காணாள் எனயான் வருந்தினனே !
காரிகை யாளெனைச் சேர்ந்திடு நாளொன் றுளதறியேன்!
காரிகை யேயுல கென்றென வெண்ணி வருந்துவனே!
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்