Sep 30, 2015

நதியா - பிறந்தநாள் வாழ்த்து

ஆசிரியத் தாழிசை

கனியுளந் தேன்மொழி கவினொளி மதிமுகம்
நனிசிறந் திலங்கிடும் நற்பண்(பு) அரசி
இனிமையுற் றென்றும் இசைபெற வாழிய!

ஆற்றுப் படுத்தும் ஆற்ற லுடைய
ஆற்றுப் பெயர்கொள் அன்புத் தோழி
ஏற்றமுற் றென்றும் இசைபெற வாழிய!

பொறுமை அரும்பெரு பொற்குணம் இயல்பாய்
உறுந்தகை மையினால் உயர்செவி லியரெனப்
பெறும்பே றிதுவே புகழொடு வாழிய!
                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 27, 2015

வாணிகமும் இயற்கைச் சீரழிவும்

நேரிசை ஆசிரியப்பா

நானில நன்மை சிறிதுங் கருதா
மானிடர் சிலர்தம் மாவிடர் சேர்க்கும்
வாணிக நெஞ்சுதன் வளத்தைப் பெருக்கிக்
காணலுங் கருமங் காத்தலுங் கோளெனக்
காணா திருத்தல் கவினியற் கைதன்
அழிவுக்(கு) ஆக்கம் ஆக்கும் அஞ்சாப்
பழிசேர் மூடர் பண்பிலார்
விழியொளி பெறாஅர் வீணே வீணே!
                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 18, 2015

மொழிக்குப் பழிநேர்ந்தால்? (வெளிவிருத்தம்)

மொழிப்போ ரைத்தொ டங்குந் தலைவ - மடமோடி
மொழியென் றாலென்? மொழிவா யறியா - மடமோடி
விழியாய் விளங்கு வைநீ என்றார் - மடமோடி
விழியைப் பிடுங்கு மிழிசெய் கையேன்? - மடமோடி
                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

மடமோடி - மடம் ஓடி - மடமை ஊடுருவி.
மொழிவாய் - மொழியின் மூலம்

Sep 9, 2015

கடலும் உள்ளமும் (வெள்ளொத்தாழிசை)

ஒத்தா ழிசைகடல் உள்ளம்; நிலையின்றிக்
கத்து தலைக்கொண்டு காவல்கை யற்றன;வ
கத்துத் தளைகொண்டு கா

ஒத்தா ழிசைகடல் உள்ளம்; பொதியுள்சங்

கத்தமிழ் பேரொலி கட்பொருள் கொள்க;வ
கத்தமிழ் பேரொளி காண்

ஒத்தா ழிசைகடல் உள்ளம்; உளதன்ன

கத்தெண்  ணிலாத வளங்கள்; வளங்களுள
கத்தென் னிலாத வளம்?
                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்:


ஆழிசை கடல் உள்ளம் ஒத்த - பெரும் சத்தத்தை ஏற்படுத்தும் கடலும் உள்ளமும் ஒத்த தன்மையன.

ஏனெனில்,
1. நிலையின்றிக் கத்துதலைக் கொண்டு காவல் கையற்றன
2. பொதியுள் சங்கத்து அமிழ் பேரொலி கட்பொருள் கொள்க (சங்கினின்று எழும் பேரொலி, சங்கத்தினின்று எழும் பெருமுழக்கம் - எழுதலுக்குக் காரணம் அமிழ்ந்திருத்தல் எனக் கொண்டு) 
3. உள தன்னகத்து எண்ணிலாத வளங்கள்

1. அகத்துத் தளைகொண்டு கா - மனத்தைக் கட்டுப்படுத்திக் காக்க

2. அகத்து அமிழ் பேரொளி காண் - மனத்தில் இருக்கும் பேரொளியை அறிந்துகொள்க
3. வளங்களுள் அகத்து இலாத வளம் என்? (என்று அறிக) - அவ்வளங்களுள் மனத்தில் இல்லாத வளம் என்ன என்று ஆய்க.

Sep 5, 2015

வீர இராகவன் (பிறந்தநாள் வாழ்த்து)

கலிவிருத்தம்

வாச மந்தா தித்திருப் பாற்கடல்
ஆச னந்தா னென்னர வாமுயர்
நேச மந்தா சின்மலர் இலக்குமி
மாச னந்தம் போக்கிடும் இராகவன்        1

வீசு தென்றற் போல்விளங் கிடவருள்
ஆசி பெற்று வாழிய வளத்தொடு!
ஆசு கர்வ மேதுமி லாதவன்
நேசன் நேர்நில் நெஞ்சுரன் வாழிய!        2

நேச முற்றன நேர்ந்திட வாழிய!
மீசை மாகவி போற்றுவன் வாழிய!
பேசி டாவுயிர் பாசமுற் றியவன்
ஈசன் மைந்தனின் பங்கொள வாழிய!    3
                 தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 1, 2015

ஒன்றிய ஒருநான்கு வெண்பா

நேரிசை வெண்பா
----------------------------
ஒன்றில்நான் காகாதே ஒன்றேயாம்; ஒன்றாக்கால்
ஒன்றாகா; உள்ளம் ஒளிபெறா; - வொன்றியே
உள்ளந்துள் ளுங்கள்ளாந் தெள்ளுதமிழ் நாம்பாடிக்
கள்ளந்த விர்ந்துகளிப் போம்.

இன்னிசை வெண்பா
--------------------------------
ஒன்றில்நான் காகாதே ஒன்றேயாம்; ஒன்றாக்கால்
ஒன்றாகா; உள்ளம் ஒளிபெறா ; வொன்றியே
உள்ளந்துள் ளுங்கள்ளாந் தெள்ளுதமிழ் நாம்பாடிக்
கள்ளந்த விர்ந்துகளிப் போம்.

சிந்தியல் வெண்பா
------------------------------
ஒன்றாகா உள்ளம் ஒளிபெறா வொன்றியே
உள்ளந்துள் ளுங்கள்ளாந் தெள்ளுதமிழ் நாம்பாடிக்
கள்ளந்த விர்ந்துகளிப் போம்.

குறள் வெண்பா
------------------------
உள்ளந்துள் ளுங்கள்ளாந் தெள்ளுதமிழ் நாம்பாடிக்
கள்ளந்த விர்ந்துகளிப் போம்.
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்