Nov 28, 2015

என்னவள் தன்னுள் யான்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

"புனிதமிகு வெண்ணங் கொண்டேன்
    புரிதலிலே வண்ணங் கண்டேன்
தனித்துவங்கண் டேவி யந்தேன்
    தலையாய மதிப்புங் கொண்டே
மனிதரிலே குருவாய்க் கொண்டேன்
    மகத்துவனீ! துணையாய்க் கொண்டால்
துனியென்றாம்" என்றாள் பாரேன்
    துயரந்தான் வாழ்வில் இங்கே!
                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

துனி - குற்றம்.

என்பே தை - என்பேதை

கலித்தாழிசை

என்பேதை அன்புடையன் இவனென்று ணர்ந்திலங்கா
என்பேதை? அன்புடையள் என்றாலும் மனமில்லாள்
இன்போ?தை இன்னலிதோ? என்றறியேன் மனத்தில்லாள்
எந்நேர முந்தவமாய் இயல்கின்றேன் மனத்தில்லாள்
                                                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Nov 23, 2015

முருகா!

கட்டளைக் கலித்துறை

அருவாய் உருவாய் அருளாய் ஒளியாய் அகத்துறையும்
பொருளாய்ப் பொருள்தன் பொருளாய்ப் பொலியும் பொழில்விருப்பக்
கருவாய்க் குருவாய்க் கனியாய்க் கனிவாய்க் கனிந்தவனே!
திருவாய்த் திறமாய்த் திருவாய் மொழியாய்த் திகழ்குகனே!
               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Nov 22, 2015

வான மழையும் வாழ்க்கையும்

காப்பியக் கலித்துறை

தேமா புளிமா புளிமாங்கனி தேமா தேமா

வான மழைக்குங் கடல்நீர்தனை மாற்றி வைத்துத்
தான மெனவிவ் வுலகேபெறு மாற ளிக்குங்
கான லெனமுன் கரைந்தேகிடுங் கால வாழ்க்கை
வான மெனச்சேர்த் தளித்தேகளித் தேகு வோமே!
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Nov 8, 2015

பொருள் விளக்கம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருவிளங்கு முருண்டையது மொழிவ ழக்கில்
   பொருவிளங்கா வுருண்டையென மாற்றங் கொண்டு
பொருள்மயக்கம் தந்தென்னை யலைக்க ழிக்கப்
   பொருளுணர்த்தி யருள்தந்தார் பெருந்த கைமைத்
திருவரதப் பெருங்கோவும் அழகுக் கோவும்
  சிறந்தபொருள் சொல்வழக்கைத் தெரிந்து கொள்வோம்
பொருள்விளங்கா மற்போதல் புரிந்து கொள்ளாப்
  பொருள்நிலையாப் பொருளென்று பொருள்த ரும்மே 
                                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

மொழிவழக்கு - வினைத்தொகையாகப் பேச்சு வழக்கு எனும் பொருளில்.

திருவரதப் பெருங்கோ - மரபுமாமணி மா.வரதராசனார்
அழகுக் கோ - சுந்தரராசனார்

பொருள்விளங்காமற் போதல் என்பது  1. புரிந்துகொள்ளாப் பொருள், 
2. நிலையாப் பொருள் எனும் இருபொருள்களைத் தரும்.