Dec 31, 2015

வீரன்

வீரன் என்பவன் யாரடா
வினைகள் தீர்ப்பவன் பாரடா
பாரம் என்றும் எனக்கில்லை
பயமோ ஓடும் பார்த்தெல்லை
 
கடலும் மலையும் மடுவாகும்
கடந்திடும் இரும்பு மனமாகும்
கடவுள் அவனைப் படைத்திடவும்
கையில் ஆயுதம் எடுத்திடுவேன்
 
கொண்ட செயலை ஓரெண்ணம்
கொண்டே முடிப்பேன் காரென்னும்
அண்டும் வாழ்க்கை எனக்கில்லை
அகிலம் எனக்கு மேலில்லை.
             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Dec 25, 2015

மாரி கழிந்தது

இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா

மாரி கழிந்தது மாவிமஞ் சூழ்ந்தது
நீரில் உறங்கும் நெடுமாலை நாம்பாடித்
தேரின் மனத்தெண்ணம் தெள்ளியசொல் செந்நாவில்
சேரின் அதன்பொருட்டே செய்செயலும் மாறாமல்
போரில் புனிதமிகு பொன்னுலகை நாம்படைத்(து)
ஓரில் ஒருகுடை ஓருளமென்(று) ஓர்ந்துயர்ந்து
சீரிளமைச் செந்தமிழ்ப்பா தித்திக்கத் தாலாட்டும்
மாரி நனைந்தே மகிழ்வோடு வாழ்குவமே!
                                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Dec 19, 2015

கைக்கிளை

தரவு கொச்சகக் கலிப்பா

கலிப்பாதன் பெருந்துள்ளல் கனிந்தமனத் தடங்காத
வலிப்பாவிங் கெழுந்தோடு மழைநீராய் அலைந்தேகிக்
கலிதானுட் புகுந்தவனுங் கலங்காநின் றேநலிந்தான்
நலிந்தானுன் நினைவாலே நலிந்தானே நலிந்தானே
அவனைக்
கள்ளுங் காலம் கொள்ளுங் காலம்
தெள்ளுத மிழ்ச்சுவை போலே
அள்ளுங் காலமெக் காலம் அம்மே?
            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

Dec 13, 2015

மாமழைத் துயரம்

நேரிசை வெண்பா

(முன்முடுகு)

அக்கத்துப் பக்கத்துச் சிக்கித்தத் தித்தத்தித்
திக்கித்தச் சத்துத்திக் குத்திக்குத் - துக்கித்தித்
தண்ணீர் தனில்யாவும் தானிழந்து செல்கின்றார்
கண்ணீ ரொடுங்கொடுமை காண்
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரித்தறிய:
அக்கத்துப் பக்கத்துச் சிக்கித் தத்தித் தத்தித் திக்கித்து அச்சத்துத் திக்குத் திக்குத் துக்கித்து இத் தண்ணீர்தனில் யாவும் தான் இழந்து செல்கின்றார் கண்ணீரொடும் கொடுமை காண்.

அன்னை

கலிவிருத்தம்

அரும்பு தொட்டுளம் ஆவியின் மேலதாய்ப்
பெரும்பொ றுப்பொடு பேணிவ ளர்த்திடுங்
கரும்பு கற்பகக் காவென நிற்பவள்
அருந்த வத்தவள் ஆருயிர் அன்னையே! 
                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்