Jan 21, 2016

போற்றப்பட வேண்டியது - தாய்மை

(தமிழ் வாழ்த்து)
மாறாத பேரின்பம் மனஞ்சேர வெனையாளும்
ஆறாகப் பேரருவித் தேராகத் தேருள்ளப்
பேறாகப் பாவலர்தம் பாவாக நாவாகக்
கூறாக வுயிர்தன்னுள் குடிகொள்ளும் தமிழ்வாழி!

(அவையடக்கம், தலைமைக்கு வாழ்த்து)
கற்றபெ ருந்தகை! முற்றுமு ணர்ந்திடு
நற்றவஞ் சேர்கவி! நற்றுணை யாகுக! 
சிற்றறி வுள்ளவன் குற்றங்கள் பொறுத்துயர்
கற்றலு ரந்தருங் கவிஞரே! வாழிய!

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
(தரவு)
ஆற்றலுளங் கொள்ளவரும் ஆதரவாய் அங்கிருந்தே
ஏற்றவொரு தெளிவினையும் எண்ணத்தே விதைத்துயிர்த்தே
ஆற்றுதலுக் குரியதொரு ஆற்றலையும் அதுதளர்ந்தால்
ஆற்றுதலும் அந்தவுளம் அடைந்ததுயர் அனைத்தினையும் 
ஊற்றெனமுன் வந்துதவும் உயர்பண்பால் மேலோங்கி
போற்றுதலுக் குரித்தான பொன்மனங்கொள் தாயவளே!

(தாழிசை)
கருசுமந்து கருதாத கருத்தெல்லாம் மிகச்சுமந்து
பெருதுயர்ம றந்துபெறும் பிஞ்சுள்ளக் கொஞ்சலுக்காய்
ஒருபத்துத் திங்கடவத்(து) உழன்றுதரந் தொட்டுமகிழ்ந்(து)
உருவாக்கும் பெரும்பிறவி உயர்தாய்க்கோர் உவமையிலை

பிள்ளைதனக் காகவந்தப் பிறைநிலவைப் புவிக்கிழுத்துத்
தெள்ளமுதந் தனையூட்டித் தென்றலெனச் சீராட்டிக்
கொள்ளமனம் அருங்கதைகள் கூறிநலம் பேணியுல(கு)
உள்ளதென வாழ்கின்ற உயர்தாய்க்கோர் உவமையிலை

தன்னலத்தைக் கருதாத தன்னிகரில் தனிப்பிறவி!
தன்மகவே உலகமெனத் தாங்கியுளம் மிகமகிழ்ந்து
தன்னிறைவு பெறுகின்ற தவவாழ்க்கைக்(கு) அணிகலனாய்த்
தன்னன்பைப் பொழிகின்ற தாய்தனக்கோர் உவமையிலை

(நாற்சீரடி இரண்டு அம்போதரங்கம்)
யாதொரு துயரும் எனைநெருங் காமல்
காதலி னால்பொழி கனியுளங் கொண்டவள்;
ஆதர வாக அணைத்துக் காத்துச்
சாதனைச் சிகரம் தொட்டிடச் செய்பவள் 

(நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம்)
மழலை மொழிதனில் மற்றவை மறப்பவள்;
மழலை மொழிக்கே மற்றவை துறப்பவள்;
நிழலாய் நிதமும் நின்று காப்பவள்;
நிழலை உண்மை நிலைக்குநேர் விப்பவள்

(முச்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம்)
பொறுமையின் சிகரம் தாய்;
புனிதத்தின் உறைவிடம் தாய்;
திறமையின் பிறப்பிடம் தாய்;
திகழ்குணம் தருபவள் தாய்

(இருசீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்)
அன்பும் அவள்;
பண்பும் அவள்;
இன்பும் அவள்;
நண்பும் அவள்;
உலகும் அவள்;
உயிரும் அவள்;
கலையும் அவள்;
கவினும் அவள்

(தனிச்சொல்)
ஆதலின்,

(சுரிதகம்)
போற்றத் தகுந்த புனித குணம்;பெறும்
பேற்றில் பெருமைப் பேறது; பொறுமை;
தன்னல மில்லாத் தவமும் அன்புங்கொள்
தாய்மைக் குணத்தைப் போற்றித்
தாய்மன முணர்ந்து தொண்டுசெய் வோமே!
                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

முகநூல் குழுமம் - "பைந்தமிழ்ச் சோலை" நடத்திய கவியரங்கத்தில் பங்கேற்க எழுதிய பாடல் 

Jan 12, 2016

எம் தங்கச்சியே! எம் தம் கச்சி யேகம்ப!

கலிவிருத்தம் 

எந்தங் கச்சியே கம்ப வமுதச் 
சந்தம் பருகுயர் ஞானத் தமிழ்ச்சம் 
பந்தம் பெறுகுவாய் மகிழ்வா மஃதே

எந்த வொன்றும னதனுக் கிணையோ?
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

கைக்கிளை

குறளடி வஞ்சிப்பா

உரையாதுறை பெருங்காதலும்
நிலையாநிலை யிருகால்களும் 
வருத்தந்தனைப் பெருக்கஞ்செயும்
பொருத்தங்கொள வுறக்கந்தொலைத்
தினியாதிய துயராகிடும்
நிலையொடு
வாழ்ந்தி ருக்கும் மனனே
தாழ்ந்தி ராதே தனிச்சுகந் தானே!
     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jan 11, 2016

கைக்கிளை

தரவு கொச்சகக் கலிப்பா

சொல்லாத காதலும் நில்லாத கால்களும்
சோகத்தைச் சொந்தமெனச் சேர்த்திருக்கும் அந்தமென
எந்நாளும் எண்ணாது இன்னாளும் இன்னாது
இன்னாதி யானாலும் எதிர்ப்பதமாய் வாணாளும்
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jan 10, 2016

அன்புச் சகோதர! - அப்பு கார்த்திகேயன்

நிலைமண்டில ஆசிரியப்பா

என்றன்  நண்ப!  என்றன் சகோதர! 
என்னுளங் கொண்ட இனியசொல் லாள! 
என்னுளம் நிறையும் இன்பத் தாலே
உன்சொல் கேட்க உன்முகம் பார்க்க! 
பன்னெடுங் காலம் பாருனைப் போற்ற 
கன்னல் கொஞ்சும் கவிச்சொல் மொழியொடு
நன்னலம் பொருந்து மனமெய் கொண்டு
அன்புச் சகோதர வாழ்க! வாழ்க!!  

              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

24/11/2009

Jan 7, 2016

இரவி காந்த்

நிலைமண்டில ஆசிரியப்பா

'தலைவன்'  என்றனை!  எண்ணிப்  பார்க்கின் 
தலைவன்  நீதான்!  தனித்திறம்  பெற்ற 
உயர்பண்  பாளா!  உணர்வுக்குள்  உறைபவா!
துயரெலாம்  தொலையும்  துணைவந்  தால்நீ!  
சூரிய  னைக்கவர்  சுந்தர  மணியே! 
காரியம்  கண்ணெனக்  கொண்டவன்  நீயே!
எத்தகு  சூழலும்   இனிமைய  தாக
வித்தகா!  உன்னால்  மாற்றம்  பெறுமே!
உன்றன்  ஒருமொழி  விளைக்கும்  புதுமை 
நன்றென  நானே  உணர்ந்துள்  ளேனதை
உன்நா  உதிர்த்த  ஒவ்வொரு  மொழியும் 
என்னுள்  ஊக்கம்  விளைத்ததும்  உண்மை 
எண்ணங்கள்  இன்னும்  வளரவும்  அவைபல
எண்ணங்கள்  வளர்க்கவும்  வாழ்த்துகின்  றேனே!    

                                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

12/03/2009

பிரியா விடை - வெங்கடேசன் தமிழ்வாணன்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தமிழாளும் ஒருவீரன் தனைச்சந் தித்தேன்
   தம்முணர்வுள் கலந்தோடும் தமிழ்வந் தித்தேன்
தமிழ்வாணன் எனவேதான் எண்ணிக் கொண்டேன்
   தமிழூற்றை உன்மொழியில் மகிழ்ந்து கண்டேன்
உமியாக என்னுள்ளம் கொண்ட யாவும்
   உதறிடவே நிந்திப்பாய் என்றன் நண்பா!
கமிப்பேனோ எனைவிட்டு நீங்கு கின்றாய்!
   காண்பதினி எப்போது நவிலு வாயே!

உள்ளத்துள் உயரெண்ணம் பலவா றாக
    உயர்த்திடவே நடைபோடு கிறத வற்றைத்
தெள்ளறிவால் முறைப்படுத்தித் தேர்க; செய்து
     சாதிக்க வாழ்த்துகிறேன் வாணாள் எல்லாம்
வெள்ளம்போல் பேரின்பம் பெற்றி ருக்க
     உளமாற வாழ்த்துகிறேன் எந்நா ளும்மென்
உள்ளத்தில் பச்சைமரத் தாணி போன்றே
     ஊடுருவி உள்ளாயை நீங்கு வேனோ?
                            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தீபாவளி நல்வாழ்த்துகள்

கலிவிருத்தம்

தின்மைகள் நீக்கிடுந் தீபா வளியில்
புன்மைகள் அகன்று புதுப்பொலி வுறவும்
நன்மைகள் நாளும் நாடி வரவும் 
தென்னவன் இவனின் திருநாள் வாழ்த்துகள்!
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

17/10/2009

இராஜகுரு - பிறந்தநாள் வாழ்த்துகள்

நேரிசை வெண்பா

ஏழெட்டு நாட்டவரும் ஏற்றம்பெற் றாட்சிசெய
ஊழொட்டு வல்வினைகள் ஓடிடுமே - ஏழெட்டில் 
தோன்றியவா! தென்னவனே! நின்னெண்ணஞ்  சொற்செயலால்
சான்றெனவே வாழ்கபல் லாண்டு!
                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

22/08/2009