Jan 7, 2016

பிரியா விடை - வெங்கடேசன் தமிழ்வாணன்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தமிழாளும் ஒருவீரன் தனைச்சந் தித்தேன்
   தம்முணர்வுள் கலந்தோடும் தமிழ்வந் தித்தேன்
தமிழ்வாணன் எனவேதான் எண்ணிக் கொண்டேன்
   தமிழூற்றை உன்மொழியில் மகிழ்ந்து கண்டேன்
உமியாக என்னுள்ளம் கொண்ட யாவும்
   உதறிடவே நிந்திப்பாய் என்றன் நண்பா!
கமிப்பேனோ எனைவிட்டு நீங்கு கின்றாய்!
   காண்பதினி எப்போது நவிலு வாயே!

உள்ளத்துள் உயரெண்ணம் பலவா றாக
    உயர்த்திடவே நடைபோடு கிறத வற்றைத்
தெள்ளறிவால் முறைப்படுத்தித் தேர்க; செய்து
     சாதிக்க வாழ்த்துகிறேன் வாணாள் எல்லாம்
வெள்ளம்போல் பேரின்பம் பெற்றி ருக்க
     உளமாற வாழ்த்துகிறேன் எந்நா ளும்மென்
உள்ளத்தில் பச்சைமரத் தாணி போன்றே
     ஊடுருவி உள்ளாயை நீங்கு வேனோ?
                            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment