Jan 21, 2016

போற்றப்பட வேண்டியது - தாய்மை

(தமிழ் வாழ்த்து)
மாறாத பேரின்பம் மனஞ்சேர வெனையாளும்
ஆறாகப் பேரருவித் தேராகத் தேருள்ளப்
பேறாகப் பாவலர்தம் பாவாக நாவாகக்
கூறாக வுயிர்தன்னுள் குடிகொள்ளும் தமிழ்வாழி!

(அவையடக்கம், தலைமைக்கு வாழ்த்து)
கற்றபெ ருந்தகை! முற்றுமு ணர்ந்திடு
நற்றவஞ் சேர்கவி! நற்றுணை யாகுக! 
சிற்றறி வுள்ளவன் குற்றங்கள் பொறுத்துயர்
கற்றலு ரந்தருங் கவிஞரே! வாழிய!

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
(தரவு)
ஆற்றலுளங் கொள்ளவரும் ஆதரவாய் அங்கிருந்தே
ஏற்றவொரு தெளிவினையும் எண்ணத்தே விதைத்துயிர்த்தே
ஆற்றுதலுக் குரியதொரு ஆற்றலையும் அதுதளர்ந்தால்
ஆற்றுதலும் அந்தவுளம் அடைந்ததுயர் அனைத்தினையும் 
ஊற்றெனமுன் வந்துதவும் உயர்பண்பால் மேலோங்கி
போற்றுதலுக் குரித்தான பொன்மனங்கொள் தாயவளே!

(தாழிசை)
கருசுமந்து கருதாத கருத்தெல்லாம் மிகச்சுமந்து
பெருதுயர்ம றந்துபெறும் பிஞ்சுள்ளக் கொஞ்சலுக்காய்
ஒருபத்துத் திங்கடவத்(து) உழன்றுதரந் தொட்டுமகிழ்ந்(து)
உருவாக்கும் பெரும்பிறவி உயர்தாய்க்கோர் உவமையிலை

பிள்ளைதனக் காகவந்தப் பிறைநிலவைப் புவிக்கிழுத்துத்
தெள்ளமுதந் தனையூட்டித் தென்றலெனச் சீராட்டிக்
கொள்ளமனம் அருங்கதைகள் கூறிநலம் பேணியுல(கு)
உள்ளதென வாழ்கின்ற உயர்தாய்க்கோர் உவமையிலை

தன்னலத்தைக் கருதாத தன்னிகரில் தனிப்பிறவி!
தன்மகவே உலகமெனத் தாங்கியுளம் மிகமகிழ்ந்து
தன்னிறைவு பெறுகின்ற தவவாழ்க்கைக்(கு) அணிகலனாய்த்
தன்னன்பைப் பொழிகின்ற தாய்தனக்கோர் உவமையிலை

(நாற்சீரடி இரண்டு அம்போதரங்கம்)
யாதொரு துயரும் எனைநெருங் காமல்
காதலி னால்பொழி கனியுளங் கொண்டவள்;
ஆதர வாக அணைத்துக் காத்துச்
சாதனைச் சிகரம் தொட்டிடச் செய்பவள் 

(நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம்)
மழலை மொழிதனில் மற்றவை மறப்பவள்;
மழலை மொழிக்கே மற்றவை துறப்பவள்;
நிழலாய் நிதமும் நின்று காப்பவள்;
நிழலை உண்மை நிலைக்குநேர் விப்பவள்

(முச்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம்)
பொறுமையின் சிகரம் தாய்;
புனிதத்தின் உறைவிடம் தாய்;
திறமையின் பிறப்பிடம் தாய்;
திகழ்குணம் தருபவள் தாய்

(இருசீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்)
அன்பும் அவள்;
பண்பும் அவள்;
இன்பும் அவள்;
நண்பும் அவள்;
உலகும் அவள்;
உயிரும் அவள்;
கலையும் அவள்;
கவினும் அவள்

(தனிச்சொல்)
ஆதலின்,

(சுரிதகம்)
போற்றத் தகுந்த புனித குணம்;பெறும்
பேற்றில் பெருமைப் பேறது; பொறுமை;
தன்னல மில்லாத் தவமும் அன்புங்கொள்
தாய்மைக் குணத்தைப் போற்றித்
தாய்மன முணர்ந்து தொண்டுசெய் வோமே!
                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

முகநூல் குழுமம் - "பைந்தமிழ்ச் சோலை" நடத்திய கவியரங்கத்தில் பங்கேற்க எழுதிய பாடல் 

No comments:

Post a Comment