May 26, 2016

திருமண விழா அழைப்பு ஓலை

(நேரிசை வெண்பா)
வாழிய வையகம் வாழிய செந்தமிழ்
வாழிய ஞாயிறு மாமதி - வாழிய
கோள்களும் மீன்களும் கொள்கை உலவிட
ஆள்தவர் ஆள்க அறம்                                                              1


(நேரிசை ஆசிரியப்பா)
அழகன் முருகன் அருள்மழை பொழிக
தழைக்கச் செய்குல சாமிகள் வாழ்க
பருவத மாமலை தருவளம் திகழும்
பருவத இராசன் குலத்தே நிகழும்
திருமண விழாவிது தேர்நாள்
வருவது பின்னே அறிவீர் தாமே.                                              2


(சந்தக் கலிவிருத்தம்)
திருவள்ளுவ ருள(ம்)வாழ்ந்திடு திகழீரிரு வைந்நூற்(று)
ஒருநாற்பது பின்னேழென ஒளிராண்டினி லொன்றி
வருதுன்முகி எனுவெம்முக வைகாசியி னான்கைந்(து)
இருமூன்றென வறிவன்புத னியனாளது திருநாள்                  3


புலர்திரளொளி புனர்வசுவது புரிவினையென நேர்நில்
நிலவதுவளர் பிறைநான்கென நிகழ்நாளது சேர்நில்
இலங்காங்கில வாண்டுரையென ஈராயிரத் தீரெட்(டு)
உலகோருளம் கொளும்நாள்எது? ஜூன்திங்களில் எட்டு        4


அணிசேர்கதிர் அகிலந்தனை அடியொற்றிடுங் காலை
மணிநெற்கதிர் வருதலையென மணந்திடுமரு வேளை
மணியாறதை அடித்தேவரு மவ்வொன்றரை மிதுனம்
பணியேறிடுங் கனிநாளதே அருவேளைய தென்று                 5


(குறளடி வஞ்சிப்பா)
அஞ்சிலொன்றுதீ அவ்வூராம்
நெஞ்சிலொன்றிட நேர்வீடாம்
திருவண்ணாமலை மாவட்டம்
திருவிளங்கிடு தென்மாதி
மங்கலந்தனில் வாழ்ந்திருந்த
நாட்டுவைத்தியர் சோதிடரென
நாட்டிடுபுகழ் நல்வேந்தர்
தெய்வத்திரு குமாரசாமி
சின்னம்மாள் தம்மகனார்
பள்ளிகொண்டாப் பட்டில்வாழ்
நற்சோதிடர் நாட்டுவைத்தியர்
பொற்சிலம்பு நடனத்துடன்
நல்லிசையுல(கு) அறிபம்பை
தொல்தெருக்கூத் தென்றுபல
கலைவித்தகர் சேகர்தன்றுணை
பூமாதேவி இவர்தம்முடை
இளையமகனாம் தமிழகழ்வனாம்
சுப்பிரமணி
என்னும் திருவளர் செல்வன்
மன்னும் தமிழகழ் மனத்தே ரினனே!                                       6


விழிமாநகர் விழுப்புரம்தனில்
எழிலாய்நிலும் ஓரூராம்
மேல்மலையனூர் தனில்வாழும்
ஆல்போல்குலந் தழைத்திடவே
அருள்கொடையங் காளம்மன்
திருக்கோயிலின் முன்னாள்அறங்
காவலர்எனப் புகழ்கொண்ட
சுப்பிரமணி பூசாரி
அவர்தம்துணை ஆண்டாள்
அம்மாள்இவர் தம்புதல்வர்
அரும்வாணிகர் கைதேர்ந்த
சமையற்கலை யாளரவர்
பம்பைதனை இசைக்கின்ற
பல்கலையறி பூசாரி
பாலுவென்பார் அவர்துணைவி
புஷ்பாஇவர் தம்முடைய
இளையமக ளாம்நகையாள்
ஆனந்தி
என்னும் திருவளர் செல்வி
மன்னும் மதிவத னத்தாள் தானே!                                         7


(நேரிசை ஆசிரியப்பா)
அவரை
இருவீட் டினரும் ஒருங்கே கூடிச்
சுற்றமும் நட்பும் சூழ நின்று
மேல்மலை யனூரில் சிவனருள் திருமண
மண்டபந் தன்னில் மணவணி காண
முறைமை தழுவி முடிவு செய்தனர்
அவ்வழித் தாங்கள் தங்கள் சுற்றமும்
செவ்வழி நட்பும் சேர்ந்திட வந்து
மணவணி காணும் மக்களைக் கல்வி
அறிவு வீரம் ஆற்றல் வெற்றி
அழகு நுகர்ச்சி ஆயுள் நல்லூழ்
இளமைநோ யின்மை நன்மக்கள் நெல்பொன்
பெருமை புகழெனும் பேறுகள் பதினாறு
பெற்றுப் பெருவாழ்வு வாழ்கென
உற்ற மகிழ்வின் உளம்வாழ்த் துகவே!                                  8
                      -  தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 13, 2016

காவடிச் சிந்து

அன்புச்செல் லத்தாயே போற்றி! - அம்மா
ஆண்டவன் என்றேதான் தோற்றிச் - சொல்லா
அரும்பாடெனுந் துயர்யாவையும்
துரும்பாக்கிடும் பெருந்தாயவள்
அன்பே - அவள் - பண்பே


இன்பத்தே எந்நாளும் நானும் - நலம்
ஈவதே உன்பால்நான் காணும் - பெரும்
ஈடிணையில் பேறதனில்
பாடிடுவன் ஆடிடுவன்
இணங்கி - உனை - வணங்கி

                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 12, 2016

முத்தந்தரச் சொற்றந்தனை

சந்தக் கலிவிருத்தம்

முற்றந்தர முற்றந்தர முத்தந்தர முத்தே

சொற்றந்தனை சட்டென்றெனைத் தொக்குங்கலை யுற்றே
மற்றொன்றினை பற்றென்றவை வற்றென்றனை எற்றே
சுற்றங்கலை கற்றங்கலை தொற்றங்குல கற்றே
                                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

காவடிச் சிந்து/ கா வடிசிந்து

வந்தவினை நொந்துமிக ஓடும் - தமிழ்
வாழ்ந்திருக்கும் இந்தவுல கோடும் - கடல்
வந்திழுத்துப் போயிடினும் செந்தமிழச் சங்கதனை
வழங்கும் அது முழங்கும்.


எந்தமிழென்(று) ஏத்துகிற வரதர் - பணி
ஏற்றவரும் பைந்தமிழ மரபர் - அவர்
ஏற்றிவைக்கும் தீபவொளி போற்றிவைக்கும் தீந்தமிழை
எங்கும் வளம் பொங்கும்!
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்