Sep 17, 2017

பிறந்தநாள் வாழ்த்துகள் – சௌரவ் (16.09.2017)

நிலைமண்டில ஆசிரியப்பா

நேர்வளர் நெறிமுறை நித்தம் கைக்கொள்
சேர்வளச் செல்வர் 'சுதர்சன்' வாழ்க
கூர்மதி நுட்பக் கொள்கைத் தொழில்வளர்
ஆர்வளப் பன்மொழி 'அனுராதா' வாழ்க
இறையருள் இனிமை ஏற்றம் வெற்றி
நிறைய நாளும் நின்மொழி உணர்ந்து
குறையா வளத்தொடு குவலயம் வாழ
இறையென வரூஉம் 'சௌரவ்' வாழ்க
இன்மொழிச் சொல்ல! இன்றுநீ பிறந்த
நன்னாள்! ஓராண்டு நானிலம் கண்ட                             10

பொன்னாள்! வாழ்க பல்லாண்(டு) இந்நிலம்
உன்னேர் வழிசெல வாழ்த்துவம் யாமே!
பொன்னே! மணியே! புத்தொளி முத்தே!
தன்னேர் இல்லாத் தனிப்பெருந் தலைவ!
இன்னும் கேட்பாய்! இந்நாள் உன்றன்
இன்மொழித் தோழர் யாரென்(று) அறிவாய்!
சிந்தும் செங்கழல் சீரிய ஒலிசேர்
சந்தம் கொஞ்சக் கொஞ்சம் நின்று
முந்தும் முயலும் தவிக்கும் முயன்று
வந்துன் கழலைக் கட்டிக் கொள்ளும்                             20

சுத்திச் சுத்தி வரூஉம் பூனை
மெத்த வந்து பக்கம் அமரும்
முத்துச் சொல்லில் முடிந்து வைத்த
மொத்தம் கேட்க முயலும் காக்கை
நெல்மணி தருகென நேயத் தோடு
நல்மணிக் குருவி நாடி வருமே
சொல்மணிக் குயிலுன் மழலை கேட்டே
சொல்மறந் துன்றன் தோழன் ஆகும்
கன்னம் கொத்திக் கன்னல் மொழியை
அன்னக் கிளியும் அறியும் அறியும்                                 30

அன்னம் உன்னிடம் மென்னடை பயிலச்
சின்ன இடையை அசைக்கும் அசைக்கும்
மழலைச் செல்வ! மனமகிழ் மணிய!
கழலடி ஒலியில் கனிந்தி ருக்கக்
குழலும் விரும்பும் குரலைக் கேட்டுத்
தழைக்கும் கழையும் தான்மகிழ் வுற்றே!
கல்வி ஆற்றல் வெற்றி துணிவு
நல்லூழ் இளமை நலம்புகழ் அறிவு
நெல்பொன் வாழ்நாள் நுகர்ச்சி மக்கள்
சொல்லெழில் பொறுமை எனும்பதி னாறு               40
பெற்றுப் பெருவாழ்வு வாழ்கபல் லாண்டே!

                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment