Dec 10, 2018

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ… - பகுதி 1

தமிழகழ்வன் சுப்பிரமணி

இலக்கிய வகையால் சொற்களை நான்கு வகையாகப் பிரிப்பர். அவையாவன: இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல். இவற்றைச் செய்யுள் ஈட்டச் சொற்கள் எனத் தொல்காப்பியம் கூறுகிறது.

1. வடசொற்கள் தமிழுக்குவரும்போதுஎப்படிஎழுதவேண்டும்?

வடசொற்களைத் தமிழில் எழுதும்போது இரண்டு வகையான முறைகளைக் கையாளலாம்.

தற்சமம்: தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்துகளால் அமைந்த வடசொற்களை அப்படியே தமிழில் எழுதிக்கொள்ளலாம். எ.கா. கமலம், காரணம்.

தற்பவம்: தமிழில் இல்லாத வடவெழுத்துகளால் அமைந்த சொற்களை, வடவெழுத்துகளை நீக்கித் தமிழின் இயல்புக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். எ.கா. ஹரிஹரன் – அரியரன்.

இவ்வாறு எழுதப்படும் சொற்களைத் தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்கள் எனலாம். வடசொற்கள் மட்டுமன்றிப் பிறமொழிச் சொற்களுக்கும் இணையான தமிழ்ச்சொல் இல்லாதபோது அம்மொழிச் சொற்களையும் அவ்வாறே தமிழ்ப்படுத்துதல் சரியெனலாம்.

2. தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்கள் தமிழுக்குத் தேவையா?

தேவையில்லை. இணையான தமிழ்ச்சொற்களை எடுத்தாளுதலே சிறப்பு. ஆனாலும் வேற்றுமொழிச் சொற்கள் மக்களின் பயன்பாட்டில் தவிர்க்க முடியாமல் இயல்பாய் உள்நுழையும். எது தமிழ்ச்சொல்? எது தமிழ்ப்படுத்தப்பட்ட சொல்? என்ற தெளிவிருந்தால் போதும்.

3. எந்தெந்த இலக்கணப் பகுதிகள் சரியான தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்களை உருவாக்க உதவும்?

• மெய்ம்மயக்கம்
• மொழிமுதல் எழுத்துகள்
• மொழியிறுதி எழுத்துகள்
• வடசொல்லைத் தமிழ்ச் சொல்லாய் மாற்ற நன்னூல் கூறும் வடசொல்லாக்கம்.

4. மெய்ம்மயக்கம் என்றால்என்ன?

மயக்கம் என்பதற்கு இணக்கம் எனப்பொருள் கொள்ளலாம். மெய்யெழுத்துகளோடு எந்தெந்த மெய்யெழுத்துகள் இணங்கிப் பக்கத்தில் வந்துசேரும் எனக்கூறுவதே மெய்ம்மயக்கம் ஆகும்.

எடுத்துக்காட்டாக,

அம்மா - அ+ம்+ம்+ஆ – இதில் மகரமெய்யை அடுத்து ஒருமகரமெய் வந்துள்ளது.

தங்கை - த்+அ+ங்+க்+ஐ - இதில்ஙகரமெய்யைஅடுத்துஅதன்இனமானககரமெய்வந்துள்ளது.

இவ்வாறு ஒருமெய்யை அடுத்து அதேமெய்யெழுத்து வருவது உடனிலை மெய்ம்மயக்கம் எனப்படும். ஒருமெய்யை அடுத்து வேறுஒரு மெய்யெழுத்து வருவது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

மெய்ய்மயக்கத்தைப் பின்வரும் அட்டவணை மூலம் அறியலாம்.

க் - க்–பக்கம்
ச் - ச் - பச்சை
த் - த் - பத்து
ப் - ப் – உப்பு
ட் - ட்,க்,ச்,ப் - தட்டு,உட்கு,வெட்சி,நுட்பம்
ற் - ற்,க்,ச்,ப் - கற்றல்,கற்க,பொற்சபை,வெற்பு

மேற்கண்ட வல்லின எழுத்துகளில் க, ச, த, ப ஆகிய நான்கு மெய்களும் தன்னை அடுத்து வேறொரு மெய்யெழுத்தை வரவிடாது. டகர, றகர மெய்கள் தன்னை அடுத்துத் தன்னையும் க, ச, ப ஆகிய மூன்றையும் மட்டுமே இணங்கி ஏற்றுக்கொள்ளும். ஆக, இவ்விதியின்படி, தற்போது வழங்கிவரும் பக்தி, சக்தி, சப்தம், சகாப்தம், ரத்னா, ரத்நா – இவையெல்லாம் தமிழ்ச்சொற்கள் அல்ல. அவை பத்தி, சத்தி, சத்தம், சகாத்தம், இரத்தினம் எனத் தமிழ்ப்படுத்தப்பட்டுப் பயன்படுத்தப்பட வேண்டியவை. பெட்ரோல் என்று தமிழில் எழுதுவதும் தவறு.

இவ்வாறே மெல்லின, இடையின எழுத்துகளோடு மயங்கும் மெய்யெழுத்துகளுக்கான பட்டியலைக் கீழேகாண்க.

ங–ங, க- அங்ஙனம், திங்கள்
ஞ–ஞ,ச,ய- மஞ்ஞை, மஞ்சள், உரிஞ்யாது
ண–ண,ட,க,ச,ஞ,ப,ம,ய,வ- வண்ணம், தண்டு, கண்கள், வெண்சாந்து, வெண்ஞாண்,வெண்பா, வெண்மை, மண்யாது, மண்வளம்
ந–ந,த,ய- செந்நா, வெந்தயம், பொருந்யாது
ம–ம,ப,ய,வ- அம்மி, அம்பு, திரும்யாது, நிலம்வலிது
ன–ன,ற,க,ச,ஞ,ப,ம,ய,வ - கன்னி, கன்று, என்க, இன்சுவை, இன்பம், இன்மை
ய–ய,க,ச,த,ப,ஞ,ந,ம,வ,ங - வெய்யோன், பொய்கை, செய்தான், வேய்ந்தான், மெய்ம்மயக்கம், தெய்வம்
ர–க,ச,த,ப,ஞ,ந,ம,ய,வ,ங – ஆர்கலி, வார்சடை, நேர்த்தி, பார்ப்பு
ல–ல,க,ச,ப,ய,வ- வெல்லம், வெல்க, வல்சி, கால்வாய்
வ–வ,ய- பவ்வம்,தெவ்யாது
ழ–க,ச,த,ப,ங,ஞ,ந,ம,ய,வ–வாழ்க, போழ்து, தாழ்பு, வாழ்ந்தான், அகழ்வான்
ள–ள,க,ச,ப,ய,வ–பள்ளம், கொள்கை, கள்வன்

இவற்றில் ரகரமும், ழகரமும் தன்னோடு இணங்காது. எனவே செர்ரி, மிர்ரர் – இவை தமிழின் ஒலிப்பு இயல்புக்கு மாறானவை.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் தனிச்சொல் மட்டுமன்றி, இருசொற்கள் புணரும்போதும் இதேவிதிகளைப் பின்பற்றுதலைப் பார்க்கலாம்.

(தொடரும்)

Oct 29, 2018

காலக் கணிதம்

தமிழகழ்வன்சுப்பிரமணி

தமிழர்தம் காலக் கணிதம் எங்கே போனது?

ஆண்டுப் பெயர்கள் யாவும் வடமொழிச் சொற்களாய் இருக்கின்றன. அவை மட்டுமன்றி, அவற்றோடு தொடர்புடைய சோதிடக் கணக்குகள் யாவற்றையும் அலசிப் பாருங்கள். தமிழர் காட்டும் பெரும்பொழுது, சிறுபொழுது என்பன தவிர, எவையெல்லாம் சோதிடம் என்ற பெயரில் திணிக்கப்பட்டிருக்கின்றன எனத் தெரியும்.

வடசொல்
தமிழில் மீன்களின் பெயர்
தமிழில் திங்களின் பெயர்
சைத்ரம்
சித்திரை
சித்திரை
வைசாகம்
விசாகம்
வைகாசி
ஜேஷ்டம்
கேட்டை, மூலம்
ஆனி
ஆஷாடம்
பூராடம்
ஆடி
சிராவணம்
திருவோணம், அவிட்டம்
ஆவணி
பாத்ரபதம்
பூரட்டாதி
புரட்டாசி
ஆஸ்வீனம்
அஸ்வினி
ஐப்பசி
கார்த்தீகம்
கார்த்திகை
கார்த்திகை
ஆக்ரஹாயனம்
மிருகசீரிஷம்
மார்கழி
பௌஷம்
பூசம்
தை
மாகம்
மகம்
மாசி
பால்குணம்
உத்திரம்
பங்குனி

என்ற வரிசையில் சித்திரை, வைகாசி என்ற சொற்களுக்கெல்லாம், தமிழில் பொருள் சொல்ல முடியுமா? அவை தமிழ்ப்பெயர்களே என்று சாதிப்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? தமிழ்ப்படுத்தப்பட்ட பெயர்களா? தூய தமிழ்ப்பெயர்களா? என்ற ஐயத்தை ஆதாரத்தோடு விளக்குவார் யார்? அல்லது தமிழிலிருந்து அந்தச் சொற்கள் சென்று வடமொழிக்கேற்ப மாற்றம் கொண்டன என்றால், அவற்றின் தமிழ்ச்சொற்களின் வேரை ஆராய்ந்து சொல்பவர் யார்?

பின்வரும் பட்டியலை உற்று நோக்குக.

அஷ்டாங்கத்தில் முதற்பிரிவு :திரியாங்க விவரம்
· முதலாவது அங்கம் : சதுர்யுகங்கள் (4) – கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம்
· இரண்டாவது அங்கம் : வருட நாமங்கள் (60) - பிரபவ முதல அக்ஷய வரை
· மூன்றாவது அங்கம் : மாத நாமங்கள் (12) - இவைதான் சித்திரை முதல் பங்குனி வரையிலான பெயர்கள்

இரண்டாவது பிரிவு: பஞ்சாங்க விவரம்
· முதலாவது திதி நாமங்கள் (15): பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை அல்லது பௌர்ணமி வரை
· இரண்டாவது வார நாமங்களாவன (7): ஞாயிறு முதல் சனி வரை
· மூன்றாவது நட்சத்திரங்களாவன (27): அசுவினி முதல் ரேவதி வரை
· நான்காவது அங்கம் யோக நாமங்களாவன (27): விஷ்கம்பம் முதல் வைதிருதி வரை
· ஐந்தாவது கரணமும் அவற்றின் உருவ நாமங்களும் (11): பவம் – சிங்கம், பாலவம் – புலி, கௌலவம் – பன்றி, தைதுளை – கழுதை, கரசை – யானை, வனகை – எருது, பத்திரை – கோழி, சகுனி – காக்கை, சதுஷ்பாதம் – நாய், நாகவம் – பாம்பு, கிமிஸ்துக்கினம் – புழு

மேலும்
· நவக்கிரகங்கள் – சூரியன் முதல் இராகு, கேது வரை
· பன்னிரு இராசிகள் – மேஷம் முதல் மீனம் வரை
· சப்த வருஷங்கள் – பரதம், கிம்புருடம், அரி, இளாவிருதம், ரம்மியதம், ஐரணம், குரு
· எட்டு ஆப்தங்கள் – பாண்டவாப்தம், விக்கிரமாதித்தாப்தம், சாலிவாகன சகாப்தம், போஜராஜாப்தம், கொல்லமாப்தம், ராமதேவாப்தம், பிரதாப ருத்ராயாப்தம்
· இரண்டு அயனங்கள் – உத்தராயனம், தக்ஷணாயனம்
· சிறுபொழுதுகள் – மாலை, ஜாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு
· பெரும்பொழுது இருதுக்கள் – வசந்தம், கிரீஷ்மம், வர்ஷம், சரத், ஹேமந்தம், சசிரம்.
· சூரியன் வீதி மாதங்கள் – மேஷ வீதி, ரிஷப வீதி, மிதுன வீதி
· சங்கற்ப மாதங்கள் – சைத்திரம் முதல் பால்குனம் வரை
· பக்ஷம் இரண்டு – பூர்வ பக்ஷம், அமர பக்ஷம்; சுக்கில பக்ஷம், கிருஷ்ண பக்ஷம்; வளர்பிறை, தேய்பிறை.
· நாளின் பகற்கூறு – பூர்வான்னம், பாரான்னம், மத்தியான்னம், அபரான்னம், சாயான்னம்
· திரிவித இராசிப் புணர்ச்சிகள் – சரம், ஸ்திரம், உபயம்
· முக்குண வேளை – சாத்துவீகம், இராசதம், தாமதம் (ஸத்வ (ஸாத்வீகம்), ரஜோ (இராஜஸம்), தமோ (தாமஸம்))
· அமிர்தாதி யோகங்கள் – அமிர்தம், சித்தம், மரணம், பிரபலாரிஷ்டம்
· அனந்தாதி யோகங்கள் – 27 (அனந்தம் முதல் வர்த்தமானம் வரை)

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவும் வடசொற்களால் ஆனவையே. பல சொற்களுக்குத் தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்களைக் கொண்டு பயன்படுத்தியும், பல சொற்கள் அப்படியே வடசொற்களாலேயே எடுத்தாளப்பட்டும்இருக்கின்றன.

அவ்வளவு ஏன்?
· சிறுபொழுதுகள், பெரும்பொழுதுகளுக்குத் தமிழ்ப்பெயர்களிருக்க, அவற்றுக்கு வடசொற்களைத் தமிழில் வழக்கத்துக் கொண்டுவந்து அழைப்பானேன்?
· தமிழ் இலக்கியங்கள்கூடச் சொல்லாத பல்வேறு கணக்குகளைச்சோதிடம் என்ற பெயரில் புகுத்தியது ஏன்? அவை யாவற்றுக்கும் வடசொற் பெயர்களே இருப்பது ஏன்?

‘சோதிட கிரக சிந்தாமணி’ என்னும் நூல், தமிழ்ச்செய்யுளால் செய்யப்பட்ட சோதிட நூல். இதன் ஆசிரியர், முடிந்த அளவு வட சொற்களைத் தமிழ்ப்படுத்தி அரும்பாடுபட்டிருப்பது தெரிகிறது. இன்னும் பல வடசொற்களைத் தமிழ்ப்படுத்த விரும்பாமல், தமிழ்ப்படுத்தினால் அவற்றின் அடையாளம் தெரியாமல் போய்விடுமே என்ற அச்சத்தால், அப்படியே பயன்படுத்தி இருப்பதும் தெளிவாக விளங்குகிறது.

இன்றைய தமிழர் நாட்காட்டி, பஞ்சாங்கங்கள் கூறும் 27 நட்சத்திரங்களும், அந்தந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் மொழிமுதல் எழுத்துகளும் இங்கே காண்க.

நட்சத்திரம் - எழுத்துகள்
1. அசுபதி - சு, சே,சோ, ல
2. பரணி - லி, லு,லே,லோ
3. கிருத்திகை - அ, இ, உ, எ
4. ரோகிணி - ஒ, வ,வி, வு
5. மிருகசீரிஷம் - வே,வோ,கா, கி
6. திருவாதிரை - கு, க,ச, ஞ
7. புனர்பூசம் - கே,கோ,ஹ,ஹி
8. பூசம் - ஹூ,ஹே,ஹோ,ட
9. ஆயில்யம் - டி, டு,டே,டோ
10. மகம் - ம, மி,மு, மெ
11. பூரம் - மோ,ட, டி,டு
12. உத்திரம் - டே,டோ,ப, பி
13. அஸ்தம் - பூ, ஷ, ந, ட
14. சித்திரை - பே,போ, ர,ரி
15. சுவாதி - ரு, ரே,ரோ, த
16. விசாகம் - தி, து,தே,தோ
17. அனுஷம் - ந, நி,நு, நே
18. கேட்டை - நோ,ய, இ,பூ
19. மூலம் - யே,யோ,ப, பி
20. பூராடம் - பூ, த,ப, டா
21. உத்திராடம் - பே,போ,ஜ, ஜி
22. திருவோணம் - ஜூ,ஜே,ஜோ,கா
23. அவிட்டம் - க, கீ,கு, கூ
24. சதயம் - கோ,ஸ,ஸீ,ஸூ
25. பூரட்டாதி - ஸே,ஸோ,தா, தீ
26. உத்திரட்டாதி - து,ஞ,ச,ஸ்ரீ
27. ரேவதி - தே ,தோ, ச,சி

இவையெல்லாம் வடமொழியின் தாக்கம் என்பதைச் சொல்லித்தான் புரிய வேண்டுமா? இவற்றையெல்லாம் எளிதில் ஏற்றுக்கொள்ளும் இக்காலத் தமிழர்கள், எங்கே தமிழ்ப்பெயர்களைத் தம் பிள்ளைகளுக்கு இடப் போகிறார்கள்?

தொல்காப்பியமும், நன்னூலும் எடுத்துச் சொன்ன, வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும் விதிகளுக்கு உட்பட்டு இந்நூல் பல சொற்களைத் தமிழ்ப்படுத்தி நமக்கு வழங்கி இருக்கிறது.குழந்தைகளுக்குப் பெயரிடும்போது, சோதிடத்தில் சொல்லப்படும் ஒவ்வொரு விண்மீன் கூட்டத்திற்கும் நந்நான்கு எழுத்துகளைக் கொடுத்து, மொழிமுதலாக வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால், அவற்றில் வடவெழுத்துகளும் கலந்திருப்பதனால், தமிழ் எழுத்துகளை மட்டுமே கொண்ட பட்டியலும் எழுந்துள்ளது.

அ, ஆ, இ, ஈ - கார்த்திகை
வ, வா, வி, வீ - ரோகணி
வெ, வே, வை, வௌ - மிருகசீரிடம்
கு, கூ - திருவாதிரை
கெ, கே, கை - புனர்பூசம்
கொ, கோ, கௌ - பூசம்
மெ, மே, மை - ஆயிலியம்
ம, மா, மி, மீ, மு, மூ - மகம்
மொ, மோ, மௌ - பூரம்
ப, பா, பி, பீ - உத்திரம்
பு, பூ - அஸ்தம்
பெ, பே, பை, பொ, போ, பௌ - சித்திரை
த, தா - சோதி
தி, தீ, து, தூ, தெ, தே, தை - விசாகம்
ந, நா, நி, நீ, நு, நூ - அனுஷம்
நெ, நே, நை - கேட்டை
யு, யூ - மூலம்
உ, ஊ, எ, ஏ, ஐ - பூராடம்
ஒ, ஓ, ஔ - உத்திராடம்
க, கா, கி, கீ - திருவோணம்
ஞ, ஞா, ஞி - அவிட்டம்
தொ, தோ, தௌ - சதயம்
நொ, நோ, நௌ - பூரட்டாதி
யா - உத்திரட்டாதி
ச, சா, சி, சீ - ரேவதி
சி, சூ, செ, சே, சை - அசுபதி
சொ, சோ, சௌ - பரணி

அம்முதலோர் நான்கதும் வவ்விரு நான்குள்ள துங்குவ்
   வாக விரண்டிரு மூன்று மெம்முதலாய் மூன்று
யம்முதலா றல்லதும் பந்நான் கிரண்டல்ல துந்தவ்
   வாக விரண்டே ழுநக ரத்ததுவா யாறு
நெம்முதலோர் மூன்றுயு யூவு கரமுத லைந்து
   நின்ற துமக்கவி னான்கு ஞம்முதலோர் மூன்றுந்
தொம்முதலோர் மூன்றது நொம்முதன் மூன்றும் யாவு
   சொல்வி னான்கைந்தொரு மூன்றறு மின்றொட் டுளதே

மேற்கண்ட பட்டியல், வடவெழுத்துகளைத் தவிர்ப்பதற்காகச் ‘சோதிட கிரக சிந்தாமணி’ என்னும் நூலால் பரிந்துரைக்கப்பட்டது.ஆக, இந்தக் கணக்குகள் எல்லாம் வடமொழியையே சார்ந்திருக்கத் தமிழர்தம் காலக்கணிதம் எங்கே போனது?

Oct 28, 2018

நல்லினி யாளே! நல்லினி யாளே! - இதழகல் நேரிசை ஆசிரியப்பா

நல்லினி யாளே! நல்லினி யாளே!
இரீஇ இரீஇ யென்னத் தேடித் 
திரீஇத் திரீஇ தேனீ யல்லேன் 
இஞ்சி யன்ன காரங் காட்டி
இதழகன் றாஅல் இயைதல்
ஆகா தாகா தங்கயற் கண்ணே!
                           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர் 

மனத்திட்பத்தை யறியவே! - வண்ணப்பா

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

தனத்தத் தத்த தனதனா 
     தனத்தத் தத்த தனதனா 

உனக்குட் பட்ட வெணமெலா(ம்)
     ஒழுக்கக் கட்டு முறையிலே
வனப்புக் குத்த வறலிலா
     வழிப்பட் டுற்ற வகையிலே
மனத்துத் தக்க செயலையே
     நடத்தித் திட்ப முறுகவே!
மனத்திற் பட்ட வலியெலா(ம்)
     மனத்திட் பத்தை யறியவே!

Oct 10, 2018

நல்லாசிரியர் திருப்பூர் பழனிச்சாமி ஐயா

திருப்பூர் நஞ்சப்பா மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி ஐயா அவர்கள் நல்லாசிரியர்  விருது பெற்றமைக்காக வாழ்த்து 


வெல்வேல் கைக்கொள் வேந்தன் என்னச்
சொல்வேல் செந்நா சோர்வு நீக்கக்
கல்வியும் ஒழுக்கமும் கற்பிக் கின்ற
உயர்திரு பழனிச் சாமி ஐயா
உயர்வழி காட்டும் ஒருபே ராளர்

அவர்
திருவிளங்கு பேரூர் திருப்பூர் தன்னில்
ஒருதனிச் சிறப்பின் ஓங்கிய பள்ளி
நஞ்சப்பா ஆண்கள் மேனிலைப் பள்ளி
ஆளும் தலைமை ஆசான் ஆவார்

அவர்
பாரத நாட்டின் பண்பைக் காக்கும்
வேரென விளங்கும் உயர்மா ணாக்கர்
ஆய அரும்பெரும் தூண்களைச் செதுக்கும்
பள்ளிகள் சிறக்கப் பண்பொடு கல்வி
ஊட்டி வளர்க்கும் உயர்ந்த ஆசிரியர்
தம்மைப் பாராட்டித் தனிச்சிறப்பு செய்யும்
அரசால் நல்லா சிரியர் விருது
பெற்றார் பெற்றார் பெருவாழ்வு வாழ்கெனக்

காற்றின் வழியே கடிதில் செல்லும்
தகவல் நுட்பம் வாய்கா லத்து
மெய்யே யன்றி மெய்ந்நிக ராகக்
கைகளைக் குலுக்கி வாழ்த்துகின் றேனே

இன்பமுறு மாணவா - சந்தக் குறட்டாழிசை

சந்தக் குறட்டாழிசை (மரபு மாமணி பாவலர் மா வரதராசனார் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது)

முந்து செந்தமிழை மும்மை அந்தமிழை 
      முன்னி இன்பமுறு மாணவா 
சந்து வந்தபிற மந்தை யென்னு மொழி 
       தங்க மென்ன மின லாகுமோ 

மயக்கங் கலக்கம் வேண்டா

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

கயவர்தம் கண்க ளுக்குக் 
       காழ்ப்புணர்வே பாடை கட்டும் 
மயக்கங்க லக்கம் வேண்டா 
        மாமணியே வாழ்க வாழ்க 
துயரங்கள் இல்லா வாழ்வு 
        சுவைக்காது தூண்டு கோலாய்த் 
துயரையே துணையாய்க் கொள்வோம் 
        துப்பாகத் தமிழைக் கொள்வோம் 

Oct 9, 2018

முயலுக்கு மூன்றேகால் - இன்னிசை வெண்பா

முயலுக்கு மூன்றேகால் மூழ்கியதால் முக்கால்
கயலுக்கும் காலெண்ணிக் காட்டாரா? நாட்டில்
அயலுக்குக் கானண்ணி ஆள்கின்றார் தத்தம்
முயலுக்கும் காலெண்ணின் மூன்று.
                            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

முயலுக்கு 3 +(1/4), நீரில் மூழ்கியதால் (3/4), அந்த (3/4), மீனுக்குக் கால் முளைக்கக் காரணமாயிற்று. அதன் கால்களை எண்ணிச் சொல்லும் அளவிற்கு நாடு வளர்ச்சி கண்டுவிட்டது.

பொய்ப்போர்வை போர்த்தியோரே!

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வாய்ச்சொல்லில் வீரங் காட்டும்
        வாள்வீசத் தெரியாக் கூட்டம்
ஆய்ந்தறியா மூடர்க் கூட்டம்
        ஐந்தறிவே ஆகும் கூட்டம்
காய்க்காத ஒன்றைக் காய்ந்து
        கனிந்ததெனக் காட்டுங் கூட்டம்
போய்த்தொலைவீர் போய்த்தொ லைவீர்
        பொய்ப்போர்வை போர்த்தி யோரே!
                              -  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தமிழ்க்குமரன் தமிழகழ்வன்

நேரிசை வெண்பா

முத்து நகைபொழி சித்திரச் செவ்வாய!
தித்திக்கப் பால்சுரந்து தின்பசிக்கு - முத்தி
தருநின் விரலின் கருணை வியந்தேன்
அருமைத் தமிழ்க்குமர னே.
                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

துயரந்தான் வாழ்வே மாதோ

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

துளியில்லா வானம் என்னின்
     துவண்டுவிடும் பூமி போலத்
தெளிவில்லா மமதை கொண்டால்
     தென்படுவ(து) ஒன்றும் இல்லை
கிளிப்பிள்ளை போலப் பேச்சு

     கிளைத்திருக்கக் கண்ட சிந்தை
துளிகூடச் சிந்திக் காதோ
     துயரந்தான் வாழ்வே மாதோ
                      
 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

இரேவதி ஆசிரியை - இரங்கற்பா (25.09.2018)

எம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை இரேவதி அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரங்கற்பா

ஆசுஇரியும் ஆசிரியை ஆர்வமுடன் பேசுமெங்கள்
மாசுஇரியும் மாமேதை மாணிக்கத் தேவதைஉன் 
பாசத்தை யாமறவோம் பண்பான இரேவதியார் 
பேசுமுகம் என்றினியாம் காண்போமோ காண்போமோ?           1

பட்டங்கள் பெற்றாலும் பகுத்தறிவு பெற்றாலும் 
சட்டங்கள் செய்தாலும் சரித்திரமே செய்தாலும் 
பட்டறிவு கற்பித்த பாசமிகு இரேவதியார் 
உள்தூணாய் இருப்பாரை உளமார வணங்குகிறேன்                      2

அருமையென்(று) உணர்ந்த எம்மை 
      அருமையென்(று) உலகம் போற்றப்
பெருமையெய் திடச்செய்(து) அன்பின் 
      பெருவழி தன்னில் காத்தே
இருளெனக் கிடந்த எல்லாம் 
       இரிந்திடச் செய்தாய் போற்றி
மருளெனப் பட்ட யாவும் 
       மருண்டிடச் செய்தாய் போற்றி                                                          3

எண்களும் எழுத்தும் சொல்லி 
      ஏற்றத்தை வாழ்வில் காட்டிப் 
பண்களில் நீதி சொல்லிப் 
      பாதையில் உண்மை சொல்லிக் 
கண்களில் வாழும் எங்கள் 
      கனிவான சோதி நீங்கள் 
கண்களில் நீரைக் காட்டிக் 
      கதறிடும் நிலையில் யாமே                                                                   4
                                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

கலையாத கனவுகள்

திருவள்ளுவராண்டு 2049 - புரட்டாசித் திங்கள் 21-ஆம் நாள் (07.10.2018) அன்று பைந்தமிழ்ச்சோலை முகநூல் குழுவின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை - தொடக்க விழா இனிதே நடைபெற்றது. அவ்விழாவில் கவியரங்கத்தில் கலந்துகொண்டு யான் மொழிந்த கவிதை
கவியரங்கக் கவிதை - கலையாத கனவுகள்
தமிழ் வாழ்த்து
செந்தமிழ்த் தாயே! சீர்வளர் சேயே!
அந்தமில் இன்பே! ஆழ்ந்தகழ் அன்பே!
சிந்தியல் தொன்மை சேர்புகழ் செம்மை!
வந்தனை செய்வோம் வாழிய ஆண்டே!                                                  1
பைந்தமிழ்ச் சோலை வாழ்த்து
நல்லதமிழ்ச் சோலையிது நாவாரப் பாடுமிது
சொல்லில்வளம் சேர்க்குமிது சோர்வின்றி உழைக்குமிது
பல்சுவையில் பாட்டிசைக்கும் பாவல்லோர் கூடலிது
பல்கலையாய்ப் பாவளர்க்கும் பைந்தமிழச் சோலையிதே!               2
பைந்தமிழ்ச் சோலை நிறுவுனர் மரபு மாமணி பாவலர் மா.வரதராசனார் வாழ்த்து
மாமணியே! மாமா மணியே! பைந்தமிழ்ப்
பாமணியே! பட்டென்(று) ஒளிரும் சுடரே!
தாமமணி தனிப்பெருஞ் செம்மலே! என்றினி
யாமணியப் பட்டங்கள் தாமளித்தாய் வாழியவே!                               3
பைந்தமிழ்ச் சோலை திருவண்ணாமலைக் கிளைத் தலைவர் முனைவர் அர. விவேகானந்தன் அவர்கள் வாழ்த்து
அஞ்சிறைகொள் தும்பியை அங்கையில் படைத்தளிக்கத்
தஞ்சிறைகொள் எண்ணமெல்லாம் தயங்காமல் எடுத்தளித்து
விஞ்சிறைகொள் பேருருவ மேன்மைமொழிந் தார்முனைவர்
அஞ்சிறைகொள் விவேகத்தால் ஆனந்தர் வாழியவே!                         4
அவையடக்கம்
சிற்றெறும்பு வாயதனின் சிறியதோர் உயிரைப்போல்
கற்றிருப்புக் கொண்டுள்ளேன் கவிபாட வந்தேனே
பற்றுள்ள தமிழாலே படர்ந்துள்ள தமிழோரே
குற்றங்கள் பொறுப்பீரே குமரனுக்கு அருள்வீரே                                    5
கலையாத கனவுகள்
அறிவ(து) அறிவென அகழ்ந்தே அகழ்ந்தே
அறிவை அழிக்கிலா ஆய்தம் செய்க!                                                        1
அறிக இலக்கணம் அதற்கோர் பொருளை
அறிந்தோன் அறிவழி அறிக அறிக                                                             2
நித்தம் அறிவில் தெளிவது பெரிது
சித்தம் உணர்ந்து சிறத்தல் பெரிது                                                            3
பஞ்ச மின்றிப் பாத்தறிந் தேநாம்
வஞ்ச மின்றி வாட்டம் களைவோம்                                                            4
எண்ணுதல் எல்லாம் இயற்றல் ஆகா
எண்ணிய திண்ணிய இயற்றுவம் மேலா                                                 5
கல்லா மையைக் களைய முயலும்
நல்லாண் மையைக் கடைப்பிடிப் போமே                                               6
இழக்க வேண்டியன இன்னா தருவன
பழக்க வேண்டியன படிப்பும் பண்பும்                                                      7
செய்செயல் யாவும் அறிவின் பாலே
உய்வழி யாவும் உளத்தின் பாலே                                                               8
அகத்தே இருக்கும் அகப்பேய் தன்னைப்
புறத்தே தள்ளு புதுவழி நாடு                                                                       9
அங்காத் தால்தான் அகரம் பிறக்கும்
அறங்காத் தால்தான் வாழ்க்கை சிறக்கும்                                            10
தோண்டிப் புதைப்பினும் சோர்ந்து போகாது
மீண்டும் எழத்துடிக்கும் மின்னுளம் வேண்டும்                                     11
கனவின் வேலை கண்டதும் முடியுமோ?
நனவென மாற்றலே நன்முடி வாகும்                                                       12
இதயக் கனவுகள் என்றும் மின்னப்
புதைத்து வைப்பாய் புதுநம் பிக்கை                                                       13
நினைந்து நினைந்து கனவுகள் தம்மைப்
புனைந்து புனைந்து புகுத்துவாய் உள்ளம்                                             14
மண்கல் லெனவிம் மாநிலம் எண்ணலாம்
கண்கள் பனிப்பக் காண்க கனவு                                                              15
துடிப்பு மட்டுமே இதயம் வேண்டும்
நடிப்பும் தவிப்பும் நமக்கு வேண்டா                                                         16
செல்வழி தன்னில் முள்ளிருந் தால்தான்
செவ்வழி யாகும் தவங்களை யாதே                                                         17
முட்டுக் கட்டையைத் தட்டி எறிந்து
கட்டுன் கனவைக் காலம் நடத்தும்                                                           18
மாற்றம் வேண்டும் மாற வேண்டும்
ஏற்றம் இறக்கம் எணம்சொற் செயலே                                                   19
முன்வந்(து) எதிரெழு முனைப்பொடு செயல்படு
என்வந்(து) என்செயும் ஏற்றம் உனக்கே                                                   20
                                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jan 6, 2018

அச்சரம் - கலிவிருத்தம்

மா மா மா மா

அச்ச ரந்நா வேறி ழஃகான்
உச்ச ரிக்கப் பாடு பட்டே
அச்சு மாறி யஃகான் தன்னை
வச்சிப் பேசும் துன்பம் ஏனோ?
                              - தமிழகழ்வன் சுப்பிரமணி


அச்சரம் நா ஏறி ழஃகான் உச்சரிக்கப் பாடுபட்டே அச்சு மாறி யஃகான் தன்னை வச்சிப் பேசும் துன்பம் ஏனோ?

பாக்களால் பக்குவம் செய்

கட்டுண்டு கிடப்பானேன்?
கட்டவிழ்ந்து மலர்ந்தால்தான் மலரென்றாகும்
மொட்டென்று சொல்வானேன்?
முளைக்கவே அஞ்சுவதோ?
மூடித் துஞ்சுவதோ?
கவிதைக் கழனிக்குக்
கருத்து நீரிறைக்க
எண்ணக் கிணறூறும்
ஏற்றம் எழில்காணும்
குற்றங்கள் குட்டுப்பட்டு
நற்றவந் தளிர்க்கக்
கொட்டிவிடு எண்ணியன
கரையேதும் இல்லை காலெடுத்து வைக்க
கறையென்றெண்ணிச்
சுரந்தன கரந்துவிடாது காக்க
கறையுமில்லை குறையுமில்லை
நிறையோடு நிமிர்ந்துநில்
நெடிதுநோக்கிக் கடிதில் செயல்படு
நொடிக்கு நொடி மாற
மாற்றங்கள் எவ்வளவோ காணும் ஏற்றங்கள்
தீச்சிறகுகளை விரித்துத்
தீமைகளை அழித்துவிடு
பாச்சிறகுகளால் இந்தப்
பாரினைப் பக்குவம் செய்துவிடு
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி

வேண்டுமென வேண்டும்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொய்களவு கள்காமம் போக்க வேண்டும்
    போர்செய்தல் சினங்கொள்ளல் நீக்க வேண்டும்
மெய்பேசி நன்னெறியில் வாழ வேண்டும்
    வெந்தழலாம் மதம்சாதி களைய வேண்டும்
பொய்த்தவத்தார் போர்வையெலாம் கிழிய வேண்டும்
    புதுமையெனப் புகுந்தீமை இரிய வேண்டும்
செய்செயலில் பேராவல் பொங்க வேண்டும்
    தேர்வழியில் பொதுவுடைமை நிலைக்க வேண்டும்
                                                          - தமிழகழ்வன் சுப்பிரமணி

ஆழ்க, ஆய்க - கட்டளைக் கலிப்பா

ஆழ்க செந்தமிழ் ஆழியின் சீரொலி
   ஆய்க அந்தமிழ் ஆகிய பேரியல்
ஆழ்க அவ்வியல் பேசிடும் நுண்ணிமம்
   ஆய்க செய்கருத் தோதிடும் செஞ்சுவை
ஆழ்க அச்சுவை சேர்த்திடும் சொல்லினம்
    ஆய்க எச்சுவை மிஞ்சிடும் இச்சுவை
வாழ்க செந்தமிழ் வாழிய அந்தமிழ்
     வாழ்க சொற்சுவை செய்பொருள் செம்மையே!

                                        - தமிழகழ்வன் சுப்பிரமணி

சொற்பொருள்:
ஆழ்க - உள்ளத்தில் ஆழமாகக் கொள்க
ஆழி - கடல்
அந்தமிழ் - அம் தமிழ் - அழகிய தமிழ்
பேரியல் - பெருமைமிகு இயல்பு
நுண்ணிமம் - நுட்பம்

இலக்கணக்குறிப்பு:
செந்தமிழ், சீரொலி, பேரியல், செஞ்சுவை - பண்புத்தொகை

பொருள்:
செந்தமிழ்க் கடலில் மூழ்கி அதன் சீர்மையான, சிறந்த ஒலிநயத்தை உணர்க; அவ்வாறு அழகிய தமிழாய் உருவாகிய பெருமைமிகு இயற்கைத் தன்மையை ஆராய்ச்சி செய்க. 

அந்த இயற்கைத் தன்மையில் இருக்கும் நுட்பங்களை உணர்க; அத்தகைய தமிழின் ஒலிகள் உருவாக்கிய பொருள்களை உணர்ந்து அப்பொருள் உணர்த்தும் செம்மையான சுவையை ஆராய்ச்சி செய்க;

இவ்வாறு சுவைதரும் பொருள்களுக்கான சொற்களின் கூட்டங்களை உணர்க; உலகிலுள்ள சுவைகளுள் எந்தச் சுவை, இந்தத் தமிழ்ச்சுவையை மிஞ்சும் என ஆராய்க

செந்தமிழாகிய அழகிய தமிழும், அதன் சொற்களின் சுவையும் அவை செய்யும் பொருளின் செம்மையும் வாழ்க!