Jan 6, 2018

அச்சரம் - கலிவிருத்தம்

மா மா மா மா

அச்ச ரந்நா வேறி ழஃகான்
உச்ச ரிக்கப் பாடு பட்டே
அச்சு மாறி யஃகான் தன்னை
வச்சிப் பேசும் துன்பம் ஏனோ?
                              - தமிழகழ்வன் சுப்பிரமணி


அச்சரம் நா ஏறி ழஃகான் உச்சரிக்கப் பாடுபட்டே அச்சு மாறி யஃகான் தன்னை வச்சிப் பேசும் துன்பம் ஏனோ?

பாக்களால் பக்குவம் செய்

கட்டுண்டு கிடப்பானேன்?
கட்டவிழ்ந்து மலர்ந்தால்தான் மலரென்றாகும்
மொட்டென்று சொல்வானேன்?
முளைக்கவே அஞ்சுவதோ?
மூடித் துஞ்சுவதோ?
கவிதைக் கழனிக்குக்
கருத்து நீரிறைக்க
எண்ணக் கிணறூறும்
ஏற்றம் எழில்காணும்
குற்றங்கள் குட்டுப்பட்டு
நற்றவந் தளிர்க்கக்
கொட்டிவிடு எண்ணியன
கரையேதும் இல்லை காலெடுத்து வைக்க
கறையென்றெண்ணிச்
சுரந்தன கரந்துவிடாது காக்க
கறையுமில்லை குறையுமில்லை
நிறையோடு நிமிர்ந்துநில்
நெடிதுநோக்கிக் கடிதில் செயல்படு
நொடிக்கு நொடி மாற
மாற்றங்கள் எவ்வளவோ காணும் ஏற்றங்கள்
தீச்சிறகுகளை விரித்துத்
தீமைகளை அழித்துவிடு
பாச்சிறகுகளால் இந்தப்
பாரினைப் பக்குவம் செய்துவிடு
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி

வேண்டுமென வேண்டும்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொய்களவு கள்காமம் போக்க வேண்டும்
    போர்செய்தல் சினங்கொள்ளல் நீக்க வேண்டும்
மெய்பேசி நன்னெறியில் வாழ வேண்டும்
    வெந்தழலாம் மதம்சாதி களைய வேண்டும்
பொய்த்தவத்தார் போர்வையெலாம் கிழிய வேண்டும்
    புதுமையெனப் புகுந்தீமை இரிய வேண்டும்
செய்செயலில் பேராவல் பொங்க வேண்டும்
    தேர்வழியில் பொதுவுடைமை நிலைக்க வேண்டும்
                                                          - தமிழகழ்வன் சுப்பிரமணி

ஆழ்க, ஆய்க - கட்டளைக் கலிப்பா

ஆழ்க செந்தமிழ் ஆழியின் சீரொலி
   ஆய்க அந்தமிழ் ஆகிய பேரியல்
ஆழ்க அவ்வியல் பேசிடும் நுண்ணிமம்
   ஆய்க செய்கருத் தோதிடும் செஞ்சுவை
ஆழ்க அச்சுவை சேர்த்திடும் சொல்லினம்
    ஆய்க எச்சுவை மிஞ்சிடும் இச்சுவை
வாழ்க செந்தமிழ் வாழிய அந்தமிழ்
     வாழ்க சொற்சுவை செய்பொருள் செம்மையே!

                                        - தமிழகழ்வன் சுப்பிரமணி

சொற்பொருள்:
ஆழ்க - உள்ளத்தில் ஆழமாகக் கொள்க
ஆழி - கடல்
அந்தமிழ் - அம் தமிழ் - அழகிய தமிழ்
பேரியல் - பெருமைமிகு இயல்பு
நுண்ணிமம் - நுட்பம்

இலக்கணக்குறிப்பு:
செந்தமிழ், சீரொலி, பேரியல், செஞ்சுவை - பண்புத்தொகை

பொருள்:
செந்தமிழ்க் கடலில் மூழ்கி அதன் சீர்மையான, சிறந்த ஒலிநயத்தை உணர்க; அவ்வாறு அழகிய தமிழாய் உருவாகிய பெருமைமிகு இயற்கைத் தன்மையை ஆராய்ச்சி செய்க. 

அந்த இயற்கைத் தன்மையில் இருக்கும் நுட்பங்களை உணர்க; அத்தகைய தமிழின் ஒலிகள் உருவாக்கிய பொருள்களை உணர்ந்து அப்பொருள் உணர்த்தும் செம்மையான சுவையை ஆராய்ச்சி செய்க;

இவ்வாறு சுவைதரும் பொருள்களுக்கான சொற்களின் கூட்டங்களை உணர்க; உலகிலுள்ள சுவைகளுள் எந்தச் சுவை, இந்தத் தமிழ்ச்சுவையை மிஞ்சும் என ஆராய்க

செந்தமிழாகிய அழகிய தமிழும், அதன் சொற்களின் சுவையும் அவை செய்யும் பொருளின் செம்மையும் வாழ்க!