Jan 6, 2018

ஆழ்க, ஆய்க - கட்டளைக் கலிப்பா

ஆழ்க செந்தமிழ் ஆழியின் சீரொலி
   ஆய்க அந்தமிழ் ஆகிய பேரியல்
ஆழ்க அவ்வியல் பேசிடும் நுண்ணிமம்
   ஆய்க செய்கருத் தோதிடும் செஞ்சுவை
ஆழ்க அச்சுவை சேர்த்திடும் சொல்லினம்
    ஆய்க எச்சுவை மிஞ்சிடும் இச்சுவை
வாழ்க செந்தமிழ் வாழிய அந்தமிழ்
     வாழ்க சொற்சுவை செய்பொருள் செம்மையே!

                                        - தமிழகழ்வன் சுப்பிரமணி

சொற்பொருள்:
ஆழ்க - உள்ளத்தில் ஆழமாகக் கொள்க
ஆழி - கடல்
அந்தமிழ் - அம் தமிழ் - அழகிய தமிழ்
பேரியல் - பெருமைமிகு இயல்பு
நுண்ணிமம் - நுட்பம்

இலக்கணக்குறிப்பு:
செந்தமிழ், சீரொலி, பேரியல், செஞ்சுவை - பண்புத்தொகை

பொருள்:
செந்தமிழ்க் கடலில் மூழ்கி அதன் சீர்மையான, சிறந்த ஒலிநயத்தை உணர்க; அவ்வாறு அழகிய தமிழாய் உருவாகிய பெருமைமிகு இயற்கைத் தன்மையை ஆராய்ச்சி செய்க. 

அந்த இயற்கைத் தன்மையில் இருக்கும் நுட்பங்களை உணர்க; அத்தகைய தமிழின் ஒலிகள் உருவாக்கிய பொருள்களை உணர்ந்து அப்பொருள் உணர்த்தும் செம்மையான சுவையை ஆராய்ச்சி செய்க;

இவ்வாறு சுவைதரும் பொருள்களுக்கான சொற்களின் கூட்டங்களை உணர்க; உலகிலுள்ள சுவைகளுள் எந்தச் சுவை, இந்தத் தமிழ்ச்சுவையை மிஞ்சும் என ஆராய்க

செந்தமிழாகிய அழகிய தமிழும், அதன் சொற்களின் சுவையும் அவை செய்யும் பொருளின் செம்மையும் வாழ்க!

No comments:

Post a Comment