Sep 18, 2017

என் அன்னை

நிலைமண்டில ஆசிரியப்பா

“காமாட்சித் தாயே! மீனாட்சித் தாயே!
காப்பாற்று தாயே!” கவலைகள் இல்லா
மழலைப் பருவம் மணிமணி யாக
அழைக்கும் குரலின் அமுதம் நீயே
பூமா தேவி எனப்பெயர் பெற்றாய்
ஆமாம் உண்மை! அறிந்தேன் பொறுமை!
எந்தக் கவலையும் எனக்கிங்(கு) இல்லை
சிந்தையில் நீயே வைத்துக் காக்கிறாய்
பாது காப்பே உன்முதற் கோளெனத்
தீதும் நன்றும் தெளிவுற விளக்கிச்                                            10
செய்வன செயவும் தீயன நீக்கவும்
உய்வழி கற்பித்(து) உயர்ந்த நிலைக்கெனைச்
சேர்த்த பெருமையை என்சொல் வேனோ?
நேர்த்தி உன்றன் நேரிய சிந்தை
இன்னும் இங்கியான் காண வில்லை
மின்னும் உன்றன் மேலாண்மைப் பண்பை
எண்ணி வியக்கிறேன் என்றன் சூழலை
எண்ணத்தில் சேர்த்தே இயம்புவை காப்பே
என்வரம் பெற்றேன்? இங்கே அன்னாய்!
நின்வரம் அன்றோ! நீவரம் அன்றோ!                                         20

இலக்கணக் குறிப்பு: 
இல்லா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 
உய்வழி – வினைத்தொகை, 
இங்கியான் (இங்குயான்) – குற்றியலிகரம், 
என்வரம் – கடைக்குறை, 
அன்னாய் – முன்னிலை விளி

சொற்பொருள்: 
கோள் – கொள்கை, 
நேர்த்தி – அருமை, 
நேரிய – சிறந்த, 
மின்னும் – ஒளிரும், 
என்வரம் – என்ன வரம், 
அன்னாய் - அன்னையே

பொருள்: 
"காமாட்சித் தாயே! மீனாட்சித் தாயே! காப்பாற்று தாயே!" – பூசை அறையில் சாமிகளுக்குப் பொட்டு வைத்துக் கொண்டிருக்கும்போது, நான் மழலைப் பருவத்தினனாய், என் அன்னையிடம் சென்று, இது என்ன? அது என்ன? அது என்ன பண்ணும்? எனக் கேட்ட கேள்விகளுக்கு, என் அன்னை எனக்குக் கற்பித்த வரிகள். பூமாதேவி எனப் பெயர் பெற்றாய்; பொறுமைக் குணம் நிறைந்ததால் அது பொருத்தம். என்னை உன் மனத்தில் வைத்து எப்போதும் காக்கின்றாய்! அதனால் எனக்கு எந்தக் கவலையும் இந்த உலகத்தில் இல்லை. என் பாதுகாப்பே உன்னுடைய முதல் கொள்கையாய், நன்மை எது, தீமை எது என்பதைத் தெளிவாக விளக்கிச் செய்ய வேண்டியவற்றைச் செய்யவும், தீமையானவற்றை நீக்கவும் நல்ல வழி கற்பித்து, உயர்ந்த நிலைக்கு என்னைச் சேர்த்த பெருமையைப் பற்றி என்ன சொல்லி மகிழ்வேன்? உன்னைப் போன்று மேலாண்மைப் பண்பு உடைய ஒருவரை இன்னும் நான் காணவில்லை. நான் அருகில் இல்லாத போதும், என்னுடைய சூழலை உன் கற்பனைத் திறத்தால் மனத்தில் நிறுத்திப் பாதுகாப்பாய் இருக்கும் வழிவகைகளைச் சொல்வாய்! என் அன்னையே! இங்கே என்ன வரம் பெற்றேன்? உன்னுடைய வரம் அல்லவா? அதுபோக, நீயே எனக்கு வரம் அல்லவா?

No comments:

Post a Comment