Mar 28, 2021

மணிக்குறள் - 39. மூடப் பழக்கம் முடக்கு

உண்மை யுணரா உயரறி வில்லாரைக்
கண்கட்டி ஏமாற்று வார்                             381

அச்சங் கொளச்செய்வார் ஆயிரந் தான்செய்வார்
நச்சரவம் போல்வார் நசுக்கு                    382

மந்திரங் காலாம் மதிமுக்கா லாமென்று
தந்திரம் செய்வாரைத் தாக்கு                 383

ஒன்றுமிலா ஒன்றனுக்(கு) ஒன்றென்று தான்கூட்டும்
ஒன்றாத வாழ்வை ஒழி                              384

பொச்சாப் புடைமை பயன்படுத்தி நந்தலையில்
பச்சையங் குத்துவார் பார்                      385

கேடழிக்கும் கேள்வி யறிவால் வினாவெழுப்பி
மூடப் பழக்கம் முடக்கு                              386

வாடச் செயுமந்த வாழ்வுக் குதவாத
மூடப் பழக்கம் முடக்கு                              387

செறிப்பச் செயுமறிவால் செவ்வினை ஆற்றி
முறிப்பாயம் மூடத் தனம்                        388

காலத்திற் கேற்ற கருத்தாய்ந்து கட்போமே
ஆலமெனும் மூடத் தனம்                         389

நலனில்லா மூடப் பழக்கம் நசுக்கப்
புலன்றெளிந்து வாழும் புவி                   390

Mar 27, 2021

பெருங்கவிக்கோ கவினப்பன் தமிழன்

விரித்துரை செய்த யாவும்
   வியந்துளம் கொள்க வென்று
திரித்துறைந் தனவும் சொல்லித்
   திரிபடா வெண்ண மேற்றிப்
பிரித்துநான் கியலைத் தந்து
   பிரித்துமேய் வழியுங் காட்டிப்
பரிசெனப் பாட்டே தந்த
   பண்புடை நெஞ்சம் போற்றி!

Mar 21, 2021

மணிக்குறள் - 38. உன்னை உணர்

உன்னையே நீயறிவாய் உண்மையறி வாயென்று
சொன்னாரே சாக்கிரட் டீசு                                371

உன்னை உணர்வாய் உயர்ந்த அறிவாகும்
பொன்னாய் உரைத்தாரைப் போற்று           372

என்ன செயவேண்டும் என்னும் தெளிவெல்லாம்
உன்னை உணர வரும்                                          373

கடுஞ்சினத்தாற் காயாது காக்கும் வழிசெய்
விடுந்துன்பம் உன்னை உணர்ந்து                 374

கண்ணாடி முன்னின்று காணும் புறம்போல
எண்ணத்தால் ஆடும் அகம்                               375

அகக்கண்ணால் நோக்கி அழகுசெய் ஆற்றல்
தகவமைந்து நன்மை தரும்                              376

ஆற்றல் பிறக்கும் அகத்தை அறிந்தாற்ற
ஆற்றல் அமைதி தரும்                                        377

ஊரும் உறவும் உணர்ந்து பயன்செய்க
பேரும் புகழும் பிறப்பு                                         378

எல்லா உயிருமிங்(கு) இன்புற்று வாழற்காய்
எல்லாம் இயற்றுக ஈந்து                                     379

மனிதனாய் வாழ மனம்வைக்க மண்ணில்
புனிதனாய்ப் பூப்பாய் பொலிந்து                  380

Mar 18, 2021

பாலச்சந்தர் (திருமண வாழ்த்து)

இளஞ்சந் திரனே! இளஞ்சந் திரனே!
உளஞ்சார்ந் தொருநாள் உறவென நிற்பாள்
எங்கே நிற்பாள்? எழிற்கனாக் கண்டு
பொங்கும் மகிழ்வு பொருந்து நாட்காய்க்
காத்திருந் தாயே! காத்திருந் தாயே!
பூத்திருந் தாளைப் புன்னகை யாளை
ஏற்ற நாளிஃ(து) இரம்மிய மிக்க
ஊற்றாஞ் சிந்தைக் குரிய பொன்னைப்
போற்று வாயே! 
போற்று வாயே! 

Mar 14, 2021

முருகாதலம் காரிகை - பகுதி 1

 பைந்தமிழ்ச் செம்மல் 

தமிழகழ்வன் சுப்பிரமணி


 அருவினை யாவும் அழிக்கும் வலனே அறுமுகனே!

வருவினை யாவும் வடிவேல் செலுத்தி வருத்துகவீங்(கு)

ஒருவினை என்னை உழலும் துயரில் உறுத்துவதோ?

மருவினை நீக்கு மருத்துவ மாமணி மாமுருகே!                                                      1


முருகைய! முத்தமிழ் முத்தைய! என்றும் முடிவிலனே!

உருவு மருவுமென் றோருதற் கேலா ஒருதனியே!

பெருவெளி எங்கிலும் பேரொளி யாயுள பேரிறையே!

அருவெளி என்றன் அகத்தினுக் குன்றன் அருளொளியே!                                             2


ஒளிர்ந்தெழுந் தோங்கி உலகினை ஊக்கும் ஒருதனியே!

தெளித்தருள் வாயே சிலைநாள் உறக்கத் திருந்தெழுந்து

தெளிந்த மனத்தொடு தேர்ந்தன செய்யத் துணையிருப்பாய்

துளிர்த்தநற் சூழ்ச்சி செயல்வழி நன்றாய்த் துலங்குகவே!                                  3


துலங்கு கதிர்வேல் துணைசெயுந் தொட்டுத் தொடங்குவன

இலங்கும் வழிதரும் எங்கும் நிறைந்த எழிலவனைக்

கலங்கா திருந்து களிப்பொடு காண்பாய் கடம்பமலர்

அலங்குநல் லாரமும் ஆற்றுப் படையும் அகத்தாற்றவே                                  4


ஆற்றுப் படுத்தென் னகத்தைக் குளிர்வித் தருமணியே!

ஊற்றுப் படுத்தென் னுணர்வு பெருகி உயரருவி

காற்றுப் படுத்துங் கடிதெனத் தேடக் கழலிணைகள்

ஆற்றுப் படுத்தி அருள்வாய் முருகா அடியனுக்கே!                                                5


அடியார்க் கடியவர் அன்பருக் கன்பர் அகத்துறையும்

மடியா தனவெனும் மாத்துய ரெல்லாம் மடித்தருளும்

படியாய் விளங்கலின் பாடிப் பரவிப் பணிதலுக்கே

துடிப்பவர் நெஞ்சில் துளைத்தழிக் கின்ற துயரிலையே                                      6


துயரந் தொலைத்தெழுந் தோடத் துணைசெய் தருளுகவென்

றயக்கங் களையுந் தரந்தந் துயர்த்துக தான்விழைந்து

முயல முயல முதலென நின்று முனைதலுடைச்

செயலுக் குருவாய்ச் சிறப்பொடு நின்றருள் செவ்விறையே!                           7


இறைவ னடிதொழு தின்புறு நெஞ்சே இடரெனவொன்

றுறைவ திலையுனை ஊக்குமவ் வாற்றல் உயிர்த்தெழுக!

சிறையென வாழ்வைச் சிதைத்தல் சிறப்போ சிறைவிரிக்க!

குறைபல போக்கும் குமரனைத் தேடுக குன்றினிலே                                       8


குன்றுகள் தோறும் குடியிருக் கின்ற குழக்குமரா!

இன்றெழுந் தேனென் இயற்கை எதிலும் இனிதிருப்பாய்!

பொன்றுந் துணையும் புதுக்குவாய் என்றன் புலன்றெளிய

வென்றுளம் வாழ்குவாய் வெற்றி யளிகொற் றவைமகனே!                                 9


மகனே! களைவாய் மயக்கம் செயலை மகிழ்வுடனே

அகத்தில் பொருத்தி அணுவணு வாக்கி அவைதுணிக!

இகத்தில் செயலே இனிமை பயக்கும் இறுதிவரை

வகைப்படுத் தாற்றலின் மாச்செயல் எல்லாம் வழிப்படுமே                                       10

(தொடரும்)

மணிக்குறள் - 37. பகுத்தறிவு கொள்

உண்மை யெதுவென ஓர்ந்தபின் திண்மைகொள்
ஓரா திலையே உயர்வு                                        361

பகுத்தறியு முன்னே பயனிலை யென்னல்
நகுதற் குடையது நன்கு                                     362

பகுத்தறி யென்றுவாய்ப் பக்கம் கிழிப்பார்
பகுத்தறிய மாட்டா தவர்                                  363

எல்லாம் பொதுவென்க ஏமாற்றந் தாராது
நல்லாராய் வாழ்வித்தல் நாடு                      364

மூடப் பழங்கதையை முன்னின்ற காரணத்தால்
நாடத் தெரியும் நடப்பு                                      365

ஆதியி னின்றே அறிவியல் உண்டென
ஓதி விளங்கிக் கொளல்                                   366

வாழ்விய லுக்கு வகுத்த வழிகளைப்
பாழ்வழி யாக்கல் பகை                                  367

இல்லாத காரணம் இன்னு முரைப்பார்தம்
பொல்லாங்கைத் தூற்றிப் பொசுக்கு        368

பெரியார்தம் கொள்கை பெரிததனைப் பாராச்
சிறியார்க் கறிவாவ தேது?                             369

அறிவினுக் கெட்டாத ஆக்கங்கள் உண்டு
செறிவறி வோடுசீர் தூக்கு                             370

Mar 7, 2021

மணிக்குறள் - 36. ஏறு தழுவுதல்

ஆண்மகன் வீரம் அதிலறிவோம் காக்கின்ற
மாண்புடையன் என்பாள் மகிழ்ந்து                     351

கன்னியர்க்கும் காளையர்க்கும் காதல் மணங்கூட
முன்னி முனைவாரிவ் வாட்டு                                352

வேலையே செய்வார்க்கு வேண்டிய ஊக்கமிந்த
காளை விளையாட்டால் காண்                             353

காளை சுறுசுறுப்பாய்க் காட்டும் விளையாட்டால்
காளையரும் காண்பார் நலம்                               354

முல்லை நிலத்தில் முதன்மை பெறுமாட்டம்
இல்லை யெனிலெங்கே இன்பு?                            355

சல்லிக்கட்(டு) ஆட்டம் தமிழரின் பண்பாடு
சொல்லிக்கட்(டு) என்றும் துணிந்து                    356

மஞ்சு விரட்டை மகிழ்வோடு கொண்டாட
நெஞ்சில் நிலைக்கும் நிறைவு                              357

விலங்கு வதையில்லை வீட்டுக்குப் பிள்ளை
துலங்கிக் களங்காண் துணிவு                              358

நங்காளை யோடுநாம் நாடியோ(டு) ஆட்டமிது
பொங்கும் இனிமையொடு போற்று                  359

நலவாழ்வின் தூணாகும் நம்நாட்டு மாடு
கலங்காது காத்தல் கடன்                                        360