Dec 8, 2017

உள்ளத் தூக்கம் (உள்ளத்து ஊக்கம்)

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

குழப்பங்கள் ஒன்றாக வந்து சேரக்
 குன்றேறி நின்றானும் இறங்கி வந்து
பிழைத்ததெது? பிழையின்றி இருப்ப தேது?
 பின்னின்று பற்றியொரு கடிவா ளந்தான்
வழிநடத்த வேறுவழி யேதும் இன்றி
 வழிவழியே வந்தவர்தம் வழியை யெல்லாம்
பழியென்று தூற்றிடுவார்ப் பாதை கண்டு
 பழகுதமிழ் தான்மறந்து தயங்கி நின்றேன்

படிக்கின்ற படிப்பெல்லாம் பாழாய்ப் போமோ?
 படிப்படியாய்ச் செல்வழியில் சரிவும் உண்டு
நடிப்பறியாப் பிள்ளையினால் நானி லத்தில்
 நகர்கின்ற வாழ்வுக்கும் துன்பம் உண்டு
துடிப்பறிந்து வெல்வழியைத் தேடிச் சென்று
 துயர்களைந்து நல்வழியை நாடி நின்று
வெடித்திடுவோம் உலகுக்கு நன்மை சேர்க்க
 வெற்றிவெற்றி எண்டிசையும் வெற்றி தானே!

                                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 18, 2017

என் தந்தை

நிலைமண்டில ஆசிரியப்பா

சொல்பேச் சாவது கேட்க வேண்டும்
சுயபுத்தி யாவ(து) இருக்க வேண்டும்
என்ற உன்றன் அறிவுரை எம்மை
என்றும் நன்னெறிக்(கு) இட்டுச் செல்லும்
கந்தர் சஷ்டி கவசம் மூலம்
எந்தையே என்றன் அச்சம் களைந்தாய்
மீன்பி டித்தல் மீன்வலை பின்னல்
நோன்புக் கயிறு திரித்தல் மரமறுத்தல்
குடைசரி செய்தல் குளிர்பனி உறைநிலை
அடைகுழை வதனை விற்றல் இன்னும்                                      10
சோதிடம் நாட்டு வைத்தியத் தோடு
சிலம்பு பம்பை தெருக்கூத் தென்று
பலகலை அறிந்த வித்தகர் நீயே!
சேகர் என்னும் பெயருக்(கு) ஏற்றதாய்ச்
சேகரம் செய்த செவ்வறி வெல்லாம்
சேகரம் யானும் செய்திடு வேனோ?
எண்ணும் போதே என்னுளம் பெருமை
நண்ணும் நாளும் வாழ்க வாழ்க!                                             18

இலக்கணக் குறிப்பு: 
குளிர்பனி, உறைநிலை, அடைகுழைவு – வினைத்தொகை, 
உளம் – உள்ளம் என்பதன் இடைக்குறை, 
நன்னெறி - பண்புத்தொகை

சொற்பொருள்: 
நண்ணும் – அடையும். 
கந்தர் சஷ்டி கவசம் – முருகப்பெருமானின்மீது பாடப்பட்ட கவச நூல். 
நன்னெறி – நல்ல வழி. 
அச்சம் – பயம், 
களைந்தாய் – நீக்கினாய்.

பொருள்: 
தந்தையின் அறிவுரை: சொல் பேச்சாவது கேட்க வேண்டும் அல்லது சுயபுத்தியாவது இருக்க வேண்டும். 
தந்தை மகற்காற்றும் நன்றி: நாள் தோறும் கந்தர் சஷ்டி கவசம் படிக்கச் சொல்லி, என்னுள் இருந்த பயத்தைப் போக்கித் தமிழறிவு வளரச் செய்தார். 
தந்தை செய்கின்ற தொழில்கள்: மீன் பிடித்தல், மீன்வலை பின்னல், நோன்புக் கயிறு திரித்தல், மரம் அறுத்தல், குடை சரிசெய்தல், குளிர்பனி உறைநிலை அடை குழைவு (ICE CREAM) விற்றல், சோதிடவியல், நாட்டு மருத்துவம், சிலம்பாட்டம், பம்பை, தெருக்கூத்து.

சேகர் என்னும் பெயருக்கு ஏற்றதாக, நீர் சேர்த்து வைத்த செம்மையான அறிவையெல்லாம், யானும் எனக்குள் சேர்த்து வைப்பேனோ? உன்னை எண்ணும்போதே என் உள்ளம் பெருமை அடைகிறதே! தந்தையே! நீர் நாளும் வாழ்க.

என் அன்னை

நிலைமண்டில ஆசிரியப்பா

“காமாட்சித் தாயே! மீனாட்சித் தாயே!
காப்பாற்று தாயே!” கவலைகள் இல்லா
மழலைப் பருவம் மணிமணி யாக
அழைக்கும் குரலின் அமுதம் நீயே
பூமா தேவி எனப்பெயர் பெற்றாய்
ஆமாம் உண்மை! அறிந்தேன் பொறுமை!
எந்தக் கவலையும் எனக்கிங்(கு) இல்லை
சிந்தையில் நீயே வைத்துக் காக்கிறாய்
பாது காப்பே உன்முதற் கோளெனத்
தீதும் நன்றும் தெளிவுற விளக்கிச்                                            10
செய்வன செயவும் தீயன நீக்கவும்
உய்வழி கற்பித்(து) உயர்ந்த நிலைக்கெனைச்
சேர்த்த பெருமையை என்சொல் வேனோ?
நேர்த்தி உன்றன் நேரிய சிந்தை
இன்னும் இங்கியான் காண வில்லை
மின்னும் உன்றன் மேலாண்மைப் பண்பை
எண்ணி வியக்கிறேன் என்றன் சூழலை
எண்ணத்தில் சேர்த்தே இயம்புவை காப்பே
என்வரம் பெற்றேன்? இங்கே அன்னாய்!
நின்வரம் அன்றோ! நீவரம் அன்றோ!                                         20

இலக்கணக் குறிப்பு: 
இல்லா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 
உய்வழி – வினைத்தொகை, 
இங்கியான் (இங்குயான்) – குற்றியலிகரம், 
என்வரம் – கடைக்குறை, 
அன்னாய் – முன்னிலை விளி

சொற்பொருள்: 
கோள் – கொள்கை, 
நேர்த்தி – அருமை, 
நேரிய – சிறந்த, 
மின்னும் – ஒளிரும், 
என்வரம் – என்ன வரம், 
அன்னாய் - அன்னையே

பொருள்: 
"காமாட்சித் தாயே! மீனாட்சித் தாயே! காப்பாற்று தாயே!" – பூசை அறையில் சாமிகளுக்குப் பொட்டு வைத்துக் கொண்டிருக்கும்போது, நான் மழலைப் பருவத்தினனாய், என் அன்னையிடம் சென்று, இது என்ன? அது என்ன? அது என்ன பண்ணும்? எனக் கேட்ட கேள்விகளுக்கு, என் அன்னை எனக்குக் கற்பித்த வரிகள். பூமாதேவி எனப் பெயர் பெற்றாய்; பொறுமைக் குணம் நிறைந்ததால் அது பொருத்தம். என்னை உன் மனத்தில் வைத்து எப்போதும் காக்கின்றாய்! அதனால் எனக்கு எந்தக் கவலையும் இந்த உலகத்தில் இல்லை. என் பாதுகாப்பே உன்னுடைய முதல் கொள்கையாய், நன்மை எது, தீமை எது என்பதைத் தெளிவாக விளக்கிச் செய்ய வேண்டியவற்றைச் செய்யவும், தீமையானவற்றை நீக்கவும் நல்ல வழி கற்பித்து, உயர்ந்த நிலைக்கு என்னைச் சேர்த்த பெருமையைப் பற்றி என்ன சொல்லி மகிழ்வேன்? உன்னைப் போன்று மேலாண்மைப் பண்பு உடைய ஒருவரை இன்னும் நான் காணவில்லை. நான் அருகில் இல்லாத போதும், என்னுடைய சூழலை உன் கற்பனைத் திறத்தால் மனத்தில் நிறுத்திப் பாதுகாப்பாய் இருக்கும் வழிவகைகளைச் சொல்வாய்! என் அன்னையே! இங்கே என்ன வரம் பெற்றேன்? உன்னுடைய வரம் அல்லவா? அதுபோக, நீயே எனக்கு வரம் அல்லவா?

Sep 17, 2017

பிறந்தநாள் வாழ்த்து - ஜெயந்தன் ஜெயக்குமார்

நிலைமண்டில ஆசிரியப்பா

தத்தி தத்துச் சச்சிதன் அருளால்
புத்த கத்தொடு புதுமை புரிய
ஜெயக்கு மாரன் செவ்வுள மொழியன்
ஜெயந்தன் பெறுக ஜெயமே வரமாய்!
ஆழிய சிந்தனை வளம்பெற் றின்பொடு
வாழிய பல்லாண் டிவண்பெருஞ் சாதனை
புரிந்திட உலகம் பரந்திட வாழ்த்தே!

பிறந்தநாள் வாழ்த்து - தேஜீஸ்வர்

அ) தரவு கொச்சகக் கலிப்பா

தச்சகரம் தனஞ்செழியன் சந்தியா செய்யுள்தன்
மெச்சுமொரு தன்மையது மேன்மையுள இனமென்றென்
உச்சிதனில் யானுணர்ந்தே உள்ளின்பம் பகர்கின்றேன்
சச்சிதனை உளங்கொண்டு தகவமைந்து வாழ்கவென்று

ஆ) நிலைமண்டில ஆசிரியப்பா

ஒளிரா தவனென உலகம் மகிழ
ஒளிதிகழ் விழியால் உலகை ஆளும்
ஒருபரம் பொருள்தன் திருவருள் பொழிய
ஒருதனிச் சிறப்பின் ஓங்கிய தலைவன்
ஒண்டளிர் உள்ளத் தனஞ்செழியன் கொண்ட
ஒண்சொல் சந்தியா உளமகிழ் மகவென
ஒளிநித் திலமென மழலை மொழியான்
ஒளிரீசன் தேஜீஸ்வர் உலகம் போற்ற
ஒருதனிக் குடையின் பெருங்கொற் றவனிலை
ஒருவா தவனென ஓங்குக ஓங்குக!

இ) சில்தாழிசைக் கொச்சகக் கலிப்பா

(தரவு)
அறந்தழைக்க அம்மையே அப்பனே!என்(று) உளம்நிறையப்
பிறந்தழைக்க வந்தவனே! பெருமழலைத் திருச்செல்வ!
திறங்காட்டு திருவடியால் உலகளந்து பேரறிவு
மறங்காட்டு மறக்கவொணா மகிழ்வதனை நீகூட்டு

(தாழிசை)
பச்சைக் கிள்ளை இச்சை கொண்டுன்
மெச்சும் மழலை அச்சுக் கேங்கும்!

மஞ்ஞை யுன்றன் செஞ்சொல் கேட்டுத்
தஞ்சம் புகவே கெஞ்சும் கொஞ்சும்

அண்டங் காக்கை தொண்டை வற்ற
உண்ட சோற்றுக்(கு) அண்டும் மண்டும்

(தனிச்சொல்)
இன்னும்

(தாழிசை)
குருவி நெல்லை அருவிக் கேட்கும்
மருவிப் பாலுக்(கு) உருகும் பூனை

கொக்க ரக்கோ கூவும் சேவல்
மிக்கோர் ஆவல் புக்கப் பேசும்

கூவுங் குயிலும் தாவும் மரையும்
ஆவும் ஆடும் மாவும் பேசும்

(தனிச்சொல்)
அவற்றோடு

(ஆசிரியச் சுரிதகம்)
அன்புளம் ஆர்ந்த அருஞ்சொல் தேர்க!
நின்குலம் வாழ்க! நிமல வெல்க!
பிறந்த நாணல் வாழ்த்துகள் என்று
வாழ்த்து கின்றோம் வாயார
ஏழ்கடல் வெல்லும் எழில்மா மகனே!

பிறந்தநாள் வாழ்த்து - சுரேந்த் குமார்

நேரிசை ஆசிரியப்பா

நற்கோ மானே நயமாய் மொழியும்
சொற்கோ மானே சுரர்தம் கோவே
எல்லா வளமும் நலமும் பெற்றுச்
சொல்லாண் மைநிறை சுடர்மதி ஒளிர
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
புனிதனாய் உலகம் போற்ற வாழ்கவே!

பிறந்தநாள் வாழ்த்து - இரத்தீசு குமரன்

உரத்தீசன் என்ன உளனேர்பு கொள்ளும்
வரத்தீச னாவொளிர வாழ்க - இரத்தீச
அங்குமர! ஆற்றல்வேல் அங்கைதனில் தாங்கியுல(கு)
எங்குமறத் தான்றழைக்க என்று.

பிரித்தறிய:
உரத்து ஈசன் என்ன உளன் ஏர்பு கொள்ளும் வரத்து ஈசனாய் ஒளிர வாழ்க! இரத்தீச அம் குமர! ஆற்றல் வேல் அம் கைதனில் தாங்கி உலகு எங்கும் அறத்தால் தழைக்க என்று.

சொற்பொருள்:
உரம் – ஊக்கம், உரத்து ஈசன் - ஊக்கமுள்ள ஈசன், என்ன – போல, உளன் – உள்ளம், ஏர்பு கொள்ளும் - எழுந்து பெறும், வரத்து ஈசன் - வரம்பெற்ற ஈசனாக (ஈசுவரப் பட்டம் பெற்றவனாக), ஒளிர வாழ்க - பெருமை, புகழ் ஒளிர வாழ்க; அம் – அழகு, இரத்தீச அம் குமர - அழகு பொருந்தும் மனம்கொண்ட இரத்தீசு குமர!, ஆற்றல்வேல் - எதனையும் ஆற்றும் ஆற்றலுடைய வேல், அம் கைதனில் தாங்கி - அழகிய கைகளில் தாங்கி, உலகு எங்கும் - இவ்வுலகம் எல்லாம், அறத்தால் தழைக்க என்று - அறச்செயல்களால் தழைக்க வேண்டுமாறு

விளக்கம்:
இவ்வுலகம் எல்லாம் அறச்செயல்களால் தழைக்க வேண்டுமாறு, எதனையும் ஆற்றும் ஆற்றலுடைய வேலை அழகிய கைகளில் தாங்கி, ஊக்கமுள்ள ஈசனைப்போலவே உள்ளம் மகிழ்ந்துபெறும் வரத்தால் (ஈசுவரப்பட்டம் பெற்றவர்களைப் போல்) இரத்தீசு குமரா! பெருமையோடு வாழ்க!

பாவகை: நேரிசை வெண்பா

பிறந்தநாள் வாழ்த்துகள் – சௌரவ் (16.09.2017)

நிலைமண்டில ஆசிரியப்பா

நேர்வளர் நெறிமுறை நித்தம் கைக்கொள்
சேர்வளச் செல்வர் 'சுதர்சன்' வாழ்க
கூர்மதி நுட்பக் கொள்கைத் தொழில்வளர்
ஆர்வளப் பன்மொழி 'அனுராதா' வாழ்க
இறையருள் இனிமை ஏற்றம் வெற்றி
நிறைய நாளும் நின்மொழி உணர்ந்து
குறையா வளத்தொடு குவலயம் வாழ
இறையென வரூஉம் 'சௌரவ்' வாழ்க
இன்மொழிச் சொல்ல! இன்றுநீ பிறந்த
நன்னாள்! ஓராண்டு நானிலம் கண்ட                             10

பொன்னாள்! வாழ்க பல்லாண்(டு) இந்நிலம்
உன்னேர் வழிசெல வாழ்த்துவம் யாமே!
பொன்னே! மணியே! புத்தொளி முத்தே!
தன்னேர் இல்லாத் தனிப்பெருந் தலைவ!
இன்னும் கேட்பாய்! இந்நாள் உன்றன்
இன்மொழித் தோழர் யாரென்(று) அறிவாய்!
சிந்தும் செங்கழல் சீரிய ஒலிசேர்
சந்தம் கொஞ்சக் கொஞ்சம் நின்று
முந்தும் முயலும் தவிக்கும் முயன்று
வந்துன் கழலைக் கட்டிக் கொள்ளும்                             20

சுத்திச் சுத்தி வரூஉம் பூனை
மெத்த வந்து பக்கம் அமரும்
முத்துச் சொல்லில் முடிந்து வைத்த
மொத்தம் கேட்க முயலும் காக்கை
நெல்மணி தருகென நேயத் தோடு
நல்மணிக் குருவி நாடி வருமே
சொல்மணிக் குயிலுன் மழலை கேட்டே
சொல்மறந் துன்றன் தோழன் ஆகும்
கன்னம் கொத்திக் கன்னல் மொழியை
அன்னக் கிளியும் அறியும் அறியும்                                 30

அன்னம் உன்னிடம் மென்னடை பயிலச்
சின்ன இடையை அசைக்கும் அசைக்கும்
மழலைச் செல்வ! மனமகிழ் மணிய!
கழலடி ஒலியில் கனிந்தி ருக்கக்
குழலும் விரும்பும் குரலைக் கேட்டுத்
தழைக்கும் கழையும் தான்மகிழ் வுற்றே!
கல்வி ஆற்றல் வெற்றி துணிவு
நல்லூழ் இளமை நலம்புகழ் அறிவு
நெல்பொன் வாழ்நாள் நுகர்ச்சி மக்கள்
சொல்லெழில் பொறுமை எனும்பதி னாறு               40
பெற்றுப் பெருவாழ்வு வாழ்கபல் லாண்டே!

                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 7, 2017

கதிரேசன் - மணிமேகலை (திருமண விழா அழைப்பு)

(கலி விருத்தம்)
வாழிய அண்டம் வாழிய கதிரோன்
வாழிய உலகம் வாழிய பாரதம்
வாழிய பைந்தமிழ் மணித்திரு நாடு
வாழிய உயிர்கள் உயர்நலம் பெறுகவே!

(தரவு கொச்சகக் கலிப்பா)
பருவதமா மலைநாட்டான் பருவதரா சன்குலத்துத்
திருமணமாம் விழாவிற்குத் திருமுருகன் திருவருளத்
தருவெனவாழ் குலங்காக்கக் குலத்திறைவர் அருள்சுரக்கப்
பெருந்திரளாய் வருமக்கள் உளமகிழ வாழ்த்துகவே!

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அறம்பொருள் இன்பம் அறிய உரைத்த
திறங்கண்(டு) ஏத்தித் திகழிசை விளங்க
ஐயன் வள்ளுவன் ஆண்டு கொள்ளின்
வையத்(து) இரண்டா யிரத்து நாற்பத்(து)
எட்டே ஆகும்; எழுகதிர் ஓங்கக்
கட்டிய மரபு காட்டும் செவ்வழி
ஏவிளம்பி என்பார்; இறைகதிர் சிம்மம்
தாவிய திங்கள் தமிழுக்குப் பெயர
மடங்கல் என்பார்; மதிக்கணக்(கு) ஒன்ற
ஆவணி என்பார்; நாள்பதி னெட்டே;
மேவணி ஞாயிறு மீப்பெரு நன்னாள்;
நற்கிரி கோரியன் நாள்காட்டி யின்படி
ஆண்டோ இரண்டா யிரத்துப் பதினேழ்
ஆகும்; ஒன்பதாம் திங்கள் செப்டம்பர்;
நனிமகிழ் நன்னாள் மூன்றா கும்மே;
அந்நாள்
பன்னிரு நாள்வளர் பருமதி் கொண்ட
பின்னைய வெற்றிப் பிடிப்(பு)உத்தி ராடம்
மீனொளி சேர்ந்த மிகைஅமிழ்த யோகம்
வானொளிர் கதிரோன் கன்னிப் பகுதியில்
காலடி வைக்கும் காலை நேரம்
கோலங் கொள்ளும் ஆறு மணிமுதல்
ஏழரை மணிக்குள் நிகழும் மணமே!

(தரவு கொச்சகக் கலிப்பா)
தண்டமிழ்மா நிலந்தன்னில் தனிப்பெருமைக் காஞ்சிபுரம்
கொண்டவொரு பேரூராம் குமரன்வாழ் திருப்போரூர்
அண்டுபவர் உள்ளத்தைக் கொள்ளையிடும் பேரழகு
கொண்டவொரு சிற்றூராம் குளிர்படூஉர் வாழியவே!

(நேரிசை ஆசிரியப்பா)
அவ்வூர் நின்றசீர் அமரர் பெருமான்
இராஜி நாட்டார் இலட்சுமி அம்மாள்
இவர்தம் பேரனும், இன்மொழி வல்லார்
தவம்போல் தலைமைப் பண்புகொள் வேந்தர்
ஊராட்சி மன்றம் மீனவர் சங்கம்
பெற்றோர் ஆசிரியர் கழகம் எனப்பல
துறைகளில் தலைமைப் பொறுப்புகள் பலவும்
மேற்கொண் டொழுகு மேன்மை தங்கு
சங்கர் நாட்டார் வசந்தா அம்மாள்
இவர்தம் முதலாம் மகனும் ஆகிய
பொருநன் மலரினும் மெலிதென உளம்புரி
கருணையன் கலைபல கற்ற நிபுணன்
கதிரேசன் எனும்பெயர் தாங்கிய
திண்டோள் மறவன் திருநிறை செல்வனே!

(தரவு கொச்சகக் கலிப்பா)
அருந்தமிழர்த் திருநாட்டில் அகம்நினைக்க வீடருளும்
ஒருமுதல்வன் ஊரான திருவண்ணா மலையென்னும்
பெருவட்டத்(து) ஒருவட்டம் திருக்கலசப் பாக்கத்தே
அருள்சுரக்கும் பருவதஞ்சூழ் தென்மாதி மங்கலமே!


(நேரிசை ஆசிரியப்பா)
அவ்வூர் வாழ்ந்த அமரர் புகழ்சேர்
நாட்டு வைத்தியர் சோதிடர் ஆகிய
குமார சாமி சின்னம்மாள் இவர்தம்
பேத்தியும், பள்ளிக் கொண்டாப் பட்டுச்
சிற்றூர் தன்னில் குடியமர் சோதிடர்
நாட்டு வைத்தியர் சிலம்பு பம்பை
தெருக்கூத்(து) என்னும் அருங்கலை யாவும்
ஒருதனிச் சிறப்பின் உணர்ந்துய ராசிரியர்
சேகர் நாட்டார் பூமா தேவி
இவர்தம் இளைய மகளும் ஆகிய
பொன்மணி அருந்தமிழ் கற்றுளம் மகிழும்
நன்மணி மேகலை எனும்பெயர்
தாங்கிய தெரிவை திருநிறை செல்வியே!

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அவரை
இருவீட் டினரும் ஒருங்கே கூடிச்
சுற்றமும் நட்பும் சூழ நின்று
நற்றவக் கற்பு மணம்செய் விக்க
முறைமை தழுவி முடிவு செய்தனர்
அவ்வழிக்
கருதுளத் தார்க்குக் கருணை புரியும்
முருகன் உறைதிருப் போரூர் அருகே
கால வாக்கம் கணேச மண்டபம்
தன்னில் நிகழும் திருமண விழாஅ;
நன்மைகள் பெருக நன்மணம் காணும்
மக்கள் தம்மை மனமார வாழ்த்தி
மிக்க மகிழ்வொடு விருந்தேற் றிடவே
வருக வருகவென வரவேற் கின்றோம் 
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Aug 4, 2017

இவ்வுல கென்றும் இனிமையதே!

 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


என்னாற் பட்ட துயரெல்லாம்
     இன்றோ டொழிக! இன்முகமே
எந்நா ளும்நான் கண்டிங்கு
     வின்பம் காண மலர்முகமே!
கன்னல் கண்ணன் கனிமுகம்போல்
     கவின்பெற் றுயரினி மைபெறுக
இன்னல் இனிநான் காணேனே!
     இவ்வுல கென்றும் இனிமையதே!

Apr 20, 2017

கருதத் தெரிதல்

நேற்றிருந்த கருத்தோடு நானில்லை இன்று
நேற்றில்லாக் கருத்தோடு நானுள்ளேன் இன்று
நேற்றிருந்த கருத்(து)ஓடும் நிலைக்கருத்தைக் கொண்டு
வீற்றிருக்கும் செந்தமிழால் வேர்தேடும் நன்றே.

Jan 30, 2017

சல்லிக்கட்டுப் புரட்சி – தைப்புரட்சி

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)
காளையினங் காக்கவிளங் காளையருங் கன்னியரும்
நாளையுல கைக்காண நந்தாய்மார் வயிற்றிருக்கும்
வேளையிலும் அருங்கொழுந்து வேதனைகள் விட்டொழித்து
வேளையிது வென்றங்கே வேலையெலாம் விட்டொழித்து
நாளைநம தேயந்த நாட்டுமாட்டின் இனமறுப்பான்
கோளையொழிக் கக்கூடிக் கோலங்கொள் புதுமெரினா

(தாழிசை)
ஏனாகும் என்னாகும் என்றிருந்தார் செயலிழந்தோர்
தேனாகப் பாய்கின்ற செய்திபெறா வருத்தத்தால்
தானாக முன்னெடுத்துத் தனித்திறமை காட்டிநின்று
வானாக உள்ளத்தில் உருவெடுத்த மாணவர்கள்

பரந்தவுல(கு) இதுவாகும் பார்த்தறியும் அலைபேசி
கரந்தவுல(கு) உண்மையெலாம் கடிதில்வந்(து) எடுத்துரைக்க
அரசியலார் வேண்டாமல் ஆதரவும் வேண்டாமல்
சிரசெனநில் தலைவரையும் வேண்டாத மாணவர்கள்

பித்தனெனச் சொல்லாதீர் பிதற்றலெனச் சொல்லாதீர்
புத்தியுள்ள பெருமைமிகு பேராற்றல் வேராற்றால்
சித்தனெனச் சிந்தையினைச் சீர்செய்தே உரமேற்றி
எத்தனைநாள் ஆனாலும் எழுந்தோடா மாணவர்கள்

(அராகம்)
பெருவெளி இருளினில் சிறுதுளி எனவரும்
   ஒளியுமிழ் அலைமொழி மொழி
பெருந்திரள் ஒளியது பெருவெளி இருளினைக்
   குறுகுதல் எனச்செயும் வினை
வருதுயர் வடிவினை ஒருநொடிப் பொழுதினில்
   வெருளென விடிவெளி ஒளி
கருதுயர் அறிவியல் அகந்தனில் மிளிர்மதி
   இளைஞனை நினைந்துளம் தேன்

(அம்போதரங்கம்)
(நாற்சீர் ஈரடி இரண்டு அம்போதரங்கம்)
நடிக்கின்ற கலையுணர்ந்தார் நற்காப்புக் காவலர்தம்
பிடிக்கஞ்சாப் பெருவீரர் போய்நின்றார் கடலருகே
அடியெடுத்து வைத்தாலோ அடுத்தவடி கடல்மீதே
நொடிப்பொழுதில் வைப்போமே நொந்தகல்வீர் நெருங்காதீர்

(நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம்)
தன்னலந்தான் கருதாது தாமாக முன்வந்தார்
தன்பிள்ளை என்றேதோள் தாங்கியவர் முன்வந்தார்
இன்னலந்தான் மாணவர்கள் இன்னலிலும் முன்வந்தார்
என்னளந்தான் ஈசனவன் மீனவனாய் அவனானான்

(முச்சீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்)
பெரு(கு)உப்பை உண்டோர் மானம்
தெருக்குப்பை களைந்தார் வானம்
எழுச்சிக்குச் சான்றாய் இங்கே
விழிப்புக்கும் சினந்தான் பங்கே
காவலர்தான் என்றார் பாரேன்
கயமையுளம் கொண்டார் நேரேன்?
உலகந்தான் வியந்தே காணும்
கலகந்தான் அறிந்தே நாணும்

(இருசீர் ஓரடிப் பதினாறு அம்போதரங்கம்)
முன்மொழிந்தோர் தோள்வாழ்க
நின்றெழுந்தோர் வாள்வாழ்க
அன்றளித்தார் கொடைவாழ்க
வென்றளித்தார் படைவாழ்க
ஒன்றிணைந்தார் நலம்வாழ்க
ஒன்றிணைதார் வளம்வாழ்க
கன்றினைஈ ஆவாழ்க
காளைவளர் உளம்வாழ்க
நடுக்குப்பத் தார்வாழ்க
கொடுக்குங்கைத் தூண்வாழ்க
கலையொழுக்கம் நலம்வாழ்க
நிலைவழக்கக் களம்வாழ்க
பண்பாடும் உளம்வாழ்க
பண்பாடும் நாவாழ்க
கொன்றழித்தார் கரம்வீழ்க
நின்றழிதார் புலம்வீழ்க

(தனிச்சொல்)
எனவாங்குச்

(ஆசிரியச் சுரிதகம்)
சல்லிக் கட்டுத் தடையை உடைக்க
அல்லும் பகலும் அயரா(து) உயர்ந்த
நல்ல உள்ளத் தார்தம் புகழைச்
சொல்லில் அடக்கிச் சொல்லல் ஆகுமோ?
தெங்கி னைப்போல் தான்தரும் நன்மைக்(கு)
இங்கே எழுந்த தைப்புரட்சி
எங்கும் என்றும் இனியும் எழுமே!

Jan 17, 2017

சோலைகவியரங்கம் 4 - புதுமைப் பொங்கல் பொங்குக

கவியரங்கத் தலைமை
பைந்தமிழ்ச் செம்மல் வள்ளி முத்து 

கவிஞர் அழைப்பு - வள்ளி முத்து
பலமுள் இருக்குமாம் பால்முகமும் காட்டும்
சிலநாரொ ளிக்கவுள்தித் திக்கும் - புலவோரே.!
நேரகழ்ந்து பார்த்தால்தான் நீரறிவீர் தீம்பலவும்
வேறல்ல சுப்ரமணி என்று

குமிழுடையும் சொற்களின்றி கொள்கைசூழும் பாவேந்தி
அமுதமன்ன பாக்களூடே ஆழ்கருத்தை ஆளுகின்ற
தமிழகழ்வ.! அருங்கவியே.! தைப்பொங்கல் பாடவாரும்.!
இமிழ்கடலாய் ஒலிக்கட்டும் இதயமீதில் இப்பொழுதே.!


தமிழகழ்வன் சுப்பிரமணி
வாழ்த்து, அவையடக்கம்
பைந்தமிழ்ப் பாவுக் கடிமைசெய்
   பாவலர் ஆவல் வாழியவே
பைந்தமிழ்ச் சோலைக் கவியரங்கப்
   பாவலர் தலைவர் வாழியவே
பைந்தமிழ்ச் சோற்றை உண்டுள்ளம்
   பண்படும் நோக்கம் வாழியவே
பைந்தமிழ் சிறிதே உண்டவன்யான்
   பார்வையில் பிழைதீர்த்(து) அருள்வீரே!

பழைமை காக்கும்
புதுமைப் பொங்கல் பொங்குக

எதுபுதி(து) என்றன் மனத்தினிலே
   ஏறிய வேதனை; இன்றுள்ளம்
வெதும்பி உழவன் சாகின்றான்
   விளைச்சல் இன்றி நமக்கெல்லாம்
புதுமைப் பொங்கல் என்பதென்ன?
   புதிதாய்ப் பொங்க என்னுளது?
புதுப்பா னையில் புத்தரிசி
   பொங்கு வோமா இவ்வாண்டு?         1

புதுப்பித்து வாழ்வோம் என்ற
   புதுப்பித்துப் பிடித்தல் நன்றே
புதுப்பித்தல் என்ப தென்ன?
   பழைமையை மறந்தி டாமல்
புதுப்பானை ஆனால் கள்ளோ
   பழையதே என்று சொல்லப்
புதுமையைச் செய்தல் தானே
   பழைமையை மறத்தல் ஏனோ?        2

பழைமை அறிய முயல்கின்ற
   பாதை தன்னில் புதுமையினைத்
தழைக்கச் செய்வோம் நல்லுலகைத்
   தாங்கி நிற்கும் தூணாவோம்
பழைமை என்றால் என்னென்று
   பகுத்துக் காணாப் புற்றனத்தை
வழமை யாகக் கொள்கின்ற
   மடமைத் தனத்தைக் கைவிடுவோம்    3

பழைமைப் பொங்கல் பொங்கிடுவோம்
   பழனம் பண்பட் டிடவியற்கை
வழங்கும் இன்ப வளங்காப்போம்
   மழைநீர் சேர்த்து மண்காப்போம்
உழவைக் காப்போம் உயிர்காப்போம்
   உலகைக் காக்க முன்னெழுவோம்
வழமை மறவா திருந்தேநாம்
   வரும்பின் தலைமு றைகாப்போம்        4