Dec 26, 2010

ஏன் தோற்றுப்போனேன் நான்?

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஏன்தோற்றுப் போனேன்நான் என்மீ துனக்கு
     
யெள்ளளவும் விருப்பமிலை என்ப தாலோ?
'நான்மாற மாட்டேன்'என் றேநீ சொன்னாய்
      நானினைத்தேன் 'மனிதமனம் தானே மாறும்'
ஆனாலென் எண்ணமெல்லாம் தவிடு பொடியாய்
       ஆகியதுன் னொருவார்த்தை கேட்ட கணமே
ஏனென்னை நம்புகிறாய்? ஏமா றாதே!
       எனையுன்றன் நினைவினின்று நீக்கென் றாயே!

எனக்கினியும் உரிமையிலை உன்னை நினைக்க
      என்தோழி தன்கடமை நன்றாய்ச் செய்தாள்
உனக்கென்றன் மீதில்லா விருப்பம் தன்னை
      உணர்ந்துகொண்டு வுண்மையொன்று ரைத்தாள் பாரேன்
'உனக்குமந்த தைரியந்தான் வரவே யில்லை
      உடன்படித்த நண்பனைஏன் புண்ப டுத்த?'
எனநினைத்தாய் அவள்செய்தாள் நட்பின் கடமை
      எனைமிகுதிக் கண்மேற்சென் றிடித்து ரைத்தாள்

அவள்கேட்ட வம்மூன்று கேள்வி கள்தான்
      அம்பைப்போல் என்னுளத்தைத் துளைத்தெ டுக்க
தவம்போன்று வுனைநினைந்த என்றன் வாழ்க்கை
      தவறென்றும் வழிமாறும் என்று ரைக்க
அவமெனக்கு மனப்பேச்சைக் கேட்ட ழிந்தேன்
      அறிவுக்கண் திறந்தாளே! மூன்றே வார்த்தை
'கவலையே மாற்றந்து ரோகம்' என்றாள்
     முதலுனக்கு யிடையெனக்குக் கடைபி றர்க்கு

என்செய்ய? தேவதையே! முருகா! என்றேன்
      எல்லாமே இன்றமிழ்ச்சொல் விளையாட் டாக
என்பிதற்றல் இலக்கணம்பொ ருந்து கவிதை
      எனப்பதிந்தே யெனைப்பார்த்து யெள்ளி நகைக்கும்
என்னாகும்? என்செய்வாய்? என்றக் கறைதான்
      இனியார்மேல் யான்கொள்வேன் இன்னும் ஒன்று
என்னெதிர்கா லக்குறிக்கோ ளாக நிற்கும்
       ஆற்றுமொழிக் கென்னுரைப்பேன் அஃதுன் பெயரே!

எங்கிருந்தா லும்வாழ்க நன்றாய்! இனியும்
       எள்ளளவும் உனைத்துயரப் படுத்த மாட்டேன்
தங்காது யென்மனதில் உன்னைப் பற்றித்
       தான்கொண்ட எண்ணங்கள் முயற்சி செய்வேன்
தங்களுடை வாய்மொழியாம் 'நன்றி'  தன்னைத்
       தான்செலுத்தப் பெருங்கடமை அருணா வுக்கு
எங்கிருந்தா லும்வாழ்க நன்றாய்! பெண்ணே!
       எங்கிருந்தா லும்வாழ்க நன்றாய்! பெண்ணே!
                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 6

“மைக்ரோ டெவில்! (Micro Devil...!) - குட்டிச் சாத்தான்”, என்று சொன்னதும் சிரித்து விட்டான் துரை.

“என்னடா இது?”

“அன்று அந்தப் புலம்பு புலம்பினாய், தேர்ச்சி பெறுவேனான்னு. உன்னைச் சமாதானப் படுத்தவே எங்களுக்குப் போதும் போதும்’னு ஆகிடுச்சு. அவ்வளவு தொல்லை பண்ணிட்டு,  இன்னிக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கியே,  அதனாலதான்” என்றான் ஸ்னோவின்.

‘யார் யாரோ என்னென்னமோ எல்லாம் சாதித்துவிட்டு எத்தனையோ பெரிய பட்டமெல்லாம் பெறுகிறார்கள். எனக்கும்கூட இப்படியெல்லாம் பட்டப்பெயர் வைக்க ஆட்கள் இருக்கிறார்களே’ என்று எண்ணி நெகிழ்ந்து போனான் துரை.

துரை இப்போதெல்லாம் யாரிடமும் கோபித்துக் கொள்வதில்லை. இரவீந்தர் முன்பைவிட மிகவும் பிடித்துப் போன நண்பனாகிவிட்டான். அவனிடம் முன்பு தான் கோபித்துக் கொண்டதை எண்ணி அவ்வப்போது வருத்தப்படுவான். இனிமேல் யாரிடமும் கோபித்துக் கொள்ளக்கூடாது என்று தனக்குள் ஓர் உறுதிகொண்டான். இப்போது யார் எவ்வளவு கேலி செய்தாலும், துன்பப்படுத்தினாலும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டது.

"டேய்! வாங்கடா சாப்பிடப் போலாம். Time ஆயிடுச்சு"
எல்லாரும் சென்றார்கள்.

சே! செம talent ra."
"யார டா சொல்ற?"

சச்சின தான்டா."
"ஆமாம் டா, அவர் 16 வயசுலயே கிரிக்கெட்டுக்கு வந்த மார்க்கண்டேயன்"
"செம கலக்கு கலக்குறார் டா, இந்த God of Cricket"
"தென் ஆப்பிரிக்கா கூட ஆடுறது னா, திருநெல்வேலி அல்வா சாப்படறது மாதிரி னு போட்டிருந்தாங்க பாத்தியா பேப்பர்ல"
". . ."
ஸ்னோவினும் கார்த்தியும் பேசிக்கொண்டே வந்தார்கள்.

சிவ பூஜையில் கரடி புகுந்தது.
"ஸ்னோவின்,  எனக்கு ஒரு புதுப்பெயர் வைத்திருக்கிறேன். ‘வெண்பாரதன்’. எப்படி இருக்கிறது?”

“நல்லாதான் இருக்கு, நீயும் உன் தமிழும், திருந்தவே மாட்டியா?” என்றான் ஸ்னோவின்.

“சரி, இப்ப இந்தப் பெயர் வச்சிக்கிட்டு என்ன பண்ணப் போற?”, கேட்டான் கார்த்தி.

“இனிக் கவிதைகளை இந்தப் பெயரிலேயே எழுதப் போகிறேன். முதலில் இந்தப்பெயரில் ஒரு மின்னஞ்சல் உருவாக்கப் போகிறேன்” என்றான் துரை.

ஸ்னோவினுக்கு உள்ளுக்குள் ஒரு திருப்தி ஏற்பட்டது. ‘பரவாயில்லை. இவன் பிழைத்துக்கொள்வான். கணினி ஆதிக்கக் காலத்தில், கணினித்தமிழ் வளர்ச்சிக்கு இவனும் ஒரு காரணம் ஆவான்’

வெண்பாரதன் இப்போது ஒரு குறள்வெண்பா எழுதினான்.
             
               ‘அமிழ்தினும் ஆற்ற இனிதே;தான் பெற்ற
                 தமிழும்நண் பர்களும் தான்’
                                               (கதை முடிவுறும். தமிழ்ச்சிந்தனை தொடரும்)

Nov 27, 2010

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 5

செமஸ்டர் தேர்வுகள் ஒவ்வொன்றாய் முடிந்து கொண்டிருந்தன. கடைசித் தேர்வு எழுதிய அன்று மட்டும் மாணவர்கள் கலங்கிவிட்டார்கள். வழக்கத்திற்கு மாறாக எதிர்பாராத கேள்விகளே மிகுதியாகக் கேட்கப் பட்டிருந்தன. பாவம், நம் துரையின் நிலைமையும். தேர்வு முடிந்ததும் வழக்கம்போல் ‘உம்’மென்று இருந்தான்.

“என்ன துரை? ஏன் ஒருமாதிரியாய் இருக்கிறாய்?”, கேட்டான் கார்த்தி.

“இல்ல அப்பு,  தேர்வு சரியாவே எழுதலை,  அதான்”.

“அது ஒன்றும் பிரச்சினை இல்லை, கேள்வித்தாள் கடினமாக இருப்பதால், பெரும்பாலும் ‘பாஸ்’ பண்ணி விட்டுடுவாங்க, கவலைப்படாத”, என்றான் கார்த்தி.

தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சியில், அவரவர்கள் சொந்த ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானார்கள். என்ன இருந்தாலும், நம் துரையின் முகம் வாடிப்போய்த்தான் இருந்தது.  ஸ்னோவின் சொல்லாத சமாதானமே இல்லை. நம் துரையும் கடவுளிடம் வேண்டிக் கொண்டான். ‘முருகா, நான் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால், உனக்குப் பாமாலைகள் சூட்டுகிறேன்’.

விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரிக்குத் திரும்பினார்கள். சில நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகின. மாணவர்களைப் பதற்றம் சூழ்ந்தது. முடிவுகளைத் தெரிந்துகொள்ளும்வரை, அவர்களின் உயிர், அவர்களிடம் இல்லை.

‘முருகா, முருகா ...’ என்று உச்சரித்துக் கொண்டே இருந்தான் துரை.

“மச்சி, என்னோடது ரெண்டு ஊத்திக்கிச்சு, உன்னோடது?”

“பாவி ரெண்டுதானா, நான் நாலு வச்சிருக்கேன் டா”

அங்கங்கே கேட்ட குரல்கள் இன்னும் கலக்கத்தை ஏற்படுத்தின.

“ஏ!  நான் பாஸ் ஆயிட்டேன்”, ஸ்னோவின் கத்திக்கொண்டே கூட்டத்தினின்றும் ஓடிவந்தான்.

“அப்பா! நானும் பாஸ்”, சொன்னான் கார்த்தி.

“துரை, என்ன ஆச்சுடா? ஏன்டா கலங்கிப் போய் இருக்க?”

“நான் இன்னும் பார்க்கவே இல்லடா...”

“அறிவுக்கொழுந்து! இரு வர்றேன்.”

சற்று நேரம் கழித்து, ஸ்னோவின் திரும்பி வந்தான். “டேய்,  நீ பாஸ் ஆயிட்டே!”

“குள்ளப்பய...! என்னா சீனப் போடுது”, செல்லமாய்க் கடிந்தான் ஸ்னோவின்.

மகிழ்ச்சி கொள்ளவில்லை துரைக்கு. ‘நானும் பாஸ் ஆயிட்டேனா?’.

அன்றிரவே ஆரம்பித்தான் பாமாலை சூட்ட,

'முதலைத் தருவான் முருகன் ...'

மறுநாள் எல்லா மாணவர்களும் துரைக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

“துரை! வாழ்த்துகள்! நீதான் வகுப்பிலேயே இரண்டாவது மதிப்பெண் வாங்கியிருக்கிறாய்!”, ஆசிரியர் சொன்னார்.

ஆம், அன்று ஸ்னோவின் சொன்னது இன்று உண்மையாகிப் போய்விட்டது. இவனை எண்ணி, ஸ்னோவினும் கார்த்தியுமே இவனைவிட மிகவும் மகிழ்ந்தார்கள்.

“துரை!  நீதானே எல்லாருக்கும் ஏதாவது ஒரு பெயர் வச்சிட்டிருக்கே! இப்போ நான் உனக்கு ஒரு பெயர் வச்சிருக்கிறேன்”, என்றான் ஸ்னோவின்.

“என்ன பெயர்?”, ஆவலானான் துரை.

“மைக்ரோ டெவில்! (Micro Devil...!)”.

Oct 27, 2010

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 4

டேய், என்னடா ஆச்சு, பேசுடா”, கெஞ்சினான் இரவீந்தர்.
முகங்கொடுத்துப் பேசவில்லை துரை.
இரவு உணவின்போது, இரவீந்தருக்கு என்னவென்று புரிந்துவிட்டது. உணவு முடிந்தபின், “சாரிடா துரை,.. நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது. ஆளுக்கொரு வாழைப்பழம்தானே வைக்கிறார்கள். அதுல போய் கைவச்சிட்டேனே, சாரி டா” என்றான் இரவீந்தர்.
“அடத்தூ! இதான் பிரச்சினையா? இதுக்கா மூஞ்சத் தூக்கி வச்சிட்டு இவ்வளவு நேரமா அவன் கிட்டப் பேசாம இருந்த? இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர் டா”, என்றான் ஸ்னோவின்.
“உன்ன யாருடா அவன் வாழப்பழத்துல கைவைக்கச் சொன்னது? உனக்குந்தானே ஒன்னு வெச்சாங்க, அது போதாதா உனக்கு”, என்றான் இரவீந்தரிடம்.
துரையும் இரவீந்தரும் ஒருவருக்கொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். ‘சாரி’ சொல்லிக் கொண்டார்கள். அன்றிரவு இந்நிகழ்ச்சியை ஒட்டி, துரை ஒரு கவிதை எழுதினான்.

துரைக்குத் தூக்கம் வரவில்லை. இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தான். சிறுபிள்ளைத்தனமாய்ச் செய்த செயலை எண்ணியும், கார்த்திகேயன் சொன்ன பதிலை எண்ணியும் சிரித்துக் கொண்டிருந்தான். என்னமோ தெரியவில்லை, ஸ்னோவினைப் போலவே, கார்த்திகேயன் மீதும் பெருமதிப்பு வந்துவிட்டது. அவனைச் செல்லமாய் ‘அப்பு’ என்றே அழைக்க ஆரம்பித்து விட்டான். இன்மொழியன் என்றும் பெயர் வைத்து விட்டான்.
கார்த்திகேயன் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவன். ஸ்னோவின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவன். ஆனாலும் சென்னைக்கு வந்த பிறகு, அவரவர்களின் வட்டார மொழி வழக்குகளை அவ்வளவாய்க் காட்டிக் கொள்ளவில்லை. கேலி செய்வார்களோ என்ற எண்ணத்தால். ஆனால் அவர்கள் இருவரும் ஒருத்தரையொருத்தர் கேலி செய்து கொள்வார்கள். “உங்க ஊர்ல எல்லாரும் ‘எலே’ன்னுதான் கூப்பிடுவார்கள்... ‘எலே வாலே போலே ஆம்பிளே பொம்பிளே’ன்னு”, என்பான் கார்த்தி. “உங்க ஊர்ல மட்டும் என்ன? ‘ஏனுங்க, வாங்க, போங்க, மாடுங்க, கண்ணுங்க, வாண்டுங்க’ன்னு கூப்பிடுவாங்க”, என்பான் ஸ்னோவின். ‘பாம்பறியும் பாம்பின கால்’ என்பதுபோல் உயர்ந்த குணங்களைக் கொண்ட இருவரும் இணைபிரியாத நண்பர்களாய் இருந்தனர். இத்தகைய எண்ணங்களை மனதில் அசைபோட்டு மகிழ்ந்திருந்த துரைக்கு இன்னமும் தூக்கம் வரவில்லை.

Oct 9, 2010

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 3

தேர்வு முடிந்ததும், “என்னடா, விடைத்தாளைச் சீக்கிரமா குடுத்துட்ட போல? அப்புறமும் என்னடா எழுதிட்டு இருந்த?” எனக் கேட்டான் ஸ்னோவின்.
“வேற என்ன? கவிதைதான்”, மொழிந்தான் சின்னதுரை.
“அறிவுக்கொழுந்து! தேர்வு அறையிலயும் உன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டியா? சரி... அதை விடு. தேர்வு எப்படி எழுதின?”
“அதான் அரைமணி நேரம் முன்னயே கொடுத்துட்டேனே! சரியாவே எழுதல...”
“ஏன்டா...? நேத்து படிச்ச கேள்விங்க தானே கேட்டிருந்தாங்க...”
“அப்படியா...! படிச்ச மாதிரியே தெரியலியே...”
“ஒன்னுமில்ல... கேள்வியைக் கொஞ்சம் மாத்திக் கேட்டிருந்தாங்க...”
“ஹூம்... என்ன பண்றது...? எனக்குப் புரிஞ்சது அவ்வளவுதான்”
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல... போகப் போகப் புரியும்...”
“ஏதோ, உன்னால தான் நான் கொஞ்சமாவது எழுதினேன்”
“அடுத்த வருஷம் பாரு... நீ என்ன விட அதிக மார்க் வாங்குவ...”
“எப்படிச் சொல்ற...?”
“உங்கிட்ட நல்ல முன்னேற்றம் இருக்கு...”
“பார்ப்போம்”
இதுவல்லவா நட்பு! சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டுமன்றோ!

மாலை, விடுதி அறையில் தங்கியிருந்த இன்னொரு நண்பனிடம் ஊமைச் சண்டையில்
இறங்கியிருந்தான் சின்னதுரை. இரவீந்தர் அவனிடம் தானாய் வந்து பேசினாலும், அவன் வாய் திறக்கவே இல்லை. ‘உம்’மென்று இருந்தான். அவனுக்கு இரவீந்தர்மேல் என்ன கோபமோ தெரியவில்லை.
உள்ளே நுழைந்த ஸ்னோவினிடம் இரவீந்தர் சொல்ல, அவன் சின்னதுரையிடம் கேட்டான். “என்னடா பிரச்சினை உனக்கும் அவனுக்கும்?”
அப்போது கூட, அவன் வாய் திறக்கவே இல்லை.
“அவன், உம்முனா மூஞ்சி, அப்படித்தான் இருப்பான். அவனே சொல்லும்போது கேட்டுக்குவோம்”, என்றான் ஸ்னோவின்.
அந்த அறையில் தங்கியிருந்த இன்னொருவன் கார்த்திகேயன். அவனிடம் சென்று ஸ்னோவின் கேட்டான், “கார்த்தி, ரொம்பப் பசிக்குது... சாப்பிட ஏதாவது வச்சிருக்கிறியா?”
“ஆம், வச்சிருக்கேன்”
“சரி, கொடு”
“வாய் வச்சிருக்கிறேன்...”
குபீர் என்ற சிரிப்பு அறைமுழுவதும் பரவியது. இரவீந்தரும் கார்த்தியும் சிரித்தார்கள்.
“ச்சோ, உங்கிட்ட போய் கேட்டேன் பாரு”, என்றான் ஸ்னோவின்.
அறை அமைதியானது. ஓர் ஐந்து நிமிடம் போயிருக்கும். மீண்டும் திடீரென்ற சிரிப்பொலி. சின்னதுரைதான் சிரித்தான். ஆச்சரியமாய்ப் பார்த்தார்கள் மற்ற மூவரும்.
“என்னடா, உம்முனா மூஞ்சி! திடீர்னு சிரிக்கற? என்னாச்சு உனக்கு?”, கேட்டான் ஸ்னோவின்.
“ஒன்னுமில்ல, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கார்த்தி சொன்னானே! அதை நெனச்சித்தான் சிரித்தேன்”
“அடப்பாவி! மொக்க நாயே! ரொம்ப லேட் ரெஸ்பான்ஸ் டா, சரி சிரிச்சுட்ட, கோபம் போயிடுச்சா? என்ன பிரச்சினை உனக்கும் அவனுக்கும்?”
அதைச் சொல்லத் தயக்கப்பட்ட சின்னதுரை, “அப்புறமா சொல்றேன்” என்றான்.
இன்னும் கடுப்பானான் இரவீந்தர்.
                                                                   (தொடரும்)

Oct 1, 2010

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 2

பக்கத்து அறையில் தங்கி இருந்த முகுந்தன் உள்ளே நுழைந்தான்.
“வாடா, நல்லவனே!”, தனக்குப் பிடித்தவர்களை, உற்சாகத்தோடு இப்படித்தான் அழைப்பான் சின்னதுரை. “என்ன படிச்சிட்டியா?”
முகுந்தன் சொன்னான், “எங்க படிக்கிறது, ஒன்றும் புரிய மாட்டேங்குது, ஆமா, நீ படிச்சிட்டியா?”
“நானா? எங்க படிக்கிறது? ‘சப்ஜக்ட்’ட தூக்கிப் போட்டுட்டுக் கவிதை எழுத ஆரம்பிச்சிட்டேன்ல...”
“ஆமாம், நேத்து அந்த சீனியர் அண்ணன் கேட்டாரே ஒரு கவிதை, அதை எழுதிட்டியா?”
“ஏதோ எழுதியிருக்கேன், படிச்சுப் பாரு”. கவிதையைக் கொடுத்தான் சின்னதுரை.

“காற்றினிலே
பூங்காற்றினிலே
வரும் பாட்டினிலே
.............................
............................”.

முழுவதையும் படித்துவிட்டு, “அடேயப்பா! எப்படிடா இப்படியெல்லாம் எழுதறீங்க? செம ‘ரைமிங்’கா இருக்கு. ரொம்ப ஃபீல் பண்ணி எழுதி இருக்க போல!”, என்றான் முகுந்தன்.
“ஒரு இலக்கணங்கூட இல்லாம எழுதி இருக்கேன். இதப்போய் இவ்வளவு பெரிசா பேசறியே?”, என்றான் சின்னதுரை.
“இந்தக் காலத்துல இப்படி எழுதனாலே போதும்டா”
“முகுந்தா, இந்தக் கதையைக் கேட்டியா?”, என்றான் ஸ்னோவின் முகத்தைத் துடைத்துக் கொண்டே.
“எந்தக் கதை?”, என்றான் முகுந்தன்.
“ஒன்னுமில்ல, துரை எனக்கு ஒரு பேரு வச்சிருக்கிறாராம்...”
“அப்படியா, துரை? என்ன பேரு?”
“வெண்பனி வெற்றியன்!”, என்றான் சின்னதுரை.
“என்னாது...? வெண்பனி வெற்றியனா...?” சிரித்தான் முகுந்தன். ஸ்னோவினும் தான்.
படிப்பு நேர மணி அடித்தது. “ஸ்டடி பெல் அடிச்சிட்டாங்க... நான் கிளம்பறேன்”, கிளம்பினான் முகுந்தன்.
மறுநாளைய சிறுதேர்வுக்குப் படிக்கத் தொடங்கினார்கள். ஆங்கிலம் அவ்வளவாய்ப் புரிந்துகொள்ள முடியாத சின்னதுரை, அகராதியைப் புரட்டிப் புரட்டி, ஏதோ புரிந்துகொண்டு படித்தான். படிப்பு நேரம் முடிந்து, இரவு உணவிற்கு மணி அடித்தார்கள்.
“படிச்சிட்டியா துரை?”, கேட்டான் ஸ்னோவின்.
“ஏதோ கொஞ்சம் புரிஞ்சது. இன்னும் முடிக்கலைடா”, என்றான் சின்னதுரை.
“சரி, சாப்பிட்டுட்டு வந்த பிறகு, நானே மீதியைச் சொல்லிக் குடுக்கறேன்”, என்றான் ஸ்னோவின்.
மறுநாள், தேர்வை முடிந்தவரை எழுதிவிட்டு, விடைத்தாளை ஆசிரியரிடம் கொடுத்தான் சின்னதுரை. “இன்னும் அரைமணி நேரம் இருக்கு, அப்புறந்தான் போக முடியும். அப்படியே உட்கார்”, என்றார் ஆசிரியர்.
அப்படியே அமர்ந்தான் சின்னதுரை. அவனது எண்ணங்கள் சும்மா இருக்குமா? கவிதைத் தாளம் போட ஆரம்பித்தன. எழுதுவதற்குத் தாள் இல்லையே... என்ன செய்வது? வினாத்தாளின் பின்புறம் காலியாக இருந்தது. அது போதுமே! எழுத ஆரம்பித்தான் மனதைத் தோண்டி...

“தங்கத்திரு மங்கையொரு
செங்கண்ணுதற் றிங்கள்வத
...........................................
...........................................”

                                                      (தொடரும்)

Sep 25, 2010

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 1

“ஸ்னோவின் (Snowin)!”, அழைத்தான் சின்னதுரை.
“என்னடா?”, கேட்டான் ஸ்னோவின்.
“இந்தப் பெயர் எப்படி இருக்கு?”
“எந்தப் பெயர்?”
“வெண்பனி வெற்றியன்...”
“ஏன்டா, உனக்கு வேற வேலையே இல்லையா...? போயிடு அந்தப் பக்கம்... வந்து இருக்கிறது எஞ்சினியரிங் காலேஜுக்கு, தமிழ் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கான்...”, இது ஸ்னோவினின் கோபக்கனல்.
அது இல்லடா, உன் பெயரைத்தான் அப்படி மொழிபெயர்த்திருக்கிறேன்”, என்றான் சின்னதுரை.
இப்படித்தான் அவ்வப்போது எதையாவது சிந்தித்துக்கொண்டிருப்பான் சின்னதுரை. அவற்றைத் தமக்குப் பிடித்த நண்பர்களிடம் விவாதிக்கவும் செய்வான். அவர்கள் என்ன திட்டினாலும் இவனுக்கு உரைக்கவே உரைக்காது.
சிரித்துக்கொண்டே சொன்னான் ஸ்னோவின். “ஏன்டா நீ மட்டும் இப்படி இருக்கே! தமிழெல்லாம் எவனுக்குடா வேணும்? அவனவன் என்னென்னமோ படிச்சிட்டு எங்கெங்கேயோ போய்க்கிட்டு இருக்கான், தமிழ் படிச்சா ஒரு வேலையும் கிடைக்கப் போறதில்ல!”
“என்னடா அப்படிச் சொல்லிட்டே! நீ வேணும்னா பாரு, தமிழுக்குப் பிற்காலத்துல எவ்வளவு மதிப்புக் கிடைக்கப் போகுதுன்னு”, என்றான் சின்னதுரை.
“அப்படி மட்டும் நடந்திட்டா, நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன். இப்ப ஆள விடு”, என்று சொல்லிவிட்டு, முகம்கழுவச் சென்றுவிட்டான் ஸ்னோவின்.
என்னதான் ஸ்னோவின் சின்னதுரையைத் தட்டிக்கழித்துப் பேசினாலும், அவன் கவலைப்படுவதில்லை. மாறாக, ஸ்னோவின் மீது தனிப்பாசம் கொண்டிருந்தான். ஏனென்றால் அவனது பேச்சில் விளையாட்டுத்தனம் தெரியுமே தவிர, தீவிரம் தெரியாது. அன்பாகப் பழகுபவன். சில விஷயங்களில் தன்னிடம் குறை இருப்பதை எண்ணி, சின்னதுரை வருத்தப்படும்போதெல்லாம் ஸ்னோவின்தான் அவனுக்கு ஆறுதல் கூறுவான். ஒருமுறை 90-10 விதியைப் பற்றிக்கூட, ஸ்னோவின் அவனிடம் சொல்லி இருக்கிறான்.
“ஒவ்வொரு நாளும் சில 10 சதவீதம் வருத்தம் தரும் நிகழ்வுகள் நேரலாம். அதற்காக மீதமுள்ள 90 சதவீத மகிழ்வுதரும் நிகழ்வுகளைத் தவற விட்டுவிடக் கூடாது”.
இவ்வாறான ஊக்கமூட்டும் வார்த்தைகளால் ஸ்னோவினிடம் தனிமதிப்பு வைத்திருந்தான் சின்னதுரை.
பள்ளியில் தமிழ்வழிக் கல்வியையே பயின்றிருந்ததாலும், புத்தகப் புழுவாகவே இருந்ததாலும், சின்னதுரைக்கு ஆங்கில அறிவும், உலக அனுபவமும் சற்றுக் குறைவுதான். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவனானாலும், யார் யாரோ செய்த உதவிகளினால் கல்லூரி வாசலையும் தொட்டுவிட்டான். அங்கு, இனி, ஆங்கில வழியில் மட்டுமே பயில முடியும் என்பதால், அவனைவிட உயர்நிலையில் உள்ள நண்பர்களிடம் நல்ல பழக்கம் வேண்டும் என்பதற்காகவே, தேடிக்கிடைத்த நண்பர்களில் ஸ்னோவினும் ஒருவன். பெரும்பாலான நிகழ்வுகளில் ஸ்னோவினின் எண்ணங்கள் யதார்த்தமானதாக - உண்மையாக அமைந்து விடுவதை அவனே நேரில் உணர்ந்திருக்கிறான்.
அவர்கள் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். சின்னதுரைக்கு விளையாட்டுகளில் மனம் செல்வதில்லை. மற்ற நண்பர்கள் விளையாடச் சென்றுவிடும்போது, அவன்மட்டும் தனிமையை உணர்வான். அத்தகைய நேரங்களில் தமிழைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிடுவான். தமிழே அப்போது அவனுக்கு உற்ற துணையாக இருந்தது. அப்படிச் சிந்தித்தவற்றின் விளைவுகள் அவ்வப்போது நண்பர்களிடமிருந்து கோபமாக வெளிப்படும்.
                                                       (தொடரும்)

Sep 5, 2010

குரு வணக்கம்

இன்று ஆசிரியர் தினம். என் வாணாளில் நான் சந்தித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. படிப்பு மட்டுமன்றி, வாழ்க்கைப் படியில் முன்னேறவும் வழிசெய்து தந்த ஆசிரியர்களை எண்ணிப் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
இதுவரை நான் படித்துவந்த வகுப்புகளின் ஆசிரியர் பெயர்களை நினைவுகூரலாம் என நினைத்தேன். முடிந்தவரை முயன்றிருக்கிறேன்.

நகராட்சி நடுநிலைப் பள்ளி, திருவண்ணாமலை
உஷா (முதல் வகுப்பு)
கிருஷ்ண மூர்த்தி (இரண்டாம் வகுப்பு)
தமிழ்ச்செல்வி (மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்பு)
வேலு, தனக்கோட்டி (ஐந்தாம் வகுப்பு)

திரு க.குப்புசாமி நினைவு உயர்நிலைப் பள்ளி, சின்னக்காங்கியனூர், திருவண்ணாமலை.
சுப்பிரமணியன் (தலைமை ஆசிரியர், அறிவியல் ஆசிரியர்)
செயராமன், ஞானப்பிரகாசம் (தமிழ் ஆசிரியர்)
நடராஜன் (சமூக அறிவியல்)
காந்தி (ஆங்கிலம்)
கிருஷ்ணன் (கணிதம், தமிழ்)
அருணாசலம் (ஆங்கிலம், அறிவியல்)
சரவணன் (கணிதம், தமிழ்)
இரவி (கணிதம்)
ரேவதி (ஆங்கிலம், சமூக அறிவியல்)
புவனேஸ்வரி (ஆங்கிலம், கணிதம், அறிவியல்)
வீரசேகர் (தமிழ்)
கார்த்திகேயன் (விளையாட்டு)
தனசேகர் (சமூக அறிவியல்)
மற்றும் பலர்

Danish Mission மேனிலைப் பள்ளி, திருவண்ணாமலை.
தெய்வநீதி, தங்கவேலு (தமிழ்)
Earnest William (ஆங்கிலம்)
சம்பத் (கணிதம்)
Hubert Dhanasundaram (இயற்பியல்)
சுமித்ரா (இயற்பியல்)
ஜமுனா (வேதியியல்)
தாவரவியல் ஆசிரியை
ஜெயமேரி பூங்கொடி (விலங்கியல்)

இளங்கோ (நுழைவுத்தேர்வு)

ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சென்னை
குமரன், நந்தினி ஸ்ரீதர், அன்பரசு, சுவாதி, சுமதி, விஜயராமன், சரவணன், அனிஷா,  Graphics And Multimedia ஆசிரியை, மோகன், மற்றும் பலர்.
சிவசெல்வன், Joseph Francis, அமுதா, Freny Joy, மற்றும் பலர்.
நடராஜன், அசோக், மகாலட்சுமி, உமா, DPSD ஆசிரியை, மற்றும் பலர்.

தற்போது
சுப்பிரமணியன் இராஜா, இராம், Phani Bhushana,
நித்யா, சரவண வடிவேல், தாரணி, வினோத், இராகவேந்திரா.

அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sep 2, 2010

நண்பனின் பிரிவு

நதிக்கு நண்பன் நாணல்தான்
'நலமா?' நாளும் கேட்டிடுமே!                        1


நாணலின் நண்பன் நதிதானே
வாழ்வினில் வளமே சேர்த்திடுமே!            2


தட்டிக் கொடுப்பவன் நண்பனே!
தட்டிக் கேட்பதும் நண்பனே!                           3

இன்பம் துன்பம் ஏதெனினும்
உடனுறை பவனே நன்னண்பன்                    4

நினைந்தால் போதும் நெஞ்சார
நினைவிலும் நன்மை செய்திடுவான்         5

நேசம் உள்ள நண்பனே!
நெஞ்சம் உன்னை மறக்குமா?                        6

பாசப் பிணைப்புப் பந்தமே!
பண்பில் ஓங்கிய சொந்தமே!                          7

நாளும் உன்னை நினைக்கையில்
நெஞ்சில் இன்பம் தங்குதே!                             8

கொட்டும் நீர்த்துளி கண்ணிலே
நண்பா பிரியும் போதிலே                                 9

நிலையி னின்று பிரிந்தாலும்
நினைவுகள் என்றும் மறவாதே!                   10
                   - சுப்பிரமணிய தமிழகழ்வன்

Aug 22, 2010

உயர்தமிழே!

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)
ஓங்குமலை தானளிக்க ஓசையொடு பாயருவி
ஆங்குப்பே ராறாகி அழகாக விரிசோலை
ஓங்கிவளஞ் செழித்தன்ன உளம்புகுந்த உயர்தமிழே!
தேங்குதமிழ்த் தெம்மாங்குத் தேன்பாட்டைப் பாடுவனே!

(தாழிசை)
ஓரணுவாய் உட்புகுந்தே உயருணர்வைக் கிளப்பிவிட்டுப்
பேராற்றல் வெளிப்படுத்தும் பெருவெடிப்பாய் வளர்தமிழே!

புதுமையிலே மோகங்கள் புதுப்பாதை செய்தாலும்
பழமைநிலை குன்றாத பண்போடு வளர்தமிழே!

தொன்றுதொட்டுத் துறைதோறும் துள்ளளொடும் ஏடெதிர்ந்து 
வென்றுவிட்ட ஆற்றலொடும் விண்ணோங்கி வளர்தமிழே!

(தனிச்சொல்)
நீயே

(சுரிதகம்)
என்றும் உள்ளம் ஏத்திப் பாடத்
தென்றல் தானும் தாலாட்ட
நின்றுநின் றாடும் நேயத் தேவே!

Egmore - எக்கு(eggu)

        எனக்கு எக்கு(eggu) என்றும் ஒரு பெயர் உண்டு. சிறுவயதிலிருந்தே எக்கு என்றே என்னைப் பலரும் அறிவர்.
        நான் கல்லூரியில் படிக்கும்போது, 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒருநாள், சென்னையிலுள்ள மருத்துவமனைகளைத் தூய்மைப்படுத்தும் பணிக்காக, மாணவர்கள் அனைவரையும் தொண்டூழியராக (volunteers),  பல்வேறு மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் சென்றார்கள். எங்கள் பேருந்து, எழும்பூரிலிருந்த குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்றது. அங்கு சென்று, துப்புரவு வேலைகள் செய்துகொண்டிருந்தோம். திடீரென்று ஞானோதயம் போல,  எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. 'ஆஹா! இந்த மருத்துவமனைதான் என்னைக் காப்பாற்றியதா?' நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!! பெருமகிழ்ச்சியில் இன்னும் ஊக்கமாக வேலை செய்து கொண்டிருந்தேன்.
       பழைய நினைவுகளைக் கிளறிப் பார்த்தேன். 
                                                              ----------------
        ஆண்டு 1987. பச்சிளங் குழந்தையாக இருந்த எனக்கு, ஒரு விதமான நோய். பால் குடித்தால் ஜீரணம் ஆகாது. வயிறு புடைத்து, வலிக்க ஆரம்பித்து விடும். மீண்டும் வாந்தி எடுத்தால்தான் சரியாகும். பாவம் நான். என் பெற்றோரின் தவிப்பை என்ன சொல்ல? அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு என்னைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். "இங்கு முடியாது. சென்னை egmore - ல் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள்", என்று கூறி விட்டர்கள். சென்னைக்குச் சென்று, எப்படியெல்லாமோ கஷ்டப் பட்டு,  என்னைக் காப்பாற்றினார்கள். egmore மருத்துவமனைக்குச் சென்று உயிர் பிழைத்து வந்ததால், எல்லாரும் செல்லமாக egmore என்றே கொஞ்ச ஆரம்பித்து விட்டார்கள். அது பின்னர், eggu என்றாகிவிட்டது.
                                                               --------------------

Aug 15, 2010

எட்டின் நடுவே எங்கள் பாரதம்

நான் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது விடுதலைத் திருநாளன்று எழுதிய கவிதை.

நிலைமண்டில ஆசிரியப்பா

எட்டின்  நடுவே  எங்கள்  பாரதம்
எட்டிய  மகிழ்ச்சிக்  களவே  இல்லை
அந்நியர் நீங்கி அன்று சென்றனர்
இந்தியர் கொண்ட ஒருமைப் பாட்டால்
பழிநிலை மாறிடப் பழுத்தார் மக்கள் 
இழிநிலை மாறிட இழுத்தார் செக்கு 
இமயம் குமரி எல்லை என்று 
அமைந்த பார தப்பெரு நாடு 
பலவளங் களுடன் பலமாய்த் திகழ்ந்தது
அலையென வந்த ஐரோப் பியரால்
வளங்குன் றியது; வறுமை யடைந்தது;
அளவில் லாமல் அனுபவித்த திடுக்கண்
அந்நியர் தாக்கம் அழிந்தது ஆக்கம் 
வந்தவர் போனபின் வந்தது ஊக்கம் 
எழிலார் இந்தியம் இழந்தசு தந்திரம்
எட்டின் நடுவே ஈட்டிய தாயினும் 
இன்னும் மலரா இந்திய நாடு 
என்றும லருமோ? யானறி யேனே
வந்தவர் போனார் வறுமை போகலை!
சந்தம் பாடினும் சமத்துவ மாகலை!
இந்நிலை தொடரின் இடுக்கண் தொடரும் 
அந்நிலை மீண்டும் அடைத்த லாகும்
                                           - சுப்பிரமணிய தமிழகழ்வன்

  
இனிய விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

Aug 4, 2010

Micro Devil - குட்டிச் சாத்தான்

இது என் கல்லூரி நண்பன் ஒருவன் எனக்கு வைத்த பெயர். என் கல்லூரி நண்பர்கள் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள். அவர்களோடு பழகுவதற்கு முன்புவரை நான் அதிகம் பேசி, யாரும் கண்டதில்லை. அவர்களோடு பேசிப்பேசி, அதிகம் பேச ஆரம்பித்து விட்டேன். பிறரை என்னாலும் நகைக்க வைக்க முடியுமோ என்று முயன்றதில் தோற்றுப் போனவன்தான் நான். (நான் அதிகம் மொக்கை போடுகிறேன் என்று கூறிவிட்டார்கள்!!!). இருந்தும் விடாமல் தொடர்ந்து மொக்கை போட்டுக் கொண்டே இருந்தேன். அதனால் வந்த வினைதான் இந்த Micro Devil என்ற பெயர்.

அதிலும் குறிப்பாக micro என்பதன் காரணம் என்ன தெரியுமா?
போக்கிரி படம் release ஆகி இருந்த நேரம். அந்த semester- ல Microprocessor பற்றிய பாடமும் படித்தோம். போக்கிரி படத்தில் ஒரு பாடல் வருமே...
'ஆடுங்கடா என்ன சுத்தி - நான்
அய்யனாரு(Aiyanaar) வெட்டுக்கத்தி'.
Microprocessor - ல ஒரு insrtuction INR (increament).
Aiyanaar - INR இரண்டையும் பொருத்தி வச்சி, INR - க்கு எதிர்மறையான DCR (decreament) - ஐப் போட்டு,
'ஆடுங்கடா என்ன சுத்தி - நான்
டீசியாரு(DCR) வெட்டுக்கத்தி'
அப்படின்னு பாடினேன். தேர்வுக்குப் படிக்கும்போதுகூட ஒரு நண்பன் இதை நினைத்துச் சிரித்து விட்டானாம். அதுக்காக ஒருத்தன் எனக்கு வச்ச பேருதான் இந்த 'MICRO DEVIL'.

Aug 3, 2010

SBS Raman

எனக்குப் புதிது புதிதாய்ப் பெயர் வைத்துக் கொள்ளப் பிடிக்கும். நான் ஒரு பெயராசை பிடித்தவன். ஒருமுறை SBS Raman என்று பெயர் வைத்துக் கொண்டேன். அதன் காரணத்தை இங்குப் பதிக்கிறேன்.

SBS?    எங்க அப்பா பேரோட முதலெழுத்தையும் அம்மா பேரோட முதலெழுத்தையும் என் பேரோட முதலெழுத்தையும் சேர்த்து SBS என்று வைத்துக் கொண்டேன். நல்லா இருக்குல்ல?


Raman?   அது ஒரு பெரிய்ய்ய்ய கதை. நான் கல்லூரி சேர்ந்த போது, வகுப்பு வருகைப் பதிவுப் புத்தகத்துல Subramani க்குப் பதிலா Subraman ன்னு தவறாகப் பதிச்சிருந்துச்சு. ஒவ்வொரு தடவ வருகைப் பதிவு கூப்பிடும்போதும் Subraman ன்னு தான் கூப்பிட்டாங்க. நான் என் பேரத் திருத்தச் சொன்னேன். பிறகு Subramani ன்னு கூப்பிட்டாங்க. ஆனா, அதற்கு அடுத்த மாதம் மறுபடியும் பழைய புராணம் தான். கல்லூரி அலுவகத்துக்குப் போயி, பேரத் திருத்தச் சொன்னேன். ஆனா பாவம் அதற்கு அடுத்த மாதமும் அதே கொடுமைதான். மீண்டும் மீண்டும் சொல்லியும் 'i' ஐத் தவற விடுவதே பொழப்பாப் போச்சு அவங்களுக்கு. எப்படியாவது கூப்பிட்டுட்டுப் போங்க... எத்தனை முறை சொல்லிப் பாக்குறதுன்னு விட்டுவிட்டேன். அப்படி இருந்த SUBRAMAN-ல் RAMAN தனியாத் தெரிஞ்சுச்சா... SBS RAMAN ன்னு வச்சிக்கிட்டேன்.

May 1, 2010

தப்புத் தப்பாய்த் தமிழ்

என்ன சொல்வது?
நெஞ்சு பொறுக்கவில்லை.

தமிழின் அடிப்படைச் சொல்லிலக்கணத்தை மறந்து, தப்புத் தப்பாய் எழுதும் தமிழர்களால் எங்ஙனம் 'செம்மொழி' என்று பெருமையடித்துக் கொள்ள முடிகிறது?

தொலைக்காட்சிச் செய்திகள், அறிவிப்புச் செய்திகள், பதாகைகள், விளம்பரப் பலகைகள் என எங்குப் பார்த்தாலும், சொற்களுக்கு இடையில் தேவைப்படும் வல்லின ஒற்று எழுத்துகளை விட்டுவிட்டு எழுதுவதே வாடிக்கையாய்ப் போய்விட்டது தமிழர்களுக்கு.

சொற்றொடர் என்பது ஒரு குடும்பம் போன்றது. அதன் ஒவ்வொரு சொல்லும் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர் எனலாம். குடும்ப உறவுகள் வலுப்பட, அன்பு, பாசம் போன்றவை இணைப்புப் பாலமாக விளங்குகின்றன. தேவையான இடங்களில் அவ்வல்லின ஒற்றுகளை இணைத்து எழுதுவது, குடும்பத்தின் உறவுச் சங்கிலியை வலுப்படுத்துதல் போன்றதாகும்.

வல்லின ஒற்றுகளை விடுத்து எழுதுவது, குடும்ப உறவுகளில் அன்பு காணாமல் போவதைப் போன்றதாகும். அத்தகைய மனநிலையில் தமிழர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்குத் தமிழின் எழுத்தே சான்றாக உள்ளது.

கொடுமை
தமிழக முதல்வருக்குப் பாரட்டுவிழா நடத்தும் மேடை அறிவிப்புப் பலகையில் கூட இந்தத் தப்பைக் காணலாம் என்றால் தமிழ் எங்கு வாழ்கிறது? அது எப்படிச் செம்மொழியாகும்? என்று எனக்குப் புரியவில்லை.

                 பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா
                (பாசத்தலைவனுக்குப் பாராட்டுவிழா)
                    
                      தமிழ்_திரையுலகம்
                     (தமிழ்த்திரையுலகம்)

இப்படியெல்லாம் தமிழைத் தப்புத் தப்பாய் எழுதிவிட்டுத் 'தமிழ்ச்செம்மொழி' என்று பேசுவதில் என்ன பெருமை இருக்கிறது?

இந்தக் கொடுமையைக் கண்டிருக்கிறீர்களா? செம்மொழி மாநாட்டிற்காக ஆங்காங்கு எழுதப்பட்ட விளம்பரங்களைப் பார்த்திருக்கிறீர்களா?

                    உலக தமிழ் செம்மொழி மாநாடு
                   (உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு)

என்னவென்று சொல்வது இந்தக் கொடுமையை!