May 30, 2015

என்தமிழ்

என்னை ஆற்ற என்றமிழ் உண்டு
என்றன் ஆற்றுக்(கு) உறுதுணை உண்டு

எல்லாத் துயரும் துயர்கொண்(டு) ஓடும்
சொல்லால் இன்பம் எனைக்கொண் டாடும்
                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

ஆற்ற - அமைதிப்படுத்த
ஆறு - வழி
துயர் - துன்பம்

May 27, 2015

தமிழுடன் பேசு

தரவு கொச்சகக் கலிப்பா

என்னவரம் வாங்கிவந்தேன் என்னவளைத் தொலைத்துவிட்டு
சொன்னவரம் பில்லையோ சொன்னயந்தான் இல்லையோ
இல்லையெனும் எல்லாமும் இயம்பாமல் உள்ளதெலாம்
இல்லையென இயம்பிடவோ யான்பிறந்தேன் இவ்வுலகில்

                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 20, 2015

உண்மையும் பொய்யும்

Try to understand the people, before trusting them.. Because, we are living in such a world, where artificial lemon flavour is used for "Welcome Drink" & Real Lemon is used in "Finger Bowl"

மேலே சொல்லப்பட்ட பொன்மொழியின் தமிழ்மொழியாக்கம் கீழே 

நேரிசை ஆசிரியப்பா

எலுமிச் சைநீர் எனத்தான் எண்ணுவம்
வெறுமிச் சைசேர் செயற்கைக் கலவை
தருமுச் சவர வேற்பில் ஆயின்
விரல்தோய் கிண்ணம் கொண்டுள கலவை
முரணாய் இயற்கை எலுமிச் சைநீர்
ஆதலின் அறிக மனிதரை
அவர்மேல் நம்பிக் கைகொளு முன்னே
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 12, 2015

என்னவளே

கலிவிருத்தங்கள்

என்னெஞ் சுடைய எடுத்தோ திடுவன்
என்றஞ் சித்தான் ஏதும் எழுதிலன்
என்னெஞ் சறிவ தென்னென் றறிய
எனக்கே ஆவல் ஆதலின் இதுவாம்                                 1

என்னெஞ் சுடைய என்னென் றறிந்தனை
என்னவ ளேநீ  ஏனோ யாஅன்
என்னை ஏஎன் எனவே வினவி
என்னைத் தள்ளி வைத்தனை நன்றோ?                         2

யான்செய் குற்றம் என்னெனின் உன்னை 
யானெனப் பாரா தேமாற் றியதே
யானெனப் பார்த்தே ஏமாற் றினனே
யான்கொள் சிந்தை உரைக்கா தங்ஙனம்                      3

உன்றன் மொழிக்குக் காதளித் தேனே
உன்றன் மொழியைக் காதலித் தேனே
உன்றன் மொழிகா வெனச்செழித் தேனே
உன்றன் மொழிகா வெனத்தவித் தேனே                    4

யாஅன் இன்னும் அறிந்திலன் அன்பே! 
யாதுற் றனைநீ என்னால் என்பால்
யாதும் நீயுற விலையென இன்னும்
யாதும் உரைக்கா திருப்பத னாலே                                    5
                    - தமிழகழ்வன்