Jan 30, 2017

சல்லிக்கட்டுப் புரட்சி – தைப்புரட்சி

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)
காளையினங் காக்கவிளங் காளையருங் கன்னியரும்
நாளையுல கைக்காண நந்தாய்மார் வயிற்றிருக்கும்
வேளையிலும் அருங்கொழுந்து வேதனைகள் விட்டொழித்து
வேளையிது வென்றங்கே வேலையெலாம் விட்டொழித்து
நாளைநம தேயந்த நாட்டுமாட்டின் இனமறுப்பான்
கோளையொழிக் கக்கூடிக் கோலங்கொள் புதுமெரினா

(தாழிசை)
ஏனாகும் என்னாகும் என்றிருந்தார் செயலிழந்தோர்
தேனாகப் பாய்கின்ற செய்திபெறா வருத்தத்தால்
தானாக முன்னெடுத்துத் தனித்திறமை காட்டிநின்று
வானாக உள்ளத்தில் உருவெடுத்த மாணவர்கள்

பரந்தவுல(கு) இதுவாகும் பார்த்தறியும் அலைபேசி
கரந்தவுல(கு) உண்மையெலாம் கடிதில்வந்(து) எடுத்துரைக்க
அரசியலார் வேண்டாமல் ஆதரவும் வேண்டாமல்
சிரசெனநில் தலைவரையும் வேண்டாத மாணவர்கள்

பித்தனெனச் சொல்லாதீர் பிதற்றலெனச் சொல்லாதீர்
புத்தியுள்ள பெருமைமிகு பேராற்றல் வேராற்றால்
சித்தனெனச் சிந்தையினைச் சீர்செய்தே உரமேற்றி
எத்தனைநாள் ஆனாலும் எழுந்தோடா மாணவர்கள்

(அராகம்)
பெருவெளி இருளினில் சிறுதுளி எனவரும்
   ஒளியுமிழ் அலைமொழி மொழி
பெருந்திரள் ஒளியது பெருவெளி இருளினைக்
   குறுகுதல் எனச்செயும் வினை
வருதுயர் வடிவினை ஒருநொடிப் பொழுதினில்
   வெருளென விடிவெளி ஒளி
கருதுயர் அறிவியல் அகந்தனில் மிளிர்மதி
   இளைஞனை நினைந்துளம் தேன்

(அம்போதரங்கம்)
(நாற்சீர் ஈரடி இரண்டு அம்போதரங்கம்)
நடிக்கின்ற கலையுணர்ந்தார் நற்காப்புக் காவலர்தம்
பிடிக்கஞ்சாப் பெருவீரர் போய்நின்றார் கடலருகே
அடியெடுத்து வைத்தாலோ அடுத்தவடி கடல்மீதே
நொடிப்பொழுதில் வைப்போமே நொந்தகல்வீர் நெருங்காதீர்

(நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம்)
தன்னலந்தான் கருதாது தாமாக முன்வந்தார்
தன்பிள்ளை என்றேதோள் தாங்கியவர் முன்வந்தார்
இன்னலந்தான் மாணவர்கள் இன்னலிலும் முன்வந்தார்
என்னளந்தான் ஈசனவன் மீனவனாய் அவனானான்

(முச்சீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்)
பெரு(கு)உப்பை உண்டோர் மானம்
தெருக்குப்பை களைந்தார் வானம்
எழுச்சிக்குச் சான்றாய் இங்கே
விழிப்புக்கும் சினந்தான் பங்கே
காவலர்தான் என்றார் பாரேன்
கயமையுளம் கொண்டார் நேரேன்?
உலகந்தான் வியந்தே காணும்
கலகந்தான் அறிந்தே நாணும்

(இருசீர் ஓரடிப் பதினாறு அம்போதரங்கம்)
முன்மொழிந்தோர் தோள்வாழ்க
நின்றெழுந்தோர் வாள்வாழ்க
அன்றளித்தார் கொடைவாழ்க
வென்றளித்தார் படைவாழ்க
ஒன்றிணைந்தார் நலம்வாழ்க
ஒன்றிணைதார் வளம்வாழ்க
கன்றினைஈ ஆவாழ்க
காளைவளர் உளம்வாழ்க
நடுக்குப்பத் தார்வாழ்க
கொடுக்குங்கைத் தூண்வாழ்க
கலையொழுக்கம் நலம்வாழ்க
நிலைவழக்கக் களம்வாழ்க
பண்பாடும் உளம்வாழ்க
பண்பாடும் நாவாழ்க
கொன்றழித்தார் கரம்வீழ்க
நின்றழிதார் புலம்வீழ்க

(தனிச்சொல்)
எனவாங்குச்

(ஆசிரியச் சுரிதகம்)
சல்லிக் கட்டுத் தடையை உடைக்க
அல்லும் பகலும் அயரா(து) உயர்ந்த
நல்ல உள்ளத் தார்தம் புகழைச்
சொல்லில் அடக்கிச் சொல்லல் ஆகுமோ?
தெங்கி னைப்போல் தான்தரும் நன்மைக்(கு)
இங்கே எழுந்த தைப்புரட்சி
எங்கும் என்றும் இனியும் எழுமே!

Jan 17, 2017

சோலைகவியரங்கம் 4 - புதுமைப் பொங்கல் பொங்குக

கவியரங்கத் தலைமை
பைந்தமிழ்ச் செம்மல் வள்ளி முத்து 

கவிஞர் அழைப்பு - வள்ளி முத்து
பலமுள் இருக்குமாம் பால்முகமும் காட்டும்
சிலநாரொ ளிக்கவுள்தித் திக்கும் - புலவோரே.!
நேரகழ்ந்து பார்த்தால்தான் நீரறிவீர் தீம்பலவும்
வேறல்ல சுப்ரமணி என்று

குமிழுடையும் சொற்களின்றி கொள்கைசூழும் பாவேந்தி
அமுதமன்ன பாக்களூடே ஆழ்கருத்தை ஆளுகின்ற
தமிழகழ்வ.! அருங்கவியே.! தைப்பொங்கல் பாடவாரும்.!
இமிழ்கடலாய் ஒலிக்கட்டும் இதயமீதில் இப்பொழுதே.!


தமிழகழ்வன் சுப்பிரமணி
வாழ்த்து, அவையடக்கம்
பைந்தமிழ்ப் பாவுக் கடிமைசெய்
   பாவலர் ஆவல் வாழியவே
பைந்தமிழ்ச் சோலைக் கவியரங்கப்
   பாவலர் தலைவர் வாழியவே
பைந்தமிழ்ச் சோற்றை உண்டுள்ளம்
   பண்படும் நோக்கம் வாழியவே
பைந்தமிழ் சிறிதே உண்டவன்யான்
   பார்வையில் பிழைதீர்த்(து) அருள்வீரே!

பழைமை காக்கும்
புதுமைப் பொங்கல் பொங்குக

எதுபுதி(து) என்றன் மனத்தினிலே
   ஏறிய வேதனை; இன்றுள்ளம்
வெதும்பி உழவன் சாகின்றான்
   விளைச்சல் இன்றி நமக்கெல்லாம்
புதுமைப் பொங்கல் என்பதென்ன?
   புதிதாய்ப் பொங்க என்னுளது?
புதுப்பா னையில் புத்தரிசி
   பொங்கு வோமா இவ்வாண்டு?         1

புதுப்பித்து வாழ்வோம் என்ற
   புதுப்பித்துப் பிடித்தல் நன்றே
புதுப்பித்தல் என்ப தென்ன?
   பழைமையை மறந்தி டாமல்
புதுப்பானை ஆனால் கள்ளோ
   பழையதே என்று சொல்லப்
புதுமையைச் செய்தல் தானே
   பழைமையை மறத்தல் ஏனோ?        2

பழைமை அறிய முயல்கின்ற
   பாதை தன்னில் புதுமையினைத்
தழைக்கச் செய்வோம் நல்லுலகைத்
   தாங்கி நிற்கும் தூணாவோம்
பழைமை என்றால் என்னென்று
   பகுத்துக் காணாப் புற்றனத்தை
வழமை யாகக் கொள்கின்ற
   மடமைத் தனத்தைக் கைவிடுவோம்    3

பழைமைப் பொங்கல் பொங்கிடுவோம்
   பழனம் பண்பட் டிடவியற்கை
வழங்கும் இன்ப வளங்காப்போம்
   மழைநீர் சேர்த்து மண்காப்போம்
உழவைக் காப்போம் உயிர்காப்போம்
   உலகைக் காக்க முன்னெழுவோம்
வழமை மறவா திருந்தேநாம்
   வரும்பின் தலைமு றைகாப்போம்        4