Jul 19, 2026

ஒருபா ஒருபஃது - தேங்காய்

பாயிரம்

வேலை செய்யச் சொல்வதிலே
மேலா ளர்போல் தேர்தகையாள்
வேலை வாங்கிப் பழகிப்போய்
வெட்டி யாய்ச்சும் மாதானே
காலை யாட்டிக் கொண்டமர்ந்து
காலைத் தேநீர் கேட்கின்றீர்
சேலை யாட்டிச் சொன்னாளே
தேங்காய் உரித்து வாவென்று

1. மட்டை

மட்டை யோடு கிடக்கின்ற
மாதேங் காயைக் கண்டயர்ந்தேன்
தட்டை யுருண்டை நீள்வடிவந்
தாங்கி யந்தத் தேங்காயோ
கொட்டி வைக்கும் நெற்குவியற்
குதிரைப் போலத் தோன்றியது
வெட்டுங் கத்தி கொணர்ந்தவளோ
வியந்த வாயை மூடென்றாள்

2. நார்

கத்தி யால்வெட் டும்போது
கதறி யழுத வத்தேங்காய்
சித்தங் கலங்கி நிற்பதுபோல்
சிதறத் துகள்கள் வீசியதே
குத்தக் குத்த நார்பெருக்கிக்
குதலை மொழியாய் உதிர்த்ததுவே
எத்து ணைப்பற் றுடைமையினை
எடுத்துக் காட்டி நிற்கிறதே

3. காய்

கடிய மட்டை நார்விலகக்
காட்டும் வடிவோ  முரணாகும்
குடுமித் தலையும் முக்கண்ணும்
குதுக லச்சி ரிப்போடு
விடிய விடியத் தெருக்கூத்தை
விரித்துச் செல்லும் திறமுடைய
கடியங் கார னைக்கண்முன்
காட்டும் அழகில் மயங்கிநின்றேன்

4.
பலகா லங்கள் பண்பட்டுப்
பகலோன் விசையாற் பிணைப்புற்ற
உலக உருண்டை தன்னச்சில்
உழலும் காட்சி பொருந்திவரும்
சலச்ச லக்கும் ஓடையிலே
தாவிக் குதிக்கும் மீன்கொத்த
அலகை நீட்டும் கொக்கைப்போல்
அந்தக் குடுமி இருந்ததுவே

5. ஓட்டின் நிறமும் வரிகளும்

அடர்ந்த மஞ்சள் நிறமொக்கும்
அதன்மேல் வரிகள் பலவாகப்
படர்ந்தி ருத்தல் உலகவரை
படத்தில் வடக்குத் தெற்காகக்
கடக்கும் கோடு போன்றிருக்கும்
கடக்க முடியா தமர்ந்திருந்தேன்
நடக்கு மாவுன் னிடம்வேலை
நாவா னயந்தா ளிதோவென்றேன்

6. தரம்

கெட்டித் தன்மை யறிதற்கும்
கெடாத தன்மை யறிதற்கும்
தட்டிப் பார்த்தேன் தேங்காயைத்
தரமா யுளதே தண்ணீரின்
மட்டத் தளவை யறிதற்கும்
வாய்ப்பென் றாட்டிப் பார்த்தேனே
ஒட்டா வுறவு போலின்றி
ஓட்டி னுள்ளே ஒருகுடும்பம்

7. குடுமி

பல்ல டுக்குத் தோல்மட்டும்
பாரென் காயம் என்பதுபோல்
சொல்ல டுக்கிப் பாட்டெழுதிச்
சொக்க வைக்கும் புலவர்போல்
மெல்ல டுக்கு நார்கொண்டே
மேனி காட்டும் குடுமியதாம்
வல்ல பிடிப்புக் கேற்றதுவாய்
வாய்த்த பெருமை யென்சொல்வேன்

8. பருப்பு

ஒற்றை அடியே போதுமென
ஒழுங்கா யுடைந்த திரண்டாக
மற்றைச் சீரைச் சொல்வானேன்
மாறாக் குணத்த னெனநிற்பான்
உற்ற பருப்பு வெண்ணிறமா
யுவகை காட்டப் பல்லிளிக்கும்
சுற்றி நிற்கும் சீனத்தின்
சுவரைப் போன்ற உருக்காட்டும்

9. நீர்

குழிந்த குளத்தில் நிறைநீராய்க்
குவிந்த நீரோ தண்ணியது
செழிய தாது கலந்ததனாற்
சேர்க்கும் இனிய சுவையினையே
வழியுங் கண்ணீர்த் துளியைப்போல்
வழிந்த வதனைப் பருகியதும்
அழியாத் துன்பம் அழிந்ததைப்போல்
அகத்தின் மகிழ்வால் வியந்தேனே

10. சில்

சில்லென் றிருந்த நீர்பருகிச்
சிறுவர் ஆடும் விளையாட்டுச்
சில்லைப் போன்று பெயர்த்தேனே
திருந்தாக் கள்வன் மனப்போக்காய்ச்
சொல்ல முடியா வடிவிலெலாம்
துண்டு துண்டாய்க் கண்டேனே
இல்லாள் வந்தாள் விரைந்துசெய
இயலா தாவென் றிடித்தாளே

 - தமிழகழ்வன்

Jul 4, 2026

தேங்காய் என்ன விலை? - நகைச்சுவைக் குறுங்காவியம்

பாயிரம்

கடவுள் வாழ்த்து

விளம் மா தேமா விளம் மா தேமா

ஆர்மனத் தொளியே போற்றி யருமறைப் பொருளே போற்றி
சேர்மனத் துன்ப மெல்லாஞ் செகுக்கவே போற்றி போற்றி
பாமணம் கமழ வேண்டிப் பண்புடன் பாட வேண்டி
யேமமாய் வந்து நிற்பா யெளியனைக் காத்த ருள்வாய்

ஆசிரியர் வணக்கம்

காய் காய் காய் காய் மா தேமா

மாசினிய தென்றோடு மாநகர வாழ்மக்கள் கூடிக் கூடிக்
காசினையே தேடுகின்ற காலத்திற் செந்தமிழின் சுவைம றக்க
வீசினிய தென்றற்போன் மீட்கின்ற பாவியற்றக் கற்பிக் கின்ற
வாசிரியர் கவினப்ப னார்வழியை யகத்தேற்றிப் பாடு வேனே

அவையடக்கம்

காய் மா காய் மா காய் மா மா

நம்பிக்கை கொண்டே நான்பாடு கின்றேன் நற்றமிழத் தாயே போற்றி
அம்புக்கு வில்லாய் அதனோக்கம் நிறைக்கும் ஆசிரியத் தேவே போற்றி
எம்பக்கம் நிற்கும் எனையூக்கும் தோழர் அன்புக்கு நன்றி நன்றி
தம்பட்டம் இருப்பின் தடுத்தென்னை மீட்பீர்
தமிழ்ப்புலவீர் வாழ்க வாழ்க

1. கடவுளின் காட்சி

1. மா மா காய் மா மா காய்

ஒருவ னிருந்தா னூரினிலே வொன்றுஞ் செய்யான் பேராசை
யுருவா யிருந்தா னுளமுழுது முரூபா யொன்றைச் செலவிடவே
அருவாய்ப் புக்கே யவனெண்ண மழைத்துச் செல்லு மவனொருநா
டிருக்கோ யில்சென் றிறைவனிடந் திருவை வேண்டிப் புலம்பினனே

2. காய் மா காய் மா காய் மா மா

அருள்யார்க்கு வேண்டு மதிலென்ன வுண்டோ வதைப்பற்றி யறியே னொன்றும்
பொருள்வேண்டு மிறைவா பொருள்வேண்டு மெனக்குப் பொருளன்றி வேறென் வேண்டும்
இருளான வென்ற னில்வாழ்க்கைக் குரிய வினிதான பொருளைத் தாரா
யொருநூறு வேண்டா வொருநூறா யிரந்தா வொருதேங்கா யுடைப்பேன் யானே

3. விளம் விளம் விளம் விளம் விளம் விளம்

என்றவன் சொன்னதைக் கேட்டது மெதிர்வர வியைந்தன னிறைமைய
னின்றெதிர் புலம்பிய மனிதனி னேரில்வந் தளித்தனன் பணக்குவை
நன்றெனப் பெற்றவன் வியந்துபோய் நனியெளி தாயவிச் செயலினுக்
கென்றொரு காயினை யுடைப்பதோ விதுசரி யிலையென நினைத்தனன்

4. தேம கூவிளம் தேம கூவிளம் தேம கூவிளம் கூவிளம்

வேண்டிக் கொண்டவன் வேண்டு தற்படி மேன்மைச் செல்வமொன் றீந்ததா
லாண்ட வற்கொரு தெங்கங் காயினை யான சொற்படி யாற்றலே
மாண்ட செய்கையா மாறி நிற்பது வாய்மை யில்லையென் றெண்ணினா
னீண்ட சிந்தனை செய்த பின்னரோர் நின்ற தெள்ளறி வூட்டவே


2. கடைத் தேங்காய்

5. மா மா மா மா மா மா மா

என்ன விலையோ விந்தத் தேங்கா யென்று கேட்டான் கடையி
லின்ன விலையென் றியம்பக் கேட்டா னேற்ற மொன்று மில்லை
சொன்ன விலையோ வைந்து ரூபாய் தோதா காது மிகுதி
யின்னுங் குறைத்துக் கொடுப்பா யென்றா னெளிதி னிறையா மனத்தான்

6. மா மா மா மா மா மா மா

இன்னுங் குறைந்த விலைக்குத் தேங்கா யெளிதாய் வாங்க வேண்டின்
நன்ன கர்க்குப் புறத்தே யமைந்த நான்கு காதத் தொலைவாந் 
தென்னந் தோப்புக் குச்செல் லென்று தெளிவாய் வழியைக் காட்டிப்
புன்ன கைத்தான் புதுப்பூ வாகப் போக மாட்டா னென்றே

3. தோப்புத் தேங்காய்

7. மா மா மா மா மா மா மா

நடந்தே சென்றான் நான்கு காதம் நண்ப ரெதிரிற் காண
நடைப்ப யிற்சி யென்றா னுண்மை நவிலு மெண்ண மில்லை
கடந்த பின்னர் கண்டான் றோப்பிற் காய்கள் அடுக்கிக் கடைகட்
கெடுத்துச் செல்லும் வண்டி நிற்க வென்ன விலையோ வென்றான்

8. மா விளம் மா விளம் மா விளம் மாங்காய்

மாட்டு வண்டியை யோட்டி வந்தவன் மாவி யப்புடன் பார்த்தானக்
காட்டு வழியினிற் றன்னந் தனியனாய்க் கால்ந டையனாய் வந்தானை
மாட்டின் விலையையா மாடு பூட்டிய வண்டி விலையையா வண்டிக்குள்
ஏற்றி வந்தவித் தெங்கங் காய்விலை யென்ன வென்றுகேட் கின்றாயா

9. மா விளம் மா விளம் மா விளம் மாங்காய்

கொண்ட வையமேன் வண்டி நுகத்தடி பிடித்துக் கொண்டவன் பின்கேட்டான்
வண்டு முரல்கையில் காதி லவ்வொலி வந்து கேட்பது போனின்றான்
மண்டை கிறுகிறு வென்று சுழலவோர் மாங்கா யென்விலை யென்றானைத்
தண்டை கழற்றிய டிக்கத் தோன்றினுந் தாங்கிக் கொண்டவன் பின்சொன்னான்

10. மா விளம் மா விளம் மா விளம் மாங்காய்

தென்னந் தோப்பினில் மாங்காய் தேடிய தெய்வப் பிறவியே நீதானோ 
முன்னெப் போதுநீ யிங்கு வரவிலை முடிவு செய்தபி னுள்ளேசெ
லென்னை விடுகென வேறிப் போயின னென்ன விலையெனச்  சொல்லாம
லின்னு நடந்தவன் சென்ற ளந்தன னினிய தோப்பினைக் கண்ணாலே

11. மா மா மா மா மா காய்

அங்கே வந்தான் தோப்புக் காரன் ஆயி ரங்காயா
எங்கே வண்டி யெடுத்துச் செல்ல வென்றான் பண்போடு
பங்கம் வந்த தாக வெண்ணி நின்றா னானாலும்
தெங்கங் காயோ வொன்றே போதுந் தெய்வத் துக்கென்றான்

12. மா மா மா மா மா காய்

தெய்வத் துக்குக் காணிக் கைக்குத் தேடி வந்தானோ
செய்வ தென்ன விளங்க வில்லை தேர்ந்து கொள்ளட்டு
மையா மூன்று ரூபாய் ஆகு மங்கே யுள்ளவற்றில்
செய்ய காயை யெடுத்துக் கொள்க தெய்வ மருளட்டும்

13. விளம் மா விளம் மா விளம் விளம் மா

இலையிது மிகுதி இஃதெனக் காகா தினியொரு வழியிலை போலும்
விலைமலி வாகக் கிடைக்குமென் றெண்ணி வேண்டிய தொலைவினைக் கடந்தேன்
தலைகுனிந் தவனோ செலமுயல் கையில் சரியெனப் படுவழி யொன்றை
நிலையுணர் தோப்புக் காரனி னைந்து நேரிய முறையினி லுரைத்தான்

4. ஆற்றங் கரைத் தேங்காய்

14. மா விளம் விளம் மா விளம் விளம்

ஆற்றங் கரைதனி லிருக்கிற வந்த மரத்தினீ யேறினா
லேற்ற விலையினிற் கிடைக்குமோ ரினிய காயினைப் பறிக்கலா
மூற்றாய் மனத்தினில் மகிழ்ச்சியை யுண்டாக் கியதிதைக் கேட்டவன்
காற்றாய்ப் பறந்தனன் கரையினிற் காயின் விலையினைக் கேட்டனன்

15. காய் காய் காய் காய் மா தேமா

ஒருதேங்காய் வேண்டுமென வோடோடி வந்தவனோ ருரூபாய்க் கேயான்
தருகின்றே னெனுஞ்சொல்லைக் கேட்டதுமே மரமேறத் தயாராய் நின்றான்
ஒருநூறா யிரத்தைத்தன் மடியில்வைத் துக்கட்டி மகிழ்வோ டந்த
மரத்தின்மீ தேறும்போ தொருபாடு பட்டான்பார் வயங்கா நெஞ்சான்

16. மா விளம் விளம் விளம் விளம் விளம் காய்

ஆற்றங் கரையினில் வளர்ந்திருக் கின்றவவ் வழகிய தென்னையோ வீசுகின்ற
காற்றைக் கொஞ்சியு மதன்றிசைக் கேற்பவோர் களிநட மாடியுங் காட்டியதோ
டாற்றின் குறுக்கிலும் வளைந்துநெ ளிந்துவ ளர்ந்தத னான்முனை காட்டியதோ
வாற்றின் நடுவினை யஞ்சியு மெதுமெது  வாய்நகர்ந் தான்முனை சேர்ந்தானே

17.
மா கூவிளங்காய் மா கூவிளங்காய் மா கூவிளங்காய் கூவிளம்

காய்ப றிக்கவொரு கையை நீட்டியவன் காற்ற டித்தகணம் நீரிலே
போய்வி ழுந்துவிட  வில்லை மட்டையினைப் பிடித்துக் கொண்டனனல் வாய்ப்பினா
லாய்ப வர்க்குமொரு சிக்கல் வந்திறுக்க வாடிப் போய்விடுவ ரென்பபோ
னாய்ப டாதபெரும் பாடு பட்டலற நாதி யில்லவனைக் காக்கவே

5. யானைப் பாகன்

18. மா தேமா தேமா தேமா தேமா தேமா கூவிளம்

வானந் தெள்ளத் தெளிவு கொண்டு வாங்கி வந்த பேரொளி
காணக் கண்ணைக் கூசு முச்சி கண்டி ருந்த வேளையி
றேனைப் போலத் தொங்கி நின்ற தென்னை மரத்துக் காட்சியை
யானை யொன்றை யோட்டிக் கொண்டு போன பாகன் கண்டனன்

19. மா தேமா தேமா தேமா தேமா தேமா கூவிளம்

பொங்கி வந்த புன்சி ரிப்ப டக்கிக் கொண்டு போனவன்
இங்கு வந்து மாட்டிக் கொண்ட தெங்ங னென்று கேட்டனன்
தெங்கங் காய்ப றிக்க வந்து சிக்கிக் கொள்ள நேர்ந்தது
தொங்கு கின்ற வென்னைக் கொஞ்சந் தூக்கி விட்டுக் காக்கவே

20. மா தேமா தேமா தேமா தேமா தேமா கூவிளம்

இல்லை யைய வீதெ னக்குத் தொல்லை யாகப் போகுமே
வல்ல வல்ல வாற்று நீரி லானை நிற்க வென்னையே
மெல்ல மெல்ல மேலி றக்கிக் காத்த ழைத்துச் செல்கவே
வுள்ள காசில் பத்து நூற்றை யுன்றன் கையிற் சேர்க்கிறேன்

21. மா மா காய் மா மா காய்

பத்தோ நூறோ பத்தாது பத்தா யிரமாய்க் கொடுத்தாலன்
றித்த கைய வேலையினை யெடுக்க மாட்டேன் கையினிலே
கத்திக் கத்திச் சாவதினுங் காசைத் தந்து விடலாமென்
றொத்துக் கொண்டான் தொங்கியவ னுதவ வந்தான் பாகனவன்

22. மா மா மா மா மா மா மா

ஆற்றின் நடுவே யானை நிற்க வதன்மேல் பாகன் நின்று
காற்றில் ஆடு வோனின் காலைக் கவ்விப் பிடித்த போது
சேற்றில் கால்கள் சிக்குண் டாற்போற் சிந்தைக் கெட்ட யானை
யாற்றைக் கடந்து செல்லப் பாக னவனுந் தொங்கி னானே

23. மா கூவிளங்காய் மா கூவிளங்காய் மா கூவிளங்காய் கூவிளம்

உன்னைக் காக்கவந்த வென்னை யிந்தநிலை கொள்ளச் செய்ததுவு மென்னவோ
என்ன யானையது நின்று பின்னகரச் சொன்ன தந்திரமு மென்னவோ
யென்னி டுப்பிலுள வொருபத் தாயிரமு முன்றன் கைக்கொடுப்பேன் கெட்டியாய்த்
தென்னை மட்டையினைத் தாங்கிக் கொண்டுபிடி யென்றங் கீருயிர்கள் வாடவே

6. ஒட்டகக்காரன்

24. காய் காய் காய் காய் மா தேமா

ஒட்டகத்தோ டங்குவந்த வொருவனைக்கண் டவ்விருவ ருதவி கேட்க
வெட்டுவதற் கெளிதில்லை யென்செய்வ தென்றவனும் விலகிப் போகப்
பட்டெனச்சொன் னார்களொரு பத்தாயி ரந்தருவோ மென்ற சொற்கள்
சட்டெனக்கா தைத்துளைக்கச் சரியென்றா னொட்டகத்தை யோட்டி வந்தான்

25. மா மா மா மா மா மா மா

அதுவும் நழுவிக் கரைக்குப் போக வவனுந் தொங்கி னானே
யிதுவா விதியென் றெண்ணி யேங்கி யிறைவா  காக்க வென்றான்
முதலா மவனை நோக்கி யின்னு முறுக்கிப் பிடிப்பாய் மட்டை
யிதற்கா யானு மைந்தா யிரத்தை யெடுத்துத் தருவே னென்றான்

7. பேராசைக் கணக்கு

26. விளம் விளம் விளம் விளம் விளம் விளம்

மட்டையைப் பிடித்தவ னுள்ளமோ மகிழ்ச்சியிற் குதித்தது மொத்தமாய்க்
கிட்டுவ தெத்தனை பணமெனக் கீழிருந் தவருடை வாய்வழிக்
கொட்டிய சொற்களைக் கோத்தவன் கூட்டுதற் கணக்கினைச் செய்தன
னெட்டவே யில்லையம் மனக்கணக் கெண்ணினன் விரல்களை நீட்டியே

27. விளம் விளம் விளம் விளம் விளம் விளம்

பொத்தென வீழ்ந்தனர் மூவரும் போனது மடியினிற் கட்டிய
வத்தனை பணங்களு மாற்றிலே வவர்களும் நிலைகுலைந் தனர்மிகத்
தத்தளித் துக்கரை சேரவே தடங்கலா யிருந்தது நீர்ப்பரப்
பித்தனை துயரமு மேனென வெண்ணியே கரையினி லேறினர்

8. கருத்து

28. காய் மா காய் மா காய் மா மா

பேராசை கொள்ளப் பேரிழப்பில் முடியும் பேராசை கொள்ள வேண்டா
நீரோடும் போகும் நெருப்போடும் போகும் நிலனோடும் போகுங் காற்றில்
போராடும் வாழ்வே புதிரான வாழ்வே புலனாக மாட்டா நம்மை
வேரோடும் பிடுங்கி வேறிடத்துஞ்  சேர்க்கும் விதியாலே விளையுந் தானே

நூற்பயன்

காய் காய் காய் காய் மா தேமா

தேனொழுகப் பேசுவதில் வல்லவராந் தென்கச்சி சாமி நாதர்
வானொலியிற் கதைசொல்லி வந்தவொரு திருவாளர்
மக்க ளுள்ளந்
தானொழுக நகைச்சுவையாய்த்
தந்தகதை பலவற்று
ளொன்றைப் பாட்டில்
யானொன்றி யெடுத்துரைத்தே னுலகமெலாம் நலம்பெற்று வாழு மாறே

Jan 18, 2026

அருட்சுடரோன்

அருட்சுடரா லாவன செய்வான் பொருட்பொதி
பூவுலகை அன்பிற் புணர்ந்து

கதிர்வரவைக் காண விழையும் எதிர்வரவை
ஏற்று வழிசெ யுலகு

அறம் வளரட்டும்

கைகளை நம்பிக் களங்காண்க பொய்களைப்
போக்கி நிலைக்கும் வழிக்கு        1

செய்கை சிறந்தன வாகுக பொய்வழிப்
புல்லர்ப் புலமோடச் செய்து           2

மெய்வழியோர் மேன்மை பெருகட்டும் உய்வழி
ஓர்ந்து நலஞ்செய்க வே                 3

தீமை யெனத்தெரிந்தும் தேர்ந்திழைப்பார் வாய்மை
வழிதேடா மூடர் பிறர்க்கு                4

மதியிலார் மானம் விழையார் விதியென்பார்
வீண்பேச்சு வீரரா வார்                    5

Dec 1, 2025

கோபிநாத் - கலைவாணி

கலை:
பெருங்கோபி  கையர்தம் பேரன்புக் குரியவனாய்
வருங்கோபி நாதன்பேர் வடிவாக வாய்த்தவரே!
பொருங்கோபி ணைத்திருக்கும் பொறிவில்லின் நாணாக
ஒருங்கோவி யத்தழகாய் உயர்வோடு மனங்கொள்வீர்!

கோபி:
கலைவானில் அழகாகக் கலைந்தோடும் முகிலூடே
கலைகலையாய் நடக்கின்ற கலைகற்ற நிலவாகக்
கலையாத கனவோடு காலமெலாம் சேர்ந்திருப்போம்
கலைவாணி கவினாலே கலையாலே கனிவாலே!

Nov 26, 2025

ஆனந்தி

அன்புச் செல்லம் ஆசை வெல்லம் - ஆனந்தி
இன்பச் சொல்லில் இன்னா இரிக்கும் - ஆனந்தி
என்புக் கென்பாய் என்றோள் பற்றும் - ஆனந்தி
உன்புத் தகத்தே உறைவி டந்தா - ஆனந்தி

Oct 14, 2025

பெருங்கருணை

ஈர்ப்பு விதியென இயற்பியல் உரைக்கினும்
சேர்ப்ப தென்னவோ செயும்பெருங் கருணையே
சீர்த்த மனத்தினர் செம்மையாய் அறிகுவர்
ஆர்த்த அன்பினால் அரும்பெரு வெளியமே

Oct 12, 2025

விழுதாய் வியக்கும் சிற்றறிவன்

பொழுது சாயுங் காலத்தே
    பொன்னாய் மின்னும் மின்னோடே
கெழுத கைமை வாய்ந்தவராம்
     கேள்வி ஞானம் வாய்த்தவராம்
தொழுத கையார் பாலாஜி
      தோன்றும் ஞானம் தானுரைப்பார்
விழுதாய் வியக்கும் சிற்றறிவன்
     விரையத் துணிவேன் வீட்டுக்கே

Sep 30, 2025

ஆதியே வாழி!

இருள்வெளி எங்கும் எழுகதி ராலே
பொருள்விளங் குறச்செய் பொருளுடைப் பொருளே! 
அருள்வெளிக் கடலே! ஆதியே நாளும்
கருத்தினில் இருத்திக் கைதொழு வேனே!

Jul 7, 2025

கருத்து வேறுபாடு

வானம் நீலம் என்றாய்
வானம் நீளம் என்றேன்

தென்றல் போல்வாய் என்றேன்
தென்றலும் ஆகா மெல்லியலாய்

விருது பெருமை என்றாய்
விருதுக்கே பெருமை என்றேன்

கருதும் கருத்து வேறு
காணும் கனவுகள் வேறு

இருந்தும் வாழ்க்கை ஒன்றென்று
இணையாய்த் திரிவோம் இன்று