Aug 30, 2020

மணிக்குறள் - 9. மனிதம்

அன்பால் இயங்கும் அகிலம் அலாதவழி
வன்பால் வதையும் உயிர்                        81

அரசகன்(று) ஆசை அழித்துலகுக்(கு) அன்பு
முரசறைந்தான் புத்தன் வழி                  82

அன்னை தெரசா அகிலத்தை வென்றதோ
அன்பெனும் ஆயுதத் தால்                        83

தீச்செயல் ஆவது தீண்டாமை; வேண்டாமை
மாச்செயல் மண்ணுக்(கு) இனிது         84

பொருள்சேர்த்துத் துய்க்காமல் போதற்குத் தாமீந்(து)
அருளாளன் ஆதல் இனிது                        85

ஈவ(து) எதனை எனவறிந் தேசெய்க
ஆவ(து) அதன்வழி யால்                            86

அருளுள்ளம் வேண்டும் அதுமனிதம் என்றும்
பொருளுள்ளம் வேறில்லை போற்று    87

மனிதம் மறந்தாற்றும் மாச்செயல் மாண்பன்(று)
இனிச்செய்வ(து) ஓர்ந்து தெளி               88

வேண்டும் இடத்துதவி வேண்டாமல் செய்தலே
யாண்டும் இனிமை தரும்                         89

அன்பும் கருணையும் ஆர்ந்த ஒருவனே
என்றும் மனிதனென ஏத்து                        90

Aug 23, 2020

மணிக்குறள் - 8. வீழும்போதெல்லாம் வீறுகொண்டேயெழு

வீழும்போ தெல்லாஅம் வீறுகொண் டேயெழு
பாழுனக் கில்லை பதி                            71

தேய்ந்தழிந்தும் தேடி யுலகறியும் தேனிலா
ஆய்ந்தறிந்(து) ஆற்றல் அறிவு            72

இயலாமை தோல்வியன்(று) இன்னும் ஒருநாள்
முயலாமை தோல்வி முயல்                 73

மலரா ததனை முகர்பவர் யாரோ
மலர்ந்த உழைப்பு மது                           74

படிப்போ தொழிலோ படுத்தும்பாழ் போக்கி
அடுத்து வருவதை ஆள்                         75

தவறி விழுந்தும் தளரா(து) அடுத்துக்
கவலை கொளாது முயல்                      76

நாடோறும் சாணேறும் நான்கு விரற்கிழியும்
வாடாதே ஓணான் முயன்று                77

முப்பத் திரண்டு முழமுள முட்பனையைத்
தப்பாம லேறுந் தவழ்ந்து                     78

விடாஅ முயற்சியொடு வெற்றியை நோக்கத்
தொடாஅ தனவும் தொடும்                 79

தளரா வளர்தெங்கே தானீயும் இன்னீர்
தளரா முயற்சி தவம்                              80

Aug 16, 2020

மணிக்குறள் - 7. அலைப்பேசி

அலையாளும் பாரில் அவையாவும் கையில்
அலைப்பேசி யாய்நின்ற தே                         61

மின்னணுவின் ஆட்சி; மிகையில்லை; கைப்பேசி
எண்ணமுரை வேகத் தியன்று                      62

தகவல் தொடர்பினைத் தாங்கிப் பயன்செய்(து)
அகவும் அலைப்பேசி ஆம்                               63

தகவல் தொடர்பில் தகுந்தவோர் ஏற்றம்
அகவும் அலைப்பேசி யால்                             64

கருவிகள் யாவும் கணக்கின்றித் தந்து
விரைவாய்ச் சுழற்றும் உலகு                         65

உரிய பயன்கொண்(டு) உயரத் துணையாம்
செறிந்த செயலிகள் கொண்டு                      66

அழைப்புக்(கு) உதவ அலைப்பேசி வந்து
பிழைப்பே அதுவா னது                                     67

கைவிரல் கொண்டுணர்ந்து காட்டும் விழைந்தன
மெய்விரலாய் மாறிய தின்று                         68

அமர்ந்த இடத்திருந்தே ஆங்காங்கு நேர்வ(து)
அமர்த்தி உணர்த்தும் அது                               69

தனிமை இனியில்லை தான்விழைந்த யாவும்
நுனிவிரல் காட்டும் இனி                                  70

Aug 14, 2020

பைந்தமிழ்த் தொண்டர் தெய்வத்திரு அருள்வேந்தன் பாவைச்செல்வி


திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவரும் அதன் தலைவரும் திருவண்ணாமலை டேனிஷ்மிஷன் மேனிலைப் பள்ளியின் முன்னாள் மூத்த தமிழாசிரியரும் பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை - திருவண்ணாமலைக் கிளையின் நெறியாளரும் ஆகிய ஐயா அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்கள் 2020 ஆகத்துத் திங்கள் இரண்டாம் நாள் இறைவனடி சேர்ந்தார். அவருடைய ஆன்மா இறைநிழலில் இளைப்பாற இறைவனை இறைஞ்சுகிறோம். அவருடைய நினைவை ஏந்தும் விதமாக அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்கள் 1959ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய பெற்றோர் சாமுவேல் - அன்னம்மாள் அவர்கள். அவருடைய சொந்த ஊர் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலம். ஜான்சன் எனும் இயற்பெயர் கொண்ட அவர் தமிழ்மீது கொண்ட தீராத காதலால் இராசசேகர் என மாற்றிக் கொண்டார். பின்னர் அதுவும் தமிழில்லை என்றறிந்து அருள்வேந்தன் என மாற்றிக் கொண்ட தனித்தமிழ்ப்பற்றுடையவர் அவர்.

விருத்தாசலம் ஆண்கள் மேனிலைப்பள்ளியில் படித்தபோதே மேடை நாடகங்களில் விரும்பி நடித்துப் புகழ் பெற்றார். மிக அழகாகப் பாடுவார். அரசை எதிர்த்து எதுவும் பேசிவிட முடியாத அவசர நிலை அறிவிக்கப்பட்ட அந்த இக்கட்டான சூழலிலும் கபிலர் நாடகத்தில் நடித்தபோது "சோதனைமேல் சோதனை போதுமடா தமிழா" எனக் கம்பீரமாக மேடையில் பாடியவர்.

விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியிலும் தருமை ஆதீனத் தமிழ்க் கல்லூரியிலும் பயின்ற அவர் முதுகலைத்தமிழ்ப் பட்டமும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் (M.A., M.Phil) பெற்றவர். இவருக்குத் தமிழுணர்வை - அறிவை ஊட்டிய ஆசிரியர்கள் புலவர் கண்ணப்பனார், புலவர். பரசுராமனார், திரு. வீர.தர்மராசனார் முதலியோர். கல்லூரியில் கவின் கலை மன்றத் தலைவராகப் பொறுப்பேற்று முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் நா.காமராசன் போன்ற தமிழ் ஆளுமைகளைக் கல்லூரிக்கு அழைத்து வந்து உரையாற்றச் செய்தார்.

அவர் தனது பெயருடன் இணையரின் பெயரையும் இணைத்து அருள்வேந்தன் பாவைச்செல்வி என எப்போதும் அவருடன் இணைந்து வலம் வருபவர். அவருடைய துணைவியார் திருமதி இதயாள் பாவைச்செல்வி அவர்கள். அவரும் பள்ளி ஆசிரியரே. அவர்களிடம் பயின்ற மாணவ மாணவியரையே தம் மக்களாய்க் கருதி மகனே, மகளே என அழைத்து அன்பு செலுத்திய பெருந்தகைமை உடைய இணையினர் அவர்கள்.

கள்ளம் கபடமில்லாது உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றித் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கும் திண்ணிய நெஞ்சினர் அவர். எந்நேரமும் தமிழ்ச்சிந்தனை ஊற்றெடுக்கும் எண்ணம் உடையவர். சிறந்த தமிழ்ப்பற்றாளர்; சமய நல்லிணக்கம் போற்றியவர்; சமூகச் சிந்தனை யாளர். பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, இளமையிலிருந்தே மானுட அக்கறையோடு தன் பயணத்தைத் தொடங்கியவர்; திராவிட இயக்கப் பற்றாளர். பள்ளி மாணவ மாணவியருக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இன்முகத்தோடு பாடம் நடத்தும் சிறந்த ஆசிரியர். அன்பு நிறைந்த தமிழறிஞர். அழகு நிறைந்த செந்தமிழ்ப் பாட்டுக்காரர். ஏற்றத்தாழ்வு காணாத கனிவு மொழி பேசும் அற்புதப் பண்புக்காரர்.

அவர் 1999ஆம் ஆண்டு சொல்லாய்வறிஞர் ப.அருளியார் அவர்களின் முன்னிலையில் திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கினார். தலைவராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சங்கத்தைக் கட்டிக் காத்தார். பல்வேறு இலக்கியக் கூடல்களை நிகழ்த்தி வெற்றி கண்ட தூய தமிழ்த்தொண்டர் அவர். மறைந்த தமிழறிஞர்களை இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள, அவர்களின் வழித் தோன்றல்களை அழைத்து வேர்கள் எனும் சிறப்பு நிகழ்சியைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடத்தி வந்தார். பலரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகத் ‘தமிழாய்ந்த தமிழ்மகன் - கலைஞர்’, ‘மொழிஞாயிறு பாவாணர்’ முதலிய நுல்களை வெளியிட்ட பெருமை இவரைச் சாரும்.

தமிழும் தேசிய இயக்கங்களும், தமிழும் திராவிட இயக்கங்களும், தமிழும் தமிழ்த்தேசிய இயக்கங்களும், தமிழும் பொதுவுடைமை இயக்கங்களும் எனப்பலவாறாக ஆயும் நோக்கோடு செயல்பட்டவர். அதற்கேற்பத் தமிழகத்தின் பெருந்தலைவர்கள் இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தா.பாண்டியன், நாஞ்சில் சம்பத், மருத்துவர் இராமதாசு, வைகோ, திருமாவளவன், சீமான், பெ.மணியரசன், ஆளூர் ஷாநவாஸ், கோவி. இலெனின், மணவை முசுதபா, கொளத்தூர் மணி, முகில்வண்ணன், சீனி.சம்பத், முதலிய மிகச்சிறந்த ஆளுமைகளையும் முனைவர். மா. நன்னன், முனைவர் மறைமலை இலக்குவனார், முனைவர் மு.இளங்கோவன், ஆய்வறிஞர் ம.சோ.விக்டர், கவிஞர் வாலிதாசன், கவிஞர் அறிவுமதி, காசிஆனந்தன் முதலிய தமிழறிஞர்களையும் சிறப்பு விருந்தினராகத் திருவண்ணாமலை மண்ணுக்கு அழைத்து வந்து பல்வேறு நிகழ்ச்சிகளைத் தந்து தமிழ்வளர்த்த ஐயா அவர்களின் சேவை நெஞ்சார்ந்த பாராட்டுதலுக்குரியது. அதனால் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று தனித்த அடையாளத்தைப் பதித்தவர்.

திரு அலிமுகமது, பழ கருப்பையா, ஜெகத்கஸ்பர் முதலிய பல்சமயச் சான்றோர்கள் கலந்துகொண்ட பல்வேறு சமய நல்லிணக்கப் பெருவிழாக்களை நடத்திக் காட்டிச் சமய நல்லிணக்க நாயகராகவும் திகழ்ந்தார். திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக 200 நிகழ்வுகளுக்கு மேல் நடத்திக் காட்டிய பெருமைக்குரியவர் அவர். பல்வேறு நூல்களைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வெளியிட்டுப் பெருமைப்படுத்தினார். திருவண்ணாமலையின் இலக்கிய வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்த தன்னலமற்ற தமிழ்த்தொண்டர்.

உலகத் தொல்காப்பிய மன்றத் திருவண்ணா மலைக் கிளையின் ஒருங்கிணைப்பாளராகப் பேருதவி செய்தவர். 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பைந்தமிழ்ச்சோலையின் திருவண்ணாமலைக் கிளையின் நெறியாளராக இருந்து அரும்பணியாற்றினார். திருவண்ணா மலை, ஆரணி, தேவிகாபுரம், ஆவணியாபுரம், பள்ளிகொண்டாப்பட்டு எனத் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற பைந்தமிழ்ச் சோலையின் ஒவ்வொரு இலக்கியக் கூடலிலும் தொடர்ந்து பங்கேற்று ஊக்கமும் ஆக்கமும் தந்து வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தார். இவ்வாறு தமிழ்ச்சங்கம் மட்டுமன்றித் திருவண்ணாமலையில் பல்வேறு தமிழிலக்கிய அமைப்புகள் உருவாகி வளரத் தளராத ஊக்கமும் ஆக்கமும் தந்து சிறப்புச் செய்தவர்.

இளைஞர்களை நல்வழிப்படுத்தித் தமிழ்மீது காதல் கொள்ளச் செய்தார். பல கவிஞர்கள் உருவாகக் காரணமாக இருந்தார். ‘ஊக்குவிப்பார் ஊக்குவித்தால் ஊக்குவிற்பான் தேக்குவிற்பான்’ எனும் பொன்மொழிக்கிணக்க, எப்போதும் மாறாத புன்னகையோடும், வாஞ்சையோடும், தமிழோடும் தோழமையோடும் அரவணைத்துச் சென்றவர். இளைஞர்களை, மாணவர்களை இனம், மொழி குறித்துச் சிந்திக்க வைத்தவர்; செயல்படத் தூண்டியவர். ஒரு தமிழ்ச்சங்கம் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதற்கு முன்னுதாரண மாக நின்று நடத்திக் காட்டியவர். ஆடம்பரமோ, ஆரவாரமோ இல்லாமல் செயலில் வேகம் காட்டியவர். விளம்பரத்தையோ வெற்றுக் கூச்சலையோ ஒரு நாளும் விரும்பாதவர். மிகக்கடும் உடல் உபாதைகளுக்கு இடையேயும் தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்றும், அதற்கு அவர் ஆற்றிய சேவைகளும் அளப்பரியன.

மதம் கடந்த மாமனிதர் அவர்.
“இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை”
என இசைமுரசு நாகூர் அனிபாவின் குரலில் உச்ச தொனியில் ஓங்கிக் குரலெடுத்துப் பாடுவார்.

“நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றீயில்
படமாடக் கோயில் பகவற்கு அதாமே – திருமூலர்”

“இறையரசு உங்களுக்குள்ளேயே இருக்கிறது –இயேசு” 

என எச்சமயக் கருத்துகளையும் ஒப்பிட்டு மெச்சுபவர். கிறித்துவராக இருந்தாலும் திருவண்ணாமலை அறுபத்து மூவர் ஆய்வு மையம் சார்பில் திங்கள் தோறும் அண்ணாமலையார் திருக்கோயில் கோபுர வாயில் முன்பு நடைபெறும் ஆன்மீகச் சொற்பொழிவில் கலந்து கொண்டு தூய தமிழில் அழகிய ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றுவார்.

செந்தமிழன் சீமான் அவர்களால் பாராட்டப்பட்டுத் தமிழ்நெறிக்காவலர் எனும் விருது பெற்றார். பைந்தமிழ்த் தொண்டாற்றிவரும் மூத்த தமிழறிஞருக்கு வழங்கப்படும் பைந்தமிழ்ச் சோலையின் பைந்தமிழ்க்குவை விருது பெற்றார். மேலும் வீறுகவி முடியரசனார் விருது, கவிச்சுடர், பைந்தமிழ்ச்சீர் பரவுவார் விருது, பைந்தமிழ்த் தொண்டர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

கிறித்துவத் தமிழ்த்தொண்டராயினும் சமய நல்லிணக்கம் போற்றிய அவரது நல்லுடல் மனிதநேயமிக்க தமுமுக தோழர்களால் கிறித்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. யாருக்கும் கிடைக்காத இப்படியான வழியனுப்பல் அவரது நல்லுயிர்க்குக் கிடைத்தது நாட்டின் சமய நல்லிணக்க ஒருமைப்பாட்டைப் பறைசாற்றுகிறது. அவருடைய பொன்னுடல் மறைந்தாலும் புகழுடல் மறையாது. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை எனும் மொழிக்கேற்பக் காலத்தால் அவருடைய புகழ் நின்று நிலைக்கும்.

Aug 9, 2020

மணிக்குறள் - 6. நூலகம்

நூலகம் நாடி நுவல்வ(து) அறிவோம்கண்
போலது நல்வழிக்குச் சான்று                            51

நல்லநல்ல நூல்நாடி நாமுயர வேண்டும்கேள்
கல்வியே கண்ணாகும் காண்                           52

காண்டற்(கு) அரிய கணக்கின்றிக் காட்டிநீ
வேண்டத் தரும்நூ லகம்                                      53

பண்பட்ட வாழ்க்கைக்குப் பாதை அமைக்கும்உன்
எண்ணந் தொடநூ லகம்                                     54

எண்ணடங்கா நூல்களை எண்ணி மகிழ்வதற்(கு)
உன்னடங்காச் சிந்தை உலை                          55

புத்தகம் பெற்றுப் புதுவாழ்(வு) அமைத்தற்குப்
புத்தகம் வேண்டும் புரி                                        56

புத்தக மேதை புகலுஞ்சொல் கேட்டால்நீ
வித்தக மேதையா வாய்                                       57

கருமையெனும் வாழ்வைக் களிப்புடைத்தாய் மாற்றும்
பெருமை உடையது நூல்                                     58

நூஉல் நுவல்வது நுண்ணிதாயப் பேரறி(வு)
ஆஅல் அதுபோல் அகன்று                                  59

ஆக்கலும் காத்தலும் ஆழ்ந்தறியும் ஆற்றினுக்(கு)
ஊக்கம் தருவது நூல்                                             60

Aug 8, 2020

தமிழாதங்கம்

1. தமிழா! அது தங்கம்

அன்னைத் தமிழே! அமிழ்தத் தமிழே!
உன்னை அன்றி ஒன்றும் அறியேன்!

எனக்குள்ளே இருக்கும் எல்லா ஆதங்கங்களையும் கொட்டித் தீர்த்தால்தான் மனம் அமைதியுறும். எனக்குள்ளே இருக்கும் - வளர்ந்துகொண்டே இருக்கும் தமிழ்மீதுள்ள தனிப்பெரு விருப்பத்தால், அந்த ஊற்றுப் பெருக்கால் ஏற்படும் ஆதங்கம்.

தமிழா? அது தங்கம்...
தமிழா! அது தங்கம்...
தமிழ்! ஆ! தங்கம்.
தமிழ் ஆதங்கம்!

இங்குச் சொன்னவையெல்லாம் இணை என்னத் தகும். ஆனால் தமிழுக்கிணை தமிழேதான். தமிழே தேன் என்று சொல்லவும் தேவையில்லை.

தமிழைத் தம்+உள்+அமிழ்(து) என்றும், தமிழ்தமிழ்தமிழ் என்று தொடரச் சொல்லும்போதும் அஃது அமிழ்து ஆகிறது என்றெல்லாம் கேள்வியறிவு. உண்மை, கேள்வியறிவால் உள்ளத்தே மகிழ்வை யுண்டாக்குகிறது. இல்லாமலா உரைப்பார்கள் எல்லாத் தமிழறிஞரும்?

தமிழ்க்கவிஞன் என்று சொல்லிக் கொள்வதைவிடத் தமிழறிஞன், தமிழறிவன் என்று சொல்லினும் குறையாகாது. குறையாகக் கொள்ளவே முடியாது. தமிழ் என்று தெரிந்தபின் உயர்வும் தாழ்வும், உயர்ந்தும் தாழ்ந்தும் தம்மருகில் இருக்காது பறந்தோடும், அகழ்ந்தோடும். சிறுதுளி பருகினும், பெரு வெள்ளமாய்ப் பருவுள்ளமாய் மாற்றுவது தமிழ்.

தமிழ் - தம் உள் அமிழ்
அமிழ்து மட்டுமல்ல. அமிழ்ந்து ஆழ்ந்தும் அகழ்ந்தும் பேரிடம் உள்ளத்தில் கொள்ளை கொள்வது; பேரிடரை உள்ளத்தினின்று உதிர்ந்தோடச் செய்வது.

2. தமிழ் எழுச்சி

“தமிழாற் பயனில்லை; தமிழும் வீண்; தமிழால் நீயும் வீண்” என்று என் செவியேற அறிவுறுத்துகிறான் என் நண்பன்; என் இனிய நண்பன்; என் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவன். ஆயினும் அவனுடைய அறிவுரைகளைப் படிகளாக்கி, அதன்மீது நடக்கச் செய்கிறது என்றமிழ்.

இப்போது தமிழே தன் ஆழத்தை யானறியச் செய்ய எனக்கு வழிகாட்டிச் செல்கிறது. அறிந்த தமிழ் அணுவளவே. ஆயினும் அதனுள் ஏழ்கடலைக் காட்டுகிறேன் என்கிறது என்றமிழ். ஆம். அந்தத் தமிழ் எனக்குப் புதிய எண்ணங்களைக் கொடுக்கிறது. அது என்னைச் சாதிக்கச் சொல்லவில்லை. செயலாற்றச் சொல்கிறது. ஆனால் அது சொல்லும் செயலை ஆற்றினால், சாதனையாகக் கருதப்படும். சொல்லின் செய்வனாய் என்னை மாறச் சொல்கிறது. இங்குச் சொல்லிச் செய்தல், சொன்னதைச் செய்யும் வழிமுறைகள், வாய்க்கால்கள், நீரோடிச் செழிக்க வைக்கும் வயல்வெளிகள் (செய் + உள். அதுதான்) எல்லாவற்றிற்கும் கோடிட்டுக் காட்டி யிருக்கிறது. இஃதன்றோ சொல்லின் பெருமை.

சொல், செயல்வடிவம் பெறும்விதம் செயலுக்கு மட்டுமே தெரிய வேண்டும்; சொல்லுக்கும் அச்செயல்முறையின் முதலும், முடிவும், முழுமையும் உணரற்கரிதாயிருக்க வேண்டும் எனச் செயலுக்கு இலக்கணம் சொல்கிறது சொல். இஃதன்றோ இனிமை. எல்லாவற்றையும் எவ்விதமேனும் விருப்பப்படியாற்று. ஆனால் சொல்லின் நோக்கம் என்னவோ, அஃது அங்கு நிறைவேறி இருக்க வேண்டும். சரி செயல்படுவோம். கட்டளை கிட்டிவிட்டது சொல்லிடமிருந்து. ஆமாம்... அந்தச் சொல்லின் நோக்கமென்ன? அதையும் அச்சொல் இங்கு வெளிப்படுத்தவில்லை.

3. புணர்ச்சியை மதிக்காத புதுக்கவிதைகள்

ஒவ்வொருமுறை திரையிசைப் பாடல்களைக் கேட்கும்போதும், இசைக்கு மயங்குவதைவிட, அந்தப் பாடலின் வரிகளைக் கருத்தில் கொள்வதே என் எண்ணம். அதனால் ஏற்படும் மன உளைச்சலுக்கு அளவே இல்லை. இவையெல்லாம் பாடல்களா? கவிதைகளா? என்ற எண்ணமே என்னைத் துன்பத்தில் ஆழ்த்துகிறது. இந்தப் புதுக்கவிதைகளுக்கும், திரையிசைப் பாடல்களுக்கும் தமிழ் என்ற பெருமைமிக்க மொழிமீது கொஞ்சம்கூட அக்கறை இல்லை. அவை உரைநடைவழிச் செல்வதே மறுக்க முடியாத உண்மை. என்னதான் எதுகை, மோனை, இயைபுகளையெல்லாம் ஆங்காங்கே புகுத்தினாலும் குற்றமுடையதாகவே அவை படைக்கப்படுகின்றன. மிக முக்கியமான குற்றம் என்னவென்றால் புணர்ச்சிப் பிழையே. புணர்ச்சி என்றதும் வல்லினம் மிகும் இடங்கள், மிகா இடங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்வது மட்டுமே என்றால் அதுவும் தவறு. ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ முதலிய புணர்ச்சி விதிகளை மதிக்காமல் எழுதும் கவிஞர்களே இன்றைய புதுக்கவிதை செய்யும் கவிஞர்களும் திரையிசைப் பாடல் எழுதும் கவிஞர்களும்.

எளிமையாய் வேண்டும், இசைக்கு ஏற்ப இனிமையாய் வேண்டும் என்று பாடுபடுபவர்கள் எவ்வளவு சொல்லாட்சி, நயம் கொண்டு எழுதினாலும் அவர்கள் உரைநடையை நோக்கியே செல்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. அவற்றைக் கவிதைகள், பாடல்கள் என்ற அட்டவணையில் சேர்ப்பதற்கு அவர்கள் நாண வேண்டும். உரைநடையின் வளர்ச்சியும் புணர்ச்சி விதிகளை மதிக்காமல்தான் நடந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், சிந்துவகைப் பாடல்களும் அத்தகைய விதிகளைத் தளர்த்திவிட்டே வளர்ந்து வருகின்றன.

4. பிழைகள் ஏனோ?

என்ன சொல்வது? நெஞ்சு பொறுக்கவில்லை.

தற்காலத் தமிழர்கள் தமிழைச் சரியாக எழுதப் பழகாத அவல நிலையை என்னவென்று சொல்வது?

தொலைக்காட்சிச் செய்திகள், அறிவிப்புச் செய்திகள், பதாகைகள், விளம்பரப் பலகைகள் என எங்குப் பார்த்தாலும், சொற்களுக்கு இடையில் தேவைப்படும் வல்லின ஒற்று எழுத்துகளை விட்டுவிட்டு எழுதுவதே வாடிக்கையாய்ப் போய்விட்டது தற்காலத் தமிழர்களுக்கு. அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

சொற்றொடர் என்பது ஒரு குடும்பம் போன்றது. அதன் ஒவ்வொரு சொல்லும் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர் எனலாம். குடும்ப உறவுகள் வலுப்பட, அன்பு, பாசம் போன்றவை இணைப்புப் பாலமாக விளங்குகின்றன. தேவையான இடங்களில் வல்லின ஒற்றுகளை இணைத்து எழுதுவது, குடும்பத்தின் உறவுச் சங்கிலியை வலுப்படுத்துதல் போன்றதாகும். வல்லின ஒற்றுகளை விடுத்து எழுதுவது, குடும்ப உறவுகளில் அன்பு காணாமல் போவதைப் போன்றதாகும். அத்தகைய மனநிலையில் தமிழர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைத் தற்காலத் தமிழர்களின் எழுத்தே உறுதிப்படுத்துகிறதோ?

அதுபோக,

 லகர, ளகர, ழகரப் பிழைகள்
 னகர, ணகர, நகரப் பிழைகள்
 ரகர, றகரப் பிழைகள் என,

எழுதும் சொற்களில் சரியான எழுத்துகளைப் பயன்படுத்தத் தெரியாமல் திணறும் நிலைமை ஏனோ? நல்ல உரைநடை நூல்களைப் படிக்கும் பழக்கம் ஏற்பட்டால், இத்தகைய தவறுகளைத் தவிர்க்கலாம்.

இன்னும் ஒருபடி பின்னேறிய தற்காலத் தமிழர்கள், தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தித் தமிழை எழுதாமல் இலத்தீன் எழுத்துருவில், அதாவது, ஆங்கில எழுத்துருவில் எழுதும் வழக்கத்தைத் திணிக்கிறார்கள். இவர்கள் தமிழ் எழுத்துகளைக் கல்லாதவர்களா? தமிழில் எழுதுவது பழைமை என எண்ணுபவர்களா? இலத்தீன் எழுத்துருவில் எழுதுவதே எளிது எனக் கருதுபவர்களா? தமிழில் எழுதினால் பிழைகள் மிகும் என அஞ்சுபவர்களா? எந்தக் குறையாய் இருந்தாலும் சரிசெய்து, தமிழ் எழுத்துருவிலேயே தமிழை எழுதப் பழக வேண்டும். தமிழ் வாழ்க!

5. வடமொழிப் பெயர்கள் ஏன்?

எப்படியெல்லாமோ ஆராய்ந்து அலசி, எப்படியோ ஒரு சமற்கிருதப் பெயரைத் தம் குழந்தைக்குத் திணிக்கும் தமிழர்களே! ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தமிழ்நாட்டில் பிறந்திருக்கத் தேவையே இல்லை. தமிழ்ப்பற்று என்பது இல்லாமல், தமிழ்ப்பெயரை உங்களால் வைக்கவும் முடியாது. அப்படியிருக்கத் தமிழ்ப்பெயரையும் கொஞ்சம் சொல்லுங்கள் என்று என்னிடம் வந்து கேட்டு, என்னைத் துன்பத்திற்கு ஆளாக்காதீர். உங்களுக்குத் தமிழ்ப்பற்று இருந்தால், நீங்கள் யாரிடமும் பெயர்கேட்டு மெனக்கெட வேண்டியதில்லை. நீங்களே தமிழ்ப்பெயரை வைப்பீர்கள்.

நாம் ஆளும் சொற்கள் தமிழ்ச்சொற்களா, வட சொற்களா? என்று தெளிய, தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சி, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி ஆகிய நூல்களை நோக்கலாம். தமிழுக்கும், வடமொழிக்கும் வேர்ச்சொல் ஒன்றாயினும் அவை எவ்விதிகளின்படித் திரிந்தன என்பதைப் பற்றிய விளக்கங்கள் ஒரு தெளிவைத் தரும். தமிழ்ச் சொற்களாய் உருப்பெற்று வடமொழிக்குச் சென்றனவா? அல்லது வடமொழிச் சொற்கள் தமிழுக்கு வந்தனவா? என்ற ஐயத்திற்கும் விடைகிடைக்கும். தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சி என்ற நூல், அதன் பேரகர முதலிக்கு ஒரு முன்னுரையைப் போல் செயல்பட்டு, விளக்கங்களைக் கொடுப்பதால், அந்நூலை முதலில் படிக்கலாம்.

• மொழி முதல், இடை, கடை எழுத்துகளைப் பற்றிய அறிவு வேண்டும்.
• மயங்கொலிப் பிழைகளைத் தவிர்க்க வேண்டும்.
• தேவையற்ற ஏகாரங்களைத் தூக்கிப் போட வேண்டும்
• மூச்சுக்கு முப்பது முறை உம்மை சேர்த்து எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.
• மூச்சுக்கு முப்பது முறை வந்திட்டால் போயிட்டால் சென்றிட்டால் வந்திடு போயிடு சென்றிடு என இடு வாந்தி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
• என்ன வகை ஏகாரம், என்ன வகை உம்மை எனும் கருத்து வேண்டும்
• வேற்றுமை விரி, தொகை பற்றிய அறிவு வேண்டும்
• அளபெடைகளைப் பயன்படுத்துவது பற்றிய அறிவு வேண்டும்
• ஐகாரக் குறுக்கம் எங்கு எப்படி வேலை செய்யும் என்று புரிந்துகொள்ள வேண்டும்
• புணர்ச்சிகள் - குறிப்பாகக் குற்றியலுகரப் புணர்ச்சி, வல்லினம் மிகும் மிகா இடங்கள் பற்றிய தெளிவான அறிவு வேண்டும்.
• உவமைகளையும் பிற அணிகளையும் எப்படி எப்படிப் பயன்படுத்தலாம் எனச் சிந்திக்க வேண்டும்.
• பழைய இலக்கியங்களை அடிக்கடி புரட்டிப் பார்க்க வேண்டும்.
• சொல்ல வந்த கருத்தைச் சரியாகத்தான் சொல்கிறோமா எனும் கருத்து வேண்டும்.
• இவற்றோடும் இன்ன பிறவற்றோடும் யாக்கும் இலக்கணம் கற்க வேண்டும்.
• இவ்வாறு தொடர்ச்சியான கற்றல் இல்லையென்றால் மரபு கவிதை எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.
• இவை அறியாமல் புரியாமல் தெரியாமல் மரபு கவிதை எழுதி எழுதிப் பட்டங்கள் குவிப்பதைவிடச் சும்மா இருப்பதே மேல்.
• புதுக்கவிதை வகைகளை எழுத மேற்சொன்ன எவை பற்றியும் கவலை கொள்ளாதிருத்தல் வேண்டும். ஆமாம். அப்பத்தான் தமிழ் வாழும்.

Aug 2, 2020

மணிக்குறள் - 5. நடுவு நிலை நாடு

நடுநிலை நாடாது நாடுறுந் துன்பக்
கடுநிலை கண்முன்னே காண்                    41

நடுநிலை நாடா நயவஞ்சம் சேரக்
கெடுநிலை யாகும் கிடந்து                            42

நாடுதல் எல்லாம் நடுவு நிலையெனின்
வாடுதல் இல்லை மனத்து                               43

எடுக்குஞ் செயலில் இடைமயங்கல் இன்றி
நடுவொன்றே நாடு நலம்                                 44

ஒருதலையாய்ச் செல்லாமல் ஓர்ந்துணர்ந்து செல்க
பொருந்தும் இனிமைப் பொதி                       45

நேரிய பார்வைக்கு நேருந் துயருண்டோ?
கூரிய வேலென்று கொண்டு                           46

நடுக்கண் ணுடையாரை நாடேத்தும் நாளும்
இடுக்கண் இமியும் இலை                                47

எதுவந்த போதும் எதிர்நின்று வென்று
பொதுவொன்றே நாடு புரிந்து                        48

பாகுபா(டு) இல்லாத பார்வையே என்றென்றும்
ஆகுவழிக்(கு) ஆற்றல் தரும்                            49

நல்வாழ்க்கைக்(கு) என்றும் நடுநிலையே கைக்கொடுக்கும்
அல்வாழ்க்கை அல்லல் தரும்                         50