Sep 30, 2021

கதிர்வேலன் தமிழகழ்வன் - பிறந்தநாள் வாழ்த்து

கதிர்வேலா செங்கதிர் வேலா
பொங்கும் கதிர்வேலா

ஆனந்தி பாலா அகழ்வன் தோளா
அந்தமிழ்க் கதிர்வேலா

சிந்தையினிக்கச் சிரிப்புக் காட்டும்
சின்ன கதிர்வேலா

தத்திநடை போட்டுப் போட்டுத்
தாவி ஏறும் பாலா

பின்னாலே கையைக் கட்டிப்
பிடித்தது கேட்கும் வேலா

கிள்ளைப் பிள்ளாய்
கிண்கிணி யாட்டச்
செல்லப் பிள்ளாய் நீயே

தாளம் போட ஆட்டம் போடும்
தங்க நட பாலா

Sep 5, 2021

அரசு


"பள்ளி தொடங்கி ஒரு மாதம் ஆச்சு... நல்லா படிக்காத பையனை எங்கேயும் சேர்த்துக்கொள்ளவில்லை என்று இங்க சேர்க்க வந்திருக்கீங்களா?" என்று கேட்டார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர். திருவண்ணாமலை மாவட்டம் சின்னகாங்கியனுரில் அமைந்துள்ள ‘திரு.க.குப்புசாமி நினைவு உயர்நிலைப் பள்ளி’ அது.

"இல்லைங்க ஐயா... நாங்க நகரத்தைவிட்டு இந்த ஊருக்கு வந்திருக்கோம். அந்த முடிவு எடுக்குறதுல கொஞ்ச நாள் கடந்துபோச்சு. அதனாலத்தான் சீக்கிரம் வந்து சேர்க்க முடியல" என்று கூறினர் என் அப்பாவும் சித்தப்பாவும்.

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட கீழ்நாத்தூரில் உள்ள ‘நகராட்சி நடுநிலைப் பள்ளி’யில் (தற்போது உயர்நிலைப்பள்ளி) நான் ஐந்தாம் வகுப்புப் படித்து முடித்தேன். விடுமுறை முடிந்து என் நண்பர்கள் ஆறாம் வகுப்பில் சேர்ந்துகொண்டிருந்தார்கள். நான்மட்டும் பள்ளியில் சேரவில்லை. ‘நல்ல வேளையாக ஐந்தாம் வகுப்போடு படிப்பு முடிந்துவிட்டது. இனிப் படிக்கத் தேவையில்லை. பள்ளிக்கூடம் போகத் தேவையில்லை’ என்று மகிழ்ச்சியாய் எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, அவ்வளவு நாள் ஏன் பள்ளியில் சேரவில்லை என்பது அப்போதுதான் புரிந்தது. ‘அடடா.. மாட்டிக்கொண்டோமே’ என்று நடுங்கினேன்.

ஆறாம் வகுப்புச் சேர வந்திருந்த அப்போது, "இந்தா… இந்தச் செய்தித்தாளைக் கொஞ்சம் படித்துக் காட்டு" என்று என்னிடம் கொடுத்தார் தலைமை ஆசிரியர். நான் அந்த ஆங்கிலச் செய்தித்தாளை வாங்கிக் கொஞ்சம் எழுத்துக்கூட்டிப் படித்துக் காட்டினேன். நேஷனல் (National) என்பதை நேடியனல் என்று படிக்கும் அளவில்தான் நான் அன்று இருந்தேன். ஆனாலும் பள்ளியில் அனுமதிக்கப் பட்டேன். அந்தத் தலைமை ஆசிரியர் என்னைப் பார்த்து நல்லா படிக்காத பையன் என்று கூறிவிட்டாரே என்று மனத்துக்குள் ஒரு குத்தல் இருந்தது.

முதலாம் வகுப்பில் நான் எத்தனையாவது தரம் (Rank) என்று நினைவிலில்லை. இரண்டாம் வகுப்பில் முதல்தரம் பெற்றேன். மூன்றாம் நான்காம் ஐந்தாம் வகுப்பு என முன்னேறும்போது என் தரத்தின் எண்ணும் கூடிக்கொண்டே போனது. ஐந்தாம் வகுப்பில் நான் நான்காம் தரம். இப்போது எப்படிப் படிக்கப் போகின்றேன் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்ற நிலை.

என்னை ஒருவரும் குறைசொல்லல் எனக்குப் பிடிக்காது என்பதால் படிக்கத் தொடங்கினேன். நகரத்தில் இருந்தவரை விளையாட்டுப் பிள்ளையாக இருந்த எனக்கு, இந்த ஊருக்கு வந்த பின் சூழல் மாறத் தொடங்கியது. புதிய ஊர்; நண்பர்கள் இல்லை; விளையாடும் வாய்ப்புக் குறைவு; படிப்பதற்கென்றே அமைந்த நல்ல சூழலாக அதனை ஏற்றுக் கொண்டேன். ஆறாம் வகுப்பில் சேர்ந்த நாள்முதல் நன்றாகப் படித்துவந்தேன். அந்த உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை அனைத்துத் தேர்வுகளிலும் நான் முதல் மதிப்பெண்ணே பெற்றுவந்தேன்.

வகுப்பில் முதல் மாணவன் என்பதால் அடிக்கடி தலைமை ஆசிரியர் கண்ணில்பட்டேன். அவர் எனக்கு வாய்ப்புகளைத் தந்தபோதெல்லாம் அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். எட்டாம் வகுப்பு முடிக்கும்போது வந்த YSSP (இளம் மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்ச்சி - Young Student Scientist Programme) வாய்ப்பு, கவிதைப் போட்டிக்கு என்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது, ஒன்பதாம் வகுப்பில் பள்ளியளவில் நடந்த போட்டித் தேர்வில் பரிசு பெற்றது, பத்தாம் வகுப்பில் பள்ளியில் அதுவரை யாரும் எடுக்காத மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தமை என்று இந்தப் பட்டியல் நீளும்.

பத்தாம் வகுப்பில் தலைமை ஆசிரியரே அறிவியல் பாட ஆசிரியராய் வந்தார். அவர் பாடம் நடத்தத் தொடங்கிய நாள்முதல் எனக்குள் கிளர்ச்சி. அவர் பாடம் நடத்தும் அமைப்பைப் பார்த்துக், கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் அறிவு முதிர்ச்சியில் இருந்தால்தான் அவரது பாடம் புரியும் என்று பலநாள்கள் எண்ணியிருக்கிறேன். என்னுடைய மனத்து ஓட்டம், உள்வாங்கிக் கொள்ளும் திறன் அவ்வளவு குறைவு. அப்படி இருந்தும் எப்படி நான் முதல் மாணவன் என்றால் நாள்தோறும் நடத்தும் பாடங்களைத் தவறாமல் படிப்பதும் வீட்டுப் பாடங்களைச் சரியாகச் செய்யும் பயிற்சியுமே ஆகும்.

ஒருமுறை அவர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது ‘கால்சியம் கார்பனேட்டு’ பற்றிச் சொல்ல வந்தார். மாணவர்களைப் பார்த்துத் திடீரென்று, "அங்க போங்க, அங்க கொட்டி வச்சிருப்பாங்க, அதுதான் அது" என்றார். 'எங்க போகணும், என்ன கொட்டி வச்சிருப்பாங்க' என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். அவ்வளவு அறிவு எனக்கு.

பாடத்தில் இருவகையான மாணவருக்கு மட்டுமே ஐயம் ஏற்படாது என்று அவர் அடிக்கடி சொல்லக் கேட்டதுண்டு. ஒன்றுமே படிக்காத, பின்தொடராத மாணவன் ஒருவகை. நன்றாகப் படிக்கும் மாணவன் இன்னொருவகை. நீங்கள் எந்த வகை என்று முடிவு செய்துகொள்ளுங்கள் என்பார். ஐயமே இருந்தாலும் கேட்பதற்குத் துணிவில்லாத அஞ்சும்வகை நான்.

பாடத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வரியையும் வினாவாக்கி அதற்கு விடைகாண முயலுங்கள் என்பார். அவர் சொன்னதை அப்படியே செய்துவந்தேன். ஒருநாள் என்னுடைய எழுதுபுத்தகத்தை வாங்கிப் பார்த்து மகிழ்ந்தார். மற்ற மாணவருக்கும் அதை எடுத்துக் காட்டினார். அதுதான் சொல்லின் செய்வனாக என்னை நான் உணர்ந்த சமயம்.

"நாளை சிறுதேர்வு. படித்துவிட்டு வாங்க" என்பார். “பாடத்தில் எந்தப் பகுதியில் தேர்வு?” என்று கேட்டால் எல்லாவற்றையுந்தான் படிக்க வேண்டும் என்பார். படித்துவிட்டு வருவோம். ஆனால் அவர் விடுமுறையில் சென்றிருப்பார். அடுத்த நாள் பள்ளிக்கு வந்து பாடம் நடத்துவார். அப்பாடா.. அவர் தேர்வைப் பற்றி மறந்துவிட்டார் என்று எண்ணி மகிழ்வோம். திடீரென்று ஒருநாள், “எல்லாரும் தாளை எடுத்துக் கொண்டு வெளியே வாங்க” என்பார். போச்சுடா… அவர் தேர்வை மறக்கவில்லையா என்று அச்சத்துடனே எழுதுவோம். வினாக்களை எல்லாப் பகுதிகளிலிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேட்டுவைப்பார். பள்ளி முடிய அரை மணி நேரமே இருந்தாலும் அவர்கொடுத்த வினாக்களுக்கான விடைகளை எழுதி முடிக்க இரண்டு மணி நேரம் ஆகும். அவ்வளவு வினாக்களைக் கொடுத்துவிட்டுப் போவார். இதற்காகவே அவர் தேர்வு என்று சொல்லிவிட்டால் போதும். நாள்தோறும் ஒருமுறை புத்தகத்தையே திருப்பிப் பார்த்துவிட்டு வருவோம். தற்போது மாணவர்கள் கைப்பேசியை ஒருகையில் வைத்துப் பார்த்துக்கொண்டே தட்டிலுள்ள சாப்பாட்டைப் பார்க்காமல் மற்றொரு கையிலெடுத்துச் சாப்பிடுவதைப் போல, அப்போது என்னுடைய ஒரு கையில் புத்தகமும் மற்றொரு கையில் சாப்பாடும் இருக்கும். மனப்போராட்டம், நேர மேலாண்மை இவற்றிலெல்லாம் ஒரே விளையாட்டுத்தான் அப்போது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அறிவியலில் நூற்றுக்கு நூறு பெற்றேன்.

ஒருநாள் பள்ளியில் தரப்படும் மதிய உணவை எத்தனை மாணவர்கள் வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்பதைக் கணக்கெடுக்கச் சொன்னார். நான் நினைத்திருந்தால் எத்தனை மாணவர்கள் என்பதை எளிதாக எண்ணிச் சொல்லியிருக்கலாம். உணவு வாங்கும் வரிசையில் நின்ற ஒவ்வொருவரின் பெயரையும் வகுப்பையும் கேட்டு எழுதிக் கொண்டிருந்தேன். நான் அவரிடம் எப்படிக் கணக்கெடுக்க வேண்டும் என்று எளிதாகக் கேட்டிருக்கலாம். அதற்குத் தயங்கி, ‘அவர் புள்ளிவிவரமெல்லாம் கேட்டுவிட்டால் என்ன செய்வது?’ என்று எண்ணி அப்படிக் கணக்கிட்டேன். அப்போதுதான் என் தமிழாசிரியர் அடிக்கடி கூறும் '… பசிநோக்கார் கண்டுஞ்சார் … கருமமே கண்ணாயினார்' என்பதன் பொருள் எனக்குப் புரிந்தது. அன்றைய மதிய உணவை உண்ணாமலே அந்த வேலையைச் செய்துகொண்டிருந்தேன்.

சில நேரங்களில் அவர் எதைப் பற்றிப் பேசுகிறார் என்பது புரியாமலே கேட்டுக்கொண்டிருப்பேன். ஒருமுறை "இன்று மாலை பள்ளியில் வந்து உட்கார்ந்திரு. அவர் வருவார். அவரிடம் சொல்லிவிடு" என்று சொன்னார். யார் வருவார், அவரிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதைக்கூடக் கேட்காமல் தலையாட்டிவிட்டு வந்து உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தேன். மாலை 6 மணிக்குமேல் பள்ளியின் பாதுகாவலர் வந்தார். "என்ன பா, இன்னும் இங்கேயே இருக்க?" என்று கேட்டார். தலைமை ஆசிரியர்தாம் வந்து உட்காரச் சொன்னார். உங்களிடம் சொல்லச் சொன்னார்" என்றேன். "அப்படியா பா, சரிப்பா" என்று சொல்லிவிட்டு மின்விளக்கைப் போட்டுவிட்டு அவரும் சென்றார். வடிவேலு நகைச்சுவைக் காட்சிபோல, இன்றுவரை அது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது.

அவர் பள்ளியிலிருக்கும்போது அடிக்கடி அவ்வூரிலுள்ள சிலர் வந்து பேசிவிட்டுப் போவார்கள். அவர்கள் பேச்சிலிருந்து அவர்கள் விவசாயிகள் என்பதைப் புரிந்துகொண்டாம். அவர் அந்த விவசாயிகளுக்குத் தகுந்த ஆலோசனைகள் கூறும் விவசாயியும் ஆவார். எப்போதும் செயற்கை உரங்கள் போடாமல் இயற்கையாகவே விவசாயம் செய்யவேண்டும் என்பது பற்றியும் சொல்லியிருக்கிறார். சென்ற ஆண்டு (2020 சனவரி) ஆசிரியர்-மாணவர் கூடல்விழாவிற்கு அவர் வந்திருந்தபோது ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட, சுமார் 6 மாதங்களாக எரிந்துகொண்டிருந்த, காட்டுத்தீயைப் பற்றிப் பேசிக் கவலைப்பட்டார். இயற்கையை நேசிக்கும் இனிய மனிதர் அவர்.

"அண்ணா, உங்களைத் தலைமை ஆசிரியர் கூட்டிட்டு வரச்சொன்னார்" என்று ஒரு மாணவன் என் வீட்டிற்கு வந்து சொன்னான். நான் பள்ளிக்குச் சென்றேன். பன்னிரண்டாம் வகுப்பை முடித்திருந்த அந்தச் சமயத்தில் "மேற்கொண்டு என்ன படிக்கப் போகிறாய்?" என்று கேட்டார். பொறியியல் அல்லது செவிலியர் பயிற்சிக்குப் படிக்கப் போவதாகச் சொன்னேன். இரண்டுக்கும் விண்ணப்பம் வாங்க உதவினார். மேலும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு அவரே என்னைச் சென்னைக்கு அழைத்துச் சென்றார். கல்லூரியையும், துறையையும் அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். பின்னர் கல்லூரிக்கும் அழைத்துச் சென்று கல்விக் கட்டணம் பற்றிக் கேட்டறிந்து வங்கியில் கல்விக் கடனுக்கும் ஏற்பாடு செய்து அவரே கடனுக்கு உறுதியளித்துக் கையொப்பம் இட்டார். நான் கல்லூரியில் படிக்கும்போது கடினமாய் உணர்ந்த சமயங்களிலெல்லாம் எனக்காகப் படிக்கிறேன் என்பதை மறந்து என் தலைமை ஆசிரியர் என்மீது வைத்த நம்பிக்கைக்காகவே படிக்கிறேன் என மனத்திற்கொண்டு படித்து முடித்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றேன்.

அவ்வப்போது என்னைப் பற்றிக் கேட்டறிந்து எந்த வகையிலெல்லாம் உதவ முடியுமோ அந்த வகையிலெல்லாம் உதவி செய்திருக்கிறார். அவர்தான் உயர்திரு அர.சுப்பிரமணியன் அவர்கள். அவர்தன் கையொப்பத்தில் அரசு என்ற முதல் மூன்றெழுத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவருடைய ஆளுமையை எண்ணி எண்ணி மகிழ்வேன். ஒரு மாணவன் பள்ளியைவிட்டுச் சென்றாலும் அவனைப் பற்றிக் கேட்டு அவனை முன்னேற்றிப் பார்ப்பதில் பெருமகிழ்வு கொள்பவர். இந்த நன்னாளில் அவரை எண்ணிப் பார்த்துப் பெருமகிழ்வெய்துகிறேன்.
                                            - தமிழகழ்வன் சுப்பிரமணி